SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் போல மணவாழ்வு அமையும்,,!

2019-01-11@ 16:50:19

31 வயதாகும் என் மகளுக்கு கடந்த மூன்று வருடங்களாக வரன் பார்த்து வருகிறேன். எந்த வரனும் கூடி வரவில்லை. என் மகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரிகிறார். சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் வேண்டியும், விரைவில் திருமணம் நடைபெறவும் ஆலோசனை கூறுங்கள். கோவிந்தராஜன், கடையநல்லூர்.

28வது வயதில்தான் வரன் பார்க்கத் துவங்கியிருக்கிறீர்கள். மூவெட்டில் செய்யாத திருமணம் என்று முன்னோர்கள் காரணமின்றியா சொல்லி வைத்தார்கள்? திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குச் செல்லவிருக்கும் பெண்ணுக்கு சொந்த மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் வேண்டும் என்றும் கேட்கிறீர்கள்.. இவையனைத்தும் நீங்கள் வரன் தேடும்போது நிறைய வரையறைகளை வகுத்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய் தோஷம் என்பது இவருக்குக் கிடையாது.

உங்கள் உறவு முறையில் காவல்துறை அல்லது பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் வரனாக வந்து அமையும். ஆசிரியர் பணியில் உள்ள மணமகன்தான் வேண்டும் என்று தேடினால் உடற்கல்வி மற்றும் என்.சி.சி. ஆசிரியர் ஆக அவர் பணியில் இருக்கலாம். உத்யோக ரீதியாகவும் தற்போது நேரம் நன்றாக இருப்பதால் வரும் கல்வியாண்டில் உங்கள் மகளுக்கு சொந்த மாவட்டத்தில் பணி இடமாற்றம் கிடைத்து விடும். தீவிர முயற்சி இருந்தால் வருகின்ற 09.07.2019ற்குள் அவரது திருமணம் நடந்துவிடும். புதன்கிழமை நாளில் வைகுண்டம் திருத்தலத்திற்குச் சென்று ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி வைத்து வைகுண்டபதி ஸ்வாமியை பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். மனம் போல் மணவாழ்வு அமையும்.

நான் தற்போது நடத்திவரும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை குழந்தைகள் பள்ளியாக மாற்ற கடும் முயற்சி செய்து வருகிறேன். என் முயற்சி பலிக்குமா? மீண்டும் காலம் கை கொடுக்குமா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். செல்வி சண்முகம், ஈரோடு.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் சிரமத்தைத் தரக்கூடிய 6, 8, 12 ஆகிய இடங்களில் சுக்கிரன் ஒருவரைத் தவிர மற்ற எட்டு கிரகங்களும் அமர்ந்திருக்கிறார்கள். மிகுந்த சிரமங்களுக்கு இடையே இத்தனை வருடங்களாக தாக்குப்பிடித்து தொழிலை நடத்தி வருகிறீர்கள். தற்போதைய சூழலில் நீங்கள் ஏற்கெனவே நடத்தி வரும் நிறுவனமே போதுமானது. குழந்தைகள் பள்ளியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அதனால் பல சிரமங்கள் தோன்றக்கூடும். விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. 2021ம் ஆண்டு வரை அவருடைய நேரம் நன்றாக இருந்தாலும் அதன் பிறகு அத்தனை உசிதமாக இல்லை. இரண்டு மகன்களுக்கும் வாழ்க்கை செட்டில் ஆகிவிட்ட நிலையில் நீங்கள் தற்போது இருப்பதே போதுமானது என்ற மனநிலையுடன் செயல்படுவதே நல்லது என்பதே ஜோதிட ரீதியாக சொல்லப்படுகின்ற ஆலோசனை ஆகும். இருப்பதைக் கொண்டு திருப்தி காணுங்கள். வாழ்வு நிம்மதியாக அமையும்.

12ம் வகுப்பு படிக்கும் என் மகன் படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறான். நிறைய செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அவனுக்கு ஜாதகத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? அவனுடைய எதிர்காலம் எப்படி அமையும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். ராஜஸ்ரீ, திருவண்ணாமலை.


உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் (கும்ப லக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின் படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. விடலைப் பருவத்தில் எல்லா பிள்ளைகளுக்கும் உண்டாகும் பிரச்னைதான் உங்கள் மகனுக்கும் உண்டாகி இருக்கிறது. என்றாலும் அவருடைய ஜாதக அமைப்பினைக் காணும்போது உங்கள் பயம் நியாயமானதுதான் என்றே தோன்றுகிறது. லக்னாதிபதி சனி ராகுவுடன் இணைந்திருப்பதும், ஆறாம் வீட்டில் மூன்று கிரகங்களின் இணைவும் அத்தனை உசிதமான அமைப்பு அல்ல. 01.12.2020 வரை நேரம் என்பது நன்றாக உள்ளதால் சுகமான வாழ்வில் இருக்கிறார். அதற்குள்ளாக தனக்குரிய பாதையை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

எம்பிராய்டரி, ஃபேப்ரிக் டிசைனிங், ஆடை வடிவமைப்பு போன்ற படிப்புகள் இவருக்கு கைகொடுக்கும். நீங்கள் கூலிக்காக நெசவுத்தொழில் செய்து வந்தாலும் உங்கள் மகனால் அதே துறையில் உயர்ந்த நிலைமைக்கு வர இயலும். விடாமுயற்சி மட்டுமே இவருக்குக் கைகொடுக்கும். அதிர்ஷ்டம் என்பது ஓரளவிற்கு மட்டுமே என்பதை தாயார் ஆகிய உங்களால்தான் அவருக்கு புரியவைக்க இயலும். தொழிற்கல்வி சார்ந்த படிப்பே இவரது வாழ்வினை நிர்ணயம் செய்யும். வியாழன் தோறும் நவகிரகங்களில் உள்ள குருபகவானை வழிபட்டு வாருங்கள். உங்கள் மகனின் எதிர்கால வாழ்வு உயர்வானதாக அமையும்.

நான் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவிலே நிற்பதில்லை. ஒரே ஞாபக மறதியாக உள்ளது. பணம் கையிலே தங்குவதில்லை. ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள். வினீத், இராமநாதபுரம்.

18 வயது மாணவராகிய உங்களுக்கு பணம் கையில் தங்குவதில்லை என்ற கவலை பிரதானமாய் உள்ளது. மாணவப்பருவத்தில் இருக்கும் நீங்கள் வீணாக செலவழித்து வருகிறீர்கள் என்பதையே இது உணர்த்துகிறது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி நடக்கிறது. கேது தசை நடப்பதால் எதிலும் ஒரு ஈடுபாடு இன்றி செயல்பட்டு வருகிறீர்கள். ஏதோ கடமைக்கு என்று படிப்பதால் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. ஜென்ம லக்னாதிபதி குரு நான்கில் உள்ளதால் இயற்கையில் உங்களுக்கு நினைவுத்திறன் என்பது நன்றாகத்தான் உள்ளது. சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற சந்திரனுடன் சுக்கிரன் இணைந்துள்ளார்.

உங்களுடைய கவனம் பாடங்களில் இல்லாமல் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களின் மீது செல்வதையே இது உணர்த்துகிறது. உங்களுக்கு எந்தத்துறை பிடித்திருக்கிறதோ, அதனைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். மற்றவர்களின் கட்டாயப்படுத்தலுக்காகவும், வீண் கௌரவத்திற்காகவும் பிடிக்காத ஒன்றை படிக்காதீர்கள். உங்களுடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் செவ்வாயின் அமர்வும், ஸ்தானாதிபதி குருவின் பார்வை பலமும் நிரந்தர உத்யோகத்தைப் பெற்றுத் தரும். திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள விநாயகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று அருகம்புல் மாலை சாத்தி கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபடுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்.

“ஏகதந்தோ மஹாபுத்தி: பாதொள குல்பௌ ஸதாவது
அநுக்தமபி யத் ஸ்தாநம் தூமகேதுஸ் ஸதாவது,”


நாங்கள் பிறந்ததில் இருந்து அப்பா வெளிநாட்டில்தான் இருக்கிறார். எங்கள் அப்பத்தா, அய்யா இருந்தவரை எந்த குறையும் இன்றி சந்தோஷமாக இருந்தோம். தற்போது அவர்கள் இல்லாத சூழலில் யாரும் மதிப்பது இல்லை. பெரிய அக்காவிற்கு திருமணமாகி குழந்தை 9வது மாதத்தில் வயிற்றிலேயே இறந்துவிட்டது. 2வது அக்கா வலிப்புநோயால் அவதிப்படுகிறார். தம்பி எப்பொழுதும் எங்களை அடித்துக்கொண்டே இருக்கிறான். எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் சாபம் இருக்கிறதா? முத்துமீனாள்.

எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவிக்கு உரிய மனப்பக்குவம் உங்கள் கடிதத்தில் இல்லையே.. உங்கள் உடன்பிறந்தோர் குறித்த கவலையை விடுத்து படிப்பினில் கவனத்தை செலுத்துங்கள். வெளிநாட்டில் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தந்தையின் மனம் மகிழ வேண்டும் என்றால் நீங்கள் உயர்ந்த நிலைமைக்கு வர வேண்டும் அல்லவா.. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் மிகவும் வலிமையானது. சென்ட்டிமென் ட் உணர்வுகளை விடுத்து உங்கள் படிப்பினிலும், உத்யோகத்திற்குச் செல்வதிலும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். மற்றவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி உங்களுக்கு கிடையாது. அவரவர் வினைப்பயனின் படியே அவரவரின் வாழ்க்கை அமையும்.

நீங்கள் கேட்டிருப்பது போல் உங்கள் குடும்பத்திற்கு சாபம் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் குரு சனியின் சேர்க்கையும், உங்கள் சகோதரியின் ஜாதகத்தில் குரு  கேதுவின் இணைவும் இதனை உறுதிப்படுத்துகிறது. இந்த வயதில் உங்களால் அதனை சரிசெய்ய இயலாது. உங்களுடைய உத்யோக ஸ்தானம் என்பது நன்றாக உள்ளதால் நன்றாகப் படித்து முதலில் ஒரு வேலையில் அமருங்கள். 2021 மே மாத வாக்கில் இந்த தோஷங்களுக்கு பிராயசித்தம் செய்ய கால நேரம் சாதகமாக அமையும். அதுவரை வீணாக மனதைக் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் படிப்பினில் கவனம் செலுத்துங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.

எனது பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்கு விரைவில் முடியவும், தீர்ப்பு எனக்கு சாதகமாக அமையவும் உரிய பரிகாரம் கூறுங்கள். எங்கள் குடும்ப குலதெய்வம் பற்றிய விபரத்தினையும் தெரிவியுங்கள். உதயகுமார், திருவண்ணாமலை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி (விருச்சிக ராசி என்று தவறாக எழுதியுள்ளீர்கள்), மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஒன்பதாம் வீட்டில் சுக்கிரனின் சாரம் பெற்று சஞ்சரிப்பதாலும், தற்போது சனி தசை துவங்கியிருப்பதாலும் பணி நிமித்தமாக நடந்து வரும் வழக்கு வெகுவிரைவில் உங்களுக்கு சாதகமாக முடிவிற்கு வந்துவிடும். குலதெய்வம் குறித்து ஆராயும்போது ஏரி அல்லது ஒரு குளக்கரையின் ஓரமாக அமைந்திருக்கும் ஒரு ஐயனார் ஸ்வாமியே உங்களுடைய குலதெய்வம் என்று தோன்றுகிறது.

அதாவது ஏதோ ஒரு நீர்நிலையின் அருகில் அமைந்திருக்கும் சாஸ்தாவின் அம்சமான கடவுளே உங்களின் குலதெய்வம் ஆக உள்ளது. குடும்பப் பெரியவர்களிடம் கலந்தாலோசித்தும், சொந்த ஊரை ஒட்டியுள்ள பகுதி வாழ் மக்களிடம் இந்த அம்சத்தினைச் சொல்லி விபரம் கேட்டும் அறிந்துகொண்டு நேரடியாக அங்கு சென்று வழிபடுங்கள். குலதெய்வ வழிபாடு என்பது உங்கள் பிரச்சினையை விரைவாக முடிவிற்குக் கொண்டுவருவதோடு உங்கள் குலத்திற்கும் எந்தவித தீங்கும் நேராமல் கட்டிக் காக்கும். 2019ம் ஆண்டில் குலதெய்வத்தின் ஆசியோடு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்