SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிந்த குடும்பம் ஒன்றிணையும்..!

2019-01-29@ 16:53:21

இளம் வயதிலிருந்தே மிகவும் சிரமப்பட்ட எனது தங்கையின் கணவன் சரியில்லை. புகுந்த வீட்டு ஆதரவும் இன்றி தனது ஒரே மகனை கஷ்டத்திலும் படிக்க வைத்து வங்கிப்பணியில் சேர்த்துள்ளாள். அவள் நம்பி இருக்கும் ஒரே மகனும் தந்தையைப் போல காதல் திருமணம் செய்து தாயைக் கழற்றி விடுவானா? அல்லது தாயை மகிழ்வித்து காப்பாற்றுவானா?  - சரோஜா, ஸ்ரீரங்கம்.

தங்கையின் மகன் பற்றிய கேள்விக்கு தங்கையின் ஜாதகத்தை மட்டும் அனுப்பியுள்ளீர்கள். உங்கள் தங்கையின் ஜாதகத்தில் சிரமத்தைத் தரக்கூடிய ஆறாம் இடம் வலிமையாக இருப்பதால் அவர் தனது வாழ்வினில் போராட்டத்தை சந்தித்து வந்திருக்கிறார். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் செவ்வாயும், ராகுவும் இணைந்திருக்கின்றனர்.

ஒன்பது கிரகங்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சாதகமாக சஞ்சரிக்கவில்லை. அவரது ஜாதக பலன் அமைப்பு இவ்வாறு இருக்க அடுத்தவர்களை குறை சொல்வதில் என்ன பயன்? தாய், தந்தை இருந்தும் பாட்டி வீட்டில் வளர்ந்திருக்கிறார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரால் மேலே படிக்கவும் இயலவில்லை. குக்கிராமங்களில் வேலை, வாழ்நாளில் இரண்டு அறுவை சிகிச்சை, நிர்ப்பந்திக்கப்பட்ட திருமணம் என்று பெரும் போராட்டத்திற்கு இடையே அவரது வாழ்வு அமைந்திருக்கிறது. ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

உடன் உச்சம் பெற்ற சனியுடன் சந்திரன் மற்றும் புதனின் இணைவும் நிகழ்ந்திருக்கிறது. போராட்டம் என்பது இவருடன் பிறந்தது. வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தான அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்திருப்பதால் மணாளனும் நல்லவனாக அமையவில்லை. “பதவி பூர்வ புண்யானாம்” என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நாம் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே இந்த ஜென்மாவில் பலனை அனுபவிக்கிறோம். உங்கள் தங்கையின் ஜாதக அமைப்பு இதனை உறுதி செய்கிறது. பிறந்த வீட்டிலும் கஷ்டம், புகுந்த வீட்டிலும் கஷ்டம், கொண்டவனும் சரியில்லை எனும்போது பெற்ற பிள்ளையிடம் மட்டும் குறை காண்பது சரியா? அவரது பூர்வ ஜென்ம கர்மாவின் பலனைத்தான் தற்போது அனுபவிக்கிறார். அவ்வளவுதான்.

உங்கள் தங்கையின் ஜாதகத்தில் புத்ர ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் அவரது மகன் நல்ல கௌரவத்துடன் உயர்ந்த நிலைமையில் வாழ்வார். மகன் காதல் திருமணம் செய்வாரா என்பதை அவரது ஜாதகம்தான் முடிவு செய்யும். நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் தங்கையின் ஜாதகத்தின்படி புத்ர ஸ்தான அதிபதி புதன் ஆறில் மறைவதால் தான் பெற்ற மகனிடம் இருந்து இவர் பெருத்த ஆதரவைக் காண இயலாது. தனது வாழ்நாளின் இறுதி வரை சொந்தக்காலில்தான் நிற்க வேண்டும். அவரது வாழ்நாள் லட்சியம் மகனை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதே. அதனை அவர் நிறைவேற்றி விட்டார். மகனை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்பது பெற்ற தாயின் கடமை.

கடமையைச் செய்த அவர் பலனை எதிர்பார்க்கக் கூடாது. அவரது ஜாதகக் கணிதத்தின்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது ஞானத்தை போதிப்பார். இத்தனை நாள் தனது வாழ்வினில் கண்ட அனுபவப் பாடங்களைக் கொண்டு தனித்த ஞானத்தினைப் பெறுவார். அறுபத்தி ஐந்தாவது வயதில் இருக்கும் அவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? சுற்றியுள்ளவர்கள் அவர் மனதைக் குழப்பாமல் இருந்தால் போதும். 02.06.2019க்குப் பிறகு மனத்தெளிவினை அவர் அடைவதோடு எஞ்சிய தனது வாழ்நாளை எப்படி கழிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வார்.

இந்த ஜென்மாவிலேயே தனக்குரிய கடன்களை கழித்துவிட்டால் அடுத்த ஜென்மாவில் சுகத்தினை அனுபவிக்க இயலும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு உங்கள் தங்கைக்கு ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி வாருங்கள். பகவானின் நாமத்தை சதா உச்சரித்துக் கொண்டிருப்பது மட்டுமே அவரது வாழ்விற்கான பொருளை அவருக்குப் புரிய வைக்கும்

என் மகனுடன் சண்டையிட்டுக்கொண்டு மருமகள் தன் தாய் வீட்டிற்குச் சென்று நாற்பது நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இரண்டு மகன்களையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார். மருமகள் மீண்டும் வருவாளா? என் மகனுடன் சேருவாளா? பழையபடி சந்தோஷமாக இருப்பாளா? ஜெயப்பிரகாஷ் நாராயணன், சேலம்.

உங்கள் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தற்போது உண்டாகியிருக்கும் பிரிவு என்பது தற்காலிகமானதே. இருவரும் பரஸ்பரம் நல்ல புரிதலோடு உள்ளவர்கள் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தடைகள் விரைவில் விலகிவிடும் என்பதால் உங்கள் மனக்கவலையை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசியுங்கள். அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தான அதிபதி சந்திரன் உயிர் ஸ்தானம் ஆகிய ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீடும் சுத்தமாகவே உள்ளது. என்றாலும் தற்போது நடந்து வரும் ஏழரைச் சனியின் காலமும், தசாபுக்தியும் இதுபோன்ற பிரிவினையை உண்டாக்கி இருக்கிறது.

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகமும் நன்றாகவே உள்ளது. ஜென்ம லக்னாதிபதி புதனுடன் களத்ர காரகன் சுக்கிரன் இணைந்திருப்பதும், கணவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சந்திரனின் அமர்வும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு நான்கில் அமர்ந்திருப்பதும் வாழ்க்கைத் துணைவருடனான சிறப்பான வாழ்வினையே உணர்த்துகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தை விட மருமகளின் ஜாதகம் வலிமையாக உள்ளது. இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தவறு என்பது உங்கள் மகன் மீது இருப்பது போல் தோன்றுகிறது.

குடும்ப வாழ்வினில் இதுபோன்ற பிரச்னைகள் சகஜம் என்பதை உங்கள் மகனுக்குப் புரிய வைத்து கௌரவம் பாராமல் ஒரு முறை தனது மனைவியை நேரில் சந்தித்து மனம்விட்டு பேசச் சொல்லுங்கள். அவர்கள் இருவரும் யாருடைய தலையீடும் இன்றி தனிமையில் நேரில் சந்தித்துப் பேசினால் பிரச்னைகள் அத்தனையும் காணாமல் போய்விடும். அடுத்து வரும் ஏழு ஆண்டுகளும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளச் சொல்லி உங்கள் மகனிடம் அறிவுறுத்துங்கள். குடும்பத்தின் பெரியவர்கள் என்ற முறையில் பிரிந்த தம்பதியரை ஒன்றிணைக்க முயற்சியுங்கள். தை மாத இறுதிக்குள் நிச்சயமாக பிரிந்த குடும்பம் ஒன்றிணைந்துவிடும். கவலை வேண்டாம்.

எனது மருமகள் பார்வையில் கோபக்காரியாகவும், பேச்சில் அனல் தெறிக்கும்படியும் பேசுகிறாள். சங்கடத்தில் உள்ள எனது மனம் மிகவும் புண்பட்டுப் போயிருக்கிறது. மகனுக்காகவும், ஒன்பது வயது பேத்திக்காகவும் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்கிறேன். எனது மருமகள் பாசத்தோடு இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? - சுப்புலட்சுமி, சென்னை.

உங்கள் பார்வைக்கு இவ்வாறு தெரியும் மருமகள் சுற்றத்தார்களிடமும், தனது கணவனிடமும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனித்தீர்களா..? உங்கள் உறவினர்களின் பார்வையில் அவரது நடத்தையைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கும், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளுக்கும் ஷஷ்டாஷ்டகம் என்பது ஜாதக ரீதியாக உண்டாகியிருக்கும். அதாவது ஒருவரின் செயல் மற்றவரின் பார்வைக்குத் தவறாகத்தான் தெரியும். இந்த இரு ராசிக்காரர்களுக்கும் இடையே ஒத்துப்போவது என்பது கடினம். என்றாலும் அவர் தனுசு லக்னத்திலும், நீங்கள் மிதுன லக்னத்திலும் பிறந்திருப்பதால் பெருத்த பிரச்னை ஏதும் உண்டாகாது.

மிதுன லக்னம், மிதுன ராசி என்று புதனின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் நீங்கள்தான் அவரை அனுசரித்துச் செல்ல வேண்டும். ஜென்ம லக்னம் என்பது ஒருவரின் உள்மனதைப் பற்றிச் சொல்லும். ஜென்ம ராசி என்பது வெளி மனதினைக் குறிக்கும். அதாவது ஒருவர் வெளியில் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஜென்ம ராசி உணர்த்தும். இந்த அடிப்படையில் காணும் போது தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மீது மிகவும் மரியாதை கொண்டிருப்பார். இருந்தாலும் வெளி மனதிற்கு உரிய விருச்சிக ராசிக்கும், உங்களது மிதுன ராசிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றுவது சகஜமே. மேலும் தற்போது ஏழரைச் சனியின் தாக்கத்தில் மருமகள் இருப்பதால் அவரது மனநிலையைப் புரிந்துகொண்டு பொறுத்துச் செல்ல வேண்டும். உங்களுடைய பொறுமையும், அனுசரித்துச் செல்லும் தன்மையும் மருமகளிடம் மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும்.

தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகள் மிகவும் நல்ல குணம் படைத்தவர். உறவினர்களை உபசரிப்பதிலும், விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குவார். அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தான அதிபதி சனி என்பதாலும், வாக்கு ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதாலும் அவர் பேசும் பேச்சுக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் காரணத்திற்காக நீங்கள் அவர்களை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் பேச்சுக்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். அடிப்படையில் மிகவும் நல்ல குணத்தினையும், நிர்வாகத் திறனையும் கொண்ட உங்கள் மருமகளின் உண்மையான குணத்தினைப் புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.

மருமகளின் நிர்வாகத் திறன் சிறப்பாக உள்ளதால் பொறுப்புகள் அத்தனையையும் அவரிடமே விட்டுவிடுங்கள். அவர் எதைச் செய்தாலும் சரியே என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிடுங்கள். பொறுப்பினைச் சுமக்கத் துவங்கும்போது தன்னால் அவருக்குப் புரியவரும். மகனின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ஒரு தாயின் நோக்கம். தினமும் காலை மாலை இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட அபிராமி அந்தாதி பாடலைப் படித்து வாருங்கள். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு தீர்க்கசுமங்கலி யோகம் கிடைப்பதுடன் அம்பாளின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிரந்தரமாக நிலவக் காண்பீர்கள். கவலை வேண்டாம்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.

என் மகனின் திருமண வாழ்வு நல்லபடியாக அமையாமல் விவாகரத்து ஆகிவிட்டது. எனது மனைவியும் யாரும் எதிர்பாராத தருணத்தில் மரணம் அடைந்து விட்டார். தற்போது நானும் என் மகனும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். மகனின் மறுமண வாழ்வு நல்லபடியாக அமையுமா? அவன் என்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருகிறான். இருவரும் மன உளைச்சலில் தவிக்கிறோம். நல்லதொரு வழி சொல்லுங்கள். - சந்திரசேகரன், திருவள்ளூர்.

அப்பாவும், பிள்ளையும் ஏதோ ஒரு வகையில் தாரத்தினை இழந்து தவித்து வருகிறீர்கள். வீட்டினில் விளக்கேற்ற ஒரு மஹாலட்சுமி இல்லாத நிலையில் மன உளைச்சலால் அவதிப்படுகிறீர்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குருவுடன் நீசம் பெற்ற சுக்கிரனும், சனியும் இணைந்து மண வாழ்வினில் சிரமத்தினைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.

அதிலும் நீங்கள் அவருக்குத் திருமணம் செய்து வைத்த காலம் சுக்கிர தசையில் சனி புக்தியின் காலமாக அமைந்திருக்கிறது. களத்ர காரகன் சுக்கிரனும் நீசம் பெற்ற நிலையில், எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவானுக்கு உரிய புக்தியில் திருமணம் செய்ததால் அந்த மணவாழ்வு முறிந்திருக்கிறது. குரு - சண்டாள யோகம் இவருடைய வாழ்வினில் மணவாழ்வினை குலைத்துள்ளது. தற்போது நடந்து வரும் சூரிய தசையில் குரு புக்தியின் காலம் என்பது நல்ல நேரமே. இவரைப் போலவே வாழ்வினை இழந்த பெண்ணாகப் பார்த்து மறுமணம் செய்து வையுங்கள்.

உங்கள் மகன் உங்களுடன் பேசுவதைக் குறைத்ததன் காரணம் உங்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தானே அன்றி வேறு காரணம் ஏதுமில்லை. உங்கள் மீது மிகவும் அன்பு கொண்டிருக்கும் அவருக்கு பெண் தேடி மறுவாழ்வினை அமைத்துத் தர வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. தீவிரமாக முயற்சித்தீர்களேயானால் வருகின்ற 02.07.2019க்குள் வீட்டிற்கு விளக்கேற்ற மருமகள் நிச்சயமாக வந்துவிடுவார். வியாழக்கிழமை தோறும் சென்னை, பாடி, திருவலிதாயம் திருத்தலத்தில் அமைந்துள்ள குருபகவான் சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருவதோடு ஆலயத்தின் வெளியே அமர்ந்துள்ள சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். தொடர்ந்து 16 வாரங்கள் விடாமல் செய்து வாருங்கள். 16வது வாரம் முடிவதற்குள் உங்கள் மகனின் மறுமண வாழ்விற்கான வாசல் திறந்துவிடும்.

எனது வாழ்வு ஆரம்பம் முதல் மிகுந்த துன்பமாகவே உள்ளது. கடந்த ஒரு வருடமாக ஜவுளி வியாபாரம் சரியாக நடக்காமல் கடன் பிரச்னைகளால் மிகுந்த மன வேதனையுடன் உள்ளேன். உள்ளத்தில் ஒருவித பயமும் நடுக்கமும் ஏற்படுகிறது. சரியாக தூக்கமும் இல்லை. எனது ஜவுளி வியாபாரம் நன்றாக நடக்கவும், எனது மனைவியின் உடல்நிலை சீரடையவும், கடன் பிரச்னை நீங்கவும் நல்லவழி காட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். - தேவராஜ், வாடிப்பட்டி.

உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தவரை, தற்போது செய்து வரும் அதே ஜவுளி வியாபாரத்தை நீங்கள் தொடரலாம். அதே நேரத்தில் வியாபார ரீதியாக இடமாற்றம் தேவை என்பதை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது. அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக கணிதத்தின் படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ராகு பகவான் சுக்கிரனின் சாரம் பெற்றும், சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் ஆனதால் தொழில் ரீதியான இடமாற்றம் என்பது தற்போது நிகழும்.

ஜீவன அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் ஜென்ம லக்னாதிபதி சூரியனுடன் இணைந்திருப்பதால் கிழக்கு திசையில் உள்ள ஊருக்கு உங்கள் வியாபாரத்தை நீங்கள் இடமாற்றம் செய்து கொள்ளலாம். ஜவுளி வியாபாரத்துடன் கவரிங் நகைகள், பெண்கள் சார்ந்த பொருட்கள் என உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இயலும். ஜவுளி வியாபாரத்தில் கூட பெண்கள் சம்பந்தப்பட்ட ஜவுளி வியாபாரம் உங்களுக்கு கைகொடுக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு கடன் பிரச்னை நீடித்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்துவிட இயலும் என்ற நம்பிக்கை உங்கள் உள்ளத்தில் பிறந்துவிடும். பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி அவரது பிரச்னைக்குத் தீர்வு என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் கிட்டும்.

அவருடைய ஜாதகம் பலம் பொருந்தியது என்பதால் எதையும் தாங்கும் சக்தி அவருக்கு உண்டு. திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சந்நதியினை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். தேவாரப் பாடல்களை உச்சரித்துக் கொண்டே சிவாலய பிரதட்சணம் செய்வது நன்மை தரும். 2020ம் ஆண்டின் பிற்பாதிக்குள் உங்கள் கடன் பிரச்னைகள் முற்றிலுமாக நீங்கிவிடும். ஈஸ்வர வழிபாட்டினை விடாமல் செய்து வருவதன் மூலம் மனமகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்