SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில் சிறக்கும்!

2019-01-23@ 15:53:04

இரு மகன்களில் மூத்தவன் பணி நிமித்தமாக வெளியூரில் வசிக்கிறான். இளையவன் உள்ளூரில் இருந்தாலும் தனிக்குடித்தனம் செய்கிறான். மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பேரன் பேத்திகளை கூட பார்க்க அனுமதிப்பதில்லை. சிறிய மருமகளின் வசவுகளைக் காது கொடுத்து கேட்க முடியாமல் நானும் என் மனைவியும் தனியாக வீடு கட்டி வந்துவிட்டோம். என் மருமகளின் குணம் மாறுமா? திருப்பூர் வாசகர்.

தற்காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வரும் பிரச்னையே உங்கள் குடும்பத்திலும் எதிரொலித்திருக்கிறது. இளைய தலைமுறையினரின் குணத்தை உணர்ந்து பல பெற்றோர்கள் திருமணம் ஆகும்போதே அவர்களை தனிக்குடித்தனம் வைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் நிச்சயதார்த்தம் ஆன உடனேயே தனியாக வீடு பார்த்து பால் காய்ச்சி தயாராக வைத்துவிடுகிறார்கள். திருமணத்தின்போது பெண்ணிற்குத் தரப்படும் சீர்வரிசை கூட நேரடியாக தனிக்குடித்தனம் செய்யும் வீட்டிற்குப் போய் இறங்கிவிடுகிறது. மருமகளின் ஜாதக விபரம் நீங்கள் அனுப்பவில்லை. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கும், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் உங்கள் இளைய மகனுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. என்றாலும் தற்போது அவருக்கு ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் சிறிது காலம் அமைதியாக இருந்து வாருங்கள். மகனின் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதே உங்கள் பிரார்த்தனையாக அமையட்டும். கீழ்க்கண்ட அபிராமிஅந்தாதியை தினமும் சொல்லி வணங்க உங்கள் மனக்கவலை தீரும்.

“அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமஞ்சொல்      
மறிந்தே விழும் நரகுக்குற வாய மனிதரையே,”


முப்பத்தாறு வயதாகும் நான் கணவரைப் பிரிந்து மளிகைக் கடை நடத்தி வாழ்ந்து வருகிறேன். பத்தாம் வகுப்பில் மிகச்சிறப்பான மதிப்பெண் எடுத்த என் மகள் ‘சி’ குரூப் தேர்ந்தெடுத்து படித்து வருகிறாள். அவளின் எதிர்காலம் குறித்து மிகவும் பயமாக உள்ளது. என் மகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், என் தொழில் சிறக்கவும் வழி கூறுங்கள். அலமேலு, கடலூர்.

16 வயதுப் பெண்ணை வைத்திருக்கும் எல்லா பெற்றோருக்கும் வரும் அதே பயம்தான் உங்களுக்கும் வந்திருக்கிறது என்றாலும், கணவரைப் பிரிந்து வாழும் உங்களுக்கு சற்று அதிகமாக உள்ளது. சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி தொடங்குகிறது. இந்த வருடத்தில் அவருடைய மனநிலை ஸ்திரமாக இருக்காது. என்றாலும் பொதுவாக உங்கள் மகளின் ஜாதகம் வலிமை வாய்ந்ததே ஆகும். கல்வி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் அவர் உயர்கல்வி பயில துணை செய்வார்.

லக்னாதிபதி செவ்வாயுடன் ஆட்சி பெற்ற சூரியன் இணைந்து அவரை மிகுந்த மனவலிமை கொண்டவராக உருவாக்குவார். எப்பொழுதும் உங்கள் மகளை பாராட்டிப் பேசிக் கொண்டே இருங்கள். அவர் மனம் கோணாதவாறு பேசி வாருங்கள். அன்றாடம் அவர் சந்திக்கும் சம்பவங்களை இரவு நேரத்தில் தனிமையில் கேட்டுத் தெரிந்துகொண்டு உரிய ஆலோசனைகளை பக்குவமாகச் சொல்லுங்கள். 24வது வயதில் அவரது திருமணம் நடந்தால் போதும். 02.02.2020 முதல் மனக்குழப்பம் நீங்கி தெளிவாக நடந்துகொள்வார். அருகில் உள்ள மாரியம்மன் கோapலில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வணங்கி வர உங்கள் குறை அகலும்.

“கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தமுண்டோ
 முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ”


என் மகளின் ஜாதகத்தில் 2, 8ல் ராகு  கேது உள்ளதால் திருமணத்தடை ஏற்பட்டு வருகிறது. பல பரிகாரங்கள் செய்தும் தொடர்ந்து தடை உண்டாகிறது. குலதெய்வ பூஜையும் செய்தாகிவிட்டது. அரசுப்பணியில் உள்ள அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கருப்பசாமி, மதுரை.

என் மறைவிற்குப் பிறகுதான் அவரது திருமணம் நடக்குமா என்று உங்கள் கடிதத்தில் மன வருத்தத்துடன் எழுதியுள்ளீர்கள். இதுபோன்ற எண்ணம் உண்டாவது மிகவும் தவறு. இறைவன் மீது முழுநம்பிக்கையை வைத்து வரன் தேடுங்கள். சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. அதனால்தான் அரசுப் பணியில் அமர்ந்திருக்கிறார். தற்போது கீழ்நிலையில் பணியாற்றி வந்தாலும் தனது சொந்த முயற்சியின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக தனது துறையில் உச்சபட்ச பதவியை அலங்கரிப்பார். அவரது ஜாதக பலத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவர் பிறந்த இடத்திலிருந்து கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார்.

ராகு கேதுவிற்கு என்று தனியாக நீங்கள் பரிகாரம் ஏதும் செய்யத் தேவையில்லை. இந்த நட்சத்திரங்கள் மட்டும்தான் பொருந்தும், மற்றவை பொருந்தாது என்ற எண்ணத்தோடு மாப்பிள்ளை தேடாதீர்கள். நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதைவிட ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்பினைக் கொண்டு பொருத்தம் பார்க்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது ஜோதிடரின் பணி. அந்தப் பணியை நீங்கள் செய்யாதீர்கள். மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதி சொக்கநாதர் ஆலயத்திற்கு தொடர்ந்து 17 வாரங்களுக்கு புதன்கிழமை நாளில் சென்று வில்வமாலை சாற்றி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். வெகுவிரைவில் அரசுப்பணியில் உள்ள வரனாகவே அமைந்துவிடும்.

பிறந்தது முதலே என் மகளது செவிகளிரண்டின் கேட்கும் திறன்  மிகவும் குறைவு. காதில் கருவியுடன் எட்டாம் வகுப்பில் பயில்கிறாள். ஏடு, ஜாதகம் என ஆராய்ந்ததில் இது நிலையான குறைபாடல்ல என உறுதி செய்தனர். அவளின் எதிர்கால நிலை என்ன? பரிகாரம் என்ன? கல்வி, வாழ்க்கை இரண்டின் நிலை அறிந்து எங்கள் வயிற்றில் பாலை வாருங்கள். முருகதாசன், மங்களூர், கர்நாடகா.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடக்கிறது. பௌர்ணமியில் பிறந்தவர் அரச யோகத்துடன் வாழ்வார் என்ற ஜோதிட விதியின்படி உங்கள் மகள் என்றென்றும் செல்வத்திற்குக் குறையின்றி சிறப்புடன் வாழ்வார்.  அதற்கேற்றார்போல் அவருடைய ஜாதகத்தில் தன காரகன் சுக்கிரனும் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கிறார். ஜென்ம லக்னாதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிந்தனைத் திறன் மிகவும் அதிகம். தனது உத்யோகத்தைக் கூட சிந்திக்கும் திறனைக் கொண்டதாக அமைத்துக் கொள்வார். அதோடு கலைத்துறையிலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். குறிப்பாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள்.

எதிர்காலத்தில் டிசைனர் ஆக அவர் பணிபுரிய ஓவியக்கலை துணை செய்யும். அவருடைய ஜாதகத்தில் பல சாதகமான அம்சங்கள் நிறைந்திருப்பது போல, ஒரு சில குறைகளும் உள்ளன. பலம் பொருந்திய கிரஹங்கள் ஆன குருவும், சனியும் வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார்கள். செவித்திறனைச் சொல்லும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தாலும் எட்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்திருப்பதால் அவரது பிரச்னை தற்காலிகமானது அல்ல. செயற்கைக் கருவியின் துணை அவருக்கு என்றென்றும் தேவைப்படும். என்றாலும் அது ஒரு பெரிய குறையாக வாழ்வினில் பாதிப்பினை உண்டாக்காது. சுப்ரமணியர் வழிபாடு என்பது அவரது வாழ்விற்கு நிலையான சுகத்தினைத் தரும்.

பத்து வயதில் இருந்து சைக்கிள் கடையில் வேலை பார்த்து வரும் எனக்கு தற்போது பிள்ளைகளால் பிரச்னை உண்டாகிறது. இதனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. ஜோதிடர் என் ஜாதகத்தில் ஒரு பெண்ணின் சாபம் உள்ளது என்று சொல்கிறார். தொழிலில் போதிய வருமானம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மனம் வேதனைப்படுகிறது. வழி காட்டுங்கள். மோகன்ராஜ், வேலூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் மிகவும் வலிமையானது. சென்ட்டிமென்ட் உணர்வுகளை விடுத்து கால சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னையை மனைவியின் போக்கிற்கே விட்டு விடுங்கள். உறவில் விரிசல் உண்டாவதை விட தனிக்குடித்தனம் செல்வது நல்லதே. உங்கள் ஜாதகத்தில் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் உச்சம் பெற்றதோடு மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரனோடு இணைந்து ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பது வலிமையான நிலையே. பிள்ளைகளால் உங்களுக்கு பிரச்னை உண்டாகிறது என்பதும் பெண்சாபம் உள்ளது என்பதும் தவறான கருத்து.

தற்காலத்தில் உள்ள பிள்ளைகளின் எண்ணத்தினையும், அவர்களது மன நிலையையும் புரிந்துகொள்ளுங்கள். குடும்பக் கவலையை விடுத்து தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்  குருவின் இணைவு உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த வருட இறுதியில் தொழில்முறையில் மிகப்பெரிய திருப்புமுனையைக் காண உள்ளீர்கள். இந்த 2019ம் வருடம் முழுவதும் செவ்வாய் தோறும் அதிகாலையில் ரத்தினகிரி முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். முருகனின் திருவருளை அனுபவித்து உணர்வீர்கள்.

14 வயதிலேயே அதிக வயது வித்தியாசத்தில் திருமணம், காது கேளாத கணவனின் உத்யோக ஸ்திரமின்மை, சந்தேக புத்தி என்று பல கஷ்டங்களை அனுபவிக்கும் நான் எனது மூத்த மகனை லோன் வாங்கி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி இருக்கிறேன். எதிர்பார்த்த உத்யோகம் இல்லாத நிலையில் அங்கிருந்து திரும்பி வந்துவிடுவதாக பயமுறுத்துகிறான். பிஎஸ்சி படிக்கும் இளைய மகனுக்கு அரசு உத்யோகம் கிடைக்குமா? எங்கள் பிரச்னை தீர உரிய வழி காட்டுங்கள். அகிலாண்டேசுவரி, தஞ்சாவூர்.

பெயருக்கு ஏற்ற சிறப்பான வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கம் உங்கள் கடிதத்தில் தெரிகிறது. துள்ளித் திரிய வேண்டிய வயதில் திருமண பந்தத்திற்குள் நுழைந்து மிகுந்த சிரமத்திற்கு இடையே பிள்ளைகளை வளர்த்திருக்கிறீர்கள். ராணுவத்தில் வேலை கிடைக்காமல் வெளிநாட்டு வேலைக்குச் சென்றிருக்கும் பிள்ளையைப் பற்றிய கவலை தற்போது உங்களை வாட்டி வதைக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரை வருகின்ற 29.05.2020 வரை அந்த ஊரிலேயே தாக்குப் பிடித்து பணி செய்யச் சொல்லுங்கள்.

அதன் பின்பு நல்ல நேரம் என்பது துவங்குவதால் சொந்த ஊருக்குத் திரும்ப வந்து சுயதொழில் செய்து முன்னேற இயலும். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் இளைய மகனுக்கு அந்நிய தேசப் பணியே நிரந்தரமானதாக அமையும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஆறாம் பாவகமும், எட்டாம் பாவகமும் வலிமையாக இருப்பதால் இத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறீர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு காலமாக 2020ம் ஆண்டின் பிற்பாதி அமையும். அதுவரை சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. பிரதி செவ்வாய் தோறும் வாராஹி வழிபாடு செய்து வர பிரச்னைகள் தீரும்.

2017ம் ஆண்டு பி.இ. முடித்த கையோடு “அக்சென்ச்சர்”ல் வேலை கிடைத்தது. பெங்களூரில் பயிற்சி முடித்து வேலை வடமாநிலத்தில் அமைந்தது. நான் பெண்ணாக இருப்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை. ஓராண்டாக வீட்டிலேயே இருந்து அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன். என் ஜாதகத்தைப் பார்த்து நல்ல விஷயமாக கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஆதித்யா, திருச்சி.

ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான் என்று வெற்றியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில் பெண்ணாக இருப்பதால் வட மாநிலத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்ற உங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். மத்திய அரசுப் பணி வட மாநிலத்தில் கிடைத்தால் வேண்டாம் என்று விட்டுவிடுவீர்களா..? உங்கள் பெயரிலேயே பெண்மையின் மென்மை என்பது இல்லாமல் ஆளுமைத் திறன் அல்லவா எதிரொலிக்கிறது! உங்கள் பெயருக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளுங்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது.

ஜீவன ஸ்தான அதிபதி சூரியன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற குரு மற்றும் புதனுடன் இணைந்து அமர்ந்திருப்பது நிரந்தர உத்யோகத்தை உண்டாக்கித் தரும். வீட்டில் வெறுமனே அமர்ந்திருக்காமல் மேற்கொண்டு உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளப் பாருங்கள். இயற்கையாகவே அதிகத் திறமையைக் கொண்ட உங்களுக்கு சம்பாத்யம் என்பது மிகவும் நன்றாக உள்ளது. திருமணத்திற்கு அவசரப்படாமல் முதலில் ஒரு நிரந்தர உத்யோகத்தில் அமருங்கள். தொலைதூர உத்யோகமாக அமைந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் நடைபெறும் உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு அம்பிகையை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்