SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோளிங்கர் அக்காரக்கனியை திருக்கடிகையில் கண்டேனே!

2019-01-29@ 14:36:19

நலம் தரும் நரசிம்மர் தரிசனம் -1

தசாவதாரங்களில் தனிச் சிறப்பு கொண்டது நரசிம்ம அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற பேருண்மையை அனுபவ பூர்வமாக வெளிப்படுத்திய அவதாரம் இது. அது மட்டுமல்லாமல் தன் பக்தனாகிய பிரகலாதனின் வாக்கை சத்தியமாக்க தன்னை ஒவ்வொரு அணுவிலும் நிலைநிறுத்திக் கொண்ட மகத்தான அவதாரம்.  இத்தகைய மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர் என அழைக்கப்படும் சோளிங்கபுரம். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம்.

ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் இத்தலத்தில் அருட்பாலிக்கின்றனர். திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ஹர என்று உச்சரித்தான். உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம்.

ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன்,‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்,’’ என்று  கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.


சப்த ரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர். அவர்களிடமிருந்து முனிவர்களைக் காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களைக் கொல்ல ஆணையிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும், ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரியமலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி யோக நரசிம்மரையும், யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த நரஹரியை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்துள்ளனர். திருமங்கையாழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர். இந்த புண்ணிய மலை மீது ஏறி வழிபட முடியாதவர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனதால் சிந்தித்தாலே போதும், மோட்சம் சித்திக்கும் என்று அருளியுள்ளார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் சோளிங்கர் என அழைக்கப்பட்டாலும், இதன் அருகில் 3 கி.மீ. தெற்கில் கொண்டபாளையம் எனும் சிறு கிராமத்தில்தான் பெரிய மலையும், சிறிய மலையும் உள்ளன. பெரிய மலைக்கோயிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறியமலை உள்ளது. இக்கோயிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.  

பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழை வாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன. மலையின் நுழைவாயில் 5 நிலைகளும் 7 கலசங்களும் கொண்ட ராஜகோபுரத்துடனும், நான்குகால் மண்டபத்துடனும் திகழ்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி அமர்ந்த அமிர்தபலவல்லித் தாயாரின் தரிசனம் கிட்டுகிறது. இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு. மேல் இரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, அபய வரத கரங்களும் காண்போரின் பயம் நீக்கி ஆறுதல் அளிக்கின்றன. இத் தலத்தில் நம் கோரிக்கையை தாயாரிடம் கூறினால் தாயார் அதை நரசிம்மமூர்த்தியிடம் பரிந்துரைப்பாராம். நரசிம்மர் அனுமனிடம் அதை நிறைவேற்றும்படி ஆணையிடுவாராம்.

நரசிம்ம மூர்த்தியின் கருவறை விமானம் ஹேமகோடி விமானம் என்று அழைக்கப்படுகிறது. யோக நரசிம்மர் சிம்ம முகம் கொண்டு, கிழக்கு நோக்கி, யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சாளக்ராமங்களால் ஆன மாலையை அணிந்துள்ளார். யோக பீடத்தில் திருமாலின் தசாவதார காட்சியை தரிசிக்கிறோம். இந்த மூலவருடன், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட மறையாய் விரிந்த விளக்கு, மிக்கான், புக்கான் எனப்படும் உற்சவ மூர்த்திகளும், ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் போன்ற மூர்த்திகளும், பெருமாளின் எதிர்ப்புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், ராமானுஜர், சப்தரிஷிகள், கருடன் போன்றோரும் தரிசனம் தருகின்றனர்.


வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியன சேர்த்து பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து, பிறகு அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருடனுக்கு எதிரில் உள்ள சாளரத்திலிருந்து பார்த்தால் சின்னமலையை தரிசனம் செய்யலாம். சிறியமலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சநேயரின் திருக்கண்கள் நேராக பெரியமலையில் அருளும் நரசிம்மப் பெருமானின் திருவடிகளை நோக்கியபடி உள்ளன என்கிறார்கள்
சான்றோர்கள்.

நரசிம்மரையும், தாயாரையும் வணங்கிய பிறகு, கீழிறங்கி சின்னமலையில் அருளும் அனுமனை தரிசிக்கலாம். படிகள் ஏறி, உச்சியிலுள்ள அனுமன் சந்நதியை அடைகிறோம். வாயுகுமாரன் சாந்த வடிவினனாய், யோக நிலையில் நரசிம்மரை நினைத்து தவம் புரியும் திருக்கோலத்தின் அழகு நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. ஒரு சிறு குழந்தை குந்தியிட்டு அமர்ந்துள்ளது போல் தோன்றுகிறார் அனுமன். நான்கு திருக்கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். ஒரு கரத்தால் ஜபமாலையைப் பற்றியபடி, ஜபம் செய்யும் பாவனையில் தரிசனமளிக்கிறார். அருகிலேயே உற்சவ அனுமன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேகம் கண்டருள்கிறார். குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார்.

அடுத்து ராமர் சந்நதி. இம்மலையில் சீதையுடன் தங்கிய ராமர் நீராடிய குளம், ராம தீர்த்தம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அனுமன் தன் சக்கரத்தை அதில் நீராட்டியதால் சக்கர தீர்த்தம் என்றும், அனுமத் தீர்த்தம் என்றும்கூட பெயர்கள் உண்டு. நீர் நிறைந்து ததும்பும் இக்குளத்தில் துள்ளியோடிடும் மீன்கள் நிறைய காணப்படுகின்றன. உடல் நலம் சரியில்லாதவர்கள், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி படிகளில் படுத்துக் கொண்டு அனுமனை நினைத்து வரம் கேட்பதைக் காண முடிகிறது. அதையடுத்து ராமபிரானின் குல ஆராதனை மூர்த்தமாகிய ரங்கநாதர் மூலவராகவும், உற்சவராகவும் காட்சியளிக்கிறார்.

மலையிலிருந்து கீழிறங்கி ஊருக்குள் சென்றால், அங்கே பக்தோசிதஸ்வாமி என்ற நரசிம்மரை தரிசிக்கலாம். ஊரின் நடுவே நீள் சதுர வடிவில் எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். ராஜ கோபுரத்தைத் தாண்டி ரங்க மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பெருமாளின் சந்நதியை அடையலாம். இருபுறங்களிலும் ஜய, விஜயர்கள் காவல் காக்க உபய நாச்சிமார்களுடன் பெருமாள் அருள்கிறார். அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு.

வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும், மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப்பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும், பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். காஞ்சிபுரம் வரதராஜர் கருடசேவையின்போது ஓரிரு நிமிடங்கள் குடையால் வரதரை மறைப்பர்.

அவ்வேளையில் சோளிங்கர் தொட்டாச்சார்யாருக்கு தரிசனமளிக்க வரதன் சென்று வருவதாக ஐதீகம். அச்சேவை  ‘தொட்டாச்சார்யார் சேவை என்றே அழைத்து வணங்கப்படுகிறது. கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் அருள்கின்றனர். ஆண்டு முழுதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் கொடியேற்றத்திற்கும், கொடியிறக்கத்திற்கும் ஊரில் உள்ள உற்சவர் மலைக்கோயிலுக்கு எழுந்தருள்வது கண்கொள்ளாக் காட்சி.

அதேபோல் உற்சவத்தின் ஒன்பது நாட்களிலும் இரு வேளையும், சக்கரத்தாழ்வார் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் வலம் வந்து பின் மலை ஏறிச் செல்வது அபூர்வமான நிகழ்ச்சி. சித்ரா பௌர்ணமி அன்று உற்சவர் தக்கான்குளம் எனும் பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார். அங்கு ‘எட்டி அப்பம்’ எனும் விசேஷமான நிவேதனம் உற்சவருக்கு படைக்கப்படுகிறது. ஒரு சமயம் தொட்டாச்சார்யார் என்பவர் இவ்வழியாக வந்தபோது பல்லக்கு தூக்கிகள் பெரிதும் பசி, தாகத்தால் வருந்தினார்கள். உடனே ஆச்சார்யார், அங்கு வளர்ந்திருந்த எட்டிமரத்தைத் தன் கைகளால் தொட்டு அதில் பழுத்துள்ள கனிகளை உண்ணச் சொன்னாராம்.

அந்த நச்சுப் பழம் நரசிம்மனின் திருவருளாலும், ஆச்சார்யன் அன்பாலும் அமுதமாகத் தித்தித்ததாம். அச்சம்பவத்தை நினைவு கூறும் வண்ணம் எட்டி மண்டபத்தில் அப்பத்தை நிவேதிக்கிறார்கள். இதுவே எட்டியப்பம். சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்