SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைத்ததை முடித்து வைப்பாள் வடுகச்சி அம்மன்

2019-01-02@ 14:24:10

வடுகச்சிமதில், நாங்குநேரி, நெல்லை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள வடுகச்சி மதில் கிராமத்தில் வீற்றிருக்கிறாள். சீனி அம்மாள் என்ற வடுகச்சி அம்மன். மதுரையை நாயக்கர்கள் ஆண்டு வந்த காலத்தில் தமிழகத்தில் மேலும் சில பகுதிகளை நாயக்கர்களின் சிற்றரசர்கள் சிலர் ஆண்டு வந்தனர். நெல்லை மாவட்டம்
வள்ளியூரிலிருந்து மேற்கு பகுதிகள் சிலவற்றை சிற்றரசர் கன்னடியான் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். மகளுக்கு சீனி அம்மாள் என பெயரிட்டு செல்லமாக  வளர்த்து வந்தார். அழகுடனும், அறிவுடனும் திகழ்ந்த சீனி அம்மாள் தான் நினைத்ததை அடையும் பிடிவாதம் குணம் கொண்டவள். தந்தை மன்னன் என்பதால் விரும்பியதை எல்லாம் அடைந்தாள். ஒருநாள் அரண்மனை வளாகத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் தர்மம் கேட்டு ஒருவர் வந்தார். அவர் கழுத்தில் மன்னன் அலங்காரத்தில் அழகான இளைஞன் உருவம் கொண்ட ஓவியம். தர்மம் கேட்டு வந்தவரை அருகே அழைத்து அந்த ஓவியத்தை எடுத்து பார்க்கிறாள். யார் இந்த ஓவியத்தை வரைந்தது. இந்த கற்பனை உருவம் அழகாக உள்ளதே என்று கூற, இளவரசி அம்மா, இது கற்பனை உருவம் அல்ல.

வள்ளியூரை ஆளும் ஐவராசாக்களில் மூத்தவர் குலசேகரப்பாண்டியன் என்று அந்த நபர் பதிலளித்தார். யார்? அவர், எப்படி உனக்கு இதை பரிசளித்தார் என்று இளவரசி சீனி அம்மாள், அந்த நபரிடம் வினவ, அவர் குலசேகரப்பாண்டியனைப் பற்றி கூறுகிறார். ‘காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த மன்னன் பாண்டிய ராசாவுக்கும் அவரது மனைவி மாலையம்மாளுக்கும் ஐந்து மகன்கள். குலசேகரப்பாண்டியன், கூன்பாண்டியன், பொன்பாண்டியன், சேகரப்பாண்டியன், சேர்மப்பாண்டியன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவர்களே ஐவர் ராசாக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். மூத்தவன் குலசேகரப்பாண்டியனுக்கு பெண்ணொருத்தியால் தோஷம் உள்ளதாகவும், கன்னியாகுமரி சென்று கடலில் நீராடி வந்தால் அது நீங்கும் என்று ஜோதிடர் கூறியதால் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும் கன்னியாகுமரி சென்று கடலில் புனித நீராடி அம்மனை தரிசித்து வந்தனர். பின்னர் அங்கிருந்து படை பரிவாரங்களுடன் காஞ்சிக்கு திரும்பினர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் ஊரில் தங்கி இளைப்பாறுகிறபோது, படைவீரர்கள் சிலர் முயல் வேட்டைக்கு சென்றனர்.

நல்ல பருவம் வந்த எட்டு முயல்கள் அவ்வழி வந்தன. அதைக்கண்டு நாய்கள் துரத்தின. வள்ளியூர் அருகே ஊர் எல்லையில் ஓங்கி உயர்ந்த புற்று இருந்தது. அந்த புற்று அருகே வந்த முயல்கள் திரும்பி நாயை துரத்தின. இதை வீரர்கள், மன்னனிடம் கூற, குலசேகரப்பாண்டியன் அவ்விடம் சென்று பார்த்தபோது அசிரீரி கேட்டது. ‘‘மன்னவனே, குலசேகரப்பாண்டியனே. நான் ஆதி சக்தி, வையகம் தோன்றியது முதல் இவ்விடம் உள்ளேன். நான்காவது யுகத்தில் என்னை நீ கண்டு இருக்கிறாய். எனக்கு இவ்விடத்தில் கோயில் கட்டி என்னை வணங்கி வா. நீயும் இப்பகுதியிலே கோட்டை கட்டி ஆட்சி செய். உன்னை நான் மேம்படுத்துவேன் என்று கூறியது. அம்மன் கூறியபடி குலசேகரப்பாண்டியன்  கோயிலை கட்டினான். அம்பாளுக்கு மூன்று யுகம் கண்ட அம்மன் என்று பெயரிட்டு பூஜித்து வருகின்றனர். ஐவராசாக்கள் அவ்விடம் கோட்டைக்கட்டி ஆட்சி புரிகின்றனர்.

குலசேகரப்பாண்டியனின் கொடை திறனைப்பாராட்டி சிற்பி ஒருவர் மன்னனின் உருவத்தை ஓவியமாக வரைந்து பரிசளித்தார். அந்த ஓவியம் பெற்ற மன்னன் மகிழ்வுற்று இருக்கும் தருணத்தில் மன்னனை புகழ்ந்து நான் பாமாலை பாடினேன். அதைக்கேட்டு மன்னன் என்னை அழைத்து வர உத்தரவிட்டார். அவர்,என்னிடம் வேண்டும் என்ன வேண்டும் எனக்கேட்க, மன்னா நீங்க தான் வேண்டும். ஆம் உங்கள் உருவம் தீட்டப்பட்ட இந்த ஓவியம் வேண்டும் என்று கேட்டேன். பொன், பொருள் வேண்டுமா என்று மன்னன் கேட்டார். விலை மதிப்பற்ற இந்த ஓவியம் தான் வேண்டும் என்று அவர் கூற, ஓவியத்தை எனக்கு கொடுத்தார். என்றார் அந்த நபர். மறுகனமே இதை எனக்கு கொடுத்துவிடு என்று இளவரசி அந்த நபரிடம் கேட்க, அவரும் ஓவியத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறார். அந்த நொடியே சீனி அம்மாள், குலசேகரப்பாண்டியன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். மணந்தாள் அவரைத்தான் மணப்பேன். அல்லது மரணத்தை தழுவுவேன் என முடிவு செய்தாள். சதா நேரமும் அவர் நினைவோடு இருந்தாள். இதனால் உணவு, உறக்கமின்றி உடல் மெலிந்தாள்.

மகளின் நிலை கண்ட மன்னன் கன்னடியான், மகளின் தோழிகள் மூலம் காரணம் அறிகிறான். உடனே மகளை அழைத்து, மகளே நீ கேட்டால் அந்த விண்ணையே இங்கே கொண்டு வருவேன். அந்த மன்னனை மணமுடித்து தர மாட்டேனா. அவனையே உனக்கு மணமுடித்து வைக்கிறேன். இது சத்தியம் என்று உறுதி கூறுகிறான். குலசேகரப்பாண்டியனுக்கு இதுகுறித்து தூது அனுப்புகிறான் மன்னன் கன்னடியான். தகவலறிந்த குலசேகரப்பாண்டியன் சீனி அம்மாளை மணமுடிக்க மறுக்கிறான். இதையறிந்த சீனி அம்மாள் மனம் வருந்தினாள். மகளின் மன வருத்தத்தை உணர்ந்த மன்னன் கன்னடியான், குலசேகரனை போரில் தோற்கடித்து அவனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணி போர் தொடுத்தான். ஐவராசாக்கள் கோட்டையை முற்றுகையிடுகிறான். கோட்டையை விட்டு மன்னனும், குடிமக்களும் வெளியே வரவில்லை.

எப்படி மன்னனை வெளியே வரவைப்பது என்று கன்னடியான் எண்ணிக்கொண்டு, தனது அரண்மனைக்கு சென்று வர குதிரையில் தனித்து வந்து கொண்டிருந்தான். வழியில் வள்ளியூர் பெரிய குளத்து வடகரையோரம் உள்ள கள்ள மடையில் நின்றுக் கொண்டு மோர் விற்கும் இடைக்குலப்பெண் ஒருத்தி அழுது கொண்டிருந்தாள். வேகமாக குதிரையில் வந்த கன்னடியான் சட்டென குதிரையை நிறுத்தி, அழுத பெண்ணை அழைத்து காரணம் கேட்டான். அவள் சொன்னாள். மன்னா, கறந்த பாலை காய்ச்சி உறையூற்றி தயிராக்கி கொண்டு வந்து. இம்மடையில் தனது தாய் வீட்டு சிரட்டை ஆப்பையால் (தேங்காய் மூடியால் செய்யப்பட்ட கரண்டி) தெளிந்த நீர் எடுத்து தயிரில் கலந்து மோராக்கி விற்பேன். எனது சிரட்டை ஆப்பை தண்ணீரில் போய் விட்டது என்றாள்.  சரி, வேற ஆப்பைய வாங்கிக்கோ என்றான் மன்னன். இல்லை, இல்லை இது ராசியானதே என்று அழுதவாறு கூறிச் சென்றாள்.

கோட்டையை முற்றுகையிட்ட படையை திரும்பி வரச்செய்தான் கன்னடியான். எப்படி குலசேகரப்பாண்டியனை தன் வசப்படுத்துவது என்று பல வழிகளிலும் முயற்சித்தான். மோரு விற்கும் இடைப்பெண் கோட்டைக்குள் ஒரு நாள் மோரு விற்க போகும்போது அங்கே தெப்பக்குளத்தில் சிரட்டை ஆப்பையால் தண்ணீர் எடுக்கிறாள். அப்போது பழைய சிரட்டை ஆப்பை அங்கே கிடந்தது கண்டு மனம் மகிழ்ந்து அதை எடுத்துக்கொண்டாள். மறுநாள் மோர் விற்க வருகையில் எதிரே மன்னன் வருகிறான். என்ன, பெண்ணே புதிய கரண்டி வாங்கியாச்சா என்று கேட்க, அந்த பெண் பெரிய குளத்தில விட்டத, தெப்பக்குளத்தில கண்டெடுத்தேன் என்று கூறினாள். சற்றென நின்ற மன்னன் யோசித்தான். உடனே ஆட்களை வைத்து பெரிய குளத்து வடகரையில் உள்ள கள்ள மடையை அடைத்து விடுகிறான். இதனால் ஐவராசாக்கள் கோட்டைக்கு தண்ணீர் போவது நின்றது. உடனே ஐவராசாக்கள் கோட்டையை திறந்தனர்.

சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்த கன்னடியானின் ஆட்கள் மறைந்திருந்து குலசேகரப்பாண்டியன் தம்பி மார்களின் தலையை கொய்து விடுகிறார்கள்.
செய்தி அறிந்து குலசேகரப்பாண்டியன் விரைந்து வந்தான். கண்ணில் பட்ட எதிர் படையினரை துவம்சம் செய்தான். களைப்பில் ஓய, எதிரிகளிடம் மாட்டிக் கொண்டான். மன்னன் கன்னடியானின் உத்தரவிற்கிணங்க மன்னன் குலசேகரப்பாண்டியனை சங்கிலியால் பிணைத்து பல்லக்கில் ஏற்றி சீனி அம்மாள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். மாட்டிக்கொண்ட மன்னவனை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். என்று தகவலை சீனி அம்மாளுக்கு தெரியப்படுத்தினர். மனம் மகிழ்ந்த அவள் கூந்தலை சீவி முடித்து அலங்கரித்து, பட்டாடை கட்டி மணமகளாய் நின்றாள். அவள் எதிரில் பல்லக்கில் நிற்கிறான். குலசேகரப்பாண்டியன். போரில் தம்பிகளை இழந்து நிற்கும் எனக்கு தேரில் மணமகன் கோலமா, முக்காலம் உணர்ந்த மூன்று யுகம் கண்ட தாயே நான் இப்போதே மாண்டு போக வேண்டும் என்று கூறியபடி, தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை விழுங்கினார். மறு கனமே உயிர் துறந்தான் குலசேகரப்பாண்டியன்.

தந்தையோடு வந்து சேர்ந்தாள் சீனி அம்மாள். மனம் நிறைந்தவன் மணக்கோலத்தில் வருவான் என்று எதிர்ப்பார்த்தோம். அவன் பிணக்கோலத்தில் அல்லவா பல்லக்கில் மடிந்து கிடக்கிறான் என்று மனம் வருந்தினாள். கணவனே கண்கண்ட தெய்வம் தமிழ் பெண்களுக்கு அப்படி இருக்கையில் மாண்டவன் ஆனாலும் என் ஆண்டவன் அவன்தான் எனக்கூறி தந்தையின் உதவியோடு குலசேகரப்பாண்டியன் கைகளில் தாலிக்கயிறை வைத்து அதை தானே வாங்கி கட்டிக்கொண்டாள் சீனி அம்மாள். தன் கணவன் இறந்து விட்டான் என்று குலசேகரப்பாண்டியன் உடல் மீது விழுந்து அழுது புரண்டாள். குலசேகரப்பாண்டியன் உடலை எரியூட்டியபோது அதே நெருப்பில் விழுந்து தன் இன்னுயிரை மாய்த்தாள். மகளை இழந்த துயரம் தாங்காமல் துடித்த மன்னன் கன்னடியான், மகளின் நினைவு நடுகல் வைத்து வழிபாடு செய்து வந்தான். அருகே அத்தி மரத்தை நட்டு வைத்தான். இம்மரம் காய்க்கும் ஆனால் பூக்காது. தெலுங்கு பேசும் ஒரு சமூகத்தினரை வடுகர் என்று அழைப்பது உண்டு. அந்த வகையில் சீனி அம்மாளை வடுகச்சி என்று அழைத்தனர்.

அந்த அம்மாள் நினைவாக இந்த ஊர் வடுகச்சி மதில் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டுகள் செல்ல ஊரில் வியாதிகள் பரவியது. இது வடுகச்சியின் ஆவிதான் என பயந்தனர் ஊர்மக்கள். உடனே விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். சிவனுக்கு ஆலயம் எழுப்பினர். அந்த ஆலயத்திலேயே சீனி அம்மாளுக்கும் சிலை வைத்து வழிபட்டனர். இவ்வாலய சிவன் சொக்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். உடனுறை அம்பாளாக மீனாட்சி அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சீனி முத்து அம்மன் என்ற வடுகச்சி அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வடுகச்சி அம்மன் கோயில் என்றும் சீனி முத்து அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்குட்பட்ட வடுகச்சி மதில் கிராமத்தில் உள்ளது. வள்ளியூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் ஏர்வாடி அருகே உள்ளது.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்