SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே

2019-01-23@ 15:26:49

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் -33


‘‘அபிராமி என்னும் அருமருந்தே’’அபிராமி என்ற சொல்லிற்கு அடியவர்களின் உள்ளத்து உள் நின்று மகிழ்ச்சி செய்விப்பவள். அடியவர்களின் உடலாயிருந்து ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருக்கும் குணத்தை பெற்றவள். அடியவர்களின் அறிவாய் இருந்து துன்பம் நீக்கி இன்பம் அருள்பவள். அடியவர்களின் உயிராயிருந்து பெண் வடிவம் பெற்று சிவத்தோடு இரண்டறக் கலந்து முக்தியின்பத்தை சலிப்பில்லாது அளிப்பவள்.

அடியவர்களின் பொருட்டு இவ்வுலகத்தை அதிலுள்ள பொருட்களை முயற்சியின்றி, அயர்ச்சியின்றி விளையாட்டாய், மகிழ்ச்சியாய் படைத்து உலக உயிர்களை காத்து உயிர்களுக்கு எதிரான அஞ்ஞானத்தை அழித்து அருள்பவளாய் திகழ்கின்றவளுக்கு அபிராமி என்று பெயர். வடமொழியில் ‘அபிரம்யதே’ - உள்ள மகிழ்ச்சி அபிரம்யதே - மாறிக்கொண்டேயிருப்பது.

அபிரம்யதே - மகிழ்விப்பது, அபிரம்யதே - இரண்டற கலப்பது,  அபிரம்யதே - படைப்பது என்ற பொருள் தரும். வினைச் சொற்களிலிருந்து தோன்றியது ‘அபிராமி’ என்னும் பெயர்ச் சொல்.‘அபிராமி என்னும்’ என்ற வார்த்தையால் பின்னர் சொல்லக்கூடிய ‘அருமருந்தே’ என்பதை சூட்டுகிறார். அபிராமியானவள் கடவுளாகவும் அவளே பிறவி நோய்க்கு மருந்தாகவும் இருக்கிறாள்.

அதில் அபிராமி என்னும் அருமருந்தே என்று கூறுவதால் இன்பம் தருவதும், துன்பம் நீக்குவதும் முக்தியளிப்பதும், நன்மையை செய்வதுமாகிற இறைவியின் அருள் குணங்களை வணங்குகிறவர்க்கு துன்பம் ஒரு நோய், இன்பத்தை அடைய வேண்டும் என்கிற ஆசையாகிற நோய், ஆன்மாவிற்கு ஏற்படுகிற பிறவியாகிற நோய் இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு உதவுவது அபிராமியின் அருள்.

அந்த அருளை எண்ணம் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு உமையம்மையின் அருளை மருந்தாக உபசரித்தார். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு அருட்சக்தி உண்டு. அந்த வகையில் கலைமகளின் அருள் கல்வியையும், அலை மகளின் அருள் செல்வத்தையும் தருவது போல அபிராமியம்மையின் அருளையே ‘அபிராமி என்னும் அருமருந்தே’ என்று குறிப்பிடுவதன் மூலமாக தெரிவிக்கிறார்.

‘ஆசைக் கடலுள் அகப்பட்டு’ (பாடல் எண் - 32)மரணம் பிறவி இரண்டும் எய்தார். பிறவி நோய் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே (பயன்) என்ற வரிகள் மேலும் உறுதி செய்கிறது. இறைவன் வைத்தியனாக இருக்கிறான் என்பதை ‘பிஷஜோ அபியே பிஷக்’ என்கிறது வேதம். ஆனால் உமையம்மையை தைலாம்பிகை என்று அழைக்கிறது புள்ளிருக்கு வேலூரில் உள்ள சிவாலயம். தைலம் என்பது நோய்க்கு மருந்தாக திகழ்வதாகும்.
உமையம்மை மருந்தாகவே திகழ்கின்றாள். அதை மனதில் கொண்டே அபிராமி என்னும் அருமருந்தே என்றார்.

பழங்காலத்தில் பாம்புக் கடிக்கு மருந்து என்பது மந்திரமாகவே திகழ்ந்தது. ‘நஞ்சு அமுதாக்கிய அம்பிகை’ - தன்னுடைய தவத்தினால் (மந்திர ஜபத்தினால்) விஷ நோய்க்கு மருந்தாகினாள். பிணி, மூப்பு இவை இரண்டும்  இல்லாதவர்கள் தேவர்கள், இந்த அமுதாகிற மருந்தை  உண்டதனாலேயே தேவர்களாகிய ஆன்மாக்களுக்கு பிணி, மூப்பு நீங்கியது.

மேற்கண்ட மூன்றையும் கருத்தில் கொண்டே உடல், உள்ளம், அறிவு, ஆன்மா இவைகளில் உடலுக்கு பிணியும், உள்ளத்திற்கு கவலையும், அறிவிற்கு குழப்பமும், ஆன்மாவிற்கு பிறவியும் நோயாம் அதை நீக்குவது இறைவியின் அருள் சக்தியாகிற மருந்தாம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் என்று இறைவனுக்கும், அமிர்தா என்று உமையம்மைக்கும் பெயர் சொல்கிறது தல புராணம். இந்த தல புராண கருத்தின் மையத்தைக்கொண்டு திருக்கடையூரில் திகழ்கின்ற அபிராமியின் அருளை சிறப்பாக ‘அபிராமி என்னும் அருமருந்தே’ என்று அபிராமியம்மையின் அருள்வல்லமையை விளக்கிக் கூறுகின்றார்.

‘பிணியே பிணிக்கு மருந்தே’ என்ற வார்த்தையாலும், கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் என்ற பிணியை தீர்க்கும் வழிபாட்டு முறையில் எள்ளில் எமனின் உருவம் செய்து நோய் நீக்கும் வழிபாட்டு முறையானது திருக்கடையூரில் பின்பற்றப்படுவதிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக ‘அபிராமி என்னும் அருமருந்தை’ அறியலாம்.

‘‘என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே’’என்னே என்கின்ற சொல்லால் இறையின் அருளால் மறவாமல் எப்பொழுதும் ஏற்றுகின்ற அருளை உறுதி பெற அடைந்து அவர் உளத் தெளிவு பெற்றதனை எண்ணி வியக்கிறார். ‘இனி’ என்ற சொல்லால் நிகழ்காலம், கடந்த காலம் மனிதர்களுக்கு உறுதிபடத் தெரிந்தது. அஃதன்றி எதிர்காலமாவது இறைவி ஒருத்தியாலேயே அறியப்படுவதாகும். இறை அருளினால் இனி எதிர்காலத்தையும் தான் உறுதிபட அறிந்ததனை, இறை அருளை அடைந்தனை வெளிப்படுத்துகிறார்.

‘மறவாமல்’ என்கின்ற சொல்லால் உலக உயிர்கள் அனைத்துமே யாதொரு பொருளையும் முழுவதும் நினைத்து மறவாமல் பாதுகாக்கும் மனத்திறன் அற்றது என்கிறது ஆகமம். மனமானது மறத்தலும் நினைத்தலுமாகிய தொழிலை உடையது. புலன்களோடு மனம் தொடர்பு படுகிறபோது நினைத்தலையும், புலன்களோடு மனது தொடர்பு அறுக்கும்போது மறத்தலையும் இயல்பாக செய்வது மனது. ஒரு பொருளை தொடர்ந்து நினைப்பதற்கு பயிற்சி வேண்டும்.

அந்தப் பயிற்சியின் வழியாகவே ஒரு நினைவை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இதையே ‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’ - 59 என்ற வரிகளின் மூலம் மேலும் உறுதி செய்யலாம். குறிப்பாக தேவையான நினைவுகளை நினைக்கவும், தேவையற்ற நினைவுகளை மறக்கவும் இயல்பில் மனதிற்கு இயலாது.

ஆனால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் மந்திரம் ஜெபிப்பதனாலே தொடர்ந்து இறைவியை நினைப்பதையே வழிபாடாக கூறுகிறார்கள். இதையே ‘உள்ளு தொறும் களியாகி அந்தக் கரணங்கள் விம்மி கரைபுரண்டு’ - 82 என்ற வார்த்தையால் உறுதி செய்கிறார். (உள்ளுதொறும் - நினைப்பது) தொடர்ந்து பயிற்சியினால் இறைவியை நெஞ்சில் நினைவுகளால் நிறுத்திக் கொள்வது என்பது பயிற்சியால், உபாசகர்களால் பெறப்படுகிறது. இது நிரந்தம் அல்ல. பயிற்சி செய்யும் காலம் வரையே அது பலன் தரும்.

ஆனால் இப்பாடல் வரியின் மூலம் அபிராமி பட்டர் பயிற்சியினால் அடைந்த இறை நினைவைக் கூறவில்லை. இறையருளால் தொடர்ந்து நினைக்கும் ஆற்றலைப் பெற்றேன் என்கிறார். இது முயற்சியினால் பெறுவதிலிருந்து உயர்ந்தது. தொடர்ந்து எக்காலத்திலும் இறை நினைவை நிலை
நிறுத்தும் ஆற்றல் உடையது. மறத்தல் என்கிற பண்பற்றது என்பதனால் மறவாமல் என்ற
வார்த்தையை பயன்படுத்துகிறார்.

‘நின்று ஏத்துவனே’நின்று என்ற சொல்லால் - மனமானது சென்று கொண்டேயிருக்கக்கூடிய இயல்பையுடையது. அப்படிச் செல்லும் இயல்பினால் ஒரே பொருளை தொடர்ந்து நினையாது, புலன்கள், காலம், இடம், நிகழ்வு இவற்றிற்கு இடையிலான தொடர்பு இவை சார்ந்து எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய வெவ்வேறு நினைவுகளை (ஒரே நினைவாய் அல்லாமல்) நினைக்கும் இயல்புடையது. அதை உபாசகர்கள் பயிற்சியினால் ஒரே நினைவை தொடர்ந்து நினைப்பதற்கு (ஏகவ்ருத்தி) உமையம்மையை மட்டுமே நினைப்பதற்கு பயிற்சி செய்கிறார்கள்.

இதையே,‘பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்ந்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோதும் தவம் இல்லையே’
- பாடல் எண். 53

என்கிற பாடலால் மேலும் இக்கருத்தை உறுதி செய்கிறார். நின்று என்கின்ற சொல்லால்  உமையம்மையை மறக்காமல் ஒரே நினைவாய்த் தொடர்ந்து நினைப்பதைக் குறிப்பிடுகிறார்.‘ஏற்றுவனே’ என்ற சொல்லால் - ஸ்ரீவித்யா உபாசகர் முன்னர் தான் கண்ட அனுபவநெறியை, உண்மையை பத்ததி என்ற வார்த்தையால் சூட்டுகின்றனர்.

இதற்கு வழிபாட்டு நெறி நூல் என்பது பொருள். தன் மனதில் தோன்றியவாறெல்லாம் நினையாமல் இறையருளினால் உபாசகர்களுக்கு அனுபவமான சத்தியத்தை அதை பின்பற்றுவோருக்கு அனுபவமாக்க செய்யப்படும் செயலையே ஏத்துவது (வழிபடுவது, உபாசனை செய்வது) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஏத்துவது என்ற சொல்லால் குறிப்பாக ஸ்ரீவித்யா உபாசனை நெறியைக் குறிப்பிடுகிறார்.

‘என்னே இனி உன்மையான் மறவாமல் நின்று ஏத்துவனே’ என்ற வரியால் தான் உபாசனை நெறியில் முறையாக மந்திரத்தைப் பெற்று அதை குருவின் அருளாலும், இறைவியின் திருவருளாலும் தன் முயற்சியாலும் இடையீடற்று முழு நம்பிக்கையோடு, சந்தேகமற்று பின்பற்றி அதன் பயனாய் முறையாகப் பெற வேண்டிய சரியான ஆன்மிக அனுபவத்தை தவறாது (முறையாக பெற்று) அதில் கூறியபடியே இறையருள் அனுபவத்தை உமையம்மையின் அருளால் தனதாக்கிக் கொள்கிற பண்பை, பயிற்சியை, பயனை தன் பொருட்டு உணர்ந்ததை பிறர் பொருட்டு ஆக்குவதற்காக இறை அருளால் இவ்வரியைக் குறிப்பிடுகிறார்.

இவ்வரியின் சிறப்பாக ‘என்னே’ என்ற சொல்லை தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்று குருவருளால் கிடைக்கப்பட்டது (மந்திரத்தை) முழுவதுமாய் தனக்கு தகுதியில்லாதபோதும் உமையம்மையின் கருணையின் மிகுதியினால் அருளப்பட்டது. தன் முயற்சி குறைபாடுடையதாக இருந்த போதும் தனக்குக் கிடைத்ததையே எண்ணி வியக்கிறார்.

இப்பாடல் வரிகளின் மூலம் அடியார் திறத்தையும், அவர்களைப் பேணுவதற்குரிய முறைகளையும் பின் அதன் வழியாய் பெற்ற மந்திரத்தையும், அதைப் பயன்படுத்தி தனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதை எப்படி என்பதை மிகச் சுருக்கமாக இப்பாடலில் விளக்குகிறார்.
அதைப் பெற நாம் முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்