SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாலை எழுவோம் ஆண்டவனைத் தொழுவோம்!

2019-01-11@ 16:41:37

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-17

உடல்நலமும், மனநலமும் ஒழுங்காக அமைந்தால் தான் நாம் உன்னதமாக வாழ முடியும். அதிகாலை எழுந்து, ஆதார சக்தியாக விளங்கும் இறைவனைச் சிந்தித்தால் இவ்விரண்டையும் பெற்று நாம் வாழ்வாங்கு வாழலாம். மாணிக்கவாசகரும், ஆண்டாள் பெருமாட்டியும் இந்த மார்கழி மாதத்தில் நமக்கு வழக்கும் அறிவுரையே அதிகாலை எழுவதும் ஆண்டவனைத் தொழுவதும் தான். திருப்பாவை,, திருவெம்பாவை என முறையே ஆண்டாளும், மணிவாசகரும் பாடிய பாவைப்பாடல்களில் பக்தி மணமும், பைந்தமிழ்ச் சுவையும் இரண்டறக் கலந்து படிப்பவர்கள் மனத்தில் பரவுகின்றன. அவர்களை ஆனந்த வெள்ளத்தில் நீராட வைக்கின்றன என்றால் அது மிகையில்லை. அதனால்தான்

‘ பாதகங்கள் தீர்க்கும் பரமன் காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும்
கோதை தமிழ்!

என்று ஆண்டாள் நாச்சியாரையும் ‘ வான்கலந்த மணிக்க வாசக! நின்வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!’
- என்று மணிவாசகப்பெருமானையும் மனதாற நம் அருளாளர்கள் போற்றிப் புகழ்கின்றனர். ‘புள்ளும் சிலம்பின தான் புள்ளரையன் தோயிலில் வெள்ளை விலிகங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய்!

- என்று ஆண்டாள் தம் தோழியர்களை எழுப்புகிறாள்
மாணிக்கவாசகரும் தம் திருவெம்பாவையில் ஆண்டாள். பெருமாட்டியைப்போலவே அதி அற்புதமாகப் பாடுகின்றார். உறங்குபவரை எழுப்புகிறார்.
‘ கோழி சிலம்பசச் சிலம்பும் குரு கெங்கும் எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்! கேழில் பரஞ்ஜோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி! ஈதென்ன உறக்கமோ வாய்தியவாய் ஆழியான்அன்புடைமை ஆமாதும் இவ்வாறோ? திருமாலின் புகழை திருப்பாவையும், சிவபெருமானின் கீர்த்தியை திருவெம்பாவையும் விரித்துரைத்தாலும் இரண்டுமே காலை எழுவதையும், கடவுளைத் தொழுவதையுமே வலியுறுத்துகின்றன.

நமக்கு இரண்டுகண்கள் இருக்கின்றன, இரண்டு கண்களிலும் விளங்கும் கருப்பு வட்டத்தைப் பாவை’ என்று இலக்கியம் அழைக்கின்றது கண் மணிகளே ‘பாவை’ என சொல்லப் படுகிறது. ‘ என் கண்ணில் பாவை அன்றோ! _ கண்ணம்மாஎன் உயிர் நின்னதன்றோ’

- என்று பாரதியார் பாடி இருப்பதை நாமெல்லாம் அறிவோம்! இரண்டுகண்களிலும் இரண்டு கண்மணிகள் என்னும் பாவை இருந்த போதிலும் ஒரே காட்சியைத்தான் ஒரு நேரத்தில் நம்மால் பார்க்க முடியும்! வலது கண் பாவையால் ஒன்றையும், இடது கண் பாவையால் மற்றொன்றையும் நம் கண்கள் ஒரு போதும் பார்க்க முடியாது’. இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றில் தெரிவிக்கின்றார்.
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?

பாவை இரண்டிருந்தும் பார்க்கும் காட்சி ஒன்றே என்பது போல வைணவத் திருப்பாவையும், சைவத் திருவெம்பாவையும் தனித்தனியாகத் தோன்றினாலும் இருநூல்களும் வலியுத்துவது ஒன்றே என்பதால்தான் சான்றோர்கள் ‘ இருபாவை _ ஒரு பார்வை என்று அற்புதச் சொற்றொடரால் அருமையாகப் போற்றுகின்றனர்.ஆண்டாளை நினைத்தே ‘ஆ’ என்ற எழுத்தில் ‘ ஆதியும் அந்தமும் இல்லா’ என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையைத் தொடங்குகின்றார்.

 மாணிக்கவாசகரை மனத்தில் எண்ணித்தான் ‘ மார்கழித்திங்கள் மதிநிறைந்த’ என்று மா’ என்ற எழுத்தில் ஆண்டாள் திருப்பாவையை
ஆரம்பிக்கின்றார். கலந்தது ஒன்று என்றாலும் நம்மைச் சிந்திக்க வைக்கிற தல்லவா மேற்சொன்ன கருத்து கற்பனை!இருவருமே தம் பாவைப்பாடல்களில் வையம் இனிது செழிக்க வான்மழை நன்குபொழிய வேண்டும் என்று ஒருமனதாக வரம் வேண்டுகின்றார்கள்.‘மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்! என்று மகாகவிபாரதியார் பாடுகின்றார்.

அதுபோலவே வானம் கருப்பதையும், மின்னல் தோன்றுவதையும், இடி ஒலிப்பதையும், வானவில் தோற்றம் கொள்வதையும், மழைத்தாரைகள் பூமாதேவியை நீராட்டுவதையும் தெய்வத்தின் தோற்றங்களாகவே பக்திப் பெருக்கோடும், கற்பனைக் கண்களோடும் படிப்பவர்கள் நெஞ்சில்படம் போல பதியும் வண்ணம் இலக்கிய அழகோடு இனிமையாக எடுத்துரைக்கின்றனர். இரண்டு அடியார் பெருமக்களும்!இறைச்சுவை இனிக்கும் இலக்கிய தேன்குடமாக விளக்கும் இருவர் பாடல்களையும் அனுபவிப்போமா! முதலில் ஆண்டாள் பெருமாட்டியின் மழை வேண்டும் வரத்தை அனுபவிக்கலாம்.

ஆழிமழைக் கண்ணா! ஏன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய்கருத்து
பாழியம் தோளுடைப் பத்ம நாபன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்ற திர்ந்து
தாழாதே சார்ங்தம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

மழை பொழிய வருண தேவனை வேண்டுகிறாள் ஆண்டாள். ஆழி மழைக்கண்ணா! என்று அவனை அழைத்து ‘ஒன்று நீ கைக கரவேல்’ என்று அவனை வேண்டுகிறாள். அதாவது கரு முகில்களாகக் கூடுவதும், கனத்த இடி முழக்கமிடுவதும் மட்டும் போதாது. மறைத்து வைக்காமல் உன்பெருங் கருணையைக்காட்ட வேண்டும். பேய்மழையாகப் பெய்து கெடுக்காமல் இந்தவையகம் வாழ ஏற்ற முறையில் பொழிக! என
வேண்டுகிறாள்.

கரிய மேகம் சூழ்ந்தவானை நீலவண்ணக் கண்ணனாகக் காண்கின்றாள். வெளிச்சக் கீற்றாக வெட்டும் மின்னலை கண்ண பெருமான் கையில் உள்ள சுதர்சனச் சக்கரமாகப் பார்க்கிறாள். இடிஓசை திருமாலின் பாஞ்சஜன்யமாக காதுகளில் ஒலிக்கிறது. சீராகப்பொழியும் மழைத் தாரைகள் திருமால் கரம் ஏந்தும் சார்ங்க வில்லாகத் தெரிகிறது.

 எங்கும் கண்ணனே! எல்லாம் கண்ணனே! என்று மழை வடிவில் மாலவனைத் தரிசிக்கும் ஆண்டாள் போலவே மாணிக்கவாசகரும் திருவெம் பாைவயில் மகா சத்தியை மழை வடிவில் கண்டு மகிழ்ச்சி அடைகிறார்.

‘ முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பி, திருப்புருவம்
என்ன சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை! ஏலோர் எம்பாவாய்!    
மழைமேகம் சூழ்ந்த பரந்தவானை அவர் பார்க்கவில்லை!
பராசக்தியின் உருவமே வாசகருக்கு வான் வடிவில் தோன்றுகிறது.
மின்னல் சக்தி தேவியின் இடையப்போல விளங்குகின்றது

 இடி முழக்கம் ஊழிக் கூத்திடும் உமாதேவியின் பாதச் சதங்கை ஒலியாகக் காதில் விழுகிறது. அம்பிகையின் அழகான புருவ வளைவை வானவில்லில் பார்த்து மகிழ்கிறார் வாசகர். மழைத்தாரைகள் மண்ணில் விழுந்து பசுமைக் காடாக இந்த பூமியை மாற்றுவது அம்பிகையின் பரங்கருணை வெள்ளமாகவே அவர் பார்வைக்குப்படுகிறது.

‘ சான்றோர்கள் ஒன்றாகவே நினைப்பார்கள்’ என்ற ஆங்கிலப் பொன் மொழிக்கு ஏற்ப ஆண்டாளும், மணிவாசகரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்ற போதிலும் மழையைப் பற்றிய வர்ணனையில் ஏதோ மாதிரி சிந்தித்துப் பாடியிருப்பது நம்மை எல்லாம் ஆச்சர்யப்படவைக்கிறது.
‘ மாதங்களில் நான் மார்கழியாக விளங்கு கின்றேன்’ என்கிறார் பகவத் கீதை பகர்ந்த பரந்தாமன்.சிறந்த இம்மாதத்தின் கீர்த்தியை மேலும் சிறப்பிக்கின்றன திருப்பாவையும், திருவெம்பாவையும்!.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்