SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா?

2019-01-03@ 16:30:46

திருமண யோகம் விவாகரத்து காதல் திருமணம் இரண்டாம் தாரம் இல்லற வாழ்க்கையில் பலவகையான பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள், பிரிவுகள், சந்தேகங்கள், வாக்குவாதங்கள், மன உளைச்சல், தற்கொலை முயற்சிகள், கோர்ட், கேஸ், வழக்குகள், பஞ்சாயத்து போன்ற குடும்ப பிரச்னைகள் ஏற்படுவதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம், கூட்டுக் குடும்ப பாரம்பரியம் சிதைந்து போனது. பணம் ஒன்றே குறிக்கோள், விட்டுக் கொடுத்து செல்லும் எண்ணங்கள் குறைந்து, சொந்த பந்தங்களின் அன்பு, ஆதரவு இல்லாத வாழ்க்கை முறை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்கின்ற மனோபாவம். ஆண், பெண் சரி நிகர் சமானம் என்ற தவறான நிலைப்பாடு போன்ற சமூக அமைப்பு பிரச்னைகள் முக்கிய காரணமாக இருந்தாலும், குடும்பத்தில் எல்லை மீறி, வரம்பு மீறி நடைபெறுகின்ற பல முக்கிய பிரச்னைகள், பிரிவுகளுக்கு ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

மேலும் அந்த காலகட்டத்தில் நடைபெறும் தசாபுத்திகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப பிரச்னைகளுக்கு முக்கியமாக தோஷ, நீச கிரகங்கள் காரணமாக இருப்பது சாஸ்திர விளக்கத்தின்படியும், நடைமுறை அனுபவத்திலும் சரியாக இருக்கிறது. திருமண பொருத்தம் பார்க்கும்போது ஜாதக அமைப்பின்படியும், தோஷ அமைப்பின்படியும் பொருத்தம் பார்க்காமல், நட்சத்திரப் பொருத்தம், பெயர் ராசிப்பொருத்தம். 7 பொருத்தம், 8 பொருத்தம் என்று சொல்லி இரண்டு ஜாதகங்களை சேர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளே முக்கிய காரணம். மனக்கசப்பு, சிக்கல், பிரச்னைகளைத் தரக்கூடிய கிரக நிலைகள். பொதுவாக லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டை பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள்.

இது தவிர அந்த ஸ்தானத்திற்கு பல்வேறு முக்கியமான ஆதிக்கங்கள், காரகங்கள், உரிமைகள் இருக்கின்றன. இந்த வீட்டில் தீய, நீச கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் சிறப்பாகும். குறிப்பாக இந்த 5ஆம் வீட்டில் சனி இருப்பது திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி. குரு பார்த்த இடம் விருத்தி சுபம். சனி பார்த்த இடம் பாழ் தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

சனி 5ஆம் வீட்டில் இருந்து, களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டையும், தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2ஆம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடையே சிக்கல், பிரச்னைகள், மனக் கசப்பு, வாக்குவாதம், நெறிமுறை தவறிய வாழ்க்கை, விவாகரத்து, ஜீவனாம்ச வழக்கு, தன் வாயாலே கெடுவது, அற்ப சிநேகிதம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இந்த 5ஆம் இடத்தில் இருக்கும் சனி காரணமாகிறார். மேலும் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய விஷயங்கள் சரியாக இல்லாதபோது இல்வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுகின்றது. சிந்தனை, வாக்கு, மனம் போன்ற அமைப்புக்கள், சரியாக இல்லாததால் காதல், கலப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். புத்திர தோஷம் காரணமாக புத்திர பாக்கியமும் காலதாமதமாகிறது. பிரிவுகள், வழக்குகள் என்று வராதபோது கணவன்  மனைவியிடையே ஓர் ரசனை இல்லாத கசப்புணர்வு மிக்க ஏதோ வேண்டா வெறுப்பாக, உடலும் மனமும் ஒன்றாத ஒரு கட்டாய வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது அல்லது நீச கிரகங்கள் சம்பந்தப்பட்டால் இல்வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

ஏழாம் இடத்தில் நீசக் கிரகம், கூட்டு கிரக சேர்க்கை. ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக அமைப்புக்கள் இருக்கக் கூடாது.

ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் சேர்க்கை, பார்வை. சனி, சந்திரன், சேர்க்கை, பார்வை ஏற்பட்டால் இருதார அமைப்பு வரலாம். விதவைப் பெண்ணை மணக்க நேரும் அல்லது விதவைப் பெண்ணின் தொடர்பு ஏற்படும்.

திருமணம் நடைபெறும் காலத்திலோ, அல்லது அதற்கு அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஏற்படும் தசா மாற்றம் சில பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரண்டு, ஏழு, எட்டாம் இடங்களில் நீச கிரகங்கள் இருந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் ஒவ்வொன்றாக மனக் கசப்புக்கள் உண்டாகும். 6, 8, 12ஆம் அதிபதிகளின் தசா சில முக்கிய துயர; பாதகமான சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாகிறது. திடீர் விபத்து, உடல் ஆரோக்கியம் பாதிப்பு, தொடர் மருத்துவ செலவுகள், அறுவை சிகிச்சைகள் அதனால் பொருளாதார பிரச்னை, கடன், வட்டி என ஒன்றைத் தொட்டு ஒன்று வந்து இல்வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டு விடுகிறது.

பெண் ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது சேர்ந்து இருப்பது, ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுடன் கேது சேர்ந்து இருப்பது நல்ல அமைப்பு கிடையாது. சதா குழப்பங்கள், விரக்தி மனப்பான்மை இருக்கும். இன்பம் இல்லா இல்வாழ்க்கை, இருதாரயோகம், பிற பெண்களின் சேர்க்கைக்கு வழிவகுக்கும். பெண்கள் நிதானமற்ற நிலையில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவார்கள்.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டிலும், பன்னிரெண்டாம் வீட்டிலும். தீய, நீச கிரகங்கள், ராகு, கேது போன்றவை இருந்தால். ஒருவருக்கொருவர் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படுவார்கள். இருவருக்கும் தான் என்ற ஈகோ இருக்கும். மனம் ஒத்துப்போகாது. தாம்பத்திய சுகமும் இருக்காது. இருவரின் தேவைகளும், விருப்பங்களும் எதிரும் புதிருமாக யதார்த்த நிலையில் இல்லாமல் எதிர்மறையான சிந்தனைகளாக இருக்கும்.

நட்சத்திரப் பொருத்தம் என்று பார்த்து யோனிப் பொருத்தம் இருக்கிறது என்று சொல்வார்கள். இது பெயரளவிற்கு அந்தக் காலத்தில் எல்லா விஷயங்களும் கட்டுக்குள் அடங்கி இருந்தன. நட்சத்திரங்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. யோனி பொருத்தம் என்பது தம்பதிகளின் உடல் உறவு சம்பந்தப்பட்ட விஷயமாகும். இதற்கு பல கிரகங்கள் துணை புரிய வேண்டும். செவ்வாய் தோஷம் என்ற வகையில் ஜாதகங்களை சேர்ப்பதே இந்த உடல் சம்பந்தமான சேர்க்கை விஷயத்திற்குத்தான். ஆண் ஜாதகத்தில் 3, 7, 12  ஆகிய ஸ்தானங்கள் பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். மூன்றாம் அதிபதி பலமாக இருப்பது அவசியம். லக்னம், மூன்று, ஏழு ஆகிய உங்களின் சனி, புதன் இருவரும் சம்பந்தப்படாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் மூன்று கிரங்களுக்கு மேல் இருந்தாலும், பார்த்தாலும் இல்வாழ்க்கை இனிக்காது. ஏனோ தானோ என்ற ஜாதகர் செயல்படுவார். எதிலும் பற்று இருக்காது. விரக்தி, பிரமை பிடித்தவர் போல் காணப்படுவார்கள். ஜபம், தியானம், யோகம் போன்ற ஆன்மிக நாட்டம் அதிகரித்து சந்யாச வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் அல்லது 6, 8, 12க்குடையவர்களுடன் சம்பந்தப்பட்டாலும் பெண்களால் பிரச்னை, அவமானம், பால்வினை நோய்கள் வர வாய்ப்புள்ளது.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி, சந்திரன், சனி, சுக்கிரன். சந்திரன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால் வயது முதிர்ந்த முதுமை தோற்றம் கொண்ட கணவர் அமையலாம். இரண்டாம் தாரமாக செல்லும் அமைப்பு உண்டு. சிற்றின்பத்தில் இச்சை, நாட்டம் அதிகம் இருக்கும்.

இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருப்பது சனி சம்பந்தம், பார்வை ஏற்பட்டால் தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாக இருப்பதால் இதில் ஏதாவது ஒரு ஸ்தானம் பலவீனமாக இருக்கும். பொருளாதார, பணப் பிரச்னைகள் உண்டாகும். இதன் மூலம் குடும்பத்தில் எப்பொழுதும் நிம்மதியற்ற நிலை காணப்படும். வாக்குவாதம் ஒத்துப் போகாத குணநலன்கள் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை, பேச்சிற்கு பேச்சு என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற இணக்கமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய அமைப்பில் கோச்சார சனியின் அமைப்பு சாதகமாக இல்லாமல் கண்ட சனி, அஷ்டம சனி, 7 1/2 சனி போன்றவை நடக்கும் போதும், சனி தசா, ராகு, கேது தசா நடக்கும் போதும் பிரச்னைகள் அதிகமாகும். பிரிவுகள், உடல்நலப் பாதிப்புக்கள் வருவதற்கு இந்த அமைப்பு முக்கிய காரணம் எனலாம்.

பொதுவாக லக்னம், லக்னாதிபதி, ராசியாதிபதி, சந்திரன். இந்த விஷயங்கள் பலமாக இருப்பது நன்மை தரும். லக்னாதிபதி நல்ல இடத்தில் ராசி, நவாம்ச கட்டத்தில் இருந்தால் விட்டுக் கொடுக்கும் தன்மை, பெருந்தன்மை, தயாள குணம் போன்றவை இருக்கும். பிரச்னைகளை  எப்படி அணுக வேண்டும் என்பதை இவர்களிடம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். லக்னாதிபதி பலமாக உள்ள ஜாதகம் எல்லா சோதனைகளையும் சமாளித்து வெற்றி பெறும். இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் இந்த மூன்று ஸ்தானங்களும் பலமாக அமையும்போது எந்த சிக்கல்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை சாதுர்யமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். குடும்பத்திற்காகவும், உறவுகளுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள்.

இப்படிப்பட்ட அமைப்புக்கள் நல்லெண்ணங்களையும், நல்ல ஒழுக்கத்தையும் பண்பையும் தரும். ஆகையால் எதையும் தாங்கும் சுமை தாங்கிகளாக இருப்பார்கள்.
ஆகையால் இல்வாழ்க்கை என்பது இரண்டும் கலந்ததுதான். ஏற்றமும், உயர்வும், ஒருவருக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்காது. வாழ்க்கைப் பயணம் என்றால் அதில் ஆயிரம் இருக்கும். ஆகையால் குறைகள், தோஷங்கள், நிறைகள், யோகங்கள் கலந்து தான் இருக்கும். இதற்கேற்ப ஆண், பெண் இருவரின் ஜாதக கட்டத்தில் லக்னாதிபதி, இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் போன்ற சுப பலத்தை தருகின்ற இடங்கள், அதற்குரிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும். ஜாதகங்களை பார்த்து சேர்ப்பதால் திருமண பந்தம் பலப்படும், எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்வார்கள் என்பது அனுபவத்தில் மிகச் சரியாக உள்ளது.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china23

  சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்