SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகன் துள்ளியெழுந்து ஓடுவான்!

2019-01-09@ 17:35:02

எனது மகன் 2வது படிக்கும் வரை நன்றாக நடந்தான். பிறகு நடக்க முடியாமல் நகர்ந்து செல்கிறான். இடுப்பு எலும்பு உறுதியாக இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகன் நலமடைய நல்லதொரு வழி கூறுங்கள். சங்கீதா, திருவண்ணாமலை மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, (மகம் நட்சத்திரம், சிம்ம ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்) கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் இணைந்துள்ளனர். லக்னாதிபதி சனி ரோகத்தைத் தரும் ஆறாம் வீட்டில் சந்திரனுடன் இணைந்துள்ளார். அவரது ஜாதகத்தை ஆராயும்போது தொடைப்பகுதியில் உண்டாகியுள்ள பிரச்னை இடுப்பு வரை பாதித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் இந்தப் பிரச்னையை முற்றிலுமாக சரி செய்து விட முடியும் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது. ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளோடு நன்கு படித்த ஆயுர்வேத மருத்துவரை நாடுங்கள்.

மகனை அவனது போக்கிலேயே நடக்கவும், விளையாடவும் அனுமதியுங்கள். அவரது ஜாதகத்தில் ராகு மற்றும் செவ்வாயின் தாக்கம் கூடியிருப்பதால் நிச்சயமாக உடல் வலிமையைப் பெறுவார். ஓய்வு நேரத்தில் உங்கள் மகனை திருவண்ணாமலை சேஷாத்ரி ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். சனிக்கிழமை தோறும் இரண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் மகனின் உடல் ஆரோக்யம் பெற நல்ல வழி பிறப்பதோடு 15வது வயது முதல் அவர் துள்ளி ஓடுவதைக் காண்பீர்கள்.

எம்.இ., படித்து அரசு வேலைக்கு முயற்சித்து வரும் என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வருகின்ற வரன் எல்லாம் தட்டிப் போகிறது. ஜாதகம் பார்க்கும் இடத்தில் ராகு இருக்கு, மாங்கல்ய தோஷம் இருக்கு என்று சொல்கிறார்கள். வேலை கிடைக்கவும், திருமணம் நடக்கவும் என்ன பரிகாரம் செய்யவேண்டும்? காந்திமதி, அறந்தாங்கி.

எல்லோருடைய ஜாதகத்திலும் ராகு  கேது இருக்கத்தான் செய்யும். அதனால் தோஷம் உண்டாகவில்லை. உங்கள் மகளின் ஜாதகத்தில் எந்த விதமான பிரச்னையும் இல்லை. அவருடைய பெயரில்தான் பிரச்னை உள்ளது. பெயரின் முதற்பாதியை இனிஷியலாகச் சுருக்கி இரட்டை இனிஷியல்களோடு பிற்பாதியில் உள்ள பெயரை மட்டும் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவரது உத்யோகம் என்பது அந்நிய தேசத்தில்தான் அமையும்.

அதே போன்று மாப்பிள்ளையும் வெளிநாட்டில் வேலை செய்பவராகத்தான் இருப்பார். அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்காமல் வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணத்தை நடத்துங்கள். தற்போது பிறக்க உள்ள 2019ம் ஆண்டு நற்பலனைத் தர உள்ளதால் வரும் வருடத்தில் அவரது திருமணம் நடந்துவிடும். 12 வாரங்களுக்கு புதன்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று ஐந்து அகல்விளக்குகளை ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வர கெட்டிமேளச் சத்தம் விரைவில் கேட்கும்.

“லுல்லி ஸ்வரூப ஸர்வபுதப்ரிய மங்களமூர்த்தி மஹேச சிவ
லூதாதீச்வர ரூபப்ரிய ஹர வேதாந்தப்ரிய வேத்ய சிவ,”


எனது தம்பி ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து அவளைப் படிக்க வைத்ததுடன் வேலையும் வாங்கிக் கொடுத்தான். பிறகு அந்தப் பெண் வேறு ஒரு டாக்டர் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டாள். இதனால் நொந்துபோன எனது தம்பியை தற்போது சமாதானப்படுத்தி வேறு நல்ல பெண்ணாக தேடி வருகிறோம். குலைந்துபோன அவனது வாழ்வு சீரடைய வழி சொல்லுங்கள். கலைச்செல்வி, கோயமுத்தூர்.

உங்களை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பாவின் குடும்பத்திற்காகக் கடிதம் எழுதியுள்ளீர்கள். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் சித்தப்பா மகனின் ஜாதகத்தின் படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரனின் நிலையும், குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான குருவின் நிலையும் நன்றாகவே உள்ளது. என்றாலும் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சனி இவரது வாழ்வியல் முன்னேற்றத்தைத் தடை செய்து வருகிறார்.

காதல் தோல்வியால் துவண்டிருக்கும் அவருக்கு நீங்கள் ஏற்கெனவே மணமாகி வாழ்வினை இழந்த பெண்ணாகப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எல்லோரையும் போலவே சாதாரணமாகப் பெண் தேடலாம். இவர் பிறந்த ஊருக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் உள்ள ஊரைச் சேர்ந்த பெண்ணாகப் பாருங்கள். வெள்ளிக்கிழமை நாளில் காரமடை ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபடுவதோடு வெளியில் அமர்ந்திருக்கும் தாசர்கள் இருவருக்கு வஸ்திரம் வாங்கித் தந்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். வருகின்ற 01.07.2019ற்குப் பின் திருமணம் நடந்துவிடும்.

“லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவி பிம்ப வாஸே
க்ருபா நிவாஸே குணவ்ருந்தவாஸே ரங்கவாஸே ரமதாம் மநோ மே,”


எனது மகளுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. சொந்தத்தில் பெண் கொடுத்ததால் ஜாதகம் பார்க்கவில்லை. மருமகன் எப்பொழுதும் ஏதாவது பிரச்னை எழுப்பி தொல்லை கொடுத்துவருகிறார். மனதில் நிம்மதி இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மருமகன் திருந்துவாரா? என் மகளின் வாழ்வு எப்போது சீராகும்? வெங்கடேசன், செங்கல்பட்டு.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேதுவும் ராசியில் ராகுவும் இணைந்து பிரச்னையைத் தந்திருக்கிறார்கள். அதே போன்று மருமகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் சனியுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினைத் தந்திருக்கிறார்.

உங்கள் மகளின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகுவும் சந்திரனும் இணைந்திருந்தாலும், உடன் குரு அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சதா குழப்பம் நீடித்தாலும் குறை ஏதும் உண்டாகாது. மருமகனின் ஜாதகத்தை விட மகளின் ஜாதகத்தில் தோஷம் அதிகமாக உள்ளதால் தனித்து வாழ்வதற்கான திறமையும், பலமும் அவருக்கு இல்லை. பெண் குழந்தைகள் இருவரும் வளர, வளர குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறையத் துவங்கும். செல்லப்பிராணியாக வீட்டினில் ஒரு நாய்குட்டியை வளர்த்து வரச் சொல்லுங்கள். இயலாத பட்சத்தில் தினமும் உங்கள் மகளை தெருவில் சுற்றும் ஒரு நாய்க்கு தினமும் உணவிட்டு வரச் சொல்லுங்கள். அஷ்டமி தோறும் பைரவரை வழிபட்டு வருவதாலும் தனது கணவரின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பார்.

என் உடன்பிறந்த தம்பி கடந்த மார்கழி மாதத்தில் காலமானார். அடுத்த ஆறு மாதத்தில் எனது தாயாரும் காலமாகிவிட்டார்கள். இவர்கள் இருவருக்கும் சேர்ந்தாற்போல் திவசம் கொடுக்கலாமா? ஒரு சிலர் சேர்ந்தாற்போல் கொடுக்கலாம் என்றும் வேறு சிலர் கண்டிப்பாக அப்படி செய்யக்கூடாது, தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு ஒரு சரியான முடிவினைத் தருமாறு வேண்டுகிறேன். முருகேசன், முசிறி.

கண்டிப்பாக தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். தலைதிவசம் மாத்திரம் அல்ல, பிரதி வருடந்தோறும் வருகின்ற சிராத்தங்களை தனித்தனியேதான் செய்ய வேண்டும். உங்கள் தம்பிக்கு அவருடைய மகன்(கள்) சிராத்தத்தை செய்ய வேண்டும். உங்கள் தாயாருக்கு நீங்கள் செய்யப் போகிறீர்கள். இந்த இரண்டு சிராத்தங்களையும் ஒன்றாகச் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவரவர் குடியிருக்கும் வீட்டினில் அவரவர் தனித்தனியாக சிராத்தங்களைச் செய்ய வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் இறந்திருக்கும் உங்கள் தம்பிக்கு வருகின்ற 09.01.2019 புதன்கிழமை அன்று தலைதிவசத்தினைச் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் காலண்டரில் த்ருதியை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், பஞ்சாங்கத்தில் திதிகளின் கால அளவினைக் கொண்டு சிராத்த திதி என்று தனியாக ஒரு அட்டவணையைத் தந்திருப்பார்கள். அதனைக் கொண்டுதான் சிராத்தம் செய்வதை நிர்ணயம் செய்ய வேண்டும். அதனடிப்படையில் உங்கள் தம்பியின் முதல் வருட சிராத்தம் ஆனது மேற்சொன்ன தேதியில்தான் செய்யப்பட வேண்டும். அவர் இறந்தது டிசம்பர் மாதத்தில்தானே, ஜனவரியில் எப்படி திவசம் வரும் என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. இங்கு ஆங்கில மாதங்கள் கணக்கில் வருவதில்லை. மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தி என்பதை நினைவில் வைத்திருந்து பிரதி வருடந்தோறும் சிராத்தம் அவரது மகனால் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் இல்லை.

குடிநோயாளியான என் கணவர் இறந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளார். என் தந்தையின் பென்ஷனில் நானும் என் பெண்ணும் வாழ்கிறோம். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? கணவரின் குடும்பத்தாரால் ஒரு உதவியும் இல்லை. எல்லோரும் என்னை மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் நல்வாழ்விற்கு ஒரு வழி சொல்லுங்கள். மீனாதேவி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் லக்னாதிபதி சூரியனோடு சுக்கிரனும் இணைந்து அமர்ந்து சிரமத்தைத் தந்திருக்கிறார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் அரசுப்பணிதான் வேண்டும் என்று காத்திருக்காமல் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லுங்கள். பணம் கொடுத்தோ அல்லது சிபாரிசு மூலமாகவோ வேலையை வாங்கும் அம்சம் உங்கள் ஜாதகத்தில் இல்லை. பத்தாம் வீட்டில் சனியின் அமர்வு உள்ளதால் கௌரவம் பாராது கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் வலிமையாக உள்ளது.

மேற்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் காமர்ஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்து அவரைப் படிக்க வையுங்கள். அதே துறையில் கல்லூரிப் படிப்பினைத் தொடர்வதோடு அரசுப்பணிக்கான தேர்வுகளை தகுந்த பயிற்சி பெற்று எழுதி வருவதன் மூலம் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்துவிடுவார். உங்கள் ஜாதக பலத்தின்படி மறுமணத்திற்கான வாய்ப்பு இல்லை. அதைப்பற்றி சிந்திக்க வேண்டாம். மகளின் நல்வாழ்வினில் கவனத்தை செலுத்துங்கள். சனிதோறும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். மனஉறுதி கூடுவதோடு நிம்மதியும் காண்பீர்கள்.

என் மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டர் ஆக வேண்டும் என்பது அவர் தாயின் ஆசை. அவரது தாயான என் மனைவி இறந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது தாயின் ஆசையை நிறைவேற்ற பல முறை தேர்வு எழுதியும் தோல்வியே அடைந்துள்ளார். அவர் தேர்ச்சி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பலராமன், சென்னை.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் 18வது வயது முதல் 37வது வயது வரை சனி தசைக்கான காலம் ஆகும். சனி பகவான் சிரமத்தைத் தரும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தன் முயற்சியில் தடைகளை சந்தித்து வருகிறார். என்றாலும் அவரது ஜாதகத்தில் வெற்றியைத் தரக்கூடிய செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் லட்சியத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் ஆசையை நிறைவேற்ற போராடி வரும் அவர் ஐ.ஏ.எஸ் மட்டும்தான் வேண்டும் என்று காத்திருக்காமல் அனைத்து அரசு தேர்வுகளையும் எழுதி வரச் சொல்லுங்கள்.

குரூப்  1 தேர்வுகளுக்கும் முயற்சிக்கலாம். காலத்தை வீணடிக்காமல் தனது வயதினையும் கருத்தினில் கொண்டு வேலை தேடச் சொல்லுங்கள். கிடைக்கும் வேலையைத் தவறவிடாமல் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. தற்போது நடந்து வரும் நேரமே நன்றாக உள்ளதால் பரிகாரம் ஏதும் தேவையில்லை. சிறப்பான எதிர்காலம் தனது மகனுக்கு அமைய வேண்டும் என்பதே ஒரு தாயின் ஆசையாக இருக்கும். அந்தத் தாயாரின் ஆசியோடு தடைகளைத் தாண்டி வாழ்வினில் உயர்வார். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்