SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அற்புதமான வாழ்வு காத்திருக்கிறது!

2019-01-23@ 15:32:17

பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் என் மனைவி, மகளுடன் மீண்டும் ஒன்று சேர இயலுமா? விவாகரத்து கோராத எனக்கு மறுமணம் புரிய ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? தங்களது தக்க பதிலை எதிர்பார்க்கிறேன். - திருநாவுக்கரசு, தேவகோட்டை.

பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் மனைவி, மகளுடன் ஒன்று சேர இயலுமா என்ற கேள்வியுடன் மறுமணம் செய்யும் அமைப்பு உள்ளதா என்று நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி உங்களின் தெளிவற்ற மன நிலையைக் காட்டுகிறது. மனைவி, மகளின் பிரிவிற்கு காரணம் என்ன என்பதையும், தவறு யார் மீது உள்ளது என்பதையும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

சதய நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தில் கேதுவின் சாரம் பெற்ற புதனுடன் கேதுவே இணைந்திருப்பதால் இதுபோன்ற குழப்பம் உண்டாகியிருக்கிறது. மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நான்கிலும், பிள்ளைகளைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் கூடிய குருவும் அமர்ந்து நல்ல மனைவி, மகளைத் தந்திருக்கிறார்கள். அற்புதமான குடும்பம் அமைந்திருந்தும் அதனை அனுபவிக்கும் அம்சம் இல்லாமல் போயிருக்கிறது.

மூன்றாம் இடத்தில் இணைந்திருக்கும் சூரியன், செவ்வாய், சனி ஆகியோர் விபரீதமான எண்ணங்களை உங்களுக்குள் விதைத்ததோடு கடுமையான முன் கோபத்தினையும் தந்திருக்கிறார்கள். அதன் விளைவாக மனைவி, மக்களைப் பிரிந்து வாழ்கிறீர்கள். என்றாலும் தற்போது நடந்து வருகின்ற புதன் தசையில் சுக்கிர புக்தியின் காலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

மறுமணம் பற்றிய சிந்தனையை விடுங்கள். கௌரவம் பாராது, மனைவி மற்றும் மகளைச் சந்தித்து எதிர்காலம் குறித்து மனம் விட்டு பேசுங்கள். நடந்த தவறுகளைப் பெரிதாக எண்ணாமல் நடக்கப் போவதை மட்டும் சிந்தியுங்கள். உங்கள் ஜாதகத்தில் மறுமணத்திற்கான வாய்ப்பு இல்லை. சதய நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் நீங்கள் கோபதாபங்களை விடுத்து உங்களைச் சுற்றியுள்ளோருக்கு உதாரணபுருஷராய் வாழ முயற்சியுங்கள்.

நீங்கள் மனம் வைத்தால் உங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும். தற்போது நிலவும் கிரஹங்களின் சஞ்சார நிலை குடும்பம் ஒன்று சேர துணை செய்கிறது. குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற 19.10.2019ற்குள் பிரிந்திருக்கும் உங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும். உங்கள் குடும்பத்தின் இணைவு என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். மனைவி, மகளோடு இணைந்து வாழுங்கள். அற்புதமான வாழ்வின் அர்த்தத்தை அனுபவித்து உணருங்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருப்பதையே உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

76 வயதாகும் எனக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எல்லோரையும் நன்கு படிக்க வைத்திருக்கிறேன். மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஜனவரியில் பணிநிமித்தமாக வெளியூருக்குச் சென்ற மகன் இது வரை வீடு திரும்பவில்லை. எங்கு உள்ளான் என்பதும் தெரியவில்லை. வெளியூரில் உள்ள உறவினர்கள் அவனை ஒரு பெண்ணுடன் பார்த்ததாகக் கூறுகிறார்கள். யாரோ அவனுக்கு வசியம் செய்து திருமணம் செய்திருப்பதாக அருள்வாக்கில் தெரிய வந்தது. என் மகன் வீடு திரும்புவானா? அவனுக்கு ஒரு நல்ல இடத்தில் நாங்கள் திருமணம் செய்து வைக்க முடியுமா? - பாலசுப்ரமணி, சேலம்.

நீண்ட நெடிய கடிதத்தின் மூலம் உங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்ற உங்கள் உள்ளத்தின் குமுறலை உணர முடிகிறது. என்றாலும் விதிப்பயன் என்ற ஒன்று உள்ளதே. இதுபோன்ற சோதனைகளை சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது கேது தசை நடந்து வருகிறது.

தெளிவற்ற மனநிலையில் அவர் இருப்பதை அவரது ஜாதகம் காட்டுகிறது. வருகின்ற 26.05.2019 வரை இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்குப் பின்புதான் உங்கள் மகனால் தனது வாழ்க்கை முறையை உணர்ந்துகொள்ள இயலும். அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் மூன்றில் அமர்ந்திருப்பதால் களத்திர தோஷம் என்பது உண்டாகி இருக்கிறது.

அதிலும் சந்திரன், லக்னாதிபதியாகிய சனியின் சாரம் பெற்றிருப்பதால் அவமானம் தரக்கூடிய வகையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. நீங்கள் குறி கேட்ட இடத்தில் அருள்வாக்கு வந்தது போல் இன்னும் சில காலம் காத்திருங்கள். 2019ம் வருடத்தின் பிற்பாதியில் உங்கள் மகன் பெற்றோராகிய உங்களை நாடி வருவார். மறுமணம் செய்வதற்கு அவசரப்பட வேண்டாம்.

தற்போது அவருடன் வாழ்ந்து வரும் பெண்ணைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வரை சற்று பொறுத்திருங்கள். அந்தப் பெண் நல்ல குணவதியாக இருக்கும் பட்சத்தில் அவரையே உலகறிய மறுதாலி என்ற முறைப்படி மறுமணம் செய்து வையுங்கள். உண்மையான அன்பு கொண்ட உள்ளங்களைப் பிரிப்பது என்பது பாவச் செயலாகிவிடும்.

அந்த பாவமானது ஜென்மத்திற்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். பெண் பாவம் பொல்லாதது என்பதுடன் ஒரு பெண்ணின் சாபமானது பரம்பரையை பாழாக்கிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மனதைச் சிதற விடாமல் மகன் திரும்பிவரும் வரை அமைதியாக இருங்கள்.

உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள். அவரது ஜாதகத்தைப் பொறுத்தவரை களத்திர தோஷம் என்பது இருந்தாலும் ஏழிற்கு அதிபதி சந்திரன் என்பதால் தற்போது அவருடன் வசித்து வரும் பெண் நல்ல குணவதியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. கௌரவம் மற்றும் அந்தஸ்தினைப் பாராமல் மகனின் நல்வாழ்வினையும், பரம்பரை நல்லபடியாக வளர வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். 2019ம் ஆண்டின் பிற்பாதியில் இருந்து உங்கள் மகனின் வாழ்வு நல்லபடியாக அமையும். கவலை வேண்டாம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகள் பிறந்த நாள் முதல் படபடவென்று பேசுகிறாள். எங்களுக்கு 18 வயதில் மூத்த மகன் இருக்கிறான். 2வது ஆண்குழந்தை வயிற்றிலேயே இறந்தே பிறந்தது. மூன்றாவதாக இந்த பெண் பிறந்ததால் மூலம் நட்சத்திரம் என்கிறார்கள். நாகதோஷம் உள்ளது என்றும் சொல்கிறார்கள். மனதிற்கு ஒரே சங்கடமாக உள்ளது. நன்றாகப் படிப்பாளா? அவளது எதிர்காலம் எப்படி அமையும்? - பாஸ்கரன், வேலூர் மாவட்டம்.

முதலில் மூட நம்பிக்கைகளை விடுத்து ஆண்டவன் மீதான நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாக பெண் பிறந்தால் மூலம் நட்சத்திரம் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே. பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம், மீன ராசியில் பிறந்திருக்கிறார் என்று நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்திலேயே தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே.

பிறகென்ன சந்தேகம்..? கும்ப லக்னத்தில் ராகுவின் இணைவுடன் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சனி மற்றும் கேது இணைந்திருப்பது நாகதோஷத்தினைத் தந்திருக்கிறது என்பது உண்மையென்றாலும் அதனால் அவருக்கு பெருத்த பாதிப்பு ஏதும் இல்லை. சனி தசையில் கேதுபுக்தியின் காலம் சிறு வயதிலேயே முடிந்துவிட்டது. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது இதனை கவனத்தில் கொண்டால் போதும். தற்போது 11 வயதுதான் ஆகிறது. அதற்குள் நீங்கள் அவரது மணவாழ்வினைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திருமண வயது வரும்போது அவருடைய ஜாதகத்தில் புதன் தசையின் காலமே நடந்து கொண்டிருக்கும்.

புதன் தசை என்பது அவருக்கு சிறப்பான நல்வாழ்வினை உண்டாக்கித் தரும். உங்கள் மகளை நன்றாகப் படிக்க வையுங்கள். வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் சூரியன், புதன் மற்றும் குருவின் இணைவு அவரை உயர்ந்த உத்யோகத்தில் அமரச் செய்யும். பெண்பிள்ளைதானே என்று அலட்சியமாக இருக்காமல் அவரின் திறமையைப் புரிந்து கொண்டு நன்றாகப் படிக்க வையுங்கள்.

மிகவும் திறமைசாலியான அவர் வாழ்வினில் நல்ல நிலைக்கு உயருவார். மூடநம்பிக்கைகளை விடுத்து மகளின் நல்வாழ்வினில் அக்கறை கொண்டு செயல்படுங்கள். அம்பாளின் அருளினைப் பெற்றிருக்கும் உங்கள் மகளை எந்த தோஷமும் பாதிக்காது. உங்கள் கவலை அர்த்தமற்றது என்பதையே உங்கள் மகளின் ஜாதகம் உணர்த்துகிறது.

வீட்டை இடித்து புதிதாக கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து சிறுசிறு பிரச்னைகள் ஆரம்பித்தது. காண்டிராக்டர் மாற்றம், வேலையில் ஒழுங்கின்மை, கால தாமதம், அதிகக் கூலி ஆகியவற்றால் வேலை நின்றது. தவிர்க்க முடியாத காரணத்தால் தந்தையின் ஈமக்கடனை செய்யவில்லை. தாயும் இறந்துவிட்டார். கிரகப்பிரவேசம், ஹோமம் செய்யவில்லை. ஒரு நல்ல வழி சொல்லி கஷ்டத்தைப் போக்குமாறு வேண்டுகிறேன். - சுந்தரம், பெங்களூரு.

உங்களுடைய கடிதத்தைக் காணும்போது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. என்னதான் தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலும் பெற்றவர்களுக்கான ஈமக்கடனை ஒரு மகன் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.

அதிலும் உங்கள் பெற்றோருக்கு ஒரே ஆண் வாரிசு ஆன நீங்கள் அவர்களுக்குரிய ஈமக்கடனை சரிவர செய்யவில்லை என்றால் அதற்குண்டான கெடுபலனை நிச்சயமாக அனுபவிக்க நேரிடும். நீங்கள் எத்தனை பெரிய பரிகாரம் செய்தாலும் பெற்றோருக்கு உரிய கடனைச் செய்யவில்லை என்றால் பரிகாரத்திற்கு உண்டான பலன் கண்டிப்பாகக் கிடைக்காது.

முதலில் விட்டுப்போன பெற்றோருக்கான ஈமக்கடனைச் செய்து முடியுங்கள். மைசூருக்குப் போகும் வழியில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ‘கோசிகாட்’ பகுதிக்குச் சென்று நாராயணபலி என்ற கர்மாவினைச் செய்து அதனைத் தொடர்ந்து உங்கள் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடியுங்கள்.

அதனைச் செய்து முடிக்கும் வரை உங்களுக்கான தீட்டு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த கர்மாவினைச் செய்து முடிக்காமல் ஜாதகம் பார்ப்பதால் எந்தவிதமான பலனும் உண்டாகாது. இதனைச் செய்து முடிப்பதால் பிரிந்து சென்ற மனைவி திரும்ப வரவும், மாற்றுத் திறனாளி மகனின் வாழ்வில் முன்னேற்றமும், நீங்கள் புதிதாக கட்டிய வீட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னைகள் குறையவும் காண்பீர்கள்.

கர்மா என்றாலே கட்டாயம் செய்தாக வேண்டிய கடமை என்று பொருள். கடமையைச் சரிவர செய்யவில்லை என்றால் நமது வாழ்வு பொருளற்றதாகிவிடும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு பெற்றவர்களுக்கு ஒரு மகன் செய்ய வேண்டிய கடமையைத் தவறாது செய்து முடியுங்கள். அதற்குண்டான பலனை உடனடியாகக் காண்பீர்கள்.

எனது மகனின் முதல் திருமண வாழ்வு இரண்டு மாதத்தில் முடிந்து போனது. அவமானம், வழக்கு என இரு வருடங்கள் போனபின்பு பயத்துடன் பார்த்து பார்த்து செய்து வைத்த பந்தமும் மனதைக் கொதிக்க வைக்கிறது. தெரிந்தவரே மனநிலை சரியில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில் என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் தவிக்கிறேன். 2014ல் வீடு வாங்கிய பின்பு இதுவரை நிம்மதியாக வாழவில்லை. இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளதா? மகன் வெளிநாட்டில் குடியேற முடியுமா? - மரகதவல்லி, சென்னை.


உங்கள் மகனின் ஜாதகத்தையும், உங்கள் ஜாதகத்தையும் பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்த வரை, தற்போது குடியிருக்கும் வீட்டை விற்பதால் சிரமம் குறைவது போல் தெரியவில்லை. மேலும் அவருக்கு வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்பும் இல்லை. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாயின் அமர்வும், தற்போது நடந்து வரும் செவ்வாய் தசையும் சேர்ந்து இது போன்ற சிரமத்தினைத் தந்திருக்கிறது. பூர்வ ஜென்ம பலன் என்பதை அனுபவித்தால் தான் தீரும் என்பார்கள்.

இதுபோன்ற பிரச்னைகளைத் தாங்குவதற்கான மனவலிமையைத் தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்களுடைய ஜாதக பலத்தின் படி தற்போது ஏழரைச் சனி என்பது நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஜாதகத்தில் சொந்த வீட்டில் வசிப்பதற்கான யோகம் இருப்பதால் தற்போது இருக்கும் வீட்டினை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விற்றுவிடாதீர்கள்.

வாடகை வீட்டிற்குச் செல்வதால் உங்கள் பிரச்னைகள் தீர்ந்து விடாது. உங்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி இன்னும் ஒரு வருட காலத்திற்கு பொறுமையாக இருந்து வாருங்கள். 06.12.2019ற்குப் பின் உங்கள் மகனுடைய வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண்பீர்கள். இளைய மகன் தரப்பிலிருந்தும் உதவிகள் என்பது வந்து சேரும். கவலைப்பட வேண்டாம்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்