SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவைக்காக நினைக்காமல் தீர்வுக்காக உருகுங்கள்

2019-02-01@ 16:29:55

அருணகிரி உலா - 69

விருத்தாசலத்தில் அருணகிரியார் பாடிய மற்றொரு திருப்புகழில் மிக அருமையான மகாபாரதச் சம்பவம் பற்றிய குறிப்பு வந்துள்ளது. இரண்டே வரிகளில், பாண்டவரிடத்தில் தமக்கு வளர்ந்திருந்த பற்றினால் தனது அளவற்ற வடிவத்தைக் கண்ணபிரான் சகாதேவனுக்குக் காட்டினார் எனும் வரலாற்றை அளித்துள்ளது ரசிக்கத்தக்கது. பாடல் பின்வருமாறு:-

‘‘பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலை கெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே..’’

பொருள்: உடல் வறண்டு போக, பழவினைகள் முற்றி, நடையும் கோணல் மாணலாக தள்ளாட, கைகள் உடலைச் சொறிந்துகொண்டிருக்க, பற்கள் வெளியில் நீண்டுவர, கண்புரையால் பார்வை குருடாகி, பழுத்த பழம்போல் தளர்ந்து, மயிர் கொக்கின் நிறம்போல் வெளுத்து, வேகமாக வரும் பித்தத்தால் பிராண வாயு நிலை தடுமாறி, மெலிந்துபோய் கைகள் தடி பிடிக்க, எந்தச்சபையிலும் வெளி நிற்கும் நிலையை அடைந்து, துன்பம் நிறைந்த இந்தப் பிறப்பிலிருந்து விடுதலை பெற உனது திருவருள் எப்போது கைகூடும்?

சலிப்பில்லாமல் போர் புரியும் அசுரர்கள் மாள்வதில் விருப்பமுடைய, வலிய வஜ்ராயுதம் கொண்ட இந்திரனும் ஏனைய தேவர்களும் சொரிந்த பூக்களால் பூமியே மூடிப்போய் விளங்கும் நிகரில்லாதவனே! போரில் வெற்றி பெற்றவனே! பழிச்சொல்லுக்கு இடமில்லாமல் பாண்டவர்கள் மீது கொண்ட எல்லையற்ற கருணையினால் பதினாறாயிரம் உரு எடுத்த மேக  நிறத்தவனான கண்ணபிரான் மருகோனே! இனிய செம்மையான துதிகளை ஓதி உனது அருள் பெற்ற சிவனடியார்கள் கூடி வாழ்கின்ற விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

நம் பொருட்டுக் கண்ணபிரான் துரியோதனனிடம் தூது செல்ல வேண்டும் என்று பாண்டவர்கள் கண்ணனை வேண்டிக் கொண்டனர். கண்ணனோ சகாதேவனிடம் ‘உன் யோசனை என்ன?’ என்று கேட்டான். ‘‘உன் கருத்து என்னவோ அதுவே என் கருத்து’’ என்று கூறினான் சகாதேவன். கண்ணன் இவன் நமது எண்ணத்தை வெளிவிட்டு விடுவான் என அறிந்து, அவனைத் தனியாக அழைத்துச்சென்று ‘‘பாரதப்போர் நடவாதிருக்க வழி என்ன சொல்’’ என்றார். ‘‘பெருமானே! நீ பூபாரம் தீர்க்க வந்துள்ளாய்; உன்னையல்லால் வேறு யாராலும் அந்தப் போரை நிறுத்த முடியாது; உன்னை நான் கட்டிப் போட்டால் பாரதப்போர் வராது’’ என்று விடை கூறினான் சகாதேவன்.

கண்ணன் ‘‘என்னை நீ எவ்வாறு கட்டுவாய்’’ என்று கேட்டதும், ‘‘உன் வடிவத்தைக் காட்டு, கட்டுவேன்’’ என்றான். உடனே கண்ணன் தன்போலவே பதினாறாயிரம் உருவங்கள் எடுத்தான். ஆனால் சகாதேவன், ‘மூல உருவம் இதுவே’ என்றறிந்து கண்ணனது தாமரைப் பாதங்களைக் கருத்தால் கட்டினான். கண்ணபிரான் மகிழ்ந்து, ‘‘என் பாதத்தை விட்டு விடு; ஆனால் எவரிடமும் விஷயத்தைக் கூறி விடாதே’’ என்று சொல்லிவிட்டு துரியோதனனிடம் பாண்டவர்களது தூதுவராகச் சென்றான். இதையே அருணகிரியார்....

‘‘வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
 வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே’’
- என்று பாடுகிறார்.

‘‘மாயனும் அன்பன் மனமறிவான் கட்டுக என்
றாய வடிவு பதினாறாயிரங் கொண்டான்
தூயவனும் மூலமாந் தோற்ற முணர்ந்தெவ்வுலகுந்
தாய அடியிணைகள் தன் கருத்தினாற் பிணித்தான்’’
- வில்லி பாரதம்.

மூன்றாவது திருப்புகழில், சேதுபந்தனம் திரிபுர சம்ஹாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

‘‘அடைத்தார் கடலோர் வலி ராவண
குலத்தோடரி ஓர் சரனார் சினம்
அழித்தார் முகிலேய் நிற ராகவர் - மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.’’

(வணா = வண்ணா = அழகனே) கடலில் அணை கட்டி ஒப்பற்ற வீரனான ராவணனை அவன் வம்சத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பை உடையார்; இப்படிச் செய்து தன் கோபத்தைச் சமன் செய்தவர்; முகில் வண்ணன் ஆகிய ராமபிரானின் மருகனே! பிரம்மனின் ஒரு சிரத்தை அறுத்துத் தள்ளியவர், திரிபுரங்களை எரித்து அழித்தவர், அங்கிருந்த மூன்று மெய்யறிவுடைய அசுரர்கள் தலைவர்களின் உயிரைக் காத்தவராகிய சிவனாரின் பாதி சரீரத்தில் விளங்கிய உமை பெற்றெடுத்தருளிய குழந்தையே!

விஷம் போன்ற கொடிய குணம் கொண்ட அசுரர்களின் ஊர் நாசமாகும் படியும், சிறைவாசம் (இந்திரன் முதலான தேவர்களது) நீங்கவும், அவர்கள் தங்கள் ஊரில் மீண்டும் குடிபோகவும், ஒளிவீசும் வேலாயுதத்தால் பல பராக்கிரமச் செயல்களைப் புரிந்தவனே! தாமரை போன்ற கண்களை உடைய அழகா! வள்ளிக்கு மகிழ்ச்சியைத் தரும் திவ்ய வனப்பை உடையவனே! என் தாயாகிய விருத்தாம்பிகை வாழும் முதுகிரியில் உறையும் முருகனே!

[எனை ஈணெடுத்த புகழ் கல்யாணி பக்கம் உறை இதழ்வேணி அப்பன் = சிதம்பரத் திருப்புகழ்] ஸஹஸ்ர லிங்கம், ஏகாம்பர லிங்கம், ஜம்பு லிங்கம், அண்ணாமலையார் ஆகியோரைத் தரிசிக்கிறோம். அலங்கார மண்டபத்தில் உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் மாசி மக விழா ஆறாம் நாளில் மட்டும் வெளியில் உலா வருகிறார். இவர் உற்சவ மூர்த்தியாதலால் அன்றாட அலங்கார தீபாராதனைகள் உடையார் எனப்படும் ஸ்படிக லிங்கத்திற்கே செய்யப்படுகின்றன. வன்னியடிப் பிராகார முடிவில் நடராஜ சபை உள்ளது.

மூன்றாவது உள்சுற்று மதிலைக் கடந்து, அறுபத்து மூவர், ரிஷபாரூடர், யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், ருத்ரர் மாற்றுரைத்த விநாயகர், வருணலிங்கம், முப்பிள்ளையார், தட்சிணாமூர்த்தி ஆகியோரைக் காணலாம். கஜலட்சுமி, பைரவர், சூரியலிங்கம் மற்றும் சூரியனைத் தரிசித்து, துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கி வெளியே
வருகிறோம்.

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் விருத்தாம்பிகைக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்கி 4 மண்டபங்கள் கடந்து கருவறையை அடையலாம். [வன்னியடிப் பிராகாரத்திலிருந்தும் பெரிய நாயகி சந்நதிக்கு வரலாம். வாயிலில் நவகிரகங்களும் தண்டபாணித் தெய்வமும் உள்ளனர்]. சக்தி வடிவங்களையும், துர்க்கையையும், அம்பிகையையும் கண் குளிரத் தரிசித்து வெளியே வருகிறோம். முன்னால் உள்ள அலங்கார மண்டபத்தில் கொடிமரமும் நந்தியும் உள்ளன. அருகிலுள்ள குகை முருகன் சந்நதியையும், இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரையும் வணங்குகிறோம்.

ஆலயத்தில் திருச்சுற்றுகள், கோபுரங்கள், கொடிமரங்கள், நந்திகள், விநாயகர் உருவங்கள், தீர்த்தங்கள் இவ்வாறாகப் பலவும் ஐந்து ஐந்தாக உள்ளதைச் சுவரில் எழுதி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அடுத்ததாக நாம் விருத்தாசலம்-ஸ்ரீமுஷ்ணம் பாதையில் சாலையோரத்தில் அமைந்துள்ள எருக்கத்தம்புலியூரிலுள்ள நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு வருகிறோம். ராஜ ராஜசோழன் குழந்தைப் பேற்றிற்காக இறைவனை வணங்கி அருள் பெற்ற தலம். எனவே  அவன் மகன் பெயரால் ராஜேந்திரப் பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளெருக்கு தலமரம், எனவே எருக்கத்தம்புலியூர் எனப்படுகிறது. சம்பந்தப் பெருமானுடன் பயணித்து, அவர் பாடிய தேவாரப் பாடல்களை யாழில் இசைத்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதரித்த தலம் இது.

பாணருடைய வேண்டுதலின்படி சம்பந்தர் இங்கு வந்து பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தை அருணகிரியார் யாழ்ப்பாணாயன் பட்டினம் என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார். உருத்ரசென்மர் இறைவனை வழிபட்டு ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற தலம் எருக்கத் தம்புலியூர். மூன்று நிலைகள் கொண்ட சிறிய ராஜகோபுரம். உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் சந்நதி உள்ளது. நவகிரகங்களையும் நால்வரையும் வணங்குகிறோம். யாழ்ப்பாணரும் அவரது மனைவி மதங்க சூளாமணியும் சிலை வடிவில் உள்ளனர். (இவர்கள் குலத்தில் வந்த பெண் ஒருவள்தான் பிற்காலத்தில் தேவாரப் பணிகளைச் சீரமைத்து தமிழ்+ இசைத்தொண்டு புரிந்ததாக அறிகிறோம்) மகா கணபதி, விஸ்வநாதர், விசாலாட்சி, முருகர், லட்சுமி, ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகியோர் சந்நதிகளை வணங்கித் திருப்புகழை முருகனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே’’

பொருள்: தாய், திருமாலின் தங்கை, கன்னி, பிரணவசொரூபி, நடனம் செய்யும் ஆனந்த சிவசக்தி, மூவுலகத்தலைவி, தனது பரிவாரங்களாகிய பேய்களாலும் பூதங்களாலும் சூழப்படும் பைரவி, சகல அண்டங்களுக்கும் தலைவி, படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்பவள், விளையாடுவதுபோல் சென்று சிவனாரின் இடப்பக்கத்தை ஆக்ரமித்தவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே!

தினமும் சூரிய பகவானை வழிபட்டு நவகிரகங்களுக்கும் நீர் மூலம் தர்ப்பணம் செய்து காயத்ரி மந்திரம் ஜெபித்து, உலக இன்பங்களைத் துறந்தவர்களுக்கு ஞான நெறியில் வெளிப்பட்டு தரிசனம் அளித்த குருபரனே! சம்பந்தப் பெருமானாய் வந்து யாப்பிலக்கணத்திற்குப் பொருந்திய தேவாரப் பாடல்களை அருளிய முருகோனே!ஏற்பவர்கள் வர வர, அவர்கட்கு வேண்டிய பொருட்களை விருப்பமும் மகிழ்ச்சியும் பெருக வாரி நல்கும் யாழ்ப்பாண பட்டினம் வாழும் பெருமாளே!  பொன்னொளி வீசும் நீண்ட மதில்கள் சூழ்ந்த யாழ்ப்பாணாயன் பட்டினம் வாழும் பெருமாளே!

முருகனை வணங்கி, கோட்டத்தில் உள்ள விநாயகர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரை வணங்குகிறோம். தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேலே படிகள் ஏறிச்சென்றால் சிறிய சட்டை நாதர் இருப்பதைக் காணலாம். மூலவரை வணங்க வந்தபோது ‘திருக்குமாரசாமி’ என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். உ.வே.சா. அவர்களும் மூலவருக்கு திருக்குமரேசர் என்று பெயர் உள்ளதாக எழுதியுள்ளார்.

சுவாமிக்கு வலப்பால் அம்பிகை வீறாமுலையம்மை திருச்சந்நதி உள்ளது. வாயிலில் பால கணபதி, பால முருகன் இருவரையும் காணலாம். சண்டிகேஸ்வரரை வணங்கி வெளியே வருகிறோம். வெளிச்சுற்றில் கோடி விநாயகர் உள்ளார். தருமபுர ஆதினத்திற்குச் சொந்தமான சிராப்பள்ளி மலைக்கோட்டை மவுன மடத்தின் நன்கொடைப் பணியால் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எருக்கத்தம்புலியூரிலிருந்து புறப்படும் நாம் அடுத்ததாகச் செல்லவிருப்பது ‘திருவரத்துறை’ என்றும் ‘திருஅருட்துறை’ என்றும் வழங்கப்படும் திருநெல்வாயில் அறத்துறை எனும் திருத்தலம் ஆகும்.

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்