SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடியல் பிறக்கும் தெளிவும் கிடைக்கும்!

2019-02-11@ 15:45:56

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 2

ஒளி பொருந்திய தருணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் வருவதுண்டு வந்த ஒளியை தக்க வைத்துக் கொள்பவர்கள் வெளிச்சத்தில் விளைச்சல்களாக வாழ்கிறார்கள் இந்திய ஆன்மிக மரபில் அழகான அம்சங்களில் ஒன்று அதில் கொட்டிக்கிடக்கும் நேர்மறை சிந்தனைகள். மங்கலமும் நிறைபொருளும் உள்நிலை அனுபவமாய் வாய்க்கப்பெற்ற அருளாளர்கள் வலிமையும் நல்லுணர்வும் ததும்பும் மகா வாக்கியங்களை அருளினார்கள். அவை இறைவனை மையப்படுத்தி இருந்தாலும் மனிதர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கவும் நிறைய இடமிருக்கிறது. அப்படி என் நினைவில் அடிக்கடி நிழலாடக்கூடிய வரிகளுள் ஒன்று

“ ஜோதியே சுடரே சூழொளி விளக்கே’’
என்பதாகும். மீண்டும் ஒருமுறை நிறுத்தி நிதானமாக வாசியுங்கள்..
“ஜோதியே சுடரே சூழொளி விளக்கே”.

இந்த வரியை காட்சிப் படுத்திப் பாருங்கள். எத்தனையோ காட்சிகள் நம் கண் முன்பு தோன்றும் ஐந்து முகங்களும் ஏற்றப்பட்டு ஒளிவீசும் குத்து விளக்கு. அதற்கு அருகே சுடர் வீசும் கற்பூரம். சுற்றிலும் சூழ்ந்து விகசிக்கும் விமரிசையான சின்னச் சின்ன விளக்குகள் அவை காமாட்சி விளக்குகளாக இருக்கலாம். அல்லது அகல்விளக்குகளாக இருக்கலாம். இது ஒரு காட்சி. ஒளி பொருந்திய குரு வீற்றிருக்கிறார். அருகே ஒரு தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. சுற்றிலும் தேஜோமயமான சீடர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஆசன பிராணாயாமங்களிலும் உள்முக விசாரணையிலும் புடம் போட்டெடுக்கப்பட்ட பொன்னாய் மின்னுகிறார்கள்.” ஜோதியே சுடரே சூழொளி விளக்கே”. இது இன்னொரு காட்சி.

சிவத்தொண்டிற்கே தன்னை அர்ப்பணித்த சிறுத்தொண்டர். அதற்குத் துணைபுரியும் துணைவியார் திருவெண்காட்டு நங்கை. அதே அலைவரிசையில் நிற்கும் மகன் சீராளர். பணிப்பெண் சந்தனத் தாதியார். இது மற்றும் ஒரு காட்சி. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. அன்று தைப்பூசம். இரவு 12 மணி இருக்கும் மலேசியாவில் கிரான்ட்  சீஸன்ஸ் தங்கும் விடுதியின் இருபத்தேழாவது மாடியில் என் அறையில் இருந்து கொண்டு ஆகாயத்தை பார்த்து கொண்டிருந்தேன். ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னதாக தான் பத்துமலை முருகன் திருக்கோயிலில் இருந்து திரும்பி இருந்தேன் மலைக்கு அருகே விஸ்வரூபமாய் நிற்கும் முருகன் திருவுருவம் மனதில் நிலைகொண்டிருந்தது பௌர்ணமி. நிலப்பரப்பு எங்கும் கண் பறிக்கும் விதமாய் சின்னச் சின்ன விளக்குகள் ஒளிர்ந்தன. நிமிர்ந்தாலோ, நிலவைச் சுற்றி நட்சத்திரக் கூட்டங்கள். மனதில் முருகனின் ஒளிரூபம். பார்க்கும் இடமெங்கும் ஒளியின் பற்பல ரூபங்கள்.

அப்போது மனதில் எழுந்த வரிகளே பின்னர் உருவான இசைப்பாடல் ஒன்றுக்கு பல்லவி ஆயின. அந்த வரி இதுதான் “வான வெளியிலே கார்த்திகை பண்டிகை காணுமிடமெல்லாம் ஜோதி முகில்கள் உலவிடும் மலேசிய நாட்டில் வேலன் வைப்பதே நீதி’’ஒளி பொருந்திய  முகமும் ஒளி பொருந்திய அகமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒரே நோக்கத்தோடு சந்தித்து ஒரே அலைவரிசையில் சிந்தித்து சேர்ந்து செயல்படும்போது அங்கே ஒளியின் உன்னத அவதாரங்களை ஒருங்கே காணலாம். ஜோதியே சுடரே சூழொளி விளக்கே என்று பாடலாம். இந்த ஒளியின் விகசிப்பு முகத்திலும் தோற்றத்திலும் வெளிப்படுகிறது ஆனால் இது அகத்திலே தான் தோன்றுகிறது உள்ளத்தை ஒளியின் ஊற்றுக்கண்களாக வைத்திருப்போம் என்று சொன்னாள் அது நம்மைச் சுற்றிலும் இருக்கும் இருளை அகற்றி ஒளியை மட்டுமே நிறைக்கிறது.

வெளிச்சத்தின் பிரசன்னம் என்பது நம்பிக்கையின் அடையாளம் இருளின் விளிம்புக்கு வந்துவிட்டோம். இனிமேல் விடியல் பிறக்கும் தெளிவும் கிடைக்கும் என்கிற திடமான நம்பிக்கை உள்ளுக்குள்ளே ஒரு புதிய வெளிச்சத்தை கொண்டு வருகிறது. அந்த வெளிச்சம் நம்மை எண்ணத் தோன்றுகிறது செயல்படத் தூண்டுகிறது. இதுவரை செய்த அதேவேலையை இதுவரை இல்லாத தெளிவோடு நாம் அணுகத்  தொடங்குகிறோம். இந்தத் தெளிவு யாரோ சொன்ன சொல்லால் வரலாம். எவரோ பட்ட அனுபவத்தை கேள்விப்பட்டதால் வரலாம் அல்லது சொந்தமாக ஒன்றை உணர்ந்ததால் வரலாம். எது எப்படியோ திடீரென்று ஒளியின் பிரதேசத்துக்குள் தெளிவின் பிரதேசத்துக்குள் நாம் பிரவேசித்து விடுகிறோம். ஒளிபொருந்திய நிலை எவ்வாறு இருக்கும்? மகாகவி பாரதியைக் கேளுங்கள் “புன்மை இருட்கணம் போயின” என்கிறார். அத்துடன் விட்டாரா என்றால் இல்லை.

‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்ற பாடலில் “மதியில் இருளே தோன்றாமல்” என ஒரு வரி வரும். மதியில் தோன்றும் இருள் என்று பாரதி சுட்டுவது அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை அச்சம் போன்றவை ஆகும். அதில் தோன்றும் இருள் நம்முடைய உண்மையான சக்தியை நம்மிடமே மறைக்கிறது. எழுது செய்து முடிக்கக்கூடிய ஒரு வேலையை கூட இது நம்மால் ஆகாதது போலும் என்னும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது.
அவநம்பிக்கை அச்சம் தாழ்வு மனப்பான்மை போன்றவை எல்லாம் ஒரு மனிதன் கொண்டிருக்கும் உண்மையான சக்தியை அவனே உணரவிடாமல் செய்கிறது. தன்னுடைய சக்தியை தானே உணர்வது அகவயமாக நிகழ்ந்தால் அது சுயம். புறவயமாக நிகழ்ந்தால் சுயமுன்னேற்றம். சுயத்தை உணர்வதற்கான பாதையில் குறிப்பிட்ட எல்லைகளை அடைந்தவர்கள் இந்த உலகில் சுயமுன்னேற்ற இமயங்களாகவும் காணப்படுகிறார்.

அதில் தங்களை சுயம் சார்ந்த தேடலிலேயே நிலைநிறுத்தியவர்கள் பலர். பகவான் ரமணர் ராமகிருஷ்ணன் பரமஹம்சர் போன்றோர் அதற்கான உதாரணங்கள். சுயம் தேடும் பயணத்தில் வளர்ந்து தன் மேல்நாட்டு பயணங்களால் உலக அளவில் ஒரு ஞானியாக மட்டுமின்றி சுயமுன்னேற்றச் சூரியனாகவும் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். பூரணமான அருளியல் ஞானத்தில் இருந்து பூத்து வரும் உலகியல் ஞானம் ஒவ்வொரு மனிதனையும் தன்னுடைய பலங்களையும் பலவீனங்களையும் அறியச் செய்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய பலங்கள் புலப்படத் தொடங்கும் போது அவனுடைய பலவீனங்கள் பலமிழக்கின்றன. ஒருவன் தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் போது சுற்றியிருப்பவர்களையும் சந்தேகப்படத் தொடங்குகிறான்.

நம்பிக்கையாளனோ தன்னையும் நம்புகிறான். தன்னை சுற்றியிருப்பவர்களையும் நம்புகிறான். அதேநேரம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவற்றிலும் இருக்கிறான். ஏனெனில்  நம்பிக்கை என்பது  எண்ணங்களிலும் சொல்லிலும் நின்றுவிடுவதல்ல. செயல்வடிவம் பெறுவது. எப்படி ஜோதியை சூழ்ந்திருக்கும் சின்னச் சின்ன விளக்குகளும் ஒளியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறதோ அது போல சின்னச் சின்ன பழக்க வழக்கங்களும் ஒரு பெரிய ஆளுமையை கட்டமைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகத்தான நடிகர் என்பது அவருடைய மிகப்பெரிய ஆளுமை. அதேநேரம் அந்த ஆளுமையை கட்டமைத்த சின்னச்சின்ன விஷயங்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். படப்பிடிப்புக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கும் அரைமணி நேரம் முன்னதாகவே படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருப்பார். நாடகம் நடிப்பதென்றால் அந்த இடத்துடன் ஓர் ஒத்திசைவு ஏற்பட முதல் நாளே அந்த அரங்கில் படுத்து உறங்குவார் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம்.

சிவாஜி என்னும் ஜோதியின் சுடரை இந்தச் சின்ன விஷயங்கள் ஜெகஜ்ஜோதி ஆக்கின. அனைவராலும் அறியப்பட்டவர் என்பதால் அவர் இங்கு மேற்கோளாகிறார். ஆனால் எத்தனையோ துறைகளில் எத்தனையோ வெற்றியாளர்கள் இது போன்ற சின்னச்சின்ன பழக்கங்களால் தம்மை தக்கமைத்துக் கொண்டவர்கள் தான். ஒவ்வொன்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர்கள் கரங்களில் இந்த உலகம் பத்திரமாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் எண்ணம் உள்ளவர்கள் தங்கள் செயல்திறனின் ஒளியை மங்கிப்போக அனுமதிப்பவர்கள். அதன்மூலம் தங்களைத் தாங்களே அவமதிப்பவர்கள்.
சரியானதை மட்டுமே செய்ய வேண்டும் என்பது முழுமையாக சாத்தியம் என்று சொல்ல முடியாது.

ஒன்றிரண்டு தவறாகப் போகலாம். ஆனால் என்ன செய்தாலும் செய்வதை சரியாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அலாதியானது அவர்கள் தவறை கூட சரியாகத் தான் செய்வார்கள். கடவுள் இல்லை என்ற எண்ணத்தை கருத்தை தன்னிடம் வலியுறுத்த வந்த ஒரு பேராசிரியர் முன்வைத்த வாதங்களை எல்லாம் கன்னத்தில் கை ஊன்றி கர்ம சிரத்தையாய் கவனமுடன் கேட்டார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அந்த பேராசிரியரின் வாதத் திறமையை வியந்து பாராட்டினார்.” எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். கேட்பவர்கள் மறுக்கவே முடியாது. ஆனால் நான் என்ன செய்வேன் கடவுள் இருப்பது எனக்கு தெரியுமே நான் என்ன செய்வேன்” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

தனக்கு உடன்பாடில்லாத செய்தி ஒருவரால் சொல்லப்படும்போது அதை மறுப்பது கூட அகங்காரம் என்பதை அந்த ஞானி உணர்த்துகிறார். அதேநேரம் தனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படம் வேண்டியதில்லை என்பதற்கும் அவரே சத்திய சாட்சியாக விளங்குகிறார். உள்நிலையில் தோன்றிய ஒளியை வெளியில் உள்ளவர்கள் உணரலாம். உணராமலும் போகலாம். அது வெளியே உள்ள மனிதர்களின் உள்ளே உள்ள இருளின் அடர்த்தியைப் பொறுத்தது. ஒளி தன் இருப்பை உணர்த்த மட்டுமே செய்யும். ஒருபோதும் நிரூபிப்பதில்லை. ஒளியுடன் இரு என்பது லௌகீகம் ஒளியாய் இரு என்பது ஆன்மிகம். இரண்டும். இரண்டல்ல.

மரபின் மைந்தன் முத்தையா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்