SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவார்

2018-12-12@ 15:31:17

வண்டியை குதிரை இழுக்குமே தவிர வண்டி ஒருபோதும் குதிரையை இழுக்காது. சிலர் உலக்கையை விழுங்கிவிட்டு ஜீரணமாவதற்காக சுக்குக் கசாயம் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் ஜீரணமாகாது. நம்முடைய பாவங்களுக்காக மனமுருகி அழுது இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும்; பாவத்தை இறைவனிடம் அறிக்கையிட வேண்டும். அப்போதுதான் சமாதானத்தைப் பெற முடியும். இறை ஒன்றிப்பை உணர முடியும், அமைதியை அடைய முடியும். இறை ஊழியம் செய்துவந்த போதகரை யாரும் மதிக்கவில்லை. சரியான வருமானம் கிடைக்கவில்லை. உண்டியல் காணிக்கையும் நிரம்பவில்லை. மனம் நொந்துபோன அவர், இனி என்ன செய்வதென அறியாமல் கலங்கிய கண்களுடன் நடந்து வந்துகொண்டிருந்தபோது அங்கே ஒரு மாடு நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த மாட்டின் அருகே ஒரு விளம்பரப் பலகை இருந்தது.

அதில் நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து முயன்று பாருங்கள். இந்த மாட்டை சிரிக்கவும், அழவும், ஓடவும் வைத்துவிட்டால் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுக்கப்படும் என்று எழுதியிருந்தது. வறுமையில் வாடிய இந்தப் போதகர், ஆண்டவரே! நான் பணமில்லாமல் வாடித்தவிக்கிறேன். எப்படியாவது இந்த ஒரு லட்ச ரூபாய் எனக்குக் கிடைக்க உதவி செய்யும் என்று மன்றாடினார். பிறகு மாட்டின் சொந்தக்காரரிடம் ரூபாய் நூறு கொடுத்துவிட்டு மாட்டின் காதில் ஏதோ சொன்னார். அது விழுந்து விழுந்து சிரித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் மாட்டின் காதில் ஏதோ சொன்னார். மாடு தேம்பித் தேம்பி அழுதது. பின்பு மாட்டின் காதருகே சென்று ஏதோ சொன்னார், அது ஓடியே போய்விட்டது. அங்கிருந்த மாட்டின் சொந்தக்காரரும், மற்றவர்களும் அதிர்ச்சியான ஆச்சரியமடைந்தனர். அவர் அப்படி என்ன சொன்னார்? மாடு ஏன் சிரித்தது? ஏன் அழுதது? ஏன் ஓடிப்போனது? என்று கேட்க அவரிடம் வந்தார்கள்.

அவர் சொன்னார். நான் ஒரு ஊழியக்காரன் என்றதும் அது கேலியாகச் சிரித்தது. என் ஊழியத்தில் நான் பட்ட பாடுகளையும், அவமானங்களையும் சொன்னபோது மாடு உள்ளம் உருகி அழுதது. நீயும் என்னோடு மதபோதனை செய்ய வருகிறாயா? என்று கேட்டதும் அது ஓடியே போய்விட்டது என்றார். ‘‘தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார். ‘‘இருவர் இறைவனிடம் வேண்டக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவர் வரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு இவ்வாறு இறைவனிடம் வேண்டினார். கடவுளே! நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்.

என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன் என்றார். ஆனால், வரிதண்டுபவர் தொலைவில் நின்றுகொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூட துணிவில்லாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘‘கடவுளே! பாவியாகிய என்மீது இரக்கம் வையும்’’ என்றார். இவர்களில், பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார், ஏனெனில் ‘‘தம்மைத்தாமே உயர்த்துபவர் தாழ்த்தப் பெறுவர், தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’’ என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் இயேசு.’’ (லூக்கா 18:914) உலையில் கொதிக்கும் ஒரு பானை அரிசி வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க ஒரு அரிசி போதும். ஒவ்வொரு அரிசியையும் பதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அது முடியவும் முடியாது. அதைப்போல உலகம் நித்தியமானதா, அநித்தியமானதா, சத்துப் பொருளா, அசத்துப் பொருளா என்று பார்க்க உலகப் பொருட்கள் ஒன்றிரண்டினை ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டால் தெரிந்துவிடும்.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்