SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றி நிச்சயம்!

2019-01-09@ 17:30:34

நான் என் மகனுடன் தாய் வீட்டில் தங்கியுள்ளேன். என் தாய் இருக்கும் வரைதான் இந்த வீட்டில் இருக்க முடியும். தனியார் பள்ளியில் பணியாற்றும்  எனக்கு உடல்நிலையும் சீராக இல்லை. என் மகனுக்காக உயிருடன் இருக்க விரும்புகிறேன். பலமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியும் பாஸ்  ஆகவில்லை. எனக்கு அரசுப் பணியும், சொந்த வீடும் அமையுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? - பிரியா, கோவை.

கடுமையான மன உளைச்சலில் நீங்கள் இருப்பதை உங்களின் கடிதமும், உங்கள் ஜாதகமும் எடுத்துரைக்கிறது. ஆயில்யம் நட்சத்திரம்,  கடக ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், சற்று பிடிவாத குணம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள். துலாம்  லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் 12ம் வீட்டில் குருவும், சனியும் இணைந்திருப்பது உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்து வருகிறது.  குருவும், சனியும் இணைந்த நிலையை குரு-சண்டாள யோகம் என்றும், ஒரு சில ஜோதிடர்கள் பிரம்மஹத்தி தோஷம் என்றும் குறிப்பிடுவார்கள்.

மற்ற கிரஹங்கள் வலிமையான பாவகங்களில் அமர்ந்திருந்தாலும், முக்கியமான இந்த இரண்டு கிரஹங்கள் 12ம் வீட்டில் இணைந்திருப்பதால்  வாழ்வினில் பலவிதமான தடைகளையும் சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைக் குறிக்கும் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம்  பாவகத்தில் சூரியன், சந்திரன், புதன், ராகு ஆகிய நான்கு கிரஹங்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. நான்கு கிரஹங்கள் பத்தாம் வீட்டில் கூட்டணி  அமைத்திருப்பது சாதகமான அம்சம் ஆகும். ஏதேனும் ஒரு கிரஹத்தின் துணையால் ஏதோ ஒரு வேலையை எப்போதும் செய்து கொண்டிருப்பீர்கள்.

ஆசிரியர் பணிதான் வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்காமல் எந்த துறையாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் அனைத்து  தேர்வுகளையும் எழுதுங்கள். உங்கள் கல்வித்தகுதி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம் அறிவிக்கும் அனைத்துத் தேர்வுகளுக்கும்  விண்ணப்பியுங்கள். உங்கள் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. சந்திரன், ராகு இருவரும் தொழில்  ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் இந்த நேரத்தில் உங்கள் உத்யோகம் ஸ்திரப்பட்டுவிடும்.

வருகின்ற 2019ம் வருடம் அக்டோபர் மாத இறுதிக்குள்ளாக நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்து விடுவீர்கள். சொந்த வீடு வாங்குவதற்கு அவசரப்  படாதீர்கள். சொந்த வீடு யோகத்தினைத் தரும் நான்காம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், நான்காம் வீட்டின் அதிபதி சனி 12ல் மறைவதும் அத்தனை  சிறப்பான பலனைத் தராது. உங்கள் பிள்ளை வளர்ந்து பெரியவன் ஆன பின்பு சொந்தவீட்டினைப் பற்றி சிந்திக்கலாம். அதுவரை ஒத்திக்கு (குத்தகை  அல்லது போக்கியம்) வீடு பிடித்து அதில் குடியிருப்பது நன்மை தரும். தெற்கு நோக்கிய வாசல் உள்ள வீடாக பார்த்து குடியேறுங்கள்.

தற்போது நடந்து வரும் சந்திர தசை, அடுத்து வரும் செவ்வாய் தசை, ராகு தசை ஆகியவை நற்பலன்களைத் தரக்கூடியவை என்பதால் எதிர்காலம்  என்பது உங்கள் கனவுகளை நனவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. உங்கள் மனநிலையில்தான் குறை உள்ளதே தவிர, உடல்நிலையில் பெரிய  குறைபாடு ஏதும் இல்லை. மனநிலை நன்றாக இருந்தால், உடல்நிலையும் சிறப்பாக அமையும். நினைத்ததை சாதிக்கும் திறன் உங்கள் ஜாதகத்தில்  இருப்பதால் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு சரியென்று படுவதை தயங்காமல் செய்து வாருங்கள்.  நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

1992ல் திருமணம் நடந்து 1998ல் கணவர் இறந்துவிட்டார். என் இரு குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்துவிட்டேன். என் மகளுக்கு  திருமணம் செய்ய முயற்சிக்கிறேன். நல்ல வரன் வந்தாலும் என் மகள் பிடிக்கவில்லை என்கிறாள். நல்ல வாய்ப்பை தவறவிடுகிறாள். என்ன செய்வது  என்று புரியவில்லை. அவள் ஜாதகத்தில் தோஷம் ஏதும் உள்ளதா? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம் எப்படி உள்ளது?
 - ராணி, சென்னை.


தனியொரு பெண்ணாக மிகவும் சிரமத்திற்கு இடையில் உங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறீர்கள். மகள் திருமணத்திற்கான  வயதினை எட்டியதும் உள்ளுக்குள் ஒருவிதமான பயம் எட்டிப் பார்க்கிறது. புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம் கடக ராசியில் (மிதுன ராசி என்று  உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் மிகவும் வலிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. சுப கிரஹம் ஆன  குரு பகவானின் சொந்த வீடான மீன லக்னத்தில் பிறந்திருக்கிறார்.

மற்றொரு சுப கிரகம் ஆன சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். அவருடன் ராஜ கிரகமான சூரியனும் இணைந்துள்ளார்.  உங்கள் மகள் என்றென்றும் தனக்குரிய சுயகௌரவத்துடன் வாழ்வார். சுக்கிரனின் அனுக்ரஹத்தால் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை சுக  சௌகரியங்களையும் அனுபவித்து வாழ்வார். அவருடைய ஜாதக கணிதத்தின்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. குருவும்,  சுக்கிரனும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுப்பார்.

நன்கு படித்து, வேலையில் உள்ள வரனாக அவருக்கு அமையும். நல்ல வாய்ப்பினைத் தவறவிடுகிறாள் என்ற பயம் தேவையில்லை. அவசரப்படாமல்  நிதானமாக உங்கள் மகள் முடிவெடுக்கிறாள் என்று எண்ணி பெருமை கொள்ளுங்கள். நான்காம் வீட்டில் அமர்வு பெற்றிருக்கும் செவ்வாயின் நிலை  கண்டு ஒரு சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். என்றாலும் செவ்வாயின் தாக்கம் பெரிதாக இல்லை என்பதாலும்,  ஜென்ம லக்னம் நல்ல வலுவுடன் உள்ளதாலும் செவ்வாய் தோஷத்தினை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அமைப்பினால் அவருடைய வாழ்வினில் எந்தவிதமான கெடுபலனும் உண்டாகாது. மாறாக அசையாச் சொத்துக்கள் நான்காம் இடத்தில்  அமர்ந்திருக்கும் செவ்வாயின் அனுக்ரஹத்தால் வந்து சேரும். அடுத்து வரும் தசாபுக்தியின் காலங்கள் நற்பலன்களைத் தரும் வகையில் உள்ளது.  உங்கள் மகளுக்கு சிறப்பான எதிர்காலம் என்பது உண்டு. நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான பலனை உங்கள் மகளின் நல்வாழ்வின் மூலம் காண்பீர்கள்.  உங்கள் மகள் தெளிவாகத்தான் முடிவெடுக்கிறாள் என்று அவர் மீது முழுமையான நம்பிக்கையை வையுங்கள்.

தர்மநெறிக்கு எதிராக அவர் என்றுமே நடக்கமாட்டார். உங்கள் கௌரவத்திற்கு எந்தவிதமான பிரச்னையும் உண்டாகாது. 2020ம் ஆண்டின் இறுதி வரை  திருமண யோகம் என்பது சிறப்பாக உள்ளதால் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உங்கள் மகளின் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் நிதானித்து  செயல்படுங்கள். கௌரவம் நிறைந்த பெரிய குடும்பத்தின் மருமகளாகச் செல்லும் வாய்ப்பு உங்கள் மகளின் ஜாதகத்தில் பிரகாசமாக உள்ளது.  இறைவனின் அருளால் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

32 வயதாகும் என் மகனுக்கு நிரந்தர வேலை (அரசு/தனியார்) எப்போது அமையும்? திருமணம் எப்போது நடைபெறும்? - இளங்கோ, மதுரை.

பஞ்சாங்கத்தின் அடிப்படையில் உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது ராகு தசையில் சனி புக்தி துவங்கி உள்ளது.  ராகு, சனி இருவரும் அசுப கிரகங்கள் என்றாலும் அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி,  சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் சனிபகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம்  வீடாகிய களத்ர ஸ்தானத்திற்கு அதிபதி சனி, நான்காம் வீடாகிய சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே ஆகும்.

உங்கள் உறவுமுறையில் இருந்து பெண் அமையும் என்பதையே இவரது ஜாதகம் நமக்கு எடுத்துரைக்கிறது. உறவு முறையில் சற்று ஏழ்மை நிலையில்  உள்ள பெண்ணாக அமைந்தாலும் நல்ல குணவதியாக இருப்பார். சொந்தத்திலேயே பெண் இருப்பதால் வெளியில் தேட வேண்டிய அவசியம் இல்லை.  உத்யோகத்தைப் பொறுத்த வரை பத்தாம் வீடாகிய ஜீவன ஸ்தான அதிபதி சுக்கிரன் நீசம் பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்திருக்கிறார்.  அரசுப்பணி கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் இரண்டாம் வீடாகிய வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தனது பேச்சுத்திறமையின் மூலமாக இவர் தனது  தொழிலை அமைத்துக் கொள்ள வேண்டும். உடன் கேது இணைந்திருப்பதால் ஆன்மிகம் சார்ந்த் தொழிலாக அமையும். ஏதேனும் ஒரு மடம்,  தேவஸ்தானம் முதலிய இடங்களில் இவரது உத்யோகம் அமையும். வருமானமும் சீராக இருந்து வரும். தற்போது திருமணத்திற்கான நேரம்  துவங்கியுள்ளதால் உறவுமுறையில் உள்ள குணவதியான பெண்ணாகப் பார்த்து திருமணத்தை நடத்துங்கள்.

கையோடு ஒரு வேலையும் அவருக்கு அமைந்துவிடும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதைப் போல தனது பேச்சுத்திறமையின் மூலமாக  சம்பாதிக்கும் கலையை உங்கள் மகன் அறிந்துகொள்வார். அரசுப்பணிக்காகக் காத்திருப்பதை விட ஆன்மிகம் சார்ந்த பணியாக உங்கள் மகனைத் தேடச்  சொல்லுங்கள். வருகின்ற சித்திரைத் திருவிழா நிறைவடையும் காலத்தில் மீனாக்ஷி அம்மனின் அருளால் உங்கள் மகனின் வாழ்வு சிறப்பாக  அமைந்துவிடும்.

2013ல் பணி ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த ஊரில், சொந்த வீட்டிற்குள் குடிபுக முடியாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.  எனது பங்குக்கு உண்டான சொத்து என் பெரியப்பா, சித்தப்பா பாகத்திற்கு இடையில் உள்ளது. இரு தரப்பினரும் என்னை புதிதாக வீடு கட்ட  முட்டுக்கட்டை போட்ட வண்ணம் உள்ளனர். என்னால் சொந்த வீடு கட்ட முடியுமா? அதில் வசிக்கும் கொடுப்பினை உள்ளதா? - அப்பாதுரை, சேலம்.

நிச்சயமாக உங்கள் லட்சியம் நிறைவேறும் என்பதை உங்கள் மனதில் நிலை நிறுத்துங்கள். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன  லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் எல்லோருடனும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது,  எல்லோருடனும் ஒற்றுமையாக  இணைந்து வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும், தற்காலத்தில் அதற்கான சாத்தியக் கூறு மிகவும்  குறைவாக உள்ளது. பெரியப்பா, சித்தப்பா என்று இரு தரப்பினரும் உங்கள் முயற்சியைத் தடை செய்து வருவதாக எழுதியுள்ளீர்கள்.

உறவுமுறையைப் பெரிதாக எண்ணாமல் காலத்திற்குத் தகுந்தாற்போல் வாழ முயற்சியுங்கள். உங்கள் ஜாதகக் கணிதத்தின் படி தற்போது சனி  தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சனி நான்காம் வீட்டிலும், குரு பகவான் 11ம் வீட்டிலும் இருப்பதால் தற்போது நடந்து வரும் இந்த  தசாபுக்தியின் காலத்திற்குள் உங்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும். பங்காளிகளைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் பிள்ளைகளின்  நலனில் அக்கறை கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்தினை அவர்களிடம் கறாராக தெரிவிப்பதோடு உங்கள் உரிமையையும் நிலைநாட்டுங்கள்.

உங்களுக்கான உரிமையை நீங்கள் அனுபவிப்பதை யாரும் தடை செய்ய முடியாது. நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவான் உங்கள்  முயற்சிகளுக்குத் துணையிருப்பார். இதய நோயாளியான நீங்கள் பேஸ்மேக்கர் கருவியின் துணையுடன் வாழ்ந்து வருவதாக எழுதியுள்ளீர்கள். ஆயுள்  காரகன் சனியின் ஆதரவு உங்கள் ஜாதகத்தில் நிறைந்திருப்பதால் தீர்க்காயுள் என்பது உண்டு. வாழ்நாள் காலத்தைப் பற்றிய கவலையை விடுத்து  வாழும் வரை மனநிம்மதியோடு வாழுங்கள். அடுத்து வரவுள்ள புதன் தசையின் காலமும் உங்கள் எண்ணத்திற்குத் துணை நிற்கும்.

சொந்த வீடு கட்டும் யோகத்தினைத் தரும் நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதன் ஒன்பதாம் வீட்டில் குருவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால்  பூர்வீக சொத்தில் உங்களால் வீடு கட்ட முடியும். அதே வீட்டினில் உங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தினை நிம்மதியாக கழிக்கலாம். மற்றவர்களைப்  பற்றி கவலைப்படாது உங்கள் பாகத்தில் வீடு கட்ட முயற்சியுங்கள். தடை செய்வோரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுங்கள். தற்போதைய நேரம்  உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தைரியமாக செயலில் இறங்குங்கள். சொந்த ஊரில், சொந்த வீட்டில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் காலம்  நெருங்கி வருகிறது. 68வது வயது முதல் உங்கள் கனவு நனவாகத் துவங்கும்.

32 வயதாகும் எனது மகளுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவளது ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா என்பதும் தெரியவில்லை.  அவளது திருமணம் எப்போது நடைபெறும்? நல்ல கணவர் கிடைப்பாரா? - சென்னை வாசகி.

உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது பெரிய அளவிலான தோஷம் எதுவும் இருப்பது போல்  தெரியவில்லை. நெருங்கி வந்த கால நேரத்தை தவறவிட்டதால் தற்போது திருமணம் தடைபட்டு வருவது போல் தோன்றுகிறது. பூசம் நட்சத்திரம்,  கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது கேது தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது  ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தான அதிபதியான புதன் ஒன்பதில் அமர்ந்திருக்கிறார்.

பித்ரு காரகன் சூரியனும் ஒன்பதாம் வீட்டில் புதனுடன் இணைந்திருப்பதால் அவரது தகப்பனார் வழி உறவினர்கள் மூலமாக வரன் அமைவார்.  ஒன்பதாம் வீட்டினை பாக்ய ஸ்தானம் என்றும் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. அதனடிப்படையில் நோக்கும்போது  இவர் செய்த பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பாக்கியவானாக ஒரு கணவர் இந்தப் பெண்ணுக்கு அமைவார் என்பதையே இவரது ஜாதகம்  தெளிவாக உரைக்கிறது.

தற்போது கடக ராசிக்கு குரு பலன் வந்திருப்பதாலும், தசாபுக்தியின் அடிப்படையில் கல்யாண யோகம் கூடி வந்திருப்பதாலும் கால நேரத்தினைப்  பயன்படுத்திக் கொண்டு வேகமாக மாப்பிள்ளை பாருங்கள். களத்ர ஸ்தானம் என்பது சுத்தமாக இருப்பதால் எந்தவிதமான தோஷமும் இல்லை. 2019ம்  ஆண்டு ஆவணி மாதத்திற்குள்ளாக உங்கள் மகளின் திருமணம் நடந்து விடும். பெற்றோர் ஆகிய உங்கள் கவலையும் காணாமல் போகும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம்.  கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004.


சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்