SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலைகள் தீர்ப்பாள் காமாட்சி

2019-02-18@ 17:39:25

அடையார் - சென்னை

காஞ்சிபுரம் காமாட்சியை சென்னையிலேயே தரிசிக்க முடியுமா? முடியும். சென்னை அடையாறு கிரீன்வேஸ் குறுக்கு சாலையில் இந்த எழிலார்ந்த தலம் உள்ளது. காஞ்சி முனிவர் அருளுரைப்படி நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்தினுள் நுழைகிறோம். வலப்புறம் பைரவரும், இடப்புறம் துர்க்கா தேவியும் அருட்பாலிக்கிறார்கள். பலி பீடம், கொடிமரம், சிம்மவாகனத்தை கடந்து மேலே நோக்கினால்  இருபுறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி வீற்றிருக்க சுதை வடிவில் காமாட்சி தேவி காட்சியளிக்கிறாள். அது  இருபது தூண்கள் கொண்ட அர்த்த மண்டபம். அதன் நடுவே மூல கருவறையில் காமாட்சி அருள்புரிகிறாள்.

குமார சம்பவம் நிகழ வேண்டும் என்பதற்காக மன்மதன் ஈசன் மேல் மலர்கணைகளை எய்ய, கோபம் கொண்ட பரமேஸ்வரன் மன்மதனை சாம்பலாக்கி விட்டார். ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்று அவன் மனைவிக்கு ஆறுதல் அளித்தார், சிவன். தன் நிலைக்காக வருந்திய மன்மதன் அன்னை பராசக்தியை தரிசித்தான். ஈசன் என்னை தண்டித்து விட்டாரே, குமார சம்பவம் நிகழாமல் போய்விடுமோ?’’ என்று தன் அச்சத்தைத் தெரிவித்தான். அவன் கூறியதை ஏற்ற அம்பிகை, அவனுடைய கரும்பு வில்லையும், மலரம்புகளையும் பெற்றுக்கொண்டு, காஞ்சிபுரம் தலத்தில் பிலாகாசம் எனும் கருவறையில் அமர்ந்து, அனைத்து சிவத்தலங்களிலும் உள்ள ஈசனின் போக சக்தியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு தவத்தில் ஆழ்ந்தாள். போக சக்தியை இழந்த ஈசன், அன்னை காமாட்சியை நாடி பல்வேறாக துதித்தார்.

அனைத்து சிவாலயங்களிலும் உறையும் அம்பிகையே  என்ற பொருளில் ‘சர்வசைவாலயேஸ்வரி’ என்று அவர் மனம் உருகி அழைக்க, மனம் மகிழ்ந்த காமாட்சி, ஈசனை அழைத்து, அவரது இடது மடி மீதமர்ந்தாள். பிறகு மன்மதனின் வேண்டுகோளின்படி ஈசனும், அன்னையும் குமரன் அவதாரத்தை நிகழ்த்தினார்கள். சென்னை அடையாறு தலத்தை தரிசிக்கும்போது, இந்த புராண சம்பவம் நம் மனதில் நிழலாடுகிறது. மூலக் கருவறையின் நுழைவாயிலில் இரு கம்பீரமான சிங்கங்கள் காவல் காக்கின்றன. அன்னை காமாட்சிக்கு எதிரே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காமாட்சி அன்பே உருவாய் கருணையே வடிவாய் அருள்கிறாள். பாசம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணம் ஏந்தி அன்னை அமர்ந்திருக்கும் திருக்கோலத்தைக் காணும்போது நாம் இருப்பது சென்னையிலா அல்லது காஞ்சியிலா என்று நியாயமான சந்தேகம் எழுகிறது.

அன்னையின் திருவுருவின் அருகே தவக்கோல காமாட்சியின் தரிசனமும் கிட்டுகிறது. தினமும் காலையில் கோபூஜை, வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அலங்காரங்கள், பௌர்ணமி தோறும் ஸ்ரீசக்ர பூஜை, சுவாசினி பூஜை, தேவி மாஹாத்மிய பாராயணம் என விதவிதமாய் வழிபாடுகள் நடக்கின்றன. கருவறையின் கோஷ்டத்தில் காமாட்சியின் சேனாநாயகி, தண்டநாதா என்றெல்லாம் புகழப்படும் வாராஹி கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறாள். அடுத்து நாம் தரிசிப்பது அரூப லட்சுமி. லட்சுமி என்றாலே மங்களம். இது என்ன அரூப லட்சுமி? ஒரு சமயம் திருமாலிடம் அவருடைய கருமை நிறம் பற்றி திருமகள் ஏளனமாய் பேச, கோபம் கொண்ட திருமால் திருமகளின் அழகு மறைந்து விடுமாறு சாபம் கொடுத்தார். சினம் கொண்ட மணாளனிடம் மன்னிப்பு கேட்ட மகாலட்சுமிக்கு சாப விமோசனம் சொன்னார் திருமால்.

அதன்படி, காஞ்சிக்கு சென்று காமாட்சி கோயிலில் கடும் தவத்தில் ஆழ்ந்தாள். கறுத்த நிறத்துடன் களையிழந்து தன் அழகைத் தொலைத்த மகாலட்சுமிக்கு காட்சி தந்த காமாட்சி, அவளை அஞ்சன காமாட்சி என அழைத்தாள். ‘கணவனின் மனம் கோணும்படி மனைவி நடந்து கொள்ளக் கூடாது என்பதை உலகம் அறிந்து கொள்ளதான் இச்சம்பவம் நடந்தது. எனக்கு இடப்பக்கம் நீ இந்த வடிவிலேயே இரு. என்னை வழிபடும் பக்தர்கள் என் குங்குமப் பிரசாதத்தை உன் திருமேனி முழுவதும் தடவி பின் இட்டுக் கொள்வார்கள். நீயும் சாப விமோசனம் பெற்று, மறுபடியும் உன் தோற்றப் பொலிவைப் பெறுவாய். அந்த அழகு வடிவத்தில் சௌந்தர்ய லட்சுமியாய் என் வலப்பக்கம் அருள்வாய். பக்தர்கள் உன் பாதங்களைத் தொடும் பாக்யத்தை அடையட்டும்.

அவர்களுக்கு நீ சகல செல்வங்களையும் அருள்வாயாக’ என திருவாய் மலர்ந்தருளினாள். அதன்படியே சாப விமோசனம் பெற்று தங்கநிறம் கொண்டாள் மகாலட்சுமி. அந்த சௌந்தர்ய லட்சுமியை காமாட்சியின் வலப்புற கோஷ்டத்தில் தரிசிக்கிறோம். பூமிக்கு வந்த திருமகளுக்கு என்ன ஆயிற்றோ என்று பதை பதைத்தபடி அங்கு கள்ளத்தனமாய் வந்த திருமாலை, ‘கள்வர் பெருமானா’க தரிசிக்கிறோம். வாராஹிக்கு முன் புறம் அஷ்ட லட்சுமிகளோடு கூடிய ஜயஸ்தம்பம் உள்ளது. மகாகணபதி, சம்பத் விநாயகர் இருவரும் அழகாக அன்னையின் சந்நதிக்கு இடப்புறம் வீற்றுள்ளார்கள். பிராகாரம் வலம் வருகையில் தல விநாயகர், நாகர், மீனாட்சி, ராஜமாதங்கி, அன்னபூரணி, பூரணா புஷ்கலையோடு கூடிய தர்ம சாஸ்தா, ஆதிசங்கரர் ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அடையாறு சத்யா ஸ்டூடியோ பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆலயத்தை 10 நிமிட நடைப் பயணத்தில் அடையலாம்.

ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்