SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுடராய் இரு! நெருப்பாய் எழு!!

2019-02-19@ 16:59:32

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 3

“தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’’ என்று கேட்டான் மகாகவி பாரதி. தழல் வீரத்தில் மூப்பென்றும் இல்லை. குஞ்சென்றும் இல்லை. ஆனால்  தழலின் அளவில் சிறிதென்றும் பெரிதென்றும் உண்டு இந்த அளவு கூட நெருப்பின் தன்மையால் வந்ததில்லை. நெருப்பு, சிறு நெருப்பாவதும் பெரு நெருப்பாவதும் நெருப்பின் தன்மையில் இல்லை. சூழலின் தன்மையால் வந்தது.   பற்றிப் படர்வதற்கும்  முற்றி வளர்வதற்கும் உரிய சூழல் இல்லையென்றால் அது சிறு நெருப்பாய் சுடர்கிறது. விசிறி வீசும் காற்று, பற்றிக்கொள்ள உரிய பொருட்கள் ஆகியவை சூழ இருக்கும்போது பெரு நெருப்பாய் வளர்கிறது. அதுபோல் ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் சூழல் அமையாதபோது அல்லது அத்தகைய சூழலை தேடிப் போகாதபோது நீண்ட நேரம் சிறு நெருப்பாகவே இருக்கிறான்.

உரிய வாய்ப்பு அமைக்கையில் பற்றிக்கொள்கிறான் வெற்றி கொள்கிறான் உகந்த சூழல் உருவாகும் வரை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கனன்று கொண்டிருக்கும் லட்சிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. மாறாக அந்த நெருப்பை பெரு நெருப்பாய் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளுக்காகவும் தவம் இருக்க வேண்டும். கனல் எனும் சொல்லின் இரண்டாம் எழுத்தை நீக்கிப் பார்த்தால் கல் என்னும் சொல் கிடைக்கும். சந்தர்ப்ப சூழலால் தனக்குள் இருக்கும் கனலை மறைத்துக்கொண்டு கல்லாய் கிடந்தாள் அகலிகை. ராமன் கால் துகள் பட்டதும் உறங்கிக் கிடந்த நெருப்பு உசுப்பிவிடப்பட்டது.

கல்லாய்க் கிடந்தது புறத்தோற்றம்  எனினும் உள்ளுக்குள் ஒரு கனல் கனன்று கொண்டிருந்தது. ராமனின் கால் துகள் உரசியதும் எழுந்தது. இத்தகைய சூழல் ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் ஏற்படக்கூடும் . அவசரப்பட்டு தட்டழியவும் கூடாது. பொறுமை எனும் பெயரில் உள்ளிருக்கும் நெருப்பை அணைய விடவும் கூடாது. இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இது சராசரிகளின் உலகம். எல்லோரையும் சராசரியாகத்தான் இந்த உலகம் பார்க்கும். தன்னுடைய எளிய அளவுகோல்களுக்குள் அகப்படும் அறிவு, ஆற்றல், திறமை இருந்தால் அவர்களை இயல்பானவர்கள் என்றும் இவற்றில் கொஞ்சம் கூடியிருந்தாலும்  விசித்திரப் பிறவிகள் என்றும் பார்க்கும்.

சராசரிக்கும் மேம்பட்ட திறமையாளர்கள் யாரையும் சமூகம் சரியாய் நடத்தியதாய் சரித்திரம் இல்லை. வேடிக்கை என்னவென்றால் தான் சாதிக்கப் போகும் துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் சந்தேகப் பார்வையையும் சீண்டல் பேச்சுகளையும் தொடக்கத்தில் எல்லோருமே சந்திக்க வேண்டும். தங்களுக்கு தெரியாத  புரியாத ஒன்றை “அதெல்லாம் ஒத்து வராது” என ஒரே வரியில் ஒதுக்கித்தள்ளும் ஒன்றுவிட்ட மாமாக்களும் இரண்டு விட்ட சித்தப்பாக்களும் இல்லாத குடும்பம்தான் ஏது? கனவுகள் பலகொண்டு நவயுக இளைஞன் ஒருவன் புதியதாய் ஒரு படிப்பை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு அணை போடுவதற்கென்றே ஊரிலிருந்து பெட்டியுடன் புறப்பட்டு வருவார்கள் இந்த பிரகஸ்பதிகள்.

“பேசாம பையனை பி.காம் படிக்க வை” என்று நம்வீட்டு தோசையைத் தின்றபடி நம் பிள்ளைகளின் கனவுகளில் கை கழுவுவார்கள். அதற்கெல்லாம் அசராமல் அவரவரும் தங்கள் கனவுகளை கைப்பற்ற தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் பார்வையில் மட்டுமின்றி அவரவர் அபிப்பிராயங்களிலும் சாதாரணமாகவே இருக்கும்  இளைஞர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு குழம்பிப் போக வாய்ப்பு உண்டு. எதை நம்பி புதிதாக  ஒன்றில் இறங்குவது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். இதற்கு காலங்காலமாக ஒரே பதில் சொல்லப்பட்டது உன்னை நீ நம்பு என்பதுதான் அந்த பதில்.
எனக்குத் தெரிந்து, மிகவும் சக்திவாய்ந்த வாசகமும் இதுதான். மொக்கையான வாசகமும் இதுதான். உன்னை நம்பு என்கிறார்களே அதை மேலோட்டமாக புரிந்து கொண்டாலும் அல்லது எந்த புரிதலும் இல்லாமல் வெறும் உபதேசம் ஆகவே சொன்னாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

கந்தரனுபூதியில் இரண்டு வரிகள்.
யான் ஆகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
 
என்கிறார் அருணகிரிநாதர். யான் என்னும் அம்சம் தன்னுடைய குறுகிய அடையாளங்களை இழந்து தனக்குள் நிறைந்திருக்கும் பரிபூரணத் தன்மை ஆகிய தான் என்பது கலக்கும்போது அது எல்லையில்லாத ஆற்றலுடன் விரிகிறது. நான் என்பது என்ன? தான் என்பது என்ன? தலைசுற்றுகிறதே என்கிறீர்களா. தலை
சுற்றுகிறது என்று புகார் சொல்கிறது அதுதான் அதனால் அந்தப் புகாரை மௌன சாட்சியாய் கவனிக்கிறது. அது கவனிக்கிறது. அதுவே தான் எனப்படும்.
“உடலுக்கும் மனதுக்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை இது எங்கும் நிறைந்தது ஏனெனில் இதற்கு உருவம் இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இது எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம். எது சக்தி மிக்கதோ, எது அதிகாரம் மிக்கதோ அது கண்களுக்குத் தென்படுவதில்லை. பெரிய நிறுவனத்தில் அதன் தலைவரை எடுத்துக்கொள்ளுங்கள் அலுவலகத்துக்கு உள்ளே இருப்பார் ஆனால் வெளியே எங்கும் தென்பட மாட்டார். யாராவது அவரை சந்திக்க விரும்பி நேரடியாக வந்து விட்டால் கூட அது சாத்தியமாகாது, முன் அனுமதி போன்ற கெடுபிடிகள் ஏராளமாக இருக்கும், அந்த அலுவலகத்திலேயே பணிபுரியக்கூடிய மனிதர்களில் கூட ஓரிருவரைத் தவிர எல்லோரும் அவரை சந்தித்து விட முடியாது அவரை யாருமே பார்க்க முடியாது. ஆனால் தன் அறையில் சிசிடிவி வைத்தபடி அவர் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு இருப்பார். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவரால் தன்னுடைய நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்.

அந்த கேமரா என்பதுகூட ஒருவகையில் அவர் எங்கு இருந்தாலும் அலுவலகத்துக்குள்ளேயே இருப்பதைப் போல தான். இப்போது சொல்லுங்கள் சில கோடிகள் விற்று வரவு செய்கின்ற ஒரு நிறுவனத்தின்  உரிமையாளருக்கே இது சாத்தியம் என்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உருவாக்கிய உரிமையாளராகிய இறைவனுக்கு இது சாத்தியம் இல்லையா என்ன? பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த நிறைபொருளை மறைபொருளாக நம் அனைவருக்கும் உள்ளே மறைந்திருக்கிறது. இந்த பேராற்றலை தான் நாம் நம்புகிறோம். ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அது நல்லதா இல்லையா என்று உள்ளுணர்வு மூலம் ஒன்று இதுதான் உணர்த்துகிறது அதேபோல அந்த செயலை தாமதிக்காமல் செய்யும்படி உந்து சக்தியாகும் அதுவே திகழ்கிறது. அனைத்திலும் பங்கெடுக்கிறதோ இல்லையோ அனைத்தையும் கண்காணிக்கிறது.

“நான்’’ என்னும் குறுகிய எல்லைக்குள் இருக்கும் இந்த “தான்” தூண்டப்படும் போது நம் எல்லையில்லாத ஆற்றலை நாமே அறிந்து கொள்கிறோம். அதனால் தான் இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா படைக்கவில்லையா என்பது போன்ற  விவாதங்களுக்கு எல்லாம் நம்முடைய சமயத்தின் உள்நிலை அனுபவங்களிலேயே விடை காண முற்பட்டன. விடையை உணர்ந்து அமைதி ஆயின. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்று சூட்சுமமாய் உணர்த்தின. இறைத் தன்மையின் இருப்பே எல்லாவற்றையும் உருவாக்கியது. எல்லாவற்றிலும் நிறைந்தும் இருக்கிறது என்பதை பல ஞானிகள் உள்நிலை அனுபவத்திலேயே கண்டு உணர்ந்தும் உணர்த்திக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழனின் பழைய இலக்கியங்கள் இதனை மிக எளிதாக கையாண்டன.சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறு நூறு தன் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இந்தக் கேள்வியை கடந்து சென்றது.

“நீலமேனி வாலிழை பாகத்து
 ஒருவன் இருதாள் நிழல் கீழ்
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே” என்றது.

இறைவனுடைய இருப்பில் அவனுடைய கண்காணிப்பிலும் கனவிலும் மூவகை உலகங்களும் ஒரு பூ மலர்வது போல மலர்ந்தன என்கிற இந்த மூன்று வரிக் கவிதை எல்லாவிதமான தத்துவ விசாரணைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுள் தனக்குள்ளும் இருக்கிறது. அது பெரிதினும் பெரிது. அதன் ஆற்றலை உணர்கையில், அந்த ஆற்றலின் அங்கமாய் என்னை உணர்கையில் என் பேராற்றல் தொழிற்படத் தொடங்குகிறது” என்பதை மனிதன் தன் உள்நிலையில் உணர்கிறான். இந்த ஆற்றலின் நெருப்பை உலகியல் கட்டுப்பாடுகள் குறை மதிப்பீடுகள் ஆகியவற்றால் சிறியதாகவே வைத்துக் கொண்டால் அந்த நெருப்பு குறுகி எரிகிறது. ஒரு விழாவில் விளக்கேற்ற வேண்டுமென்றால் முதல் வேலையாக மின்விசிறியை நிறுத்துகிறோம்.

ஏனென்றால் விசையாக வீசுகின்ற காற்று அந்தச் சுடரை அணைத்துவிடும் என  அஞ்சுகிறோம். அதே நேரம் காட்டுப் பகுதியில் சமூக விரோதி ஒருவன் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதை காவல்துறை பார்த்துவிட்டால் நெருப்பு வைத்து அழிக்க முற்படுகிறது. அப்படி நெருப்பு வைக்கும் போது காற்று படாதவண்ணம் சுற்றிலும் அரண் அமைத்து காப்பாற்றுவதில்லை. மாறாக காற்று பலமாக வீசினால் தான் நெருப்பு பரவி கஞ்சா செடிகளை அழிக்கும். சுடர் பலவீனமாக இருக்கின்ற போது  தென்றலில் கூட அணைந்து விடுகிறது. ஆனால் சுடருக்கு பலம் வந்துவிட்டால் அணைக்க முற்பட்ட காற்றே அந்த நெருப்பை வளர்க்கிறது. அதே போல நம் லட்சிய நெருப்பு பலவீனமாக இருந்தால் எதிர்மறை பேச்சுகளும் ஏளனங்களும் அதை அணைத்துவிடும். நமக்குள் இருக்கும் பேராற்றலின் துணையைக் கொண்டால் எதிர்க்கும் உலகமே நம்மை வளர்த்து விடும் இதை என்னுடைய கவிதை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.

வீட்டுச் சுடராய் இருந்துவிட்டால்
வீசும் தென்றலும் அனைத்து விடும் ;
காட்டு நெருப்பாய் எழுந்துவிடு
காற்றே உன்னை வளர்த்து விடும்.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்