SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரும்பேறு நல்கும் மாசி மக நீராடல்

2019-02-18@ 17:34:37

கும்பகோணம், மாசி மகம்: 19-2-2019

மாசி மகம் என்றாலே தப்பாது நம் நினைவிற்கு வருவது குடந்தை மகாமகக் குளம்தான். நீராலானது இவ்வுலகு என்பது மகாவாக்கியம். அந்த நீரையும் நீர் நிலைகளான குளம், ஆறு, கடல் போன்றவற்றை நோக்கியும் அதில் நீராடியும் வணங்குவதென்பது பெரும் மரபாக இங்குள்ளது. எனவே, மாசி மாத பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேரும் சூழலில் கும்ப ராசியில் சூரியன் அமர்ந்து பரஸ்பரம் முழுப் பார்வையுடன் நோக்கும் புனித நாளே மாசி மகம் ஆகும். குடந்தை மட்டுமல்லாது சகல தீர்த்தங்களிலும் அன்று எல்லோரும் நீராடியும் ஈசனை வணங்கியபடியும் இருப்பார்கள். மாசி மாத மக விழாவினை முன்னிட்டு கொடியேற்றம், ஒலைச் சப்பரம், தேரோட்டம், தீர்த்தவாரி உள்ளிட்டவை விமரிசையாக நடைபெறும். மகத்தன்று குடந்தையைச் சுற்றியுள்ள மகாமகக் குளத்தோடு தொடர்புடைய சிவாலயங்களான ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கோடீஸ்வரர், கௌதமேஸ்வரர், அமிர்த கலச நாதர், பாணபுரீஸ்வரர், அபிமுகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் போன்ற பன்னிரெண்டு கோயில்களின் உற்சவ மூர்த்திகளும் ரிஷப வாகனத்தில் அம்மனுடன் மகாமகக் குளம் அருகே எழுந்தருளுவர்.

அத்தனை சுவாமிகளும் கரையில் இருப்பார்கள். அதற்குப் பதிலாக அஸ்திரத் தேவருக்கு அபிஷேகங்கள் செய்து குளத்தில் மூழ்த்தும் போது சகல பக்தர்களும் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி எழுவதென்பது காணுவது பெரும் பரவசத்தைத் தரும். இதுபோலவே கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜகோபாலஸ்வாமி கோயிலில் கொடியேற்றமும், தேரோட்டமும், காவிரி ஆற்றின் முக்கிய படித்துறையான சக்கர படித்துறையில் திருமஞ்சனமும் நடைபெறும்.
இன்று நாம் பார்க்கின்ற இந்த குளத்திற்குப் பின்னால் மாபெரும் புராணமே அடங்கியுள்ளது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.

சகலத்தில் உறைந்திருக்கும் சர்வேஸ்வரனான ஈசனிடத்தில் இவ்விஷயத்தை உரைக்கச் சென்றார், பிரம்மா. கயிலை மல்லிகை போன்ற பனித்துகள் களால் போர்த்தியிருந்தது. ஈசனின் தட்பமான அருட்பார்வை அண்ட பேரண்டத்தை அணைத்தபடி இருந்தது. வேத சொரூபனான பிரம்மா சிவத்தின் திருவடியில் பணிந்தெழுந்தார். மெல்ல பேச ஆரம்பித்தார். ‘‘பிரளயப் பேரழவில் சிருஷ்டியின் பீஜங்கள் அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது. மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள வேண்டும்’’. ஈசனின் தாள் பணிந்து திருவடியை தம் கண்ணீரால் நனைத்தார். சிவனும் அந்நீரில் கரைந்தார். கருணை மயமானார். பிரளயத்தின்போது சிருஷ்டியின் மூலத்தோடு தானும் கரையாது இருக்க வேண்டுமே என உள்ளம் நெகிழ்ந்து கேட்டார் பிரம்மன். ஈசனின் பூப்பாதத்தில் தன் நாற் சிரசையும் பணிந்தேற்றும்போது ஈசன் பூலோகத்தின் பரத கண்டம் எனப்படும் பாரதத்தின் ஒரு கோணத்தின் மீது தன் திருப்பார்வையை வீசினார். சிவம் சுழன்று சூறாவளியாக அந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்துக் கொண்டது. அத்தலத்தினூடே ரகசியமாக அருவமான அமுதத்தின் சாரல் அலையாக எழுந்தது.

சிவச் சக்தி கொப்பளித்துப் பெருகத் தொடங்கியது. பிரம்மா கலங்கிய கண்களினூடே மகாதேவனை பார்த்தார். பிரம்மனின் வேத சிரசுகள் மெல்ல அதிர்ந்தன. ஈசனும் அதில் மயங்கினார். பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா. யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் பீஜங்களை வைத்து மூடு. உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக அனுப்பு. ஆகமங்களை ஆனந்தமாகக் கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சாத்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று. மேருவின் மேல் பகுதியில் சாயாமல் தரித்திடு.

ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும். மெல்ல நகர்ந்து பாரத வர்ஷத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான பீஜங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப் பிரகாசமாக ஜொலித்தது. பம்பரமாக சுழன்ற கும்பக் கலசம் பிற்காலத்தில் திருக்கலச நல்லூர் எனும் தற்போதைய தலமான சாக்கோட்டையாக மாறியது. குடம் சில காத தூரம் சென்று தங்கியது. பிரளயங்கண்டோர் அதிசயத்தனர்.  கும்பத்தினுள் ஈசன் தம்மை நிறுத்திக் கொள்ள கருணையோடு தவித்தான்.   சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு ஓர் வேடரூபம் தாங்கி முன்செல்ல கணநாதர் உட்பட யாவரும் பரிவாரத்தோடு தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்குச் சென்றனர்.

அமுதக் குடத்தை கண்ணுற்றனர். அருகிலிருந்த சாஸ்தாவிடம், ‘கும்பத்தை ஓரம்பால் சிதைத்து அமுதத்தை நாற்புறமும் வழியச் செய்’ என்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியா அந்த மாய குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார். ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். பாணம் எடுத்தார். பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். இந்த கும்பத்திற்கு வாய் தவிர மூக்கும் இருந்தது, கமண்டலத்திற்கு இருப்பதுபோல. அந்த மூக்கு வழியாக அமிர்தம் வெளியேற வேண்டுமென்று பரமேஸ்வரன் நினைத்தார். பாணம் மூக்கைத் துளைத்தது. அந்த மூக்கு வழியாகத்தான் அமுதம் பொங்கி வெளிவந்தது.

கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர். அமுதப் பெருவூற்று புகுபுகுவெனப் பொங்கியது. அதன் வாசச் சாரல் எண்திக்குகளிலும் பரவியது. அமுதம் இரண்டு குளங்களாகத் திரண்டது. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை என்றும் அழைக்கப்பட்டன. இத்தலத்தில் அமர்ந்து ஈசன் கும்பேஸ்வரர் ஆனார். கூடவே தன்னைச் சுற்றிலும் சில தலங்கள் உருவாவதற்கும் அவர் காரணமானார். பூரண கும்பம் என்பது பூணுல், மாவிலை, தீர்த்தம் மற்றும் அதன் சிகரமாக விளங்கும் தேங்காய் என்று எல்லாமும் அடங்கிய விஷயம். பிரம்மன் அதையும் புரிந்து வைத்திருந்தான். அவை என்ன ஆகின்றன என்று இமைகொட்டாது பார்த்தான். அடுத்தடுத்த ஆச்சரியங்கள் தொடந்து நிகழ்ந்தன.

கும்பத்தின் வாய் விழுந்த தலமே குடவாயில் எனும் குடவாசல் ஆகும். அங்கு கோணேஸ்வரராக நிலை கொண்டார் சிவபெருமான். கும்பத்தினின்று நழுவிச் சென்று விழுந்த பொருட்கள் ஒவ்வொன்றும் தனித் தனி லிங்க சொரூபம் பெற்றன. தேங்காய் விழுந்த அருகிலே உள்ளதுதான் இன்றைய மகாமகக் குளம்.
இதுவே அமுதத் தடாகம். தேங்காய் லிங்க உருப்பெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்தக் கோயில் ஈசனுக்கு நாரிகேளேஸ்வரர் என்ற பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள். அது மேற்கு பார்க்க இருப்பதால் அபிமுகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மாவிலை விழுந்து இத்தலத்தின் விருட்சமாக வன்னிமரமாக மாறிற்று. இன்னொரு மாவிலை விழுந்த இடமும் பிரளயத்தை மீறியிருந்தது. பிரளயத்திற்கு புறம்பாக நின்றதால் இன்றும் இத்தலத்திற்கு திருப்புறம்பியம் என்று பெயர். கும்பத்தைச் சுற்றியிருந்த பூணுல் குளத்தின் அருகே விழுந்தது.

அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணுல் என்று பொருள். அங்கே கௌதம முனிவர் பூஜித்ததால் கௌதமேஸ்வரர் ஆலயம் என்றே அதை வழங்குகின்றனர். வேடரூபம் கொண்ட மகாதேவன் இத்தலத்திலேயே தன்னொளி வீசி கருணை மயமாக அமர ஆவலுற்றார். கும்பத்தை குறுக்கி அமுதத்தை அத்தல திருமண்ணையும் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவஞ் செய்தார். ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்ஜோதி வடிவாக உட்புகுந்தார். எத்தனையோ யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர், இன்றும் பேரருள் பொழிகின்றார். புராணங்கள் பாவங்கள் நீங்கும் தலமாக காசியைக் குறிப்பிட்டு, அதைவிட ஒரு படி மேலேற்றி காசியில் கரையாத பாவமும் கும்பகோண மகாமக தீர்த்தத்தில் கரையும் என்கின்றன.  

உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது. எங்கு கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். சந்நதியை அடைத்துக் கொண்டு எப்போதும் ஒரு அருவமாக அமுதப் பிரவாகம் பாய்ந்தபடி இருக்கிறது. சற்று நேரம் நின்றாலே வெளியுலகத்தை மறைத்து அக உலக அமுதத்தை பீறிட்டுக் கொண்டு வரும் அற்புதச் சந்நதி அது. நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.மங்களத்தை விருட்சம்போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும்
அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திர பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன.

அமிர்தத் துளிகள் பல்வேறு இடங்களில் முத்துக்களாக விழுந்து ஆங்காங்கே தனித்தனி லிங்கங்களாக பொங்கின. அந்த தலங்கள் எவை?வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் ஐந்து குரோசம் அளவிற்கு அமிர்தம் விழுந்து லிங்கங்களானது. இந்த ஐந்து தலங்களையும் முதலில் தரிசித்து விட்டு பின்னரே குடந்தைக்கு வரவேண்டுமென்பது மரபாகும்.  இந்த தலத்தைச் சுற்றிலும் இரண்டாம் ஆவரணமாக மேலும் பல தலங்கள் உருவாயின. கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது திருபுவனம். இங்கு ஈசன் கம்பகரேஸ்வரர் எனும் திருப்பெயரில் அருட்பாலிக்கிறார். அம்மாசத்திரம் எனும் தலத்தில் பைரவேசர் எனும் நாமத்தோடு திவ்ய தரிசனம் தருகிறார்.

அய்யாவாடியில் கதலீவனேஸ்வரர், சிவபுரம் எனும் தலத்தில் பிரம்மபுரீஸ்வரர், மருதாநல்லூரில் சோமேஸ்வரர், பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர், பழையாறையில் சோமேசர், திருச்சத்திமுற்றத்தில் சிவக்கொழுந்தீசர், திருவலஞ்சுழியில் வெள்ளை வாரண விநாயகர், இன்னம்பூர் எனும் தலத்தில் சிவாநாதேஸ்வரர், திருப்புறம்பியம் தலத்தில் பிரளயங்காத்த விநாயகர், கொட்டையூர் எனும் தலத்தில் கோடீஸ்வரராகவும், கருப்பூர் தலத்தில் சுந்தரேஸ்வரர், வாணாதுரை எனும் தலத்தில் பாணபுரீஸ்வரர் என அருட்பாலிக்கிறார். இந்த அனைத்து தலங்களுமே அமுத கும்பத்தோடு தொடர்புடையவையாகும்.
கும்பகோணம் மகாமக குளம் நாயக்கர் ஆட்சி காலத்தில் ஸ்ரீகோவிந்தப்ப தீக்ஷிதர் என்பவரால் கட்டப்பட்டது. குளத்தில் கரைகளிலேயே 16 மண்டபங்களை நிறுவினார் அவர். குளத்திற்குள்ளேயே இருபது விதமான தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

அவை முறையே, இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், சிந்து தீர்த்தம், சரயு
தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் ஆகும். இக்குளத்திற்கு வடபுறத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, தாமிரபரணி, சரயு, சிந்து ஆகிய நவநதி கன்னியரின் சிலைகளையும் தரிசிக்கலாம். மகாமக நாளில் இந்த ஒன்பது நதிகளும் இங்கு சங்கமமாகின்றன. இக்குளத்தில் வடகரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனச்சுரர், இடபேஸ்வரர் ஆகியோர் மேற்கு நோக்கியவாறும், குளத்தில் வடகிழக்கு கோடியில் பாணேஸ்வரரும், கிழக்குக் கரையில் தென்மேற்கு திசையை நோக்கிய கோணேஸ்வரர் சந்நதியும், மேற்கு திசையை நோக்கி குணேஸ்வரர் சந்நதியும் உள்ளன. தென்கிழக்கில் பைரவேஸ்வரர் வடமேற்கு திசையை நோக்கியும், தெற்குக் கரையில் அகத்தீஸ்வரர், வியாசேஸ்சுரர், உபாயிகேசர் ஆகியோர் சந்நதிகளும் அமைந்துள்ளன.

படங்கள்: சி.ஸ்.ஆறுமுகம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்