SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சியம் நிச்சயம் வெல்லும்!

2019-02-05@ 16:00:26

வேலைக்காக வெளியூர் சென்ற 37 வயதாகும் என் இளைய மகன் கடந்த மூன்று வருடங்களாக எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் வெறுக்கிறான். அவன் இருப்பிடத்தை தெரிவிக்க மறுக்கிறான். அவன் குடும்பத்தோடு வந்து சேர்வதற்கும் திருமணம் நடப்பதற்கும் பரிகாரம் கூறுங்கள். சுந்தரி, கோவில்பட்டி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஐந்தில் அமர்ந்திருப்பதும், ஐந்துக்குரிய சூரியன் நீசம் பெற்றிருப்பதும் சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது. சிறு வயது முதலே அவரை யாரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணம் அவருக்கு உண்டு. 37 வயதாகும் அவரை உங்களால் வலுக்கட்டாயமாகக் குடும்பத்திற்குள் அழைத்து வர முடியாது. தற்போது நடந்து வரும் சனி தசை அவருக்கு பல வழிகளிலும் அனுபவப் பாடத்தைக் கற்றுத் தரும்.

சனியே ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதி என்பதால் உத்யோக ரீதியாகவும் தற்போது அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் வீட்டிற்கு வரச் சொல்லி அவரை வற்புறுத்தாதீர்கள். வீட்டிற்கு வந்தால் மீண்டும் அவர் வேலைக்குச் செல்வது கடினம். அவரது மனநிலையை கருத்தில் கொண்டு அவர் இருக்கும் இடத்தில் எந்தவித குறையுமின்றி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சங்கரன்கோவில் திருத்தலத்திற்குச் சென்று கோமதியம்மனுக்கு புடவை சாத்தி வழிபடுங்கள். செவ்வாய் தோறும் வீட்டினில் விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கிவர உங்கள் மனக்குறை நீங்கும்.

“ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரண்யாயை நம:
பஞ்ச க்ருத்யை விதாத்ர்யை ச கோமத்யை நமோ நம:”


திருமணத்திற்குப் பின் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நான் கடின உழைப்பாலும், இறையருளாலும் மளிகைக் கடை நடத்தி முன்னேறினேன். கடந்த ஐந்து வருடங்களாக கடன்சுமை அதிகமாக உள்ளது. கஷ்டத்திலும் என் இரு பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கிறேன். ஆண்வாரிசு இல்லை என்ற காரணம் காட்டி பூர்வீக சொத்தில் உள்ள பாகத்தைத் தர அப்பா மறுக்கிறார். என் கடன் பிரச்னை எப்போது தீரும்? பூர்வீக சொத்து கிடைக்குமா? கிடைக்காதா?
துரைவேல், ரத்தினகிரி.


விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டின் அதிபதி செவ்வாய் 11ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதாலும் நிச்சயமாக பூர்வீக சொத்தினை அனுபவிக்கும் பாக்யம் உங்களுக்கு உண்டு. என்றாலும் தற்போதைய சூழலில் ஏழரைச் சனியின் தாக்கமும், நீசம் பெற்ற சுக்கிரனின் தசா புக்தி காலமும் மிகவும் சிரமத்திற்குள் உங்களைத் தள்ளியிருக்கிறது.

வருகின்ற சித்திரை மாதத் துவக்கம் முதல் அடுத்த ஒரு வருட காலத்திற்கு மேலும் சிரமம் அதிகரிக்கக்கூடும். ஒரு வருடத்திற்குப் பின் நல்ல நேரம் என்பது துவங்குவதால் மீண்டும் உங்களால் வியாபாரத்தைத் துவக்க இயலும். அதுவரை வெளியில் வேலை செய்து வருவது நல்லது. 13.04.2020ற்குப் பின் பூர்வீக சொத்தில் உங்களுக்கு வந்து சேர வேண்டிய பாகமும் நிச்சயமாக வந்து சேரும். அதுவரை கடன்பிரச்னையை சமாளித்து வர வேண்டும். சனி தோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி நரசிம்மரை வணங்கிவர கடன்காரர்களால் ஏற்படும் தொல்லைகள் குறையக் காண்பீர்கள்.

“வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”


என் பேரன் எட்டு வயது முடிந்தும் முறையாகப் பேசவில்லை. ஏதோ வாய்விட்டு உளறுகிறான். மருத்துவர்களில் சிலர் ஆட்டிஸம் என்றும் சிலர் இல்லை என்றும் கூறுகிறார்கள். அவனது ஜென்ம நக்ஷத்ரம் எது என்பதிலும் குழப்பம் உள்ளது. வயதான காலத்தில் மன வேதனையால் தவிக்கிறோம். விமோசனத்திற்கு வழி சொல்லுங்கள். சம்பத்குமார், திருச்சி.

வாக்கிய கணிதம், திருக்கணிதம் என இரண்டு பாதைகளில் பயணிக்காமல் ஏதேனும் ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாய் நம்பிக்கை கொள்ளுங்கள். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் நீசம் பெற்ற செவ்வாய் வக்ர சஞ்சாரத்தில் சனியின் சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். சனியும் மூன்றாம் பாவத்தில் வக்ரமாக அமர்ந்திருப்பதால் பிரச்னை உண்டாகி இருக்கிறது. மனதில் தோன்றுவதை பேச நினைக்கும்போது தொண்டைக் குழிக்குள் இருந்து வெளிப்படும் காற்றில் மாறுபாடு தோன்றி உளறலாக வெளிப்படுகிறது.

லக்னாதிபதி சந்திரன் ஒன்பதில் அமர்ந்திருப்பதால் ஆட்டிஸம் குறித்த பயம் தேவையில்லை. காது மூக்கு தொண்டை (ENT Specialist) மருத்துவ நிபுணரிடம் ஒரு முறை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பாருங்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி (Speech Therapy) அளித்து வரச் சொல்லுங்கள். ஹயக்ரீவர் ப்ரார்த்தனை பலனைத் தரும். உளறினாலும் பரவாயில்லை என்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை அனுதினமும் உங்கள் பேரனுக்குக் கற்றுத் தாருங்கள். 11வது வயது முடிந்து 12வது வயது முதல் உங்கள் பேரன் மற்றவர்களைப் போல் நன்றாகப் பேசத் துவங்குவான்.

“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வரா
ஸர்வ வேத மயா சிந்த்யா ஸர்வம் போதய போதய.”


என் மூத்த மகன் கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன் நடந்த விபத்தில் தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் இறந்தார். சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்று வந்தோம். இந்த வருடம் வீட்டில் திவசம் கொடுக்கலாம் என்று கேட்டபோது தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசையில் மட்டும் அவரை நினைத்து சாமி கும்பிடுங்கள் என்று சொல்கிறார்கள். இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியப்படுத்துங்கள். கலைவாணி, திண்டுக்கல்.

உங்கள் மகனின் வயது குறித்தோ அவர் திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா போன்ற விவரங்களையோ கடிதத்தில் குறிப்பிடவில்லை. திருமணம் ஆனவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு வருடமும் அவர் இறந்த திதியில் சிராத்தம் செய்ய வேண்டும். திருமணம் ஆகாத இளம் வயதினைச் சேர்ந்தவர் என்றால் இறந்தவுடன் 10 முதல் 16 நாட்களுக்குள் செய்த சடங்குகளே போதுமானது. ராமேஸ்வரம் சென்று வந்தோம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறீர்களே தவிர, அங்கே அவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் சரிவரச் செய்தீர்களா என்பது பற்றி எதுவும் நீங்கள் கடிதத்தில் எழுதவில்லை. செய்யவேண்டிய அந்திமக்கிரியைகளைச் சரியாகச் செய்திருக்கும் பட்சத்தில் திருமணம் ஆகாதவர் என்றால் வருடந்தோறும் அவர் இறந்த திதியில் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திர ரீதியாக அவசியம் இல்லை என்றாலும் அவரது நினைவு நாள் அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், வஸ்திரங்கள் தானம் செய்து வருவது நல்லது. மஹாளய அமாவாசை நாள் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது இவருக்கும் சேர்த்துச் செய்தால் போதுமானது.

நான் பி.எஸ்சி., கணிதம் பயின்று வருகிறேன். என் பெற்றோருக்கு நான் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விருப்பம். லக்னாதிபதி நீசம் அடைந்துள்ள எனது ஜாதகத்தின்படி அரசு வேலை அமையுமா? உரிய பரிகாரம் கூறுங்கள். நந்தகுமார், வாழப்பாடி.

இந்த இளம் வயதில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும், ஜோதிடவியல் சார்ந்த அறிவும் பாராட்டிற்கு உரியது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் லக்னாதிபதி சந்திரனின் நீச நிலையும், தசாநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் வக்ர சஞ்சாரம் பெற்றிருப்பதும் சற்று பலவீனமான நிலையே. இருந்தாலும் 9 மற்றும் 10ம் வீட்டு அதிபதிகளின் பரிவர்த்தனை யோகம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் 10ம் வீட்டில் குருசனியின் இணைவு ஒரு சில தடைகளைத் தோற்றுவிக்கும்.

உங்கள் விடாமுயற்சியோடு இறையருளின் துணை இருக்க நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். மாணவனாகிய நீங்கள் தற்போதைய சூழலில் கல்லூரிப் படிப்பினில் மட்டும் உங்களது முழு கவனத்தையும் செலுத்துங்கள். எதிர்காலம் குறித்த கவலை தற்போது வேண்டாம். இது பெற்றோரின் விருப்பம்தானே என்று எண்ணாமல் உங்களுடைய சொந்த விருப்பமாகவும் எண்ணி உற்சாகத்துடன் படிப்பினைத் தொடருங்கள். அரசுப்பணி என்ற லட்சியம் மனதிற்குள் உறுதியாய் நிலைகொள்ளட்டும். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உழவாரப்பணியில் ஈடுபடுங்கள். சனிக்கிழமை நாட்களில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது. பரமேஸ்வரனின் திருவருளால் உங்கள் லட்சியம் நிச்சயம் வெல்லும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் மனைவி தூக்கிட்டு இறந்துபோனார். எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறது. வேலையை மாற்றிக்கொண்டு சொந்த ஊர் பக்கம் போகலாம் என்றால் நல்ல வேலை கிடைக்க தாமதமாகிறது. என்னை விரும்பும் விவாகரத்தான ஒரு பெண்ணை திருமணம் செய்ய மனம் மறுக்கிறது. என் குழந்தைகளை பார்த்துக் கொள்வாளா என்ற அச்சம் வருகிறது. தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும். சிவக்குமார், டெல்லி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தாலும் 12ம்வீட்டில் சூரியன், புதன், கேது ஆகியோருடன் இணைந்திருப்பது சாதகமான அம்சம் இல்லை. மனைவியின் மூலமாக அவமானமும், சொல்ல முடியாத துயரமும் உண்டாகும் என்பதே உங்களுக்கான விதிப்பயன். இதனை மாற்ற இயலாது. உங்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் அச்சம் சரியானதே.

தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் உத்யோக  ரீதியாக இடமாற்றத்தினைப் பெற்றுத் தரும். இத்தனை ஆண்டுகளாக வெளிமாநிலத்தில் வசிக்கும் நீங்கள் இந்த வருடத்தில் முயற்சித்தால் சொந்த மாநிலத்தில் வேலை கிடைத்துவிடும். சம்பளம் குறைவாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க இயலும். உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு மட்டுமே உங்களது வாழ்க்கைக்கான குறிக்கோள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வர மனதைச் சுற்றும் மாயவலைகள் விலகிப் போகும். மனத் தெளிவு பெறுவீர்கள்.

“வீதாகில விஷயேச்சம் ஜாதாநந்தா ஸ்ருபுலக மத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்.”


என் மகனுக்கு நான்கு வயதில் இதய ஆப்ரேஷன் நடந்தது. தற்போது விளையாட்டு மற்றும் படிப்பினில் சிறந்த மாணவனாக விளங்கும் இவன் வருங்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளான். அனைவரின் விருப்பமும் அதுவே. தற்போது படிக்கும் பள்ளியிலேயே அவன் தொடர்ந்து படிக்கலாமா? அல்லது வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டுமா? எங்கள் கனவு நிறைவேறுமா? உரிய வழி காட்டுங்கள். ரமேஷ், தஞ்சாவூர்.

சுய முயற்சியால் முன்னேறியிருக்கும் உங்களது வரலாற்றினை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் நிச்சயமாக உங்கள் மகனிடமும் நிறைந்திருக்கும். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனோடு சூரியன், புதன், ராகு ஆகிய மூன்று கிரஹங்கள் இணைந்து வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல பலமான அம்சம் ஆகும். சூரியதசையில் ராகு புக்தி நடந்த காலத்தில் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அது குறித்த கவலை இனி தேவையில்லை.

உங்கள் மகன் மருத்துவம் படிக்க கிரஹ நிலை நன்றாக துணை செய்கிறது. 18 வயது முடிந்து 19வது வயதில் துவங்கும் செவ்வாய் தசை அவனது மருத்துவப் படிப்பிற்கு சிறப்பான வலிமையைத் தரும். கிரஹ நிலையின்படி அவர் தற்போது பள்ளி மாற வேண்டிய அவசியம் இல்லை. அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம். தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் உள்ள வாராஹி அம்மனின் சந்நதிக்கு மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி நாட்களில் சென்று மகனின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அவரது உடல்நிலையும், படிப்புத்திறனும் உயர்வடைவதோடு மருத்துவர் ஆகும் கனவும் நிறைவேறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்