SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகம் கண்டது புறம் கூறேன்

2018-12-12@ 09:36:09

முப்பேறும் பெற்று மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற தலம்தான் ஞானாரண்யம் என்று சிறப்பிக்கப்படுகின்ற, சுசீந்தை என்று அழைக்கப் பெறுகின்ற சுசீந்திரம் திருத்தலம் ஆகும். தாணு, மால், அயன் எனும் முக்கடவுளரும் தாணுமாலயமூர்த்தியாக, ஆதிவிலும், பின்னர்  கருவறைக்குள்ளும் கோவில் கொண்டுள்ளனர். கொன்றை மரமே தல விருட்சம். இந்த தலவிருட்சத்தின் அடியில்தான் ஆதிமூலவர்கள் மூவரும்  முதற்காட்சி தருகின்றனர். இவர்களை தரிசனம் செய்து கொண்டு, கொடி மரத்தை வணங்கி, நமஸ்கார மண்டபம் வழியாக மூலஸ்தான மூலவர்களை அணுகலாம். தாணுவின்  மூத்த குமாரர் விக்னேஸ்வரர். விக்னங்களை விலக்கி அருளும் விநாயகப் பெருமான், இவர் இல்லாத ஊர்களே இல்லை.ஆனால் பெண் வடிவிலே,  விக்னேஸ்வரி எனும் திருநாமத்தோடு அருள் பொழியும் பெண் விநாயகர்தான் சுசீந்திரம் தவிர வேறு ஊர்களில் இல்லை. இங்கு சிறியதான சந்நதிதான்.  விக்னேஸ்வரி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.

அவரைச் சேவித்துக் கொண்டு, தாணுமாலயனைத் தரிசிக்கலாம். மும்மூர்த்திகளும் ஓருருவாய் நின்று திருக்காட்சி தருகிறார்கள். அப்பர் பெருமானுக்கு  ஆதிசிவன் சூடியிருக்கும் வெண்பிறையின் மீது ஆறாத காதல்போலும். அதனால்தான், பால்மதி சூடி, சென்னிமேல் திங்கள் அணிந்தான், தூ மதி மத்தர்,  இளம் பிறையை முதிர் சடை மேல் வைத்தான். வெண் திங்கள் கண்ணி சூடினான், கூன் பிறை சூடி என்ற நவநவமான பெயர்களை எல்லாம் கூறி,  நூற்றுக்கணக்கில் சிவன் சூடிய பிறை நிலவை அழைக்கின்றார். அப்பர் பெருமான் ஆராதித்த அத்தனை வகையான பிறை நிலாக்களையும் ஒருங்கே, மாலைபோல் கோர்த்து மேனி முழுவதும் நிலவு தவமும்  கோலாகலக் காட்சியினை சுசீந்திரம் திருக்கோயிலில் மட்டுமே காண முடியும். மூலவருக்கும் பிறைநிலா மாலை அலங்காரம் உண்டு. தேரேறி  உலாவரும் உற்சவருக்கும் பிறை நிலா மாலை அலங்காரம் உண்டு. நிலவு அணிந்து வரும் நிமலனைக் காணக் காணப் பரவசம்தான்! இந்திரன் தனது  தகாத ஆசையினால் பெற்றுக் கொண்ட அவலமான உருவத்தோடு வெளியே செல்ல இயலாமல் தவித்தான்.

சாபத்தினால் அவனை அவலப்படுத்திய கௌதம முனிவரிடமே அதற்கு விடிவு கேட்டு அடிபணிந்து நின்றான்.  மனமிரங்கிய முனிவர் பெருமானும்,  மும்மூர்த்திகளும் ஒருங்கே இருக்கும் தருணத்தில் சென்று மனம் நெகிழ்ந்து வழிபட்டால், ஆசையினாற் செய்த அரிய பாவம் நீங்கி, மறுபடியும் இந்திர  வடிவைப் பெறலாம் என்று கூறி அருளினார். இந்திரனும் முறைப்படி வணங்கி வேண்டினான். மும்மூர்த்திகளும் அவனுக்கு அறிவுரைகள் கூறி,  மன்னித்து அருள் செய்தனர். அந்த அருளினால் இந்திரனது சாபம் விலகியது. பழைய உருவைப் பெற்றான். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இச் சுசீந்திரத்தில் மும்மூர்த்திகளும் அடங்கிய ஜோதி வடிவான சிவலிங்கம் ஒன்றை அமைத்து இன்றும் பூஜை  செய்து வருகிறான். இதனால் இக் கோயிலில் அர்த்த ஜாமப் பூஜை கிடையாது. நாள்தோறும் நடத்தும் அபிஷேகத்தில் சற்றேனும் நம்மால் காண  இயலாது. அத் தீர்த்தம் பாய்வதற்கு உரிய கோமுகியும் இங்கு இல்லை. அர்த்த ஜாம பூஜையை வானுலக இந்திரன் வந்து செய்வதால், இரவு பூஜை  செய்த அர்ச்சகரே காலையிலும் செய்வாரேயானால், இந்திரன் செய்த பூஜையின் அடையாளத்தை அறிந்து கொண்டுவிடுவார்.

அதனால் இரவு பூஜை செய்த அர்ச்சகர் காலையில் வந்து செய்யமாட்டார். வேறு அர்ச்சகரே காலையில் பூஜை செய்வார். இதனால் இந்திரனது  பூஜையை அடையாளம் காண இயலாது. ஆகவே, ஆலயத்தில் பூஜை செய்வதற்கு இரு அர்ச்சகர்கள் உள்ளனர். காலையில் நடை திறக்கும்போது,  ‘அகம் கண்டது புறம் கூறேன்’ என்று வாக்குறுதி செய்தே வாயில் திறக்க வேண்டும். இவர்கள் சுகபுரம், பெருமணல், திருஞாலக்கோடு எனும் பெருமை  பொருந்திய மடத்திலுள்ள மறையவர் ஆவர். வேறு எந்த ஆலயங்களிலும் செயல்படாத அரிய செயல் ஒன்று இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. கருவறைச் சுவர்கள் பெரும்பாலும் கருங்கற்களால் கட்டப் பெற்றிருக்கும். சில ஆலயங்களில் சுவரை வெள்ளை அடித்தோ, வண்ணம் பூசியோ  அழகுபடுத்தியிருப்பார்கள். ஆனால், சுசீந்திரம் தாணு மாலயன் கொலுவிருக்கும் கருவறையின் வெளிச் சுவற்றில் மட்டும் எள்ளை அரைத்துப்  பூசியிருப்பார்கள். காரணம் கேட்டபோது, வெயில் காலத்தில் சுவாமியை வெப்பம் தாக்காமல் இருக்க இவ்வாறு எள்ளை அரைத்துப் பூசுகிறார்கள்.  நல்லெண்ணெயின் குணம் குளிர்ச்சிப்படுத்துவதுதானே! அதற்காகத்தான் இந்த எள்பூச்சாம்!

கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய மூவருக்கும் கிழக்குப் பார்த்த சந்நதி ஒன்று உள்ளது. இவர்களை நோக்கிக் கூப்பிய  கையினராய் பிரமாண்டமான அனுமன் சிலை ஒன்று உள்ளது. துளசி மாலை, வடை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் என்று எல்லா  வேளைகளிலும் அமர்க்களமாகவே காட்சி தருகின்றார் சுசீந்திரம் அனுமார். அனுமார் மிகவும் உயரமானவர் என்பதால், பின்புறம் படி அமைத்து, அதில்  நின்று கொண்டுதான் அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பிரமாண்டமான தெற்குப் பிராகாரத்தின் மேற்கு மூலையில் தர்ம சாஸ்தா தனிக் கோயில் கொண்டுள்ளார். மார்கழி மாத அதிகாலையில்  பழையாற்றிலோ, தெப்பக் குளத்திலோ நீராடி, நீறும் சந்தனமும், மணி மாலைகளும் அணிந்த பக்தர்கள் இச் சந்நிதி முன் நின்று கொண்டு சரண  கோஷம் எழுப்புவது கண் நிறையும் காட்சியாகும். வடக்குப் பிராகாரத்தில் பிராகாரச் சுற்றுக்குத் தெற்கே கல் மண்டபம் ஒன்று காணப்படுகிறது.  அங்குள்ள கருவறை ஒன்றில் அழகன் முருகன் தேவியருடன் அருட் கோலம் கொண்டுள்ளான்.

இந்தச் சந்நதியின் வெளித் தூண்கள் இரண்டிலும் அழகான சிற்பங்கள் நடனக் கோலத்தில் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களின் சிறப்பு யாதெனில்,  ஒரு மெல்லிய ஈர்க்கினை எடுத்து ஒரு சிற்பத்தின் வலது காதிலுள்ள துளையின் வழியே உள்ளே செலுத்தினால், மறுபக்கம் உள்ள இடது காதின்  வழியே அந்தக் குச்சியானது வெளியே வந்துவிடுகின்றது. என்னே திறமையான சிற்ப வேலைப்பாடு! கருங்கல் சிலை பிளவுபடாமல்  துளையிடுவதென்ன எளிதான செயலா? ஒவ்வொருவரும் இதைச் சோதித்து மகிழ்கிறார்கள்! பெரும்பாலான ஆலயங்களிலும் நவகிரங்களுக்கு என்று தனியே இடம் கொடுத்து, நாலா திசைகளையும் நோக்கி இருக்கும்படி அமைத்து வழிபட  வைக்கிறார்கள். சுசீந்திரத்தில் மட்டும் அவ்வாறு நவகிரக மேடை இல்லை. நீலகண்ட விநாயகரின் சந்நதிக்கு எதிரில் கருங்கல் மேடையும்,  மண்டபமும் அமைத்து, மண்டப விதானத்தில் நவகிரகங்களையும் முறைப்படி செதுக்கி வைத்துள்ளார்கள். மண்டபத்தில் தீப மேற்றி, அதனைச் சுற்றி  வந்து வழிபடும்போதே, மேல் நோக்கிப் பார்த்து நவகிரகங்களையும் வழிபாடு செய்கிறார்கள்.

இது போன்று விண் நோக்கிப் பார்த்து நவகிரகங்களை வழிபாடு செய்தல் இங்கு மட்டும்தான் சிறப்பாக நடைபெறுகிறது. இந்திரன் தனது சாபம் தீர  தாணுமாலயப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததோடு, அவன் மூழ்கும் அளவிற்கு உள்ள பெரிய உருளிப் பாத்திரம் நிறைய நெய்விட்டுக் கொதிக்க  வைத்து, நெய் கொதிக்கும்போது அதனுள் தினமும் மூழ்கி எழுவான். இதனால் அவனது சாபமும் பாபமும் நீங்கி பழையபடி உருப் பொலிவைப்  பெற்றான். கொதிக்கும் நெய்யே ஆயினும் இறை அருளால் அவனது திருமேனி வெந்து போகாமல், பழைய இந்திர வடிவைப் பெற்றான். இந்த வழக்கத்தை ஒட்டி, பிற்காலத்தில் தவறு செய்தோரை, கொதிக்கும் நெய்யில் கையை முக்கிச் சத்தியம் பண்ணுமாறு செய்திருக்கிறார்கள். பொய்ச்  சத்தியம் என்றால் கை வெந்து போய்விடும். இவ்வாறு அக்காலத்தில் ஆலயங்களில் நீதி முறையும் வழங்கப் பெற்றிருக்கிறது. இந்தக் கொடிய, நீதி  நிலை நாட்டல் முறை, 1839 முதல் 1849 வரை பத்தாண்டுக் காலம் வஞ்சி நாட்டை ஆண்ட சுவாதித் திருநாள் ராம வர்மன் காலத்தில்  நிறுத்தப்பட்டுவிட்டது. இப்பகுதி மக்கள் இப்போதும் ஒருவரைக் குற்றம் சுமத்தும்போது ‘நெய்யில் கை முக்க வைப்பேன்’ என்று திட்டுவது, இந்தப்  பழைய பழக்கத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான்.

மார்கழிப் பெருந்திருவிழா, தேரோட்டம், சித்திரைத் தெப்பத் திருவிழா ஆகியன முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மார்கழியில் மூன்றாம் திருவிழா  அன்று கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மற்றும் வேளிமலை அருள்மிகு குமாரசாமி ஆகிய சுவாமிகள்  சுசீந்திரம் வந்து, திருவிழாக் காணும் தாணுமாலயனைச் சந்திப்பார்கள். இது மக்கள் மார் சந்திப்பு என்று சிறப்பாகப் போற்றப்படுகிறது. 9ஆம்  திருநாளன்று மக்கள்மார் பிரியா விடைபெறும் சப்தாவர்ணக்காட்சி வெகு சிறப்பானது. இரவு 12.00 மணி அளவில் நடைபெறும் இக்காட்சியைக் காண  மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பார்கள். 9ஆம் திருநாளன்று காலையில் தேரோட்டம் காண, புதுமணத் தம்பதிகள் தவறாது வந்து விடுவார்கள். அதிலும் ஐந்தாம் திருநாளன்று காலை 6.00  மணிக்கு வீர விநாயகர் திருக்கோயில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளைக் கருடன் வலம் வரும் காட்சி அதி அற்புதக் காட்சி. அத்திரி  முனிவரின் வேண்டுகோளை ஏற்று, அனைவரும் இறைவனை நேரில் காணும் பொருட்டு, மார்கழி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அதிகாலை கருட  ரூபமாய் வருவோம் என்று இறைவன் அருளியபடி இக் கலியுகத்திலும் வந்து போகிறார் தாணுமாலயன்.

இந்திரனது பாவம் தீர்த்து, சுசீந்திரராக மாற்றிய திருத்தலம் என்பதால், பெரும் அடவியாக, ஞானியர் வாழும் ஞானாரண்யமாக விளங்கிய பூமி, இன்று  சுசீந்திரம் என்று அழைக்கப் பெறுகிறது. பழையாறு இந்நகரை அணி செய்கின்றது. பிரம்மாண்டமான திருக்கோபுரம், பிரம்மாண்டமான தெப்பக்குளம்,  இயற்கை வளம் என்று காணக் காணக் கண் குளிரும் திருத்தலம் சுசீந்தைபதி. அத்துடன், அறியாமற் செய்த பாவம், அறிந்து செய்த பாவமெல்லாம்  இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, மும்மூர்த்திகளின் திருவருளால் தவிடு பொடி யாகப் போய்விடும். நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் சுசீந்திரம் திருத்தலம் உள்ளது.  ஒரு முறை சென்று தரிசிக்கப் போனால், மீண்டும் மீண்டும் வரச் சொல்லி அழைக்கும் இம்மண்ணுலகின் தேவருலகம் அது! அமைதி தவழும்  திருக்குளப் படிக்கட்டில் போய் அமர்ந்தால் போதும், ஞானக் காற்று தெய்வீகம் கலந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்.

உமா கல்யாணி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்