SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்!

2019-02-05@ 15:56:52

இரண்டு மாதங்களுக்கு முன் எனது வலது கண் இயற்கைக்கு மாறாக சற்று பெரிதாகி அசைக்க முடியாமல் போனது. இது லட்சத்தில் ஒருவருக்கு வரும் வியாதி என்று சொன்ன மருத்துவர்கள் கதிர்வீச்சு சிகிச்சையை தொடர்ந்து 10 நாட்களுக்கு அளித்தார்கள். கதிர்வீச்சு கொடுத்ததால் பயமாக இருக்கிறது. நோய் எப்போது பூரணமாக குணமாகும்? பரிகாரம் இருந்தால் தெரிவிக்கவும்.  - காவேரி, ஈரோடு.

சிறு பிரச்னையை சந்தித்து பெரிதாக பயம் கொண்டுள்ளீர்கள். இந்தப் பிரச்னையை மனதில் கொண்டு ஆயுள் தீர்க்கமா, கேன்ஸர் வந்துவிடுமா என்றெல்லாம் வீணாக பயம் கொண்டு கடிதம் எழுதியுள்ளீர்கள். அவிட்டம் நட் சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் வலது கண்ணைப் பற்றிச் சொல்லும் இரண்டாம் வீட்டில் சூரியனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சனி ஜென்ம லக்னத்தில் சூரியனின் சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்களுடைய கண் பிரச்னை சரியாவதற்கு சூரிய பகவானின் அனுக்ரஹம் தேவை என்பதையே இது உணர்த்துகிறது. தினந்தோறும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலம் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண இயலும். தகுதி படைத்த குருநாதர் ஒருவரை அணுகி அவரிடம் சூரிய நமஸ்காரம் செய்வதற்கான பயிற்சியைப் பெற்று தினந்தோறும் தவறாமல் செய்து வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குருவும், சனியும் இணைந்து குரு-சண்டாள யோகத்தினைத் தந்திருக்கிறது.

பூர்வ ஜென்மத்தில் உண்டான அந்தண சாபமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் ஜாதக பலத்தின்படி கேன்ஸர் நோய் வருவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. தீர்க்காயுள் என்பது நிச்சயம் உண்டு. பிரதி அமாவாசை தோறும் ஏழ்மை நிலையில் உள்ள அந்தணர் ஒருவருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வாங்கித் தந்து, உரிய தட்சணை அளித்து நமஸ்கரித்து வர உங்கள் பிரச்னை முற்றிலுமாக நீங்கிவிடும். வருகின்ற நவம்பர் 2019 முதல் கண் நோய் முற்றிலும் குணமாகிவிடும். கவலை வேண்டாம்.

என் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுக்காக நாங்கள் பரிகாரம் செய்து வருகிறோம். எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? இயற்கை முறையில் அமையுமா? - லட்சுமி,ஸ்ரீ ரங்கம்.

உங்கள் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் குழந்தை பாக்கியம் என்பது நிச்சயமாகக் கிடைத்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தைக் கொண்டு கணித்துப் பார்த்ததில் தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி அமர்ந்திருந்தாலும், லக்னாதிபதி குரு பகவானின் நேரடிப் பார்வை கிடைக்கிறது. ஐந்தாம் இடமாகிய புத்ர ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய் இரண்டில் உச்சம் பெற்றிருப்பதும், ஐந்தாம் வீட்டில் புதன் அமர்ந்திருப்பதும் சந்தானப்ராப்தியை வழங்குகிறது.

பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் புத்ர ஸ்தானாதிபதி சனி மூன்றாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். என்றாலும் குரு பகவானின் பார்வை சனியின் மீது விழுவதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தம்பதியரை முறையான மருத்துவ ஆலோசனை பெற்று தவறாமல் கடைபிடித்து வரச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று தம்பதியரின் பெயருக்கு சங்கல்பம் செய்து கொண்டு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் மகளிடம் திங்கட்கிழமை தோறும் இல்லத்திலேயே சிவபூஜை செய்து வணங்கி வரச் சொல்லுங்கள். ஞானசம்பந்தரின் “தோடுடைய செவியன் விடையேறி ஓர்” என்று துவங்கும் கோளறு பதிகம் தேவாரப் பாடலை அவர் அனுதினமும் சொல்லி பரமேஸ்வரனை வழிபட்டு வருவது நல்லது. இந்த 2019ம் ஆண்டின் இறுதிக்குள் உங்கள் மகள் கர்ப்பம் தரித்துவிடுவார். உங்கள் மருமகனின் ஜாதக பலத்தின்படி அவர் தொடர்ந்து வெளிநாட்டில் பணி செய்து வருவதே எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தை பிறந்தவுடன் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நேரில் வந்து தாயுமானவரை தரிசனம் செய்வதாக அவரை பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். கூடிய விரைவில் வம்ச விருத்தி உண்டாகும்.

31 வயது நடக்கும் என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? - ராமச்சந்திரன், தி.நகர்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் சிரமத்தைத் தரக் கூடிய எட்டாம் வீட்டில் மூன்று கிரஹங்கள் இணைந்திருக்கின்றன. உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் திருமண யோகத்தினைத் தரும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் எட்டிலும், உடன் சூரியனும் கேதுவும் இணைந்திருப்பதும் திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. என்றாலும் ஏழாம் வீட்டில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் அமர்ந்திருப்பதால் அன்பும் அழகும் இணையப் பெற்ற ஒரு பெண் மனைவியாக அமைவாள்.

திருமணம் என்பது உங்கள் மகனின் விருப்பத்தின்படியே அமையும். அவருடைய ஜாதகக் கணிப்பின்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. 32 முடிந்து 33வது வயது துவங்கும் காலத்தில் உங்கள் மகனின் திருமணம் அவரது மனதிற்குப் பிடித்தமான பெண்ணோடு சிறப்பான முறையில் நடந்தேறும். மனமகிழ்ச்சி நிறைந்த எதிர்காலம் என்பது அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

என் மகளின் படிப்பு +2 விலேயே நின்றுவிட்டது. தற்போது தையல் வகுப்புக்கு போகிறாள். எந்த தொழில் செய்யலாம்? வேலைக்குச் செல்லலாமா? தாய்-தந்தைக்கு பாதிப்பு வருமா? எப்பொழுது வரும்? நிவர்த்தி சொல்லவும். - விஜயா செல்வம், பரப்பனங்காடி.

    தாய்க்கும் தந்தைக்கும் பாதிப்பு வருமா, எந்த தசாபுக்தியில் பாதிப்பு வரும், அதற்கு என்ன நிவர்த்தி என்று எதிர்மறையான எண்ணங்களை உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். யாருடைய ஜாதகமும் யாரையும் பாதிக்காது, அவரவர் செய்த கர்மவினையையே அவரவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்த  பாவ-புண்ணியம்தான் உங்களது பலனை தீர்மானிக்கும். உங்கள் மகளின் ஜாதகத்தால் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை கணித்துப்  பார்த்ததில் தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் குரு, சனி ஆகிய இருவரும் வக்கிரம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் சனி பகவான் நீசம் பெற்று வக்ர கதியில் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் உங்கள் மகளின் வளர்ச்சி என்பது தடைபட்டு வருகிறது. மேலும் லக்னாதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தனது வாழ்வினில் போராட்டத்தினை எதிர்கொண்டு முன்னேற்றம் காண்பார்.

தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் படி முதலில் அவர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதே நல்லது. ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் அல்லது பேஷன் டிசைனிங் போன்ற துறைகளில் அவரது உத்யோகத்தை அமைத்துக் கொள்ளலாம். 29வது வயது முதல் அவர் சொந்தமாக சுயதொழிலில் ஈடுபட இயலும். தனக்குக் கீழே பத்து பணியாளர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அவரே சொந்தமாக நிறுவனத்தை நடத்த இயலும். அவரால் பெற்றோராகிய உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. பருவ வயதில் இருக்கும் பெண்ணின் மனநிலையை தாயாராகிய நீங்கள் புரிந்துகொண்டு அவரது மனநிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

தன ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சந்திரனின் அமைப்பும், குரு&சந்திர யோகமும் அவரது நிதி நிலைமையை சிறப்பாக உயர்த்தும். சனிக்கிழமை தோறும் மகளை ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கு ஏற்றிவைத்து ஆலய வளாகத்திற்குள் அமர்ந்து பத்து நிமிடம் தியானம் செய்யச் சொல்லுங்கள். அவரது மனம் தெளிவடைவதோடு பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் வகையில் நடந்துகொள்வார்.

எனது மூத்த மகன் காதல் திருமணம் செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து ஆகிவிட்டது. குழந்தை இல்லை. அவனுக்கு மீண்டும் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா? அவன் தற்சமயம் கூட்டுத்தொழில் செய்து வருகிறான். இது சரியாக வருமா? அவனது தொழில் மற்றும் குடும்பம் எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படி அமையும்? - ஷண்முகம், சென்னை.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்த வரை, தற்போது செய்து வரும் அதே கூட்டுத்தொழிலை அவர் தொடர்ந்து செய்யலாம். அதே நேரத்தில் தொழிலில் அதிக அலைச்சலை சந்திக்க நேரும் என்பதையும் அவரது ஜாதகம் உணர்த்துகிறது. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது  ஜாதக கணிப்பின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் சூரியன், புதன், கேது ஆகியோரின் இணைவும், ஆறாம் வீட்டில் செவ்வாய்-குருவின் இணைவும் கடுமையான சிரமத்தைத் தந்திருக்கிறது.

சுபஸ்ரீசங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்