SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியானத்தில் ஈடுபடுங்கள்

2019-01-29@ 16:58:20

கடந்த வருடம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் பாட்டியாகிய என் தாயாருக்கும், தந்தையாகிய எனக்கும் உடம்பு சரியில்லை. எனது மனைவி அடிக்கடி சண்டை போடுகிறாள். அந்தக் குழந்தை பிறந்தது முதல் இன்று வரை பல இன்னல்களை தருகிறது. குழந்தை பிறந்தது நல்ல நேரமா, கெட்ட நேரமா? கோபிநாத், திருவண்ணாமலை.

உங்கள் கையெழுத்தில் இருக்கும் தெளிவு மனதில் இல்லையே... இதே மனைவி நிலைத்து இருப்பாரா, வேறு திருமணம் செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்டிருப்பதைக் கொண்டு உங்கள் ஆழ்மனதில் உள்ள குறைகளை உணர முடிகிறது. குடும்பத்தில் தம்பதியருக்கிடையே சண்டையும், சச்சரவும் சகஜமான ஒன்று. உடல்நிலை சரியில்லாமல் போவது என்பது அவரவர் தேக ஆரோக்யத்தைப் பொறுத்த விஷயம். இதற்கு பிறந்த குழந்தை என்ன செய்யும்? வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றாலே மகாலக்ஷ்மியின் அருட்பார்வை நம் மீது விழத் தொடங்கியிருக்கிறது என்று பொருள். எப்பொழுதும் ஒரு குழந்தை பிறக்கின்ற நேரத்தால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது.

மூட நம்பிக்கைகளை விடுத்து உங்கள் மனதில் நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல மனிதர்களுடனும், ஆன்மிகப் பெரியவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளால் பெற்றோர் பெருமை அடைவார்கள். வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாமல் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கிடைத்திருக்கும் நல்வாழ்வினை தவறவிட்டு விடாதீர்கள். திருவண்ணாமலை சேஷாத்ரி ஆசிரமத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு தங்கி தியானத்தில் ஈடுபடுங்கள். மனமும் புத்தியும் தெளிவடையும்.

60 வயதாகும் எனக்கு 19வது வயது முதல் ஜாயின்ட் பெயின் உள்ளது. 58வது வயதில் கால் முறிந்துவிட்டது. மறுபடியும் அதே காலில் விரிசல் விழுந்து விட்டது. எத்தனையோ மருத்துவர்கள் பார்த்துவிட்டேன். சரியாகவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன பரிகாரம் செய்தால் சரியாகும்? சசிகலா, ஈரோடு.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. 19வது வயது முதலே மூட்டு வலி இருந்து வருவதாக எழுதியுள்ளீர்கள். 41 வருடங்களாக சமாளித்து விட்டீர்கள். இனி வரும் காலத்தையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். மருந்து மாத்திரைகளால் மட்டும் உங்கள் பிரச்சினை சரியாகிவிடாது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆரோக்யமான உணவு முறையும், உடற்பயிற்சியும் மட்டுமே உங்கள் உடல்நிலையை பராமரிக்க உதவும். உங்கள் ஜாதக பலத்தின்படி உடல்நிலையில் கால்சியம் சத்து குறைவாக இருப்பது தெரிய வருகிறது.

கால்சியம் சத்து நிறைந்த முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பசும்பால் முதலானவற்றை உங்கள் உணவினில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் கலந்த உளுந்தங்களி உருண்டை சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி பிரச்சினைகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய்சனியின் பலவீனமான நிலையே உங்கள் பிரச்சினைக்குக் காரணம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட்டு வர உடல் வலிமை பெறும். முடியாது என்ற ஒன்றே இந்த உலகில் கிடையாது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆஞ்சநேய ஸ்வாமியின் அருளாலும், உங்கள் விடாமுயற்சியாலும் 01.07.2019 முதல் மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கிவிடுவீர்கள். கவலை வேண்டாம்.

நான் கடந்த 20 வருடங்களாக பிரஷர் மற்றும் சுகருக்காக மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இரவு நேரத்தில் ஏழு அல்லது எட்டு தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எவ்வளவுதான் கட்டுப்பாடுடன் இருந்தாலும் என்னையும் அறியாமல் படுக்கையிலேலே சிறுநீர் கழித்துவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நான் குணம் பெற எந்த மருத்துவ முறையை நாட வேண்டும், பரிகாரம் என்ன? பழனிசாமி, கோவை.

90வது வயதில் தெள்ளத் தெளிவாகக் கடிதம் எழுதியிருக்கும் உங்களைக் கண்டு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த வயதிலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் தந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு உண்டாகியுள்ள உடல் உபாதையை எண்ணி மன வருத்தத்துடன் கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்களுடைய வயதிற்கு இதுபோன்ற பிரச்சினைகள் சகஜம்தான். இந்த நவீன யுகத்தில் இந்தப் பிரச்சினையை எளிதாக சமாளிக்க இயலும். தற்காலிகமாக பிரச்சினையை சமாளிக்க டயாபர் போன்றவற்றை உபயோகியுங்கள்.

நம்மால் அடுத்தவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லை என்ற எண்ணமே உங்கள் உடல்நிலையை சீராக்கிவிடும். உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குருபுக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதம் முதல் புதன் தசையில் சனி புக்தி துவங்கினாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 20 வருடங்களாக சாப்பிட்டு வரும் மருந்து, மாத்திரைகள் உடல்நிலையில் பலகீனத்தை உண்டாக்கி இருக்கலாம். உங்களுடைய பிரச்சினைக்கு சித்த மருத்துவ முறையில் தீர்வு காண வழியிருக்கிறது. தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி இறைவனை வழிபட்டு வர சிரமம் குறையும்.

“பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிசஜபேந்நாமத்ரயந் நித்யம் மஹாரோக
நிவாரணம்.”


பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கும் என் மகனுக்கு இதுவரை நிலையான உத்யோகம் அமையவில்லை. திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தைப்பேறு இன்னும் கிடைக்கவில்லை. அவனுக்கு நிலையான உத்யோகம் கிடைக்க பரிகாரம் கூறுங்கள். சுந்தரவள்ளி, குளித்தலை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் (மீன லக்னம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் அமர்வும், ஜீவன ஸ்தான அதிபதி சனி ஒன்பதாம் பாவகத்தில் சந்திரனுடன் இணைந்து அமர்ந்திருக்கும் நிலையும் அவருக்கு அந்நிய தேச உத்யோக ப்ராப்தியை உண்டாக்குகிறது. வெளிநாட்டு உத்யோகத்திற்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். குடும்ப ஸ்தான அதிபதி எட்டில் அமர்ந்திருப்பதால் உத்யோக ரீதியாக குடும்பத்தை விட்டு வெளியூருக்குச் செல்ல வேண்டிய யோகம் உண்டாகியுள்ளது.

துபாய் முதலான அரபு நாடுகளில் வேலைக்கு முயற்சிக்கலாம். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அவருடைய உத்யோகத்திற்கு பக்கபலமாகத் துணை நிற்கிறது. லக்னாதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இவர் எந்த ஒரு சூழலிலும் தயக்கமின்றி பேச வேண்டும். பேச்சுத்திறமையின் துணைகொண்டு இவர் வாழ்வினில் வெற்றி காண இயலும். கடுமையாக முயற்சித்தால் இந்த வருட இறுதிக்குள் அந்நிய தேசப் பணி கிடைத்துவிடும். சனிக்கிழமை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 11 முறை சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும்.

“மந்தார பூதேருதாரம் மந்த ராகேந்த்ர ஸாரம் மஹாகௌர்யதூரம்
 ஸிந்தூர தூர ப்ரசாரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்கபந்தும்.”


சிறுவயது முதல் வறுமையில் எவ்வித மகிழ்வுமின்றி வாழ்ந்து வரும் எனக்கு உண்மையாக உழைக்க நினைத்து சேரும் வேலையில் ஏதாவது மன வருத்தம் உண்டாகி விலக வேண்டியதாகி விடுகிறது. நிரந்தர வேலை இல்லை. அதனால் திருமணமும் இதுவரை நடைபெறவில்லை. வாழ்வே கேள்விக்குறி ஆகி தவித்துக் கொண்டிருக்கிறேன். பலரின் கேலிப் பேச்சுக்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள என் வாழ்வு எப்போது சிறக்கும்? கதிர்வேல்அழகன், மயிலாடுதுறை.

உங்கள் பெயரைப் போலவே கையெழுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு அழகாய் இருக்கிறது.  தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசை துவங்கியுள்ளது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீடு சுத்தமாக இருந்தாலும் ஸ்தான அதிபதி செவ்வாயின் மூன்றாம் இடத்து அமர்வும், லக்னத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரஹங்களின் வலிமையும் கைத்தொழிலைக் குறிக்கின்றன. நீங்கள் சொந்தமாகச் செய்யும் தொழிலே உங்களுக்கு மன திருப்தியைத் தருவதோடு நிரந்தரமானதாகவும் அமையும்.

லக்னத்தில் இணையும் வலிமையான கிரகங்கள் உங்களை ஒரு சிறந்த நிர்வாகியாக மாற்றும். கேட்டரிங் தொழிலைக் கூட பயமின்றி செய்யலாம். நூறு பேரை வைத்து வேலை வாங்கும் திறன் உங்களிடம் உண்டு. அதே துறையைச் சார்ந்த குடும்பத்துப் பெண்ணாக மனைவி அமைவார். மனைவியின் துணையுடன் சொந்தமாக கேட்டரிங் தொழிலைச் செய்ய முற்படுங்கள். தயக்கத்தை விடுத்து தைரியமாக செயலில் இறங்குங்கள். சிறிய அளவிலான மெஸ் போன்ற தொழிலும் சிறப்பான முன்னேற்றத்த் தரும். திங்கள் தோறும் விநாயகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று தும்பைப் பூ மாலை சாற்றி வழிபட்டு வர உங்கள் எதிர்காலத்திற்கான வழி பிறக்கும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்