SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மத்தின் பக்கம் நில்லுங்கள்

2019-01-09@ 17:24:28

மகாபாரதம் - 98

விதுரருடைய வீட்டில் போய் அமர்ந்து கொண்டார் கிருஷ்ணர். அங்கு அற்புதமான உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. தன்னை பார்க்க வந்திருந்த  அந்தணர்களை அழைத்து அவர்களுக்கு அன்னமும், செல்வமும் கொடுத்து அங்கு முழு திருப்தியுடன் நிதானமாக உணவு எடுத்துக் கொண்டார். பிறகு ஓய்வாக  சௌகரியமான ஆசனத்தில் சாய்ந்தார். விதுரர் அவர் காலை வருடியபடி பேசத் தொடங்கினார்.‘‘புஜ பலம், படை பலத்தை நம்பி தன்னைச் சுற்றியுள்ள  வில்லாளிகளையும், தளபதிகளையும் பார்த்து இந்திரனே இப்போது போருக்கு வந்தாலும் நான் ஜெயித்து விடுவேன் என்று துரியோதனன் சொல்கிறான். போர்  பற்றிய வலியை, பயங்கரத்தை அறியாதவனாக இருக்கிறான்.

எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்பதில்லை. அவனுக்கு தூபம் போட அவன் மோகாவேசத்தை தூண்டி விட அவன் பக்கம் ஆட்கள் இருக்கிறார்கள்.  அதை நம்பி அவன் இன்னும் அதிகம் கொக்கரிக்கிறான். திடமாக அழிவுக்கு போகிறவனை எப்படித் தடுப்பது. எல்லா வகையிலும் கபடமான எண்ணம்தான்  அவனுக்குத் தோன்றுகிறது. அந்த கௌரவ சபையில் உங்களை எதிர்க்கின்ற உங்களுக்கு பிடிக்காத மன்னர்கள் பலர் உண்டு. அங்கு ஏதும் விபரீதம் நடக்கலாம்.  எனவே, அந்த சபைக்கு நீங்கள் போக வேண்டாம். உங்கள் பராக்கிரமத்திற்கு எதிரே அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் உங்கள் மீது உள்ள  பிரேமையால்,

மரியாதையால் நீங்கள் போக வேண்டாம் என்று வேண்டுகின்றேன். தேகதாரிகளின் அந்தர்யாமி நீர். நீங்கள் உள்ளிருப்பதை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது.  அன்பின் காரணமாக என்ன சொல்ல வேண்டுமோ அறிவின் பாற்பட்டு என்ன சொல்ல வேண்டுமோ இங்குள்ள நிலைமையைக் கருதி என்ன சொல்ல வேண்டுமோ  இதையெல்லாம் அறிந்து எங்களிடம் பேசினீர்கள். துரியோதனின் துஷ்டத் தன்மையையும், அங்குள்ள  க்ஷத்ரியர்களின் கொடூரத்தையும் அறிந்தே இங்கு  வந்திருக்கிறேன். இந்த பூமி யானை, குதிரை, போர் வீரர்கள் என்று மடிந்து கிடப்பதை விரும்புகிறது.

கர்ணனால் தூண்டப்பட்ட துரியோதனனின் பின்னால் பெரிய க்ஷத்ரிய கூட்டம் கூடியிருக்கிறது. அவை அனைத்திற்கும் அழிவு ஏற்படப் போகிறது. இங்கு  இயன்றவரை அவர்களிடம் பேசி நல்வழிப்படுத்துவேன். அப்படிச் செய்யாதவனை வித்வான்கள் குரூர மனம் படைத்தவர் என்று சொல்கிறார்கள். அழிவுக்கு  ஆதரவாக இருப்பவன் என்று ஏசுகிறார்கள். நண்பருடைய தலைமுடியைப் பற்றி தீய காரியத்திலிருந்து விலக்கலாம் தவறில்லை. இரண்டு சகோதரர்களிடையே  பரஸ்பரம் கலகம் உண்டானால் ஒரு நண்பன் நடுநிலையிலிருந்து அந்த கலகத்தை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

என்னை அந்த சபை எதுவும் செய்து விட முடியாது. கோபம் கொண்ட சிங்கத்தின் முன்பு எந்த விலங்கும் நிற்காது. என் கோபத்திற்கு துரியோதனனை சுற்றியுள்ள  மன்னர்கள் ஈடாக மாட்டார்கள்.’ அழகான மிருதுவான அந்தப் படுக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணர் பேச்சு சுகத்திலேயே கண் மூடி தூங்கி  விட்டார். விடியல் நேரத்தில் குளிர்ந்த காற்றும், மங்கல வாத்தியங்களும் அவரை துயில் எழுப்பின. எழுந்து நீராடி ஸ்ரீகிருஷ்ணர் சந்தியாவந்தனமும், அக்னி  ஹோத்ரமும் செய்கின்றபோது துரியோதனன் தன் மாமன் சகுனியோடு விதுரரின் வீட்டிற்கு வந்தான்.

கிருஷ்ணரைப் பார்த்து கை கூப்பினான். ‘‘திருதராஷ்டிரர் சபைக்கு வந்து விட்டார். உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறார். எல்லா மன்னர்களும்  கூடிவிட்டார்கள். சபை உங்கள் வருகைக்கு காத்திருக்கிறது. வந்து எங்களை கௌரவிக்க வேண்டும்’’ என்று பணிவாகப் பேசினான். நேற்று பேசிய பேச்சின்  நிஷ்டூரம் முற்றிலும் மறைந்திருந்தது. வருகிறேன் என்று கிருஷ்ணர் சொல்ல அவன் வாசலுக்குப் போய் காத்திருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் சூடான பானங்களையும்,  காலை உணவையும் முடித்துக் கொண்டு தேர் ஏறினார். அவர் படை அவரைச் சுற்றிக் கொண்டது. துரியோதனனும், சகுனியும் பின் தொடர்ந்தார்கள்.

மறுபடியும் வழி முழுவதும் மக்கள். தேர் முன்னேறாத வண்ணம் சூழ்ந்து கொண்டார்கள். மெல்ல விலக்கி வாசலுக்கு வந்த பல மன்னர்களை உற்றுப் பார்த்து  சபைக்குள் பிரவேசித்தார். கர்ணனும், கிருத வர்ணனும் முன் வந்து வரவேற்றார்கள். துரோணாச்சாரியார் தன் ஆசனத்தை விட்டு முன் வந்து கிருஷ்ணரின்  கையைப் பிடித்து வரவேற்றார். தங்கம் பதித்த ஒளி மிகுந்த சர்வதோபத்ர என்ற ஆசனம் அவருக்காக வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மெல்ல சிரித்தபடி  ஸ்ரீகிருஷ்ணர் அதில் அமர்ந்து கொண்டார். அமர்ந்ததும் சாளரத்தின் வழியே மேகத்தைப் பார்த்து அங்கு தேவ ரிஷிகள் இருப்பதைக் கண்டார்.
 
பீஷ்மரை நோக்கி, இந்த சபைக்கு சூட்சம சக்தி நிறைந்த ரிஷிகள் வர விரும்புகின்றனர். அவர்களுக்கு தகுதியான ஆசனம் போட வேண்டும். உடனே செய்யுங்கள்  என்று உத்தரவிட்டார். ரிஷிகள் உட்கார நீண்ட நீண்ட ஆசனங்கள் போடப்பட்டன. சிறிது நேரத்தில் அங்கு ரிஷிகள் தோன்றினார்கள். அவர்களுக்கு முறைப்படி  மரியாதை அளிக்கப்பட்டது. எல்லோரும் ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் அவரைப் பற்றி கேள்விப்பட்டதையெல்லாம் நினைவில் கொண்டு வந்து ஆனந்தமாய்  அவரை பார்க்கத் துவங்கினார்கள். எல்லோர் மனமும் ஸ்ரீகிருஷ்ணரிடமே லயித்திருந்தது.  

சிம்மம் போன்ற குரலில் சபையில் உள்ள அனைவருக்கும் கேட்கும் வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் பேசத் துவங்கினார். “பரத கண்டத்தின் மிகப் பெரிய குலம் குருகுலம்.  இது தனக்குள் சண்டையிட்டு அழிந்தால் பரத கண்டமே அழிந்ததாகத்தான் கருதப்படும். மற்ற ராஜ்ய வம்சங்களை காட்டிலும் குரு வம்சத்தில் கிருபை,  கருணை,  எளிமை, பொறுமை, சத்தியம் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. உள்ளும் புறமும் வெவ்வேறாக கௌரவர்கள் நடந்து கொள்வாராயின் அதை திருதராஷ்டிரா  நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் கொடிய மனிதர்களைப் போல நடக்கிறார்கள். தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை ஒரு ஒழுங்கில் வையுங்கள்.

பாண்டவர்களை நான் கட்டுப்படுத்துகிறேன். உங்கள் ஆளுமையில் அவர்கள் இல்லையெனில் இந்த குரு வம்சம் நாசமடையும். பாண்டவர்களோடு பகை என்று  வந்தால் முடிவு நன்றாக இருக்காது. ஆனால் அதே பாண்டவர்கள் உங்களுக்கு நண்பர்களாகி நின்றால் தேவாதி இந்திரர்களாலும் உங்களை ஜெயிக்க முடியாது.  உங்களை எதிர்க்க மன்னர்களே இல்லாது மிகுந்த பாதுகாப்போடு சுகமாக வாழ முடியும். ஆனால் போர் தொடங்குமானால் பெரும் அழிவு ஏற்படும். பாண்டவர்கள்  கொல்லப்பட்டாலோ, கௌரவர்கள் இறந்தாலோ உங்கள் துக்கம் ஒன்றுதான். இதில் எந்த அழிவு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

திருதராஷ்டிரா, வயது முதிர்ச்சியினால் உங்கள் உடம்பு க்ஷீணமாகி விட்டது. இந்த முதுமையில் முன் எப்போதையும் விட மற்றவருக்கு உதவியாக இருக்க  வேண்டும். பாண்டவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கிறது. சொன்ன சொல் தவறாது நீங்கள் ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவீர்கள் என்று  பன்னிரெண்டு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாத வாசமும் பாண்டவர்கள் மேற்கொண்டார்கள். இப்போது அதை முற்றிலும் மறந்து விடுவது நல்லதல்ல.  தயவுசெய்து பெற்றவனைப் போல நடந்து கொள்ளுங்கள். பாண்டவர்கள் உங்கள் மீது பெரிய மதிப்பு வைத்து கடைப்பிடித்திருக்கிறார்கள்.

ஒருவேளை பாண்டவர்கள் தவறு என்றால் உரக்கக் குரல் கொடுத்து சரி செய்யுங்கள். நீங்கள் தர்மத்தின்படி நில்லுங்கள். அவர்கள் தர்மம் உங்களுக்குப் புரியும்.  இந்த சபைக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லியனுப்பினார்கள். தர்மத்தால் தொலைக்கப்பட்ட அதர்மம் அதர்மத்தால் தொலைக்கப்பட்ட தர்மம் உங்கள் முன்னே  நிற்கிறது. காதுக்குள் புகுந்து கொண்ட முள்ளைப் போல அது இருக்கிறது. அதைப் பிடுங்கி எடுக்காவிடில் பெரும் வேதனை நேரிடும். ராஜ்ஜியத்தை திருப்பித்  தருமாறு கேட்பது தர்மமானது. நியாயமானது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்.

அந்த இடத்தில் நீங்கள் இல்லை. இருப்பின் இந்தச் சபையில் உங்களுக்கு இடம் இல்லை. பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அடைத்து தீ வைத்து எரியச்  செய்தீர்கள். தேசத்தை விட்டு துரத்தினீர்கள். ஆனால் மறுபடியும் அவர்கள் உங்களையே சரணடைந்தார்கள். சரணடைந்தவர்களை இந்திரப்பிரஸ்தத்தில் இருக்கச்  சொன்னீர்கள். கபடமான சகுனியின் துணையோடு துரியோதனன் ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும் கவர்ந்தததோடு மட்டுமல்லாமல் திரௌபதியையும் சபைக்கு  கொண்டு வரச் செய்தான். பொறுமையுள்ள யுதிர்ஷ்டிரர் க்ஷத்திரிய தர்மத்திலிருந்து விலகவில்லை. உங்கள் புதல்வர்கள் துரியோதனாதிகள் பெரும் பேராசைக்கு  ஆட்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது உங்கள் பொறுப்பு. நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.”ஸ்ரீகிருஷ்ணர் நீண்ட உரையை முடித்த பிறகு சபை  மௌனமாக இருந்தது. அங்கிருந்த எந்த மன்னரும்  பதில் பேச்சுத் தரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. மௌனமாய் இருந்த சபையை  ஜமதக்னியின் புதல்வர்; பரசுராமர் என்ற ரிஷி கலைத்தார். ”நமது வாழ்க்கைக்கு முன்னால் யார் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது. எதனால் எது  ஏற்பட்டது. என்று விஷயங்களை ஒரு மன்னன் தெரிந்து கொள்ள வேண்டும். சரித்திரம் எல்லோருக்கும் முக்கியம் எனினும் ஆள்பவர் அவசியம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜம்போத்பவன் என்கிற சக்கரவர்த்தி இந்த பரதக் கண்டத்தை ஆண்டு வந்தார். மகா பராக்கிரமி. தினந்தோறும் சபை கூடியதும் என்னைவிட சிறந்தோ என்னை  விட வலிவாகவோ இந்த பூமியில் இருக்கிறார்களா என்று கேட்பது உண்டு. அடிக்கடி தன்னை தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் சுபாவத்தை கொண்டிருந்ததை தாங்க  முடியாத ஒரு அந்தணர் அந்த சக்கரவர்த்திக்கு புத்தி கூறும் வண்ணமாக, நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களுக்கு நர நாராயணர் என்று பெயர், அவர்களை வெல்ல  உலகில் யாராலும் முடியாது. நீ அவர்கள் கால் துசுக்கு ஈடாக மாட்டாய். இதனால் உன்னைப் பற்றி நீயே புகழ்ந்து கொள்வதை நிறுத்தி அமைதியாக உன்  வேலையை செய்து கொண்டிரு என்றார்.

ஜம்போத்பவன் என்ற அந்த சக்கரவர்த்திக்கு தாங்கவில்லை. அந்த நர நாரயணரை தேடி உடனே கிளம்பினார். கந்தமாதான பர்வதத்தின் உச்சியில் அந்த நர  நாராயணர்கள் தவம் செய்த நிலையில் இருந்தனர். பசி தாகத்தால் பலஹீனமாக இருந்தார்கள். குளிரையும், வெப்பத்தையும், காற்றையும் சகித்து  மெலிந்திருந்தார்கள். அந்த சக்கரவர்த்தியை வரவேற்று உபசாரம் செய்தார்கள். ”பெரியோர்களே, நமஸ்காரம். என் வீரத்தால் உலகனைத்தையும் வென்று  விட்டேன். எனக்கு எதிராக யாருமே இல்லையென்று எண்ணிக் கொண்டிருந்தபோது உங்கள் இருவரின் பெயரையும் சொன்னார்கள்.

அதனால் உங்களைத் தேடி வந்தேன். உங்கள் உபசரிப்பு மிகுந்த திருப்தியை தந்தது. அதே உபசரிப்பாய் என்னோடு யுத்தம் செய்ய வரவேண்டும் ” என்று  பணிவாக கேட்டுக் கொண்டார். அங்கே பரஸ்பரம் கோபமில்லை. யுத்தத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் அதில் ஒருவர் தன்னை நிருபிக்க யுத்தம்  தேவையாக இருந்தது. அந்த நிரூபணம் கூட பூமியில் தேவைப்படவில்லை. யாரும் நிரூபிக்கச் சொல்லவில்லை. ஆனால் யுத்தம் அங்கு அவசரம் காட்டிற்று.  நரன் எனப்பட்டவர் அமைதியான முறையில் மெல்லியதாய் சிரித்தபடி ஜம்போத்பவன் என்ற சக்கரவர்த்தியிடம் பேசினார்.

”இது சமாதான பூமி. இந்த ஆசிரமத்தில் ஒருபொழுதும் போர் நிகழாது. கோணலான மன விருப்பங்கள் இங்கு நிகழாது. இந்த பூமியில் ஏராளமான க்ஷத்திரியர்கள்  பல்வேறு பகுதியில் உள்ளனர். அவர்களிடம் போய் போர் செய்து உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.”அந்த மகாத்மாக்கள் இருவரும் கை கூப்பி  சக்கரவர்த்தியிடம் தங்கள் மன்னிப்பைக் கூறினார்கள். போர் செய்ய மாட்டோம் என்றார்கள். ஆனால் ஜம்போத்பவன் திரும்பத் திரும்ப அவர்களை போருக்கு  அழைத்துக் கொண்டிருந்தான். போரை யாசித்துக் கொண்டிருந்தான். அதை பொறுக்காத நரன் ஒரு கொத்து துரும்பை கையில் எடுத்துக் கொண்டான்.

”சக்கரவர்த்தி உன் விருப்பப்படி ஆகுக. கவசங்களை அணிந்து கொள். அஸ்திர சாஸ்திரங்களை தயார்படுத்திக் கொள். தைரியத்தை மனதில் ஏற்றிக் கொள்.  மறுபடியும் சொல்கிறேன். எனக்கு போரில் விருப்பமில்லை. ஆயுதம் இல்லாத உங்களை எதிர்க்க நான் விரும்பவில்லை. ””ஆனால் தவசிகளே நரன் கையில்  துரும்புகளை எடுத்து விட்டார். இந்த எதிர்ப்பு எனக்குப் போதும். உங்களை சின்னாபின்னப்படுத்துவேன்” என்று அஸ்திர மழை பொழியலானார். நரன் கையில்  இருந்த அத்தனை துரும்புகளும் மேலெழுந்தன.

ஜம்போத்பவன் கண் ,காது ,மூக்கு ,வாய், தலை, நெஞ்சு, கழுத்து ,மர்மஸ்தானம் எல்லாவற்றையும் அந்த துரும்புகள் கடுமையாக தாக்கி துளையிட்டன. மிகப்  பெரிய வேதனையை கொடுத்தன. அலற வைத்தன. துரும்புகளே இப்படி அடிக்கும் என்றால் அஸ்திரங்கள் என்ன செய்யும். அந்த சக்கரவர்த்தி தடேர் என்று நர  நாராயணர் காலில் விழுந்தார். ”யுத்தம் என்பது பயிற்சியின்பால் வருவது. அஸ்திரங்கள் உண்டாக்கப்படுபவன. தந்திரங்கள்உடையன. யுத்தம் என்பது தேக பலம்.  வலி பொறுக்கும் தன்மை. என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படி துரும்புகளால் சிதறடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் செய்த யுத்தத்திற்கு புத்தி பலமோ தேக பலமோ காரணமல்ல. மனோ பலமே யுத்தத்திற்கு காரணம். அந்த மனோ பலம் தர்மத்திலிருந்து உண்டாகிறது.  அந்த தர்மம் அமைதியிலிருந்து பிறக்கிறது. அந்த அமைதி ஆசையை விலக்குவதிலிருந்து வருகிறது. என் அறிவீனத்தை மன்னித்து விடுங்கள். எல்லாம் தெரியும்  என்ற மமதையே எல்லா தவறுக்கும் காரணம். இதற்குப் பிறகு நாரதருடைய பேச்சு துவங்குகிறது. இந்திரனுடைய தேரோட்டி மாதலி. அவன் மகளுக்கு வரன்  தேடுவதற்காக நாரதர் உதவி செய்ய தீர்மானித்து வருணலோகம், பாதாள லோகம், கருட லோகம், ஹிரண்யபுரம், ரஸாதலம், நாகலோகம், போன்ற  இடங்களையும் , அதைப் பற்றி வர்ணனைகளையும் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இந்த சபையில் இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன எனறு யோசிக்கும் பொழுது மனிதருடைய வாழ்க்கையை அல்பம் என்று சொல்வதற்கு  இந்த விளக்கம் உதவுகிறது. துரியோதனா, நீ உன் அஸ்தினாபுரம் மட்டுமே பரந்த சாம்ராஜ்யம் என்று நினைத்துக் கொள்ளாதே. இந்த பூமியைச் சுற்றி பல்வேறு  விஷயங்கள் இருக்கின்றன. பல்வேறு விதமானவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் புவியோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். உனக்கு அடங்கியது. இவ்வுலகம் என்று  எண்ணுவது மூடத்தனம் என்பதைச் சொல்லவே இந்த விவரணைகள் முயல்கின்றன.

இந்த இடத்தின் வர்ணனைகளோடு தென் திசை வர்ணனை வட திசை வர்ணனை கிழக்கு , மேற்கு திசை வர்ணனை என்று பூமியின் நீள அகலங்கள்  சொல்லப்படுகின்றன. முன்னோர்களின் பிரச்னையான கதைகள் விளக்கப்படுகின்றன. உலகத்தின் பிரம்மாண்டமும், காலத்தின் பிரம்மாண்டமும் துரியோதனனுக்கு  திணிக்கப்படுகின்றன. இந்த விவரணைகளை யார் சொல்லுகிறார்கள், என்ன சொல்லுகிறார்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று உணர்ந்து புரிந்து கொள்ள ஒரு  நிதானம் வேண்டும். துரியோதனனிடம் அந்த நிதானம் இல்லை. பெரியோர்களை பேச வைத்த பிறகு அவர்கள் வாக்கியம் துரியோதனனிடம் எடுபடவில்லை
என்பது புரிந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணர் துரியோதனனிடம் கோபமாக , நேரிடையாக பேசத் துவங்கினார்.

‘‘துரியோதனா, தயவுசெய்து இவர்கள் பேச்சைக் கேள். உனது நன்மைக்காகவே ஆலோசனைகள் அளிக்கிறேன். சிறந்த குலத்தில் பிறந்த நீ ஏன் அதர்மமான  காரியத்தை செய்கிறாய். துஷ்ட புத்தி உள்ளவர்களும், வெட்கமற்றவர்களும் கொடுமைக்காரர்கள் மட்டுமே ஆத்திரப்படுவார்கள். இந்த உலகில் நல்லவர்களின்  செயல்கள் கதை போல தலைமுறை தலைமுறையாக பேசப்பட்டு வருகிறது. அதுவே இன்றைய வாழ்வின் எடுத்துக்காட்டாக இருக்கிறது . பாண்டவர்களோடு  சமாதானம் செய்து கொள். இது உன் தந்தைக்கு நல்லது. அவர் பித்து பிடித்தது போல எல்லா பக்கமும் அலைமோதுகிறார்.

அதைக் கண்டு உனக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும் .சாஸ்திர சம்பிரதாயமான உபதேசத்தைக் கேட்டும் எவனொருவன் அதை ஏற்றுக் கொள்வதில்லையோ  அவன் மறுப்பு தீது தரும். காய்ந்த இந்திராயண பழம் ஜீரணித்த பிறகு எரிச்சலை தோன்றுவிப்பது போல தவறு செய்தவன் மனம் சோகத்தால் ஆகிறது.  எவனொருவன் நல்லவர்களின் உயர்ந்த பேச்சைக் கேட்டு தன் கருத்தின் பிடிவாதத்தை விட்டு விடுகிறானோ அவன் உன்னதம் அடைகிறான். ஒருவன் தன்  கருத்தை நல்ல நோக்கத்திற்காக மாற்றிக் கொள்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை.

உன்னுடைய புத்தி எனக்குப் புரியவில்லை.நீ எதற்காக பாண்டவர்களிடம் விரோதம் வைத்து திறமையற்றவர்களை ஆதரித்து அலட்டிக் கொள்கிறாய்.  ஆரம்பத்திலிருந்தே நீ பாண்டவர்களிடம் கோபமோடு இருந்திருக்கிறாய். இதற்காக அவர்கள் கோபமுறவில்லை. அவர்கள் தர்மாத்மாக்கள். பொறாமைப்பட்ட  மனிதன் எந்த விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்வதில்லை. அசூயை உள்ளவர்கள் முன்னால் எல்லா எடுத்துக்காட்டுகளும் முழுமை  பெறாதவையாகிவிடுகின்றன. பாண்டவர்களால் சம்பாதிக்கப்பட்ட ராஜ்ஜியத்தைத்தான் நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். அதை நீ உன் வலிவால் பெறவில்லை.

கோபம் கொண்ட பீமனை எதிர்ப்பதற்கு ஒருவரும் இல்லை. பீஷ்மராலோ , துரோணராலோ, கிருபராலோ அர்ஜுனனை ஜெயித்து விட முடியாது. உன்  பேராசையால் உன் குலத்தை அழித்து விடாதே. கௌரவ வம்சத்தை நாசம் செய்து விடாதே.உனக்காகவும் புரியவில்லை. சொன்னாலும் ஏற்பதில்லை. குலத்தின்  அழிவிற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன் குலத்தையும் தழைக்கவைத்து உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களையும் மகிழ்வித்து நீண்ட நாள் மகிழ்ச்சியோடு  இருக்க பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். ”ஸ்ரீகிருஷ்ணர் பேசியதும் பீஷ்மர் துரியோதனன் பக்கம் திரும்பினார்.

” ஸ்ரீகிருஷ்ணர் மிகச் சரியான வார்த்தைகளைப் பேசினார். அவர் பேசியதில் ஒரு வார்த்தை என்னைத் தாக்கியது. உன் துஷ்டத்தனத்தால் மக்களை பாழாக்காதே  என்றார். இந்த வார்த்தை உன்னை நடுக்கமுறச் செய்யவில்லையா, இந்த அழிவை திருதராஷ்டிரன் உயிரோடு இருக்கும் போதே செய்வாயா, தாய் தந்தையரை  துயரக் கடலில்  மூழ்கடிக்கும்படி ஒரு பிள்ளை செய்யக் கூடாது. இது களங்கமானவன் செய்யும் காரியம். ”ஆனால் இந்தப் பேச்சுக்களுக்கு காது கொடுத்தும்  கொடுக்காதவன் போல துரியோதனன் கோபத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். பீஷ்மரைத் தொடர்ந்து துரோணர் பேசினார்.

- பாலகுமாரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்