SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனித மூளை எனும் தலைமைச் செயலகம்..!

2019-02-08@ 16:58:15

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 52

தற்காலத்தில் பார்க்கின்சன் என்ற மூளையை பாதிக்கும் நரம்பியல் சார்ந்த நோயினைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. அதோடு கெமிக்கல் இம்பேலன்ஸ், அல்சைமர் போன்ற பெயர்களும் அடிக்கடி நம் காதுகளில் கேட்கிறது. மேற்சொன்ன இந்த நோய்களைப் பற்றி நமது ஜோதிடம் என்கிற மருத்துவம் பகுதியில் ஏற்கெனவே விவாதித்திருக்கிறோம். அதே போல தேர்வு நேரத்தில் மாணவர்கள் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வினையும் பார்த்திருக்கிறோம். என்றாலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில் இந்த வருடத்திலும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்ப்போம். அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கூடுதல் சுமை அவர்களது மூளையின் செயல்திறனில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அவர்கள் மீது திணிக்கப்படும்போது மூளையின் டிரான்ஸ்மீட்டர்கள் உஷ்ணம் அடைகின்றன. மூளையை கட்டுப்படுத்தும் பீனியல் சுரப்பி தடுமாறுகிறது. தேர்வு நேரத்தில் இந்த அழுத்தம் இன்னமும் அதிகமாகும்போது, அதிகப்படியான உஷ்ணத்தால் மூளை நரம்புகள் தளர்ச்சியடைந்து சரிவர இயங்காமல் தடுமாறி நிற்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் தேர்வினில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கான விடை தெரிந்தும், அந்த மாணவனால் அதற்கான விடையை எழுத இயலாமல் போவதுதான். குறிப்பாக இந்தப் பிரச்சினை மாணவர்களை விட மாணவிகளை அதிகமாக பாதிக்கிறது.

உள்மனதில் விடை தெரிந்தாலும் அதனை வெளிமனம் எழுத மறுக்கிறது. கைகள் வியர்வையால் நனைந்து போகின்றன. நம் வீட்டுப் பிள்ளைகளிடம் கூட இந்த அனுபவத்தினைக் காண இயலும். எளிதில் புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால் கம்ப்யூட்டரும், நாம் உபயோகித்து வரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களும் அவ்வப்போது ஹேங்க் ஆகி செயல்படாமல் நிற்பது போல மனித மூளையும் செய்வதறியாது தடுமாறி நிற்கிறது. இதற்குக் காரணம் அதிகப்படியான சுமையை நமது மூளைக்கு தருவதே என்று ஒரு தரப்பினர் விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை மருத்துவ ஜோதிடர்கள் அணுகும் விதம் வேறுமாதிரியாக இருக்கிறது.

மனித மூளையின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் சூரியன். அதற்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் புதன். சூரியனோடு இணைந்து புதன் அஸ்தமனம் பெற்றிருந்தால், அவர்களுடைய மூளைக்கு அதிக சிரமத்தைத் தரக்கூடாது, அவர்களுடைய மூளையில் உள்ள நரம்புகள் வலிமை குன்றியதாக இருக்கும், அதிகப்படியான உஷ்ணத்தை அந்த நரம்புகளால் தாங்கிக் கொள்ள இயலாது. இவர்களின் சிந்தனைத் திறன் சாதாரணமாகத்தான் இருக்கும் என்பதால் சராசரியான பணியினையும், எளிதான கல்வி முறையை மட்டும் அந்தப் பிள்ளைகளுக்குத் தரவேண்டும். இதனை சாதாரண ஜோதிடர்கள் இப்படிச் சொல்வார்கள்: வித்யா காரகன் புதன். புதன் அஸ்தங்கத தோஷம் பெற்றிருப்பதால் இவனது படிப்பு சுமாராக இருக்கும் என்று பலன் சொல்வார்கள். ஜாதகத்தில் ஒன்றாம் பாவம் என்று அழைக்கப்படும் லக்னம் மூளையின் செயல்திறனைச் சொல்லும்.

இந்த லக்ன பாவமும், லக்ன அதிபதியும் பலம் பெற்றிருந்தால் அவர்களை இந்தப் பிரச்சினை தாக்காது. அதே போல சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டினில் உஷ்ணத்தைத் தரக்கூடிய சூரியன், செவ்வாய், ராகு போன்ற கோள்கள் அமர்ந்திருந்தாலும், உணர்ச்சிமயமான நேரத்தில் மூளை செயலிழந்து ஸ்தம்பித்துப் போய் நிற்பார்கள். சரி, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எவ்வாறு என்ற கேள்வி நம்முள் எழுகிறது. இதற்கும் மருத்துவ ஜோதிட உலகம் தீர்வு காண விழைகிறது. பசுமாட்டினுடைய பால் இந்தக் குறையைத் தீர்க்கும் சக்தியைப் பெற்றிருக்கிறது என்பதை ஜோதிட உலகம் அறுதியிட்டுச் சொல்கிறது. நாட்டுப் பசுவின் பாலில் கொலஸ்ட்ரால் என்பது சுத்தமாகக் கிடையாது என்பதும், இது கால்சியம் சத்து நிரம்பியது என்பதும் நாம் அறிந்ததே. பொதுத்தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவ, மாணவிகள் தினமும் இரவினில் நாட்டுப் பசுவின் பாலை அருந்தியபின் படுக்கைக்குச் செல்வது நல்லது.

மூளை உறங்குகின்ற நேரத்தில் நாட்டுப் பசுவின் பாலில் உள்ள சக்தி மூளையின் நரம்புகளை வலுப்படுத்துகிறது. அதேபோல, மாணவச் செல்வங்கள் தேர்விற்கு செல்வதற்கு முன்பாக, பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரினை நன்றாகக் கடைந்து அதனை நீர்மோராக ஆற்றி, வடிகட்டியபின் இரண்டு அல்லது மூன்று தம்ளர் அளவிற்கு பருகிவிட்டுச் சென்றால் தேர்வின்போது அதிகப்படியாக வியர்க்காது. மோர் அருந்திவிட்டு தேர்வெழுதச் சென்றால் உறக்கம் வரும் என்பது வீண்வாதம். நன்றாக வடிகட்டிய நீர்மோர் நிச்சயமாக உறக்கத்தினைத் தராது. மாறாக மூளையில் உண்டாகும் உஷ்ணத்தைக் குறைக்கும். உள்ளங்கைகளில் வியர்க்காது., தேர்வினை நல்ல முறையில் எதிர்கொண்டு மனதில் தோன்றும் விடையினை சிறப்பான முறையில் விடைத்தாளில் பதிவு செய்ய இயலும்.

பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தாங்கள் எழுத உள்ள மாதிரித் தேர்வுகளுக்குச் செல்லும்போது இந்த முறையினை பரிசோதித்துப் பாருங்கள். பசும்பாலினை தயிராக்கி, அதனைக் கடைந்து நன்கு வடிகட்டிய நீர்மோரினை பருகிவிட்டுச் சென்றால் டென்ஷன் என்பது சுத்தமாகக் காணாமல் போகும். தெளிவான மனதோடு தேர்வினை எதிர்கொள்வீர்கள். மனித உடற்கூறு இயல் என்று எடுத்துக்கொண்டால் அதனை குறிப்பிட்ட சில முக்கியப் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், ஜீரண மண்டலம், கழிவு மண்டலம், இனப்பெருக்க மண்டலம் ஆகியவை முக்கியமானவை. இந்த மண்டலங்களை ஒருங்கிணைக்கும் பணியைத்தான் மனித மூளையானது சரிவரச் செய்து நமது உடல் இயக்கத்தினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது.

மனித மூளையே நமது உடலில் இயங்கும் அத்தனை மண்டலங்களின் மீதும் தனது ஆதிக்கத்தினை செலுத்துகிறது. நினைவுத்திறன், தூக்கம், மறதி, அநிச்சை செயல், தண்டுவடத்தின் செயல்பாடு, உடலில் உண்டாகும் வேதியியல் மாற்றங்கள், ஹார்மோன்கள் சுரக்கும் திறன், கண்களின் பார்வைத் திறன், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, காது கேட்கும் திறன், காது&மூக்கு&தொண்டை இணைவு, நாக்கு, வாய்க்கும், ஜீரண மண்டலத்திற்கும் இடையிலான தொடர்பு என்று உடம்பில் உள்ள அனைத்து பாகங்களும் மூளையுடன் தங்கள் இணைவினைக் கொண்டிருக்கும். மூளைக்குள் ஏதேனும் ஒரு சிறு பிரச்சினை உண்டானாலும் அது உடம்பிலுள்ள அனைத்து மண்டலங்களையும் பாதிக்கும். அதனால்தான் மனித மூளையை அறிவியல் எழுத்தாளர்கள் தலைமைச் செயலகம் என்று குறிப்பிடுகிறார்கள்.

மற்ற பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் தலைமைச் செயலகம் சரிவர இயங்கினால்தான் அத்தியாவசியப் பணிகள் சரியா நடக்கும். மனித உடலின் தலைமைச் செயலகம் ஆகிய மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்ய வேண்டியது நம் கடமை. அதற்கேற்றார் போல் அதற்குரிய ஓய்வினையும் நாம் அன்றாடம் அளிக்க வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த உறக்கம் என்பதே தலைமைச் செயலகத்திற்கு நாம் தரும் ஓய்வு. ஓய்வு நேரத்தில் கூட அதாவது நாம் உறங்கும்போது கூட இரத்த ஓட்ட மண்டலத்தினையும், சுவாச மண்டலத்தினையும் சரிவர இயக்கும் பணியை மனிதனின் மூளையானது ஒருபுறம் செய்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் மூளையைச் சூரியன் என்றும், மற்ற மண்டலங்களை அதனைச் சுற்றி வரும் கிரஹங்கள் ஆகவும் பிரித்துக் காண்கிறார்கள் மருத்துவ ஜோதிடர்கள்.

பகல் நேரத்தில் சூரிய ஒளியினால் மனித மூளையானது தனது சக்தியை அதிகரித்துக் கொள்கிறது. சூரிய ஒளியே மனித மூளையின் சார்ஜர் என்றுகூட புரிந்து கொள்ளலாம். பகலில் பெறும் சார்ஜ் இரவு உறக்கத்தின்போது டிஸ்சார்ஜ் ஆகிறது. சார்ஜ்ஜிங்கும், டிஸ்சார்ஜ்ஜிங்கும் சரிவர நடந்தால்தான் ஒரு பேட்டரி நன்றாக இயங்கும் என்பதை செல்போன்களை உபயோகிக்கும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதே போல் பகல் நேரத்தில் சூரிய ஒளியின் துணைகொண்டு மூளையை சார்ஜ் ஏற்றிக் கொள்வதும், இரவு நேரத்தில் நன்றாக உறங்கி அதில் ஏற்றப்பட்டிருக்கும் சார்ஜினை டிஸ்சார்ஜ் செய்வதுமே சரியான இயக்கம் ஆகும். அதனை விடுத்து நைட் ஷிஃப்ட் என்று இரவு நேரத்திலும் பணி செய்யும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அதனைக் குறித்து மேலும் விரிவாக அடுத்த இதழில் பார்க்கலாம்.

திருக்கோவிலூர் ஹரிபிரசாத்சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-05-2019

  20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்