SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் ஒருமையானால் வாழ்வு மேன்மை வரும்

2019-02-22@ 15:29:10

திருமூலர் மந்திர ரகசியம்

நிகழ்ச்சிகளை விட, நினைவுகள்தான் துன்புறுத்தும். யாராவது ஒருவர் திட்டினால், அது ஒரு சில நிமிடங்கள் தான். ஆனால், ஒருவாரம், ஒரு மாதம் கடந்தும் கூட,  “கன்னா பின்னான்னு திட்டிட்டான். மனசே கேக்கல! ப்ச்! “என்று புலம்பல் எழும் பாருங்கள்! மீற முடியாது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் அதற்குத்  தொடர்புடைய பழைய நினைவுகளைக் கிண்டிக்கிளறி, மனவலிமையைக் குறைக்கும். இன்றைய விஞ்ஞானம் சொல்லும் இத்தகவலை, திருமூலர் விவரிக்கிறார்.  நமக்குத்தெரிந்த கதை மூலமே பாடம் நடத்துகிறார். பாடலைப் பார்த்துவிட்டுக் கதையைப் பார்க்கலாம் வாருங்கள் !

விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகம் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்பு உருவாகி நிகழ்ந்து நின்றாரே
(திருமந்திரம் - 2640)

கருத்து: உள்ளன்போடு சிவபெருமானை எண்ணித்துதித்துப் பொன்மயமான இமவான்சேர்ந்த பார்வதிதேவியைப்போல, சிவபெருமானையே எண்ணித்  தவம்இருப்பவர் மனதிற்குள், பரம்பொருள்- ஜோதிச்சுடர் வடிவாகத் திகழ்ந்து அருள் செய்வார். கந்தபுராணத்தின் தொடக்கத்தைச் சொல்லிப் பாடலைத்  துவக்குகிறார் திருமூலர். என்ன அழகு! என்ன அழகு! அனுபவிக்கலாம் வாருங்கள்! தட்சன்செய்த தவத்தின் பலனாக, அவனுக்கு மகளாக வந்து அவதரித்தாள்  அம்பிகை.

தட்சன் மகளாக வந்தபடியால், அப்போது அம்பிகை ‘தாட்சாயணி’ எனத்திருநாமம் பெற்றாள்.  ஆணவத்தின் காரணமாக, சிவபெருமானை அவமதித்த தட்சன்,  அம்பாளையும் அவமதித்துப்பேசினார். விளைவு? தட்சனுக்கு சாபம்கொடுத்த அம்பிகை, சிவபெருமானைப்பணிந்து, “தட்சன் மகளாக வந்ததால் தாட்சாயணி எனும்  திருப்பெயர் தாங்கிய நான், இந்த உடம்பை நீக்கி விடத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார். காரணம்?

தாட்சாயணி என்றதும், தட்சன் நினைவு வருகிறது. தட்சன் நினைவு வந்ததும், தட்சன் சிவபெருமானை மிகவும் இழிவாகப் பேசியதெல்லாம், நினைவிற்கு  வருகின்றன. நிகழ்வை விட, அதைப்பற்றிய நினைவுகளே மனிதனைப் படாதபாடு படுத்தும். அம்பிகை அதை சிவபெருமானிடம் சொல்லி,”தாங்கள் தாட்சாயணி  என்று என்னைச்சொல்லும்போது, தட்சன் நினைவுகள் தான் வருகின்றன. அவன் நினைவு வந்தவுடன், அவன் தங்களை இழிவாகப்பேசியது நினைவிற்கு வருகிறது.  தெய்வ நிந்தையை விட, அதைக் கேட்பது மிகப்பெரும் பாவம்.

“ஆகையால்,தங்களை இழிவாகப்பேசிய அந்த தட்சன் மகள் எனும் இந்த உடம்பை நீக்க விரும்புகிறேன்” என்றார். இதன்பிறகு தான், தாட்சாயணி எனும்  திருமேனியைவிட்டு, பார்வதி எனும் திருமேனியை - திருஅவதாரத்தை எடுத்தாள் அம்பிகை. ஏன்? அம்பாள் அந்தப்பழைய திருமேனியுடனேயே இருக்கக்  கூடாதா? இருக்க முடியாதா? தாராளமாக முடியும். பிறகு அவ்வாறு செய்யக்காரணம்?

பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர், கைவிரல்களை விட்டு எண்ணிக் கணக்குப்பாடம் நடத்துவார். அதற்காக, ஆசிரியருககுக் கணக்குத்  தெரியாது; நம்மைப்போலத்தான் என்று எண்ணலாமா? எண்ணத்தான் முடியுமா? அதுபோல, பாவ-புண்ணியங்களை அனுபவிப்பதற்காக உடம்பெடுத்த  நமக்குப்பாடம் நடத்துவதற்காகவே, அம்பாள் தாட்சாயணி எனும் தன் திருமேனியை நீக்கி, பார்வதி எனும் திருமேனியைத் தாங்கினாள். நாம் அனைவருமே,  உடம்புக்கு அடிமையானவர்கள்.

எதுவாக இருந்தாலும் உடம்பை வைத்து, அதுவும் நம் உடம்பை வைத்துத்தான் தீர்மானிக்கிறோம். உடம்பைப் பாதுகாக்கவே, பராமரிக்கவே, அழகு படுத்தவே  பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறோம். கேட்பது, பார்ப்பது, அணிவது, அனுபவிப்பது என அனைத்துமே, உடம்பை வைத்தே செய்யப்படுகின்றன. நாளாக,  நாளாக உடம்பின் சுகங்களில் மயங்கிய நாம், உடம்பிற்கே அடிமையாகி விடுகின்றோம். உடம்பை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதுபோக, உடம்பு தன்  கட்டுப்பாட்டில், நம்மைக் கொண்டுபோய் விடுகிறது.

இதில் இருந்து மீள்வதே தெய்வீகம் என்பதை அறிவுறுத்தவே, தாட்சாயணி எனும் பெயரிலான உடம்பை விட்டு, பார்வதி எனும் திருமேனியை அடைந்தாள்  அம்பாள். பார்வதியாகத் திருமேனியை ஏற்றும்,  அம்பிகை சுலபமாக சிவபெருமானை அடைந்து விடவில்லை. சிவபெருமானை அடைவதற்காகப் பார்வதி,  கடுமையாகத் தவம் இருந்தாள். தவத்தின்போது, சிவபெருமானே முதியவர் வடிவில் வந்து, “ஏனம்மா தவம்செய்கிறாய்?” எனக் கேட்க, தோழிகள் விவரம்  சொல்கிறார்கள்.

சிவபெருமானோ, “என்னம்மா இது? கயிறால் கட்டி, மலையை இழுக்க முடியுமா? கையைக் கடலுக்குள் விட்டுக் கடல்ஆழத்தைக்காண முடியுமா? ஆதியும்  அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானை, நீ போய் அடைய முடியுமா?”  என்றார். அதற்குப் பார்வதியோ, “முதலும் முடிவும் இல்லாத  அப்பரம்பொருள், என் விருப்பத்தை நிறைவேற்றாமல் போனாலும், என் தவத்தை விடமாட்டேன்; உயிரே போனாலும் சரி! “ என்று அழுத்தமாகச் சொன்னார் .

பார்வதியின் தூய்மையான அழுத்தமான பக்தி கண்டு, சிவபெருமான் தம் முதுமைத்தோற்றத்தை விட்டு, சிவ வடிவத்தைக் காண்பித்தார். பிறகு என்ன? சிவன் -  பார்வதி கல்யாணம் நடந்தது.  வியாசர்-ஸ்காந்தத்தில்;காளிதாசர்-குமாரசம்பவத்தில்; கச்சியப்பர்- கந்த புராணத்தில்; என ஏராளமான பாடல்களில் சொன்ன பார்வதி  கல்யாணத்தை, இரண்டே இரண்டு வரிகளில் சொல்லிப் பாடம் நடத்திய பாடல் இது.

இவ்வாறு பாடம் நடத்திய திருமூலர், பாடலின் பின் இருவரிகளில், பார்வதிதேவியைப் போலத் தூய்மையான அழுத்தமான பக்தி கொண்டிருந்தால், ஜோதி  வடிவான சிவபெருமான் உள்ளத்தில் தாமாகவே எழுந்தருளுவார் - என்று பாடலை நிறைவு செய்கிறார்.   இமவானுக்கு மகளாக அவதரித்து, மலைமகள் எனப்  பெயர் பெற்ற அம்பாளின் தவத்தைச்சொல்லிப் பாடிய திருமூலர், வழிபாட்டைப்பற்றிச் சொல்கிறார். உண்மையான வழிபாடு அது.

வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குக்
கழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட்ட வர்க்கன்றிக் காண ஒண்ணாதே
(திருமந்திரம்-2553)

கருத்து: உள்ளத்தாலும் உணர்வாலும் சிவநினைவில் ஒன்றி நின்று, பரம்பொருளைத் தியானித்து வணங்கும் மெய்யடியவர்களுக்கு, பிறவிச்சுழியில் விழாமல்  மனம் அடங்கி இருக்கும் தூய்மையான தியானநிலை தொடங்கும். அவ்வாறு இல்லாமல், பிறவியின் குழியில்விழ வழி செய்கின்ற, புலனடக்கம் இல்லாமை எனும்  ஆசை வழிப்பட்டு நிற்பவர்கள், தியானத்தை அடையக்கூடிய அடையாளங்களை அடைய மாட்டார்கள். ஆசையை விட்டொழித்தவர்களுக்கு அல்லாமல்,  மற்றவர்கள் இந்நிலையை அடைய முடியாது. இப்பாடலில், ‘வழிபட்டு - நின்று’ எனும் சொற்கள், ஆழமான பொருள் கொண்டவை. ஆழங்காண முயலலாம்  வாருங்கள்!

‘வழிபட்டு’ எனும் சொல்லை, முதலில் பார்க்கலாம். வழிபாடு! வழிப்படுத்துவது எதுவோ, அதுவே வழிபாடு.  உதாரணமாக, கடைக்குப் போகிறோம். அங்கு  நடப்புக்கு ஏற்ப காசு கொடுத்தோ அல்லது ஏதாவது அட்டைகள் (க்ரெடிட் கார்டு) மூலமாகவோ, நமக்குத் தேவையான பொருட்களைப் பெற்று வருகிறோம். இதை  மனதில் பதியவைத்துக் கொண்டு வாருங்கள்! இதே முறையில், ஆலய வழிபாட்டைக் கவனிக்கலாம். ஆலயத்திற்குப் போகிறோம். அங்கு முறைப்படி நடந்து,   தெய்வத்திடம் தரவேண்டியதைத் தந்து, பெற வேண்டியதைப் பெறுகிறோமா என்றால்... நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! பெரும்பாலும், ‘இல்லை’  என்பதே பதிலாக இருக்கும். காரணம் புரிவதில்லை. கோயிலுக்குச் செல்கிறோம்; வழிபாடு செய்கிறோம். ஆனால், குறைகள் தீர்ந்தபாடாக இல்லை. எங்கோ, தவறு  நடந்திருக்கிறது. எங்கு? ஆராய்ந்து அறியலாம்! கடைக்குப்போய், அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப நடப்பதைப்போல, ஆலயங்களிலும் செயல்பட வேண்டும்.

எத்தனை ஆலயங்கள்! இஷ்டதெய்வம், குல தெய்வம் என்றெல்லாம் வேறு ! தனக்கு வந்த அரசை, தம்பிக்காக விட்டுக்கொடுத்து விட்டு; படகோட்டி குகனுக்கு  அருள்புரிந்து; முனிவர்களை வணங்கி அவர்கள் துயர்தீர்த்து; சுக்ரீவன் துயர்தீர்த்து அவனுக்கு அரசைத்தந்து; பகைவனின் தம்பியான விபீஷணன் வந்து  பணிந்தபோது அவனுக்கும் அருள்புரிந்து; பகைவனான ராவணனுக்கும் ‘இன்றுபோய் போருக்கு நாளை வா!’ எனக்கூறி -  என்று வாழ்நாள் முழுதும் ‘தியாக  வாழ்வாக’வே வாழ்ந்து வழிகாட்டிய - ஸ்ரீராமர் ஆலயம்.

அவதாரம் செய்த உடனேயே, பெற்றோர்களைப் பிரிந்து; மற்றவர்களிடம் வளர்ந்து; கோகுலத்து சிறுவர்கள் கூட மாடு மேய்த்து  விளையாடி அவர்களைத்  துயரங்களில் இருந்து காப்பாற்றி; சிசுபாலனிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி; பஞ்சபாண்டவர்களுக்காகத் தானே தூதுபோய் அவமானப்பட்டு; தேரோட்டியாக வேலை  செய்தது - என வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்த -  ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

விலங்கினங்கள், மனிதர்கள், தேவர்கள் என அனைவரும் ஒன்றே; தியாகத்தின் மூலமே நல்வாழ்வு பெற முடியும் என்பதை விளக்குவதற்காகவே  ஒற்றைத்  தந்தத்துடன் காட்சி - எனும் திருக்கோலத்துடன் காட்சி தரும்  ஸ்ரீகணபதி ஆலயம். “எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் பரம்பொருள் நான்” என்பதை  விளக்குவதற்காகத்திசைகள் நான்கு, மேல்- கீழ் என மொத்தம், ஆறையும் உணர்த்துவதற்காக ஆறு முகங்கள் கொண்டு; யாராலும் வெல்லமுடியாத சூரபத்மனை  சங்காரம் செய்து; வள்ளியைத்தேடிப் போய் அருள் புரிந்த
திருமுருகன் கோயில்.

தேவாதி தேவர்கள் உட்பட யாராலும் முடிவு கிடையாது என வரம் பெற்ற மகிஷாசுரன், சும்ப, நிசும்பர்கள் முதலான அரக்கர் பலரையும் அழித்து,  நல்லவர்களைக்காத்து வாழவைத்த - அருள்மிகு அம்பாள் ஆலயங்கள். மேற்கண்ட தெய்வ ஆலயங்கள் அனைத்திற்கும் செல்கிறோம். ஆனால், அந்தந்த  ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் செயல்பாடுகள், வாழ்ந்து வழிகாட்டிய செயல்கள் என எதையும்; சிறிதளவு கூடச் செயல்படுத்தாமல், ‘கோயிலுக்குப்போயும்  புரோஜனமில்ல’ எனப் புலம்பினால், நியாயமா அது? வழிப்படுத்துவது - அதாவது நல்வழியில் செயல்படும்படியாகச் செய்வது எதுவோ, அதுவே வழிபாடு.

இதை அழுத்தந்திருத்தமாக நம் மனதில் பதிய வைப்பதற்காகவே, ‘வழிபட்டு’ எனக்கூறிப் பாடலைத் துவங்குகிறார் திருமூலர். ‘வழிபட்டு’ என்று சொல்லி,  உடனே ‘நின்று’ என்று சொல்லக்காரணம், அந்த வழிபாட்டில் நாம் உறுதியாக நிற்கவேண்டும் என்பதற்காகவே ! இவ்வாறு வழிபட்டு ‘நின்று’ செயல்  பட்டவர்களே, நினைத்ததை அடைந்தார்கள் என்பதையே, பெரியபுராணம் முதலான, அடியார்களின் பெருமையை விளக்கும் நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

அவ்வாறு செயல்பட்டால், மனம் தானாகவே நம் வசப்படும்; தூய்மையடையும்; வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்; அல்லல் படுத்தும் பிறவியில் இருந்து  விடுபடுவோம். இதற்கு மாறாகச் செயல்பட்டால் விளைவு என்ன? என்பதையும் விவரிக்கிறார் திருமூலர். வழிபாட்டில் தூய்மையில்லா விட்டால் மனம் நம்  வசப்படாது; மேலும் மேலும் துயரங்களில் தள்ளும் செயல்களை செய்யத்தூண்டும்; பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலை அடையாது என்று சொல்லிப்  பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர்.  தன் அனுபவங்களையே பாடலாகச் சொல்லியிருக்கும் திருமூலரின் வாக்குப்படி, வழிபாட்டின் உண்மையை உணர்வோம்!  உயர்வோம்!

பி.என் பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்