SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசி மக கொடியேற்றம் பங்குனி உத்திரத்தில் தேரோட்டம்

2019-02-18@ 17:38:09

சித்தூர், வள்ளியூர், நெல்லை.

பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன் வேட்டைக்கு போனபோது கண்டெடுக்கப்பட்ட குழந்தை மணிகண்டனுக்கு வயது பதிமூன்று தொடங்கிய போது. ராணிகோப்பெரும்தேவிக்கு இறைவன் அருளாள் குழந்தை பாக்யம் கிட்டியது. ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராஜராஜன் என பெயரிட்டனர். தம்பி மீது மணிகண்டன் பிரியமாக இருந்தான். ராஜராஜனும் அண்ணன் மணிகண்டனை உயிருக்கு உயிராக மதித்தான். மணிகண்டனுக்கு முடிசூட்ட எண்ணினார் பந்தள ராஜா. இதற்கு எதிராக ராணியின் உறவினரான ஒரு அமைச்சர் சதி செய்தார். மணிகண்டனை விரட்ட வேண்டும். என்று முடிவு செய்து, அரண்மனை வைத்தியரின் மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். அதன்படி ராணி கோப்பெரும்தேவி வயிற்று வலியால் துடிக்க, அரண்மனை வைத்தியர் புலிப்பால் இருந்தால் தான் வலியை குணமாக்க முடியும் என்கிறார். புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு விரைந்த மணிகண்டன், புலி கூட்டத்துடன் அரண்மனைக்கு வந்தார். தான் யார் என்பதை உணர்த்தினார். பின்பு சபரிமலையில் ஜோதியாகி தெய்வமானான்.

அடுத்த பிறந்த மகன் ராஜராஜன் இந்த நாட்டை ஆளட்டும் என்று மன்னன் ராஜசேகரனும், ராணி கோப்பெரும்தேவியும் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தாய், தந்தையே என்னை ஆசிர்வதியுங்கள் என்ற கூறியபடி அவர்களின் பாதங்களை தொட்டான் ராஜராஜன். என்னதப்பா இந்த கோலம் முடிசூடி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டிய நீ, ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு எங்கே செல்கிறாய். என்று தாய் கேட்க, தந்தையே, அண்ணன் மணிகண்டன் இல்லாத இந்த அரண்மனை வாழ்வு எனக்கு வேண்டாம். நான் போகிறேன். என்று கூறிவிட்டு, பெற்றவர்கள் தடுத்தும் நிற்காமல் அண்ணன் மணிகண்டன் நாமத்தை உரைத்தபடி அவ்விடத்திலிருந்து குதிரையில் பயணமானார் ராஜராஜன். பல ஊர்கள் கடந்து பந்தள நாட்டு எல்லை விட்டு நாஞ்சில் நாடு கடந்து, பாண்டிய நாட்டிற்கு வந்தார் ராஜராஜன்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையில் உருவாகி ஓடும் நம்பி ஆறு பாய்ந்தோடும் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார். ராஜராஜன். உடையில் ராஜ தோற்றம் மாறவில்லை. ஆற்றில் சிறிதளவே வெள்ளம் வர அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாள் இடைக்குல பெண்ணொருத்தி. கன்று தென்கரைக்கு நிற்க, பசு மற்ற மாடுகளும் வடகரையில் நின்றது. அப்போது ஆற்றில் பெருவெள்ளம் வந்தது. இக்கரையில் நின்ற பசு கத்தியது. அக்கரையில் நிற்கும் கன்று தாயிடம் வரமுடியாமல் தவித்தது. அப்போது அந்த இடைக்குல பெண் ஆற்றுக்கு தென் கரையில் இருக்கும் மகாராசா கண்ணுக்குட்டியும், பசுவும் சேர வழி செய் ஐயா என்றுரைத்தாள். ராஜராஜன் அண்ணன் மணிகண்டனை நினைத்து தன் வலக்கரம் நீட்ட, ஆற்றின் நடுவே பாதை கூட, அவ்வழியே கன்று ஓடி தாயிடம் சேர்ந்தது. மீண்டும் ஆற்றில் சீராய் வெள்ளம் ஓடியது.

வியப்பை கண்ட அந்த பெண் தென்கரை மகாராசா என்று குரல் எழுப்பி அழைக்க, தென் கரையில் இருந்தபடி ராஜராஜன் புன்னகைத்தார். தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து தியானம் செய்தார். அரிஹர சுதன் அய்யப்பன் அவரிடத்தில் உன்னுள் நான் கலந்தேன். உன்னை தரிசிப்பவர்கள் உன்னில் என்னைப்பார்க்கலாம் என்றுரைத்தார் அசரீரியாக. ராஜராஜன் அமர்ந்த நிலையில் சிலையானார். மாதங்கள் சில கடந்த பின், ராஜராஜன் தான் இங்கே அமர்ந்திருப்பதை ஊரறிய, உலகறிய செய்ய வேண்டும் என்று எண்ணினார். அந்த நேரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தேரோட்டம் நடத்த வேண்டும் அதற்கு கொடி மரம் வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். கொடி மரம் வெட்ட மூன்று குழுவாக பிரிந்து மூன்று மலைகளில் மரம் வெட்ட செல்கிறார்கள். ஒரு குழுவினர் காக்காச்சி மலைக்கு மரம் வெட்ட செல்கின்றனர். ஒரு  குழுவினர் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு மேற்கே காரையார் பகுதிக்குட்பட்ட கன்னடியான் சோலைக்கு செல்கின்றனர். இன்னொரு குழுவினர் திருக்குறுங்குடி மலைக்கு மேற்பரப்பில் வெட்ட செல்கின்றனர்.

திருக்குறுங்குடி மலைப்பகுதியில் கொடிமரத்திற்காக வெட்டப்பட்ட மரத்தை நம்பி ஆற்றில் விடுகின்றனர். அம்மரம் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. சித்தூர் வந்ததும், ராஜராஜன் சிலையாக நிலையம் கொண்டிருக்கும் பகுதி அருகே வந்தபோது, ஆலமரம் வேர் தட்டி நிற்க, மரத்தின் பின் தொடர்ந்த வந்தவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது. மரம் நகரவே இல்லை. இதுகுறித்து திருச்செந்தூர் சென்று கோயில் நிர்வாகிகளிடம் எடுத்து கூறுகின்றனர். அவர்கள் கேரள நம்பூதரிகளை வரவழைத்து பிரசன்னம் பார்க்கின்றனர். அப்போது சித்தூரில் நிலையம் கொண்டிருப்பது அந்த அய்யப்பனின் தம்பி ராஜ ராஜர் என்றனர். அவருக்கு சிலை வடித்து உரிய பூஜை செய்தபின் முயற்சியுங்கள் காரியம் வெற்றியாகும் என்றனர்.

பூஜை செய்யும் விதம் பற்றி கூறியவர்கள், ராஜராஜர் என்பதை தெய்வாம்சம் கொண்டவர் என்பதால் ராஜராஜ ஈஸ்வரர் என்றும் மகா ராஜஈஸ்வரர் என்றும் அழைத்து வழிபடுமாறு கூறினார். அதுவே மகாராஜேஸ்வரர் என அழைக்கப்படலாயிற்று. நம்பூதரிகள் சொன்னபடி பூஜை செய்தும் மரம் நகரவில்லை. அன்றிரவு திருச்செந்தூர் கோயில் நிர்வாகிகளின் கனவில் வந்த சண்முகர் இங்கிருக்கும் வேல் ஒன்றை கொண்டு சென்று மகா ராஜேஸ்வரர் சந்நதியில் வைத்து விட்டு, உனக்கு கோயிலுண்டு, விழா உண்டு, தேரும் உண்டு என்று கூறிவிட்டு மரத்தை தட்டு, மரம் தானே வந்து சேரும் என்று கூற, அதன்படியே அவர்கள் சித்தூர் வந்து மகாராஜேஸ்வரர் சிலையின் வலது கையில் வேல் கொடுத்தனர். பின்னர் நடந்த பூஜையின்போது ஐயா, உனக்கு கோயில் உண்டு, நித்திய பூஜை உண்டு, விழா உண்டு அத்தாந்தர காடானாலும் உத்திரத்தில் ஊர் கூடும். அப்போது தேர் ஓடும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னரே மரம் தங்கு தடையின்றி சென்றது. இதன் காரணமாகத்தான் திருச்செந்தூர் மாசித்திருவிழா கொடியேற்றம் அன்று சித்தூர் மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு கால் நாட்டப்படுகிறது. பத்து நாளுக்கு முன்னாடி கொடியேற்றம் நடைபெற வேண்டிய விதிகளுக்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்னாடியே சித்தூர் கோயிலில் கால் நாட்டக்காரணம். திருச்செந்தூரில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற மகா ராஜேஸ்வரர் சாந்தமாகி துணையிருக்க வேண்டும் என்பதற்கு தான். என்று கூறப்படுகிறது. மாசியில் கொடியேற்றி பங்குனியில் தேரோட்டம் காண்கிறார் சித்தூர் மகாராஜா. வள்ளியூரிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலுள்ள சித்தூர் கோயில் கேரள மரபுப்படி கட்டப்பட்டிருக்கிறது. கோயிலைச்சுற்றி 22 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் உள்ளது. கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. வடக்கு வாசல் நம்பி ஆற்றைப்பார்த்து உள்ளது. மகாராஜேஸ்வரர், கேரளாவைச் சேர்ந்த அதிகம் பேர்களுக்கு குல தெய்வமாக திகழ்கிறார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை என பரவலாக பல ஊர்களில் இக்கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்களாக உள்ளனர்.

படங்கள்: வள்ளியூர் ந.கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்