SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரிகாரம் என்றால் என்ன?

2019-02-20@ 17:06:56

பரிகாரம் என்றால் நமக்குள்ள பிரச்னைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்றி நல்வழிகாட்டுமாறு கடவுளிடம் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் இப்படி பல விஷயங்களை வேண்டிக்கொள்வதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை, பிரச்னைகள் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது. இன்பமும், துன்பமும் இணைந்தே இருப்பதுதான் வாழ்க்கை அமைப்பு. சிலருக்கு துன்பங்கள், துயரங்கள் குறைவாக இருக்கும். பலருக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை. அடிமேல் அடி, என்ற நிலை இருக்கும். இவை எல்லாமே நம் பிராரப்த கர்ம வினைதான். நாம் பல்வேறு ஜென்மங்களில் வாங்கி வந்த வரம். இந்த நல்வினை, தீவினைகளை நம் ஜாதக அமைப்பு, கிரக தசா புக்திகள், கோச்சார அமைப்புக்கள் மூலம் கிரகங்கள் நமக்கு உரிய கால நேரத்தில் ஏற்படுத்தித் தருகின்றது.

குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள், தீராத நோய்கள், வியாபாரம், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னைகள், வழக்குகள், சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள், அடிக்கடி விபத்துக்கள், கடன் பிரச்னைகள், தற்கொலை எண்ணங்கள், புத்திர தோஷம், குழந்தைகளால் பிரச்னை, திருமணத்தடைகள், விவாகரத்து வழக்குகள், அடிக்கடி இடமாற்றம், ஊர் மாற்றம், வருமானத்தடைகள், இன்னும் பல குடும்ப சூழ்நிலை காரணமான சங்கடங்கள் போன்றவைகள் நீங்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் வழிபாடுகள், விரதங்கள், நேர்த்திக்கடன்கள் என இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குறிப்பிட்ட பூஜைகள், வழிபாடுகள், விரத நோன்புகள் காலம் காலமாக செய்யப்பட்டு பலன்கள் தந்துகொண்டிருக்கின்றன. அதற்கென்றே பரிகார ஸ்தலங்கள், கோயில்கள் உள்ளன. அவரவர் கர்ம வினைக்கேற்ப, பிராரப்தப்படி பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தருகின்றது.

ஒரு சிலருக்கு சற்று காலதாமதமாகிறது. இவற்றையெல்லாம் பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் செய்து வரும்போது காலதாமதம் ஆவதால் அவநம்பிக்கை, சலிப்பு ஏற்படுகிறது. சகல பரிகார பூஜைகள், ஹோமங்கள், சித்தர்கள் ரத்தின சாஸ்திர முறைகள், வைதீக தானங்கள் என செய்தும் பலன் கிடைப்பதற்கு தாமதமாவதற்கு காரணம். கிரக தோஷம் தாக்கம் அதிகமாக இருப்பதுதான். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா என்பது ஒளவையாரின் வாக்காகும். அதாவது நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முடியும் நாள் என்று ஒன்று உண்டு. அன்றுதான் அது கூடிவரும். ஆனால் பரிகாரங்கள் நிச்சயமாக பலன் தராமல் போகாது. பகவானுக்காக செய்யப்படும் செலவும், நேரமும் ஒரு நாளும் வீண் போகாது என்பது யோகிராம் சுரத்குமாரின் அருள்வாக்காகும்.

பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் என்பது ரமணரின் வாக்காகும். அதாவது நீ செய்கின்ற தானம், தர்மம், உதவி, கருணை, அன்பு எல்லாம் பிறருக்குச் செய்தால் அது பல மடங்காக உனக்கே திரும்ப வேறு வழியில் உன்னை வந்து சேரும். தர்மம் தலை காக்கும், ஏற்போருக்கு இட்டது என்றாயினும், எங்காயினும் வரும். பரிகார விஷயங்களுக்காக ஒருவர் செய்கின்ற செலவுகள் பலருக்கு பயன் தருகின்றன. புரோகிதர்கள் மூலம் தரப்படும் தானம், வஸ்திர, பூஜை, ரத்தின பரிகாரம், ஹோம செலவுகள், தேங்காய், பூ, பழம் இதர சாமான்கள் எல்லாம் வாங்குவதன் மூலம் பலர் பயன் அடைகிறார்கள்.
 
பிராரப்தம் பாக்கியம் தேவை

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நமக்கு பிராரப்தம், பாக்கியம், வேண்டும். ஒருசமயம் காஞ்சி மகாஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு பக்தர் ஒரு சிறுமியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அழுதுகொண்டே பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். பூஜை முடிந்தவுடன் தன் உதவியாளர் மூலம் அவர் ஏன் அழுகிறார் என்று கேட்டுவரச் சொன்னார். வந்தவர் தன் பெண் குழந்தைக்கு இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதாகவும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்வதாகக் கூறினார். இதைக்கேட்ட மகா பெரியவர், ஒரு மாம்பழத்தை கொண்டுவரச்சொல்லி அதில் இருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டி அந்த குழந்தைக்கு தரச்சொன்னார். அத்துடன் ஆசீர்வாதம் செய்து, பிரசாதமும் கொடுத்தனுப்பினார். சில நாட்கள் சென்றபின் அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக  சென்றார்கள். மருத்துவர்கள் எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்துவிட்டு இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. அந்த ஓட்டை அதிசயமாக தானாகவே மூடிக்கொண்டு விட்டது என்று கூறினார்கள். இது காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருளாசியால் நடந்த அற்புதமாகும். இதைத்தான் பிராரப்தம், வரம் என்று சொல்கிறோம்.
 
நேரம் காலம்

பல வகையான பழமரங்கள் உள்ளன. இவையெல்லாம் எப்பொழுதும் நமக்கு பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான காலம், நேரம், பருவத்திற்கு வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனி தருகிறது. இதைப்போலத்தான் நமக்கு கால நேரம் எனும் சுபயோக சுப அம்சம் கூடிவரும் பருவத்தில்தான் நடைபெறும் காரியங்கள் நல்ல முறையில் நடக்கின்றன. முயற்சி நம்முடையது முடிவு அவன் செயல். நிகழ்ச்சிகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை அதை இறைவன் கிரகங்களின் மூலம் கால நிர்ணயம் செய்து நமக்கு அளிக்கிறான். இதையேதான் பகவான் ரமணர், அவரவர் பிராரப்தப்படி அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிக்கிறான் என்றும் நடவாதது என்றும் முயற்சிக்கினும் கிட்டுமெனில் கிட்டும்.

கிட்டாதெனில் கிட்டாது என்று அருளினார். ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரக நிலைகள் நாம் பிறக்கும்போது அந்தந்த ராசிகளில் உள்ள நிலையாகும். என்னதான் ராஜ யோக அமைப்பு உள்ள ஜாதகமாக இருந்தாலும், தசாபுக்தி, யோக பலம், கோச்சார கிரக ஜாதகம் வேண்டும். இந்த நேரம், காலம் கூடி வராத காரணத்தால்தான் எல்லாம் ஸ்தம்பித்து விடுகின்றன. இது நாம் செய்யும் பரிகார பூஜைகள் உட்பட அனைத்திற்கும்தான். குறிப்பாக இந்த பூஜை, வழிபாடுகள், பரிகாரங்கள், சித்தர்கள் அருளிய ரத்தின சாஸ்திர விஷயங்கள் எல்லாம் சரியான முறையில் பலன்கள் கிடைக்க அவரவர்கள் ஜாதக அமைப்பின்படி உரிய கால நேரம் பார்த்து, கிரக பார்வை, பலம் பார்த்து நல்ல லக்னத்தில் நல்ல கெளரி யோகத்தில் செய்வது உத்தமம்.
 
ஒன்று ஐந்து ஒன்பது

ஜாதக கட்டத்தில் 1, 5, 9 என்ற ஸ்தானங்கள் உள்ளன. இந்த ஸ்தானங்கள் மிக முக்கியமானவை. லக்னம், பஞ்சமம், பாக்கியம் என்று சொல்வார்கள். இந்த ஸ்தானங்கள்தான் நம் விருப்பங்கள், ஆசைகளை பூர்த்தி செய்பவை. லக்னாதிபதி தசா புக்தி நடக்கும் போது எல்லாம் கூடிவரும். புகழ், பட்டம், பதவி, கௌரவம் எல்லாம் கிடைக்கும். பஞ்சமஸ்தான தசா புக்தி நடக்கும்போது சுபகாரியங்கள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பரிகாரங்கள் வேலை செய்யும். பாக்கியாதிபதி தசா நடக்கும்போது சொத்து சேரும். நோய் நொடிகள் தீரும். சகல சம்பத்தும் விருத்தியாகும். 6, 8, 12 ஆம் அதிபதிகள் தசா காலம், நீச தசா காலத்தில்தான் நமக்கு கஷ்ட நஷ்டங்கள், காரியத்தடை, நோய் நொடிகள் வருகின்றது. அதே நேரத்தில் சிலருக்கு விபரீத ராஜயோகம், நீச பங்க ராஜ யோகம் என எதிர்பாராத யோகங்களும் அமையும். ஆகையால் ஒருவர் ஒரு வழிபாடு செய்கிறார், ஒரு கோயிலுக்குச் செல்கிறார் என்று அனைவரும் அதையே பின்பற்றாமல் நமக்கு என்ன பலன்கள். நாம் என்ன செய்ய வேண்டும் எந்த ரத்தினம் அணிந்தால் நன்மை, எந்த ஜபம் செய்தால் சித்திக்கும் என்பதை ஜாதக அமைப்பு மூலம் தெரிந்து செய்வதால் நிச்சயமாக வழி பிறக்கும், வசந்த காலம் வரும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்