SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான வாழ்வருள்வாள் சிவனம்மாள்

2019-01-24@ 14:52:41

நம்ம ஊரு சாமிகள்  - அல்லிக்குண்டம், உசிலம்பட்டி, மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரில் தான் உள்ளது சிவனம்மாள் கோயில். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி 1623 முதல் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவரது காலத்தில் மதுரைக்கு மேற்கேயுள்ள உசிலம்பட்டி பகுதியில் எட்டு பகுதிகளை பிரித்து அதற்கு உட்பட்ட 24 உபகிராமங்களை நிர்வகிக்கவும், அக்கிராம குடிமக்களிடம் வரி வசூல் செய்து மன்னருக்கு கப்பம் கட்டவும் எட்டுநாட்டிற்கு எட்டு பிரமுகர்களை நியமனம் செய்து இருந்தார். அவர்களே அந்த பகுதிகளில் ஜமீனாக வலம் வந்தனர். அந்த வகையில் வந்த கண்டமனூர் ஜமீன்தாருக்கு பாதுகாவலனாக இருந்தவர் நல்லத்தேவன். இவரது தாய்வழி உறவினர், அதாவது பெரியம்மா மகன் நல்லுத்தேவன்பட்டி யைச் சேர்ந்த வெள்ளப்பின்னத்தேவன். இவர் ஒரு சேவலை வளர்த்து வந்தார். தனது குழந்தையைபோல செல்லமாக வளர்த்தார்.

நல்லுத்தேவன் பட்டியை மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் சேவல் சண்டையில் இவரது சேவல் தான் வெற்றியை குவித்து வந்தது. ஒருமுறை பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனான படிவு என்பவரின் சேவலோடு சண்டை போட்டதிலும் வெள்ளப்பின்னத் தேவரின் சேவலே வெற்றி வாகை சூடியது. படிவு என்பவர் வெள்ளப்பின்னத் தேவரின் மனைவியின் உறவினர். செல்வந்தரான அவர், தனது சேவல், வெள்ளப்பின்னத்தேவன் சேவலுடன் போட்டியிட்டு தோற்றுவிட்டதால் எப்படியாவது வெள்ளப்பின்னத்தேவன் சேவலை கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் வெள்ளப்பின்னத்தேவரின் வீட்டிற்கு நலம் விசாரிப்பது போல படிவு சென்றார். அப்போது வெள்ளப் பின்னத்தேவர் வீட்டில் இல்லை. அவரது  மனைவியிடம் குடிக்கத்தண்ணீர் கேட்டுள்ளார்.

குடிக்கத் தண்ணீர் கொண்டுவர அவர் வீட்டிற்குள் சென்றபோது, வீட்டு பின்புறம் கட்டிப்போட்டிருந்த சேவலின் பின்புறம் விஷம் தேய்த்த கத்தியை குத்திவைத்து விட்டு சென்றுவிட்டார். இதனால் சேவல் சிறிது நேரத்தில் இறந்து போனது. வெளியில் சென்ற வெள்ளப்பின்னத்தேவர் வீட்டிற்குள் வந்ததும் சேவல் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுது புலம்பினார். வீட்டிற்கு யார் வந்து சென்றது என்று, மனைவியிடம் கேட்டபோது படிவு தான் வந்து சென்றார் என்ற விபரத்தை கூறினார். தனது சேவலை படிவுதான் கொன்று விட்டான் என்பதனை அறிந்து கொண்டார் . வசதி படைத்த ஆள்பலம் கொண்ட செல்வந்தன் படிவு, அவனை நேரில் சண்டையிடுவது அவ்வளவு சுலபமில்லை. என்பதை அறிந்த அவர், கண்டமனூர் ஜமீனின் பாதுகாவலனான தம்பி நல்லதேவன் உதவியை நாடினார். அப்போது நல்லதேவன், அவனை சிரச்சேதம் செய்யாமல் நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது எனக்கூறினான். இருவரும் படிவை கொல்ல திட்டமிட்டனர்.
‘‘வரும் ஆடி18 பெருக்கு, விதைப்பு அன்னைக்கு அவன் கதையை முடிச்சிட வேண்டியது தான்’’ என எண்ணினர்.

ஆடி18ம் வந்தது, அன்று விவசாய கூலி ஆட்களுடன் ஏழு ஜோடி, உழவு மாடுகள் உழுக தங்கமரக்காலில் விதைகளை வைத்து விதைக்கத் தொடங்கினான் படிவு. அந்த நேரத்தில் நல்லதேவன் வீச்சு அரிவாளால் படிவின் தலையை துண்டித்து தனது குதிரையில் விரைந்தான். படிவை கொன்றதற்கு நல்லதேவனுக்கு நல்லுத்தேவன்பட்டியில் ஏழுபுளியமரத்தில் ஒன்றும், ஏழுதார் நிலத்தில் ஒன்றும், வெள்ளைப்பின்னத்தேவர் எழுதிவைத்தார். இது முடிந்த சில நாட்களில் நல்லதேவனின் மற்றொரு பெரியம்மா மகன் அல்லிகுண்டத்தைச் சேர்ந்த இருளப்பத்தேவனுக்கு மீண்டும் ஒரு கொலையை செய்தார் நல்லதேவன்.  
அல்லிகுண்டம் கிராமத்தில் மண்டலன் என்பவன் ஊர் தலைவனாக இருந்தான். ஒருநாள் சந்தி தெருவில் நின்று கொண்டிருந்தபோது மூன்று பெண்கள் மண்பானையில் தண்ணீர் எடுத்து சென்றனர். அந்த பெண்களை கேலி செய்யும் பொருட்டு பானைகள் மீது சிறிய கல் ஒன்று எறிந்து நீரை கொட்டி கவிழ்த்தான் மண்டலன். எதிர்த்து கேள்வி கேட்ட பெண்களை தவறான நோக்கத்தோடு நெருங்கினான்.

அப்போது அந்த பெண்களின் தந்தை இருளப்பத்தேவன் அங்கு வந்தான். வந்ததும் தன்னை நிதானமாக்கி கொண்டான் மண்டலன். இருளப்பதேவன் தனது வீட்டு பெண்களை ‘‘தண்ணி எடுத்தது போது வீடு போய் சேருங்க, ஆத்தாளயும், சித்தாத்தாளயும் வந்து தண்ணி எடுக்கச் சொல்லுங்க ‘‘என்று கூறி அனுப்பி வைத்தான். அப்போது இனி உங்க வீட்டு பொண்ணுங்கள, நான் கேலி எதுவும் செய்யாம இருக்கணுமுன்னா, நான் எண்ணைத்தேய்த்து குளிக்கும் நாளெல்லாம் நல்ல விடக்கோழி ஒன்று உன் வீட்டுல இருந்து வரணும் என்று கூறினான். அதற்கு இருளப்பத்தேவன் ஒத்துக்கொண்டான். அதன் படி 3 வாரம் ஞாயிற்றுகிழமை தோறும் விடக்கோழியை கொடுத்து வந்தான் இருளப்பத்தேவன். இதற்கு முடிவு கட்ட வேண்டும். மண்டலன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று எண்ணிய இருளப்பத்தேவன் தனது சித்திமகன், கண்டமனூர் ஜமீனின் காவலனான நல்லதேவனை நாடினான்.

அவனிடம் நடந்ததை சொல்லி யாரும் கேட்க நாதியில்லாமல் எனது குடும்பம் உள்ளது எனக்கூறினான். மண்டலன் எப்போது ஆள் கூட்டமில்லாமல் தனிமையில் இருப்பான் என்று கேட்டான் நல்லதேவன். ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுகிழமையும் எண்ணைத்தேய்த்துக்குளித்து தனது கொண்டையை உலர வைப்பான், அப்போது நான் விடக்கோழி ஒன்று கொடுக்க வேண்டும் என்று கூறினான் இருளப்பத்தேவன். நான் அடுத்த வாரம் வருகிறேன் என்று கூறி இருளப்பத்தேவனை அனுப்பி வைத்தான் நல்லதேவன். அந்த நாள் வந்தது. சொன்னபடி நல்லதேவன் அல்லிகுண்டம் கிராமத்திற்கு வந்து அங்குள்ள அவரைப்பந்தலில் பதுங்கியிருந்தான். எண்ணைத்தேய்த்து குளித்துவிட்டு அவரைப்பந்தல் அருகே வந்து தலை முடியை உலரவைக்க வந்தான் மண்டலன். அந்த நேரம் நல்லதேவன் தனது கையில் இருந்த வீச்சு அரிவாளால் மண்டலன் தலையைத்துண்டித்தான். பின்னர் தனது குதிரையில் விரைந்தான்.

இப்படி தனது அண்ணன் மார்கள் குடும்பத்துக்காக பகைவர்களை பழி தீர்த்தான். இதனால் நல்லதேவனை தீர்த்துக்கட்ட இரண்டு பேரின் பங்காளிகளும் தருணம் பார்த்திருந்தனர். இந்நிலையில் வீரனாகவும், துடிப்பு மிக்க இளைஞனாகவும் விளங்கினான் நல்லதேவன். இதனால் வரிவசூல் பணத்தை மதுரைமன்னர் திருமலைநாயக்கருக்கு மாதாமாதம் குதிரையில் சென்று பணத்தை கட்டிவர கண்டமனூரு ஜமீன்,  நல்லதேவனையே நியமித்திருந்தார். மதுரைக்கு கண்டமனூர், மயிலாடும்பாறை, வழியாக மல்லப்புரம் மலைப்பகுதியில் இறங்கி திருமாணிக்கம், தும்மக்குண்டு, உரப்பனூர், நாகமலைப்புதுக்கோட்டை கீழக்குயில்குடி வழியாக திருமலைநாயக்கர் அரண்மனைக்கு சென்று மன்னரிடம் வரிப்பணத்தை ஒவ்வொரு மாதமும் நல்லதேவன் செலுத்திவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் ஒருநாள் பணத்தை செலுத்திவிட்டு வரும்போது, உரப்பனூரில் அழகு பதுமையாக வயல்வெளியோரத்தில் சிவனம்மாள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது அழகைக்கண்டு பிரமித்துப்போனான் நல்லதேவன். ஒவ்வொரு மாதமும் குதிரையில் வரும்போது காத்திருந்து சிவனம்மாளை சந்தித்து பேசலானான். மிகவும் பிடித்து போய் விட்டதால் நல்லதேவன் சிவனம்மாள் பெற்றோரிடம் பெண் கேட்டான்.  ஒரே இனத்தைச் சேர்ந்தவன் நல்லதேவன் இருந்தாலும் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஒருநாள் மன்னரிடம் வரியை செலுத்திவிட்டு வரும்போது உரப்பனூரில் வயல்பகுதியில் இருந்த சிவனம்மாளை குதிரையில் தூக்கிகொண்டு கண்டமனூர் சென்று விட்டான். இத்தகவலறிந்த உரப்பனூரிலிருந்து சிவனம்மாள் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் திரண்டு அல்லிகுண்டம் இருளப்பத்தேவனிடம் வந்தனர். உன் தம்பி, நல்லதேவன் சிவனம்மாளை தூக்கி சென்று விட்டான். அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று பஞ்சாயத்து வைத்தனர். அப்போது இருளப்பத்தேவன் மற்றும் குடும்பத்தினர்கள் சிவனம்மாளை கண்கலங்காமல் காப்பாத்துவான் நீங்க கவலைப்படவேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்