SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்

2019-02-20@ 09:48:49

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் மார்க்க சகாயேஸ்வரர். இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படுகிறது. அம்பாளின் திருநாமம் மரகதாம்பிகை. அவளின் கண்களில் அப்படியொரு மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து சிலிர்த்தபடி கோயிலை வலம் வந்தால், நம் கண்ணில் நீர் ததும்பித் திரையிடும். தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக பாண தீர்த்தமும் உள்ளது. திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற துவங்கிவிட்டால் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு என பல ஊர்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்படும் பக்தர்கள், வழியில் உள்ள தலங்களைத் தரிசித்தபடியே செல்வார்கள்.

அவ்வாறு செல்லும் போது ஆரணி அருகே உள்ள  அக்ராபாளையம் சிவாலயத்துக்கும் வந்து, அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள்தான் கிளம்பிச் செல்வார்கள். அப்போது, மார்க்க சகாயேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ரம் சொல்லி வழிபாடுகள் நடைபெறும். பிறகு, விடிய விடிய அன்னதானம் நடைபெறும். அதையடுத்து, அந்த பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள்.

தல வரலாறு:  

நடுநாடு என்று சொல்லப்படும் தேசத்தை சோழ மன்னன் ஒருவன் படையெடுத்து வென்றான். மலைகளும் பச்சைப்பசேல் வயல்களுமாக இருந்த அந்தத் தேசத்தில் மழைக்கும் பஞ்சமில்லை; வெயிலுக்கும் குறைவில்லை. பாறைகள் கொண்ட மலைகளும் இருந்தன; மரம், செடி, கொடிகளுடனான மலைகளும் இருந்தன. சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும் வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. முனிவர்களாலும் ஞானிகளாலும் போற்றிக் கொண்டாடப்பட்ட, தபஸ் செய்வதற்கு உகந்த அழகிய வனமாகத் திகழ்ந்த ஆரணிக்கு வந்து, அங்கே சில காலம் தங்கி, தவம் செய்த முனிவர் பெருமக்கள் பலர்.

சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கித் திளைத்தான்.  இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல, மகிழ்ந்து போனான் மன்னன். அப்படியென்றால், இங்கே அருமையானதொரு சிவாலயத்தைக் கட்டுங்கள். நம் தேசத்து மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, நம் வாழ்க்கைப் பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நம் வழித் துணையாக சிவனார் வரட்டும்.

வழியில் ஏதும் சிக்கல்களோ பிரச்னைகளோ வராமல் இருக்கவும், சரியான வழி எது என்று நமக்குக் காட்டவும் அந்தத் தென்னாடுடைய ஈசன் அருள் புரியட்டும்! என்று மன்னன் மனத்துள் வேண்டிக்கொண்டு உத்தரவிட்டான். அதன்படி, அந்த வனப்பகுதியின் ஓரிடத்தில் கோயில் கட்டப்பட்டது.  நல்வழிகாட்டும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்பதால், நல்ல விஷயங்களைத் தந்தருளும் ஈசன் வீற்றிருக்கிறான் என்பதால், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு மார்க்க சகாயேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டப்பட்டது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்பட தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்து செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நெய்விளக்கேற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்