SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு

2019-01-14@ 15:20:33

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே இம்மாதத்தின் சிறப்பை உணர்த்தும். தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளே பொங்கல் பண்டிகையாகும். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை 'மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். 'சங்கரமணம் என்றால்' நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இது, உத்ராயண புண்ணிய காலத்தின் துவக்கமாகும். விவசாயிகள் முதன்முதலில் அறுவடை செய்த பயனுக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடுவதே இவ்விழாவின் அடிப்படையாகும். அன்று, வயலில் விளைந்த புதிய நெல்லை குத்தி அரிசியாக்கி, அதில் பொங்கலிட்டு கண்ணிற்கு தெரியும் கடவுளான சூரியனுக்கு படைப்பர். செய்ந்நன்றி மறக்கக்கூடாது என்ற அரிய தத்துவத்தை உணர்த்தும் நாள் இது.

தைப்பொங்கலன்று வாசலில் அடுப்பு வைத்து பொங்கலிடுவர். பொங்கல் பானையில் பால் கொதித்து வரும் போது, பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்புவதும், வயதான பெண்கள் குலவையிடுவதும் இப்பண்டிகைக்குரிய சிறப்பாகும். பின்னர் அப்பொங்கலையும், கரும்பு, ஆகியவற்றை சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். தங்கள் வீட்டில் பிறந்து திருமணம் ஆன பெண்மக்களுக்கு பொங்கல் படியாக பணம் கொடுப்பதும் சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மறுநாள் மாட்டுப்பொங்கலன்று பசு, கன்று, காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து தெய்வமாகவே பாவித்து வணங்க வேண்டும். தைப்பொங்கலன்று சூரிய பகவானை வழிபடுபவர்கள் உடல் ஆரோக்கியம்,செல்வம், ஆயுள் ஆகியவற்றை குறைவின்றி பெறுவர். செய்நன்றி மறவாத தன்மையும், சகோதர, சகோதரிகள் மீது பாசமும் வளரும்.

பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி, வெல்லம், பச்சரிசி கலவை வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும். பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும்,  ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்