SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசியில் மணமுடிக்கும் காதல் கடவுளர்

2019-02-18@ 17:29:05

மாசி மாதம் பௌர்ணமி நாள் மன்மதன் அவதரித்த தினமாகும். மன்மதன் பிறந்தது, உலகம் செழித்தது இன்பம் பெருகிறது முதலியவை விரிவாகக்  கூறப்படும். அடுத்த நாள் ரதி தேவி பிறப்பதும் அவள் வளர்ந்து விளையாடிக்  களிப்பதும் விரிவாகக்  கூறப்படும். மூன்றாம் நாள் ரதிக்கும் மன்மதனுக்கும்  சிறப்பாக வகையில் திருமண விழா கொண்டாடப்படும். இவ்விழாவில், கலந்து கொண்டு  ரதி மன்மதனை வழிபட்டால் விரைவில் திருமணம் கூடி, சுகமான வாழ்வு உண்டாகும்  என்பது நம்பிக்கையாகும். பாரத நாட்டின் பழம்பெரும் இலக்கியங்களில் தொடங்கி இனி வரப்போகும் இலக்கியங்களிலும் இடம் பெற்றிருப்பது காதல் ஆகும். பருவம் வந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அன்பினால் ஈர்க்கப்பட்டுக் கட்டுண்டு தம்முள் ஒருவருக்காக மற்றவர் பிறந்ததாகவே எண்ணி அன்பு கொண்டு இணைந்து வாழும் உண்மைக் காதல் வாழ்வு ஆகும்.

காதல் என்னும் இன்பவுணர்வு மனதில் இயற்கையின் நுண்ணாற்றலால் விளைகிறது. அதுவே உலகில் உயிர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. காதல் என்னும் இயற்கை உணவு தெய்வ வடிவம் கொண்ட போது மன்மதன் எனவும் ரதி எனவும் பெயர் பெற்றது. மன்மதனையும் ரதியையும் இணை பிரியாத இன்பக் காதலர்களாக இலக்கியங்கள் போற்றுகின்றன. மன்மதன் இயற்கையின் இன்ப ஊற்றின் வடிவமாவான். அதனால் இயற்கையில் காம உணர்வூட்டும் பொருட்கள் யாவும் அவனது உரிமைப் பொருட்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளன. தென்றல் அவன் ஏறிவரும் தேராகும். அத்தேரைக் கிளிகளின் கூட்டம் இழுத்துக் கொண்டு பறக்கின்றது. வண்டுகள் அணிவகுத்து நாணாக அமையும் கரும்பு வில்லை ஏந்துகிறான். நீண்ட தாழைமலரின் மடல் வாளாயுதமாகும். முல்லை, நீலம், மா, அசோகம், தாமரை எனும் ஐந்து மலர்கள் அவனுக்கு அம்புகளாக உள்ளன. வசந்தகாலம் என்பது அவனது ஆட்சியில் உச்சகட்ட அதிகாரத்தை அவன் செலுத்தும் காலமாகும். அதையொட்டி அவன் வசந்தன் என்று அழைக்கப்படுகிறான்.

ஆலயங்களில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் ரதியும் மன்மதனும் பெரிய தூண் சிற்பங்களாக அமைக்கப்படுகின்றனர். முன்னாளில் மன்மதனுக்குத் தனி ஆலயங்கள் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன. அவை காமவேள் கோட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. ஊருக்கு வெளியே அமைந்த சோலைகளில் காமவேள் கோட்டம் இருந்தன. நல்ல கணவனை வேண்டியும், கணவன் மனைவியரிடத்தில் மாறாத அன்பு உண்டாகி இல் வாழ்வு செழிக்கவும் பெண்கள் மன்மதனை வழிபட்டனர். சமண சமயத்தின் பெருமைகளைப் பேசுவதும், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான பெருங்கதையில் உதயணன் என்பவனைக் கணவனாக அடைய வேண்டி, அக்காப்பியத்தின் தலைவியான பதுமாவதி சோலைகளின் நடுவே இருந்த காமதேவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டாள் என்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் காமவேள் கோட்டத்திலுள்ள குளத்தில் நீராடி காமதேவனைத் தொழுதால் நல்ல இல்வாழ்வு உண்டாகும் என்றும், பிரிந்த கணவன் வந்து சேருவான் என்று கூறப்படுவதும் சிந்திக்கத் தக்கதாகும்.

முன்னாளில் சிறப்புடன் திகழ்ந்த காமதேவன் ஆலயங்கள் நாகரிக  வளர்ச்சியின் காரணமாகவும் காமத்தை மறைபொருளாகவே பேச வேண்டும் என்ற நிலை உண்டானதாலும் மறைந்துவிட்டன. தூண் சிற்பங்களாகவும், கோபுரசுதைச் சிற்பங்களாகவும் மட்டுமே ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. கரும்புகள் இனியசுவை மிக்க சாற்றைக்கொண்ட கழிகள். அவற்றைப் பிழிந்து சாறெடுத்து அதைக் காய்ச்சிப் பதப்படுத்தி. வெல்லம், சர்க்கரை, பாகு முதலியவற்றைத் தயாரிக்கின்றனர். இனிமைக்கு உதாரணமாகக் கருப்பஞ்சாற்றைச் சொல்வதே வழக்கம். பக்தி வழியில் கரும்பை இன்பத்தின் அடையாளமாகக் கொண்டுள்ளனர். காமம் என்னும் இன்ப நுகர்ச்சியைக் கரும்பு வில்லாக உருவகம் செய்கின்றனர். இன்பம் தரும் கடவுளான மன்மதன் கரும்பு வில்லை ஏந்துகின்றான். அது அவனுக்கே உரிய ஆயுதமாகும். அவனைக் கரும்புவில்லி எனப் புராணங்கள் அழைக்கின்றன. தெய்வங்களை உருவமாக அமைக்காமல் அதன் ஆயுதத்தை நிலைப்படுத்தி அதை அந்தத் தெய்வமாகவே போற்றி வணங்குவதும் ஒரு மரபாகும்.

வேலாயுதத்தை முருகனாகவும் சூலத்தைக் காளியாகவும் சக்கரத்தைத் திருமாலாகவும், வணங்கும் வழக்கம் சமய உலகில் பரவலாக உள்ளது. இந்த வழக்கப்படி, கரும்பை நாட்டி அதை காமதேவனான மன்மதனாக வழிபடும் வழக்கம் உள்ளது. தென்னாற்காடு மாவட்டங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படும் போது, கரும்பை நட்டு வழிபடும் வழக்கமே பெரும்பாலும் நிகழ்கிறது. சிறிய மேடையில் கரும்பை நட்டு அதைச் சுற்றி தர்பையாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிப்பர். அதற்குப் புதிய துணிகள் அணிவிக்கப்படும். அதற்கு மேற்கில் அல்லது தெற்கில் சிறிய குடில் அமைத்து அதில் மன்மதன் ரதி உருவங்களை ஓவியமாக கலசங்களை நிறுவி ரதி மன்மதனை எழுந்தருள வைத்து வழிபடுகின்றனர்.

அன்று மேற்சொன்னவாறு அலங்காரம் செய்வர். முன்னிரவில் மன்மதன் அவதரித்த கதை கூறப்படும். ஊரின் தன்மைக்கேற்ப அது சொற்பொழிவு, நாடகம், நாட்டியம், உடுக்கைப் பாட்டு, வில்லுப்பாட்டு என்பனவற்றில் ஏதாவது ஓர் இலக்கிய வடிவில் அவன் கதை விரிவாக எடுத்துக் கூறப்படும். முன்னாளில் காமன் விழா ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஐந்தாம் நாள் காமனை எரிப்பது ஏழாம்நாள் அவன் ரதியின் வேண்டுதலால் உயிர்ப்பிக்கப்படுவது முதலியன நாடகமாகவும் நடிக்கப்படுகின்றன.‘‘ரதி’’ என்பதற்குப் பிறரால் விரும்பப்படுதல் என்பது பொருள். ஒரு சமயம், மயன் எனும் தேவதச்சன் உலகில் உள்ள அழகையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெண்ணாக்கினான். அவள் தன் அறிவாலும் அழகாலும் எல்லோரையும் கவர்ந்தாள்.

அதனால் அவளுக்கு ரதி என்று பெயர் சூட்டி வளர்த்தான். திருமாலின் மகனான மன்மதனுக்கு அவளைத் திருமணம் செய்வித்தனர். இருவரும் இணைபிரியாது வாழும் சிறப்பு பெற்றனர். சிவபெருமான் ஒருமுறை கோபம் கொண்டு மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து அழித்தார். ரதி தேவி இறைவனிடம் வேண்டி அவனை உயிர்ப்பித்துப் பதியாக அடைந்தாள். திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்தபோது மன்மதன் அவருடைய மகனாகப் ப்ரத்யும்னன் எனும் பெயரில் தோன்றினான். ரதி, மாயா தேவி என்னும் பெயரில் அவனை மணந்தாள். காசியில் ரதி வழிபட்ட லிங்கம் ரதீஸ்வரர் எனும் பெயரில் உள்ளது. ரதி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். அவளும் கரும்பு வில்லைக் கொண்டுள்ளாள். ரதியைப் பார்வதி தேவியின் தோழி என்றும் கூறுவர்.

ஆட்சிலிங்கம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

 • 19-09-2019

  19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china_shankaiii1

  பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

 • paris_taksi11

  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்