SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

2019-02-04@ 13:54:29

புத்தம் புதிய தொடர்...

கல்லூரிப் பருவத்தில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பரம்பிக்குளம் போயிருந்தோம். கோவைகேரள எல்லையிலுள்ள அழகிய  வனப்பகுதி அது. கல்விச் சுற்றுலா என்பதால் அரசு விருந்தினர் விடுதி ஒன்றில் அறைகள் பதிவு செய்திருந்தோம். இருள்போர்த்த வேளையில் வனப்பகுதியில் நுழைந்தோம். அசையும் மரங்களும் கருநிறமோ என்று கருதும் வண்ணம் எங்கும் இருட்டு. விருந்தினர் விடுதிக்கு வந்தோம். அங்கும் மின்சாரம் இல்லை. திக்குத் தெரியாமல் தட்டுத் தடுமாறி  அறைகளில் முடங்கினோம். விடிந்தெழுந்து பார்த்தால் வாசலில் ஓர் அதிசயம். அழகான குளமொன்று விடுதியின் படிகளுடன் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தது. இரவில்   இப்படியொரு குளம் இருந்த சுவடே  இல்லை. பச்சைத் தாவணி அணிந்த பெண்ணின் சிரிப்புத் தளும்பலாய் சிற்றலைகளின் சலசலப்பைக்கூட இரவில் நாங்கள் தவற விட்டிருந்தோம். ஏற்கனவே இருந்ததுதானே அந்தக்குளம்.

விடியலில் விண்ணில் வந்த ஒளி எங்கள் கண்களில் இருந்த ஒளிக்கு ஒளிதந்ததால்  இந்தக் காட்சி ஓர் அதிசயம் போலத் தோன்றிற்று. ஆகாயம் என்னும் அகண்ட முற்றத்தில் அன்றாடம் உதிக்கும் பெருவிளக்கு சூரியன். திருவிளக்கு நிலவு. சிறு விளக்குகள் நட்சத்திரங்கள். இருந்தாற்போல் இருந்து வைகறையில் சூரியன் உதிப்பதும், மறந்தாற்போல் இருந்து மாலையில் நிலவு தோன்றுவதும் ஏற்றி வைத்த அகல்களாய்  நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல முகையவிழ்வதும் காண வாய்த்தால் அதுவே வரம். ஒளிந்திருப்பது ஒளி. அது வெளிப்பட சில கருவிகள் தேவையாய் இருக்கின்றன. யாரோ சமைத்த அகல். எவரோ திரித்த திரி. எங்கோ கிடைத்த எண்ணெய். எதிலோ பிறந்த சுடர். எல்லாம் சேர்ந்து தீபம் ஆகிறது. வாழ்வில் வெளிச்சம் வருவதென்பது வேறொன்றும் இல்லை. தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் இன்னும் விரிந்த கோணத்தில் வாழ்க்கையைப் பார்ப்பது.

நான் படைத்தேன் என்ற நினைப்பும் நான் ஜெயிப்பேன் என்ற முனைப்பும் மனிதனுக்கு மிகவும் அவசியம்தான். ஆனால் நானே எல்லாம் என்னும் எண்ணம் உண்மை அல்ல. மாறாக எல்லாவற்றிலும் நான். எல்லோருக்குள்ளும் நான். இதுதான் சுயமுன்னேற்ற உலகில் கீழை வானம் போதிக்கும் பாடம். சிலர், இந்த ஒட்டு மொத்த உலகமே தாங்கள் உயிர் வாழ்வதற்கான ஏற்பாடென எண்ணுவார்கள். கடவுளில் இருந்து கைக்குட்டை வரை  அனைத்தும் தங்கள் வசதிக்காக வந்தவை என்று நம்புவார்கள். இது தன்முனைப்பல்ல. தலைகுப்புற விழுவதற்கான வழி. பிரபஞ்சம் என்னும் பெருஞ்சக்தி எதை நோக்கி இயங்குகிறதோ அதற்கான கணக்கிலடங்காத கருவிகளில் நாமும் ஒரு கருவி என்னும் எண்ணம் எவருக்கு எழுகிறதோ அவர்கள் மகத்தான மனிதர்களாய் எழுகிறார்கள். எவரெவரோ முயன்றதனால் நாம் கால்பதித்து நடக்க வழி பிறந்தது. எவரெவரோ வழங்கியதால் நம் தீபங்களில் ஒளி வந்தது. இந்தப் புரிதல் நம்மை உயர்த்திக் கொண்டே இருக்கும்.

ஒரு தேர் தடம் பதிக்க வேண்டுமென்றால் ஊர் கூடி வடம் பிடிக்க வேண்டும். தேரோட்டத்திற்கு அப்படி ஒரு தேவை இருக்கும் என்றால் போராட்டத்துக்கு நடுவே பூ பூக்க இத்தனைக்கும் மனித வாழ்வுக்கும் பலபேர் வழிகாட்ட வேண்டியிருக்கிறது. இதற்கு மிகவும் தேவை நம்பிக்கை. நம்மை மட்டும் நம்புவது அல்ல நம்பிக்கை. நம்மை சேர்ந்திருப்பவர்கள், நம்மை சூழ்ந்திருப்பவர்கள் மத்தியில் தகுதியானவர்களை நம்புவதும் கூட நம்பிக்கையின் முக்கிய அங்கம்தான். வாழ்வில் மேலும் சாதிக்க விரும்புகிறவர்கள் கைக்கொள்ளவேண்டிய முதல் செயல் ஏற்கனவே வந்து இருக்கும் உயரங்களை வெற்றிகளை உன்னதங்களை மதித்துப் போற்றுவதும், அதற்கு துணை நின்றவர்களை நன்றி பாராட்டுவது தான். உண்மையில் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளம் நன்றி உணர்வு. ஒரு செயல் செய்து முடிக்கும் முடிக்கப்படும் போது அதன் வெற்றிகளுக்கு முழுமையான பொறுப்பேற்க  மனிதன் விரும்புவது இயற்கை.

அதைப்போலவே தன் தோல்விகளுக்கும், தன் தவறுகளால் ஏற்படும்  பக்க விளைவுகளுக்கும்  தானே  பொறுப்பேற்க வேண்டும் என்பது ஆக்கபூர்வமான வளர்ச்சியின் அரிச்சுவடி. வெற்றியை அனுபவித்த அவனுடைய அகங்காரம் தோல்விக்கு பொறுப்பேற்க சம்மதிக்காது இந்த நாள் இதனால் ஒன்று யார் மீது பழி போடுவான் அல்லது குற்ற உணர்வில் குமைந்து போவான். இதுபோன்ற நேரங்களில் ஏற்படும் குணக்கேடு, என்ன செய்யும் என்றால், இந்த இயலாமை தற்காலிகமான பின்னடைவு என்பதை நம்ப விடாமல் தடுக்கும். தனக்கெதிராய் ஒரு சதிவலை பின்னப்படுவதாய் சொல்லிக் கொடுக்கும். பங்குதாரர்  பணியாளர்கள் பிள்ளைகள் எல்லோருமே தனக்கெதிராக திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாய் சந்தேகத்தை வளர்க்கும். சாலையில் தவறி விழுந்த குழந்தை அந்நியர் ஒருவர் தூக்கிவிட வந்தாலும் அழுது அலறுவது போல நோய் தணிக்க ஊசிபோடும் மருத்துவரை நெருங்க விடாமல் கத்தித் தீர்ப்பது போல தீர்வுகளுடன் நெருங்குபவர்களைக்கூட நம்ப மறுப்பான்.

இதனால் தான் நம்முடைய கீழைச்சிந்தனை மரபு ஒவ்வொரு செயலையும் பிரார்த்தனையுடன் தொடர்பு படுத்தியது. விடிந்தெழுந்ததும் செய்யும் முதல் வேலை, இறைவணக்கம். மளிகைக்கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலெழுதும் போது கூடபிள்ளையார் சுழி என்று பழக்கப்படுத்தியது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் நம்மினும் பெரியதொரு சக்தியின் உறுதுணையை, உதவியை, உடனிருப்பை கோருகிறோம். இப்படி இறை நம்பிக்கையுடன் தன்னையும் நம்பி மனதில் வைத்துக் கொள்ளும் ஓர் எண்ணத்திற்கு சங்கல்பம் என்று பெயர். அந்த சங்கல்பத்தை, கருவில் குழந்தையை சுமக்கும் ஒரு பெண்ணின் கனிவோடும் கவனத்தோடும் கொண்டு செலுத்தும் போது அது உருவம் பெறுகிறது. முட்டுச் சுவர்கள் முன்னே நிற்கும் போதெல்லாம் மாயக் கதவொன்று தெரிகிறது. பூட்டப்பட்ட கோட்டைகளின் வாயிலில் தடுமாறி நின்று தன்னை சமன் செய்து கொள்கையில் திறவுகோல்கள் தட்டுப்படுகின்றன.

தெய்வம் மனித வடிவில் வரும் என்பதை நம்பிக்கையுடன் செயல்படும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்திலோ  அல்லது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமோ உணரவே செய்வார்கள்.  எண்ணம் அரும்பி செயல் மலர்ந்து முனைப்பு காய்க்கத் தொடங்கி முயற்சிகள் வேர்விட்டுக் கொண்டேயிருக்க, உரிய தருணத்தில் இலக்கை எட்டும் போதலது கர்ம யோகம். தன் கனவை எட்டிட பயணப்பட்ட பாதையை கடந்து வந்த எவருக்கும், அந்த வெற்றி தன்னால் வந்தது என்ற தலைக்கனம் தோன்றாது. பரிகசித்தவர்கள் சிலராக இருக்கலாம். பங்களித்தவர்கள் பலர்  என்கிற உண்மை பட்டவர்த்தனமாக புரிபடும். ஒரு சாதனையை நாம் செய்தோம் என்னும் எண்ணம் மாறி, பிரபஞ்சம் தனக்குத் தேவையானதை நிகழ்த்த நம்மை உந்தியது. அதற்கு உதவியாய் சிலரை அனுப்பியது என்னும் உண்மையை உணர முடியும். பரிகசித்தவர்களும் விமர்சித்தவர்களும் கூட அதில் ஓர் அங்கம் வகித்தவர்களே என்பதால் அவர்களைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தையும் எளிதில் கடந்து விட வேண்டும். அவர்களையும் சேர்த்துதான் இந்த உலகம்.   

இந்தப்புரிதல் தான் அபாரமான சாதனையையும் நிகழ்த்தும் அகங்காரத்தையும் முறிக்கும் ஒரு வெற்றி வரும் போது இதனை நிகழச் செய்கிற துணை நின்றவர்கள் நம்மினும் மேலானவர்கள் என்றும், இதை நிகழ்த்திக் காட்டியது நம்மை வைத்து விளையாடும் மகத்தான இறை சக்தியென்றும் பாவனையாக இல்லாமல் உண்மையாக   உணர்ந்து பாருங்கள். அப்போது ஏற்படும் தெளிவால் உங்கள் மனநிலையிலும் சரி, வாழ்வை அணுகுகிற முறையிலும் சரி, மகத்தான வெளிச்சங்கள் துலங்கத் தொடங்கும். உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆடுகளமாக இந்த வாழ்க்கையை பார்க்கிறீர்களா அல்லது இறைவன் வைத்திருக்கும் பல உயர்ந்த திட்டங்களுக்கு உங்களை உன்னத கருவியாக உணர்கிறீர்களா என்பது தான் முக்கியம். வாழ்க்கை உங்கள் ஆசைகளுக்கான ஆடுகளம் என்ற முடிவுக்கு வருகிறீர்களா? சரி. அப்படியானால் உங்களை எதிர்த்து விளையாடுபவராக எதை நிர்ணயிக்கிறீர்கள்? வாழ்வென்னும் பெரும் சக்தியைத்தான்.

உங்களை நீங்கள் மையப்படுத்திக் கொள்ளும் போது உங்களுக்கெதிரே நிற்பது வாழ்வின் சக்தியே அல்லவா? அது கச்சை கட்டி வரும்போது காலை தட்டிவிடும். ஏனென்றால் நீங்கள் பிரபஞ்ச சக்தியோடு போட்டி போட எத்தனிக்கிறீர்கள். அந்த நேரத்தில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உங்கள் வல்லமைகள், திறமைகள் எல்லாம் செயலற்றுப் போகும். அசுரர்களின் வீழ்ச்சியெல்லாம் அவ்வாறுநேர்ந்தது தான். மாறாக உங்களை ஒரு கருவியாக உணர்ந்து பாருங்கள். உங்கள் மேல் நல்ல நம்பிக்கை இருந்தால் மிகத் திறமையான கருவியாக உங்களை கருதிக் கொள்ளுங்கள். தரப்பட்டிருக்கும் சூழலை தரமானதாக்கி உங்களை முழுமையாக வெளிப்படுத்த முழு மூச்சுடன் முனையுங்கள். உங்களைக் கொண்டு உருவாக வேண்டியவற்றை பிரபஞ்சம் உருவாக்குவதை நீங்களே மௌனசாட்சியாய் நின்று பார்ப்பீர்கள். “நாமா இதை செய்தோம்?” உள்மனம் வியக்கும். “ஆம்!நாம்தான் செய்தோம்” காதில் முணுமுணுத்தபடியே உங்கள் தோள்களில் ஒரு கை விழும். அது கடவுளின் கை. பணிவும் நன்றியறிதலும் உங்களுக்குள் ஒளிரத் தொடங்கும். உங்கள் பங்களிப்புக்காக உங்களுக்கு செய்கூலி உண்டு. சேதாரம் கிடையாது.

மரபின் மைந்தன் முத்தையா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்