SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பீர்கள்

2018-12-11@ 15:16:25

திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நான்கு குழந்தைகள் வயிற்றிலேயே இறந்துவிட்டது. ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்து 34 நாட்கள் கழித்து இறந்துவிட்டது. எங்களுக்கு வாரிசு பாக்கியம் கிடைக்க பரிகாரம் கூறுங்கள். அண்ணாதுரை, நாமக்கல்.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகப்படியும் புத்ர தோஷத்திற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. புத்ரதோஷம் இருந்தால் குழந்தை உருவாகி இருக்காது. நான்கு குழந்தைகள் வயிற்றிலேயே இறப்பதும், ஒரு பெண் குழந்தை பிறந்து 34 நாட்கள் கழித்து இறப்பதும் சாதாரண நிகழ்வு அல்ல. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் ராகுகேதுக்களின் அமர்வு நிலை ஒரு சில சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது, பரம்பரையில் நடந்திருக்கும் பிரச்னையை குறிக்கிறது. குடும்பப் பெரியவர்களின் துணைகொண்டு அந்தப் பிரச்னையைக் கண்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண முற்படுங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அதற்கு துணை புரியும். தீவிரமாக முயற்சித்தால் 17.08.2019ற்குள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உங்களுடைய பிரச்னை கிரஹங்களின் கட்டுப்பாட்டிற்குள் வராது. திருச்சி, திருவானைக்காவல் திருத்தலத்திற்குச் சென்று அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு பிரார்த்தனை செய்யுங்கள். பரம்பரையில் உண்டான குற்றம் நீங்க வழி பிறக்கும்.

அரசுத்துறையில் செவிலியராக பணிபுரியும் எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. என் கணவருக்கு நிரந்தர வேலையில்லை. இதுவரை வருமானம் என்று 10 பைசா கொடுத்ததில்லை. ஆணாதிக்க குணம் கொண்ட அவர் செய்யும் கொடுமைக்கு அளவில்லை. வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருக்கிறார். என் கணவர் மனம் திருந்தி அன்புடன் வாழ வழி சொல்லுங்கள். கலைமகள், வந்தவாசி.

குட்டக் குட்ட குனிந்து கொண்டிருப்பதை விடுத்து நிமிர்ந்து நில்லுங்கள். உத்யோகம் புருஷ லட்சணம் என்பதை மறந்த உங்கள் கணவர், தனது இயலாமையை மறைப்பதற்காக உங்களைக் கொடுமைப் படுத்துவதோடு, வீண் பெருமைக்காக மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் சுயமரியாதை கொண்டவர். உங்களுடைய சுயமரியாதையை நீங்கள் என்றுமே விட்டுவிடக் கூடாது. உங்களுடைய நேரம் தற்போது நன்றாகவே உள்ளது. தற்கொலை எண்ணத்தை முற்றிலுமாக விட்டொழித்து உங்கள் குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து வாழ்வினில் தங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழக்குங்கள். ஆண்டவன் நல்ல உத்யோகத்தைத் தந்திருக்கிறார்.

நோயாளிகளுக்கு நீங்கள் செய்யும் சேவை உங்கள் குழந்தைகளை நல்லபடியாக வாழ வைக்கும். ஒன்றுக்கும் உதவாத கணவனைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். அரசுத்துறையில் பணியாற்றும் நீங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வேலையை வெளியூருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். வசிப்பிடத்தையும் மாற்றுங்கள். நீங்கள் தனித்து வாழ உங்கள் ஜாதக பலம் துணை செய்கிறது. பிரதி ஞாயிறு தோறும் காலை நேரத்தில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று  ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே ஆலயத்தை ஆறுமுறை வலம் வந்து வணங்குங்கள். சக்தி பெறுவீர்கள்.

29 வயதாகும் என் மகளுக்கு எத்தனையோ நல்ல நல்ல வரன்கள் வந்தும் திருமணம் தட்டி தட்டி போகிறது. விரைவில் திருமணம் நடக்க ஒரு பரிகாரம் கூறுங்கள். வேல்முருகன், திருநெல்வேலி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அதிக அளவிலான எதிர்பார்ப்பு உங்கள் மகளின் திருமணத்தை தடை செய்து வருவதாகத் தோன்றுகிறது. அவரது ஜாதகத்தில் இதற்கு முன்னர் நான்கு முறை திருமண யோகம் என்பது வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதைவிட நல்ல வரனாக அமையலாம் என்ற எண்ணம் தாமதத்தை தந்திருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரின் இணைவு இதுபோன்ற தடையை உருவாக்கி இருந்தாலும் தற்போது நடந்து வரும் நேரம் அவரது திருமணத்திற்கு துணை செய்யும்.

நல்ல வாய்ப்பு என்பது அடிக்கடி அமையாது என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். இவரது ஜாதக அமைப்பின் படி வருகின்ற 03.07.2019ற்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும். சந்தர்ப்பத்தினை நழுவவிட்டால் மீண்டும் வாய்ப்பது கடினம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். திங்கட்கிழமை தோறும் இராகு கால வேளையில் அருகில் உள்ள அம்மன் கோயிலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். அம்பிகையின் அருளால் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வாய்ப்பு அமைந்துவிடும். “மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா:”

மகன் பிறந்தநேரம் முதல் எனது கல்லூரி பதவி இழப்பு, வறுமை, கடன் உண்டாகி நிலையற்ற கூலியுடன் ஜீவனம் செய்து வருகிறேன். மகன்கள் இருவருக்கும் உடன்பிறந்த பாசம் இல்லாத நிலை உள்ளது. இவர்கள் ஜாதகம் மூலம் தந்தையான எனக்கு வியாபாரம் சிறக்குமா? மீண்டும் கல்லூரிப் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? தியாகராஜன், சேலம்.

மூட நம்பிக்கைகளை விடுத்து முழு மனதுடன் முயற்சி செய்ய வேண்டும். மகன் பிறந்த நேரம்தான் பதவி இழப்பு உண்டானது என்று எண்ணுவது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகம் மற்றொருவரை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவரவர் ஜாதக பலம்தான் அவரவர் வாழ்வினை நிர்ணயம் செய்யும். விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனியின் அமர்வும், சனியின் புக்தியில் உண்டான தாக்கமும் உங்களுடைய பதவியை பறித்திருக்கக் கூடும். எந்த காரணத்தால் உங்கள் பதவி பறிபோனது என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

அதனை சரிசெய்வதை விடுத்து மகன் பிறந்த நேரம் என்று நமது தவறை மறைக்க வேறொரு காரணம் தேடுவது தவறு. கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மூத்த மகனின் ஜாதகமும், அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் இளைய மகனின் ஜாதகமும் மிகவும் பலமுள்ளதாக அமைந்துள்ளது. இருவருக்குமே நல்ல எதிர்காலம் என்பது நிச்சயம் உண்டு. அவர்களுக்குள் சகோதர பாசம் என்பதும் நன்றாகத்தான் உள்ளது. அவர்களது ஒற்றுமை பெற்றோராகிய நீங்கள் சொல்லி வளர்ப்பதில்தான் உள்ளது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி நீங்கள் சுயதொழில் செய்ய இயலும். 23.04.2019 முதல் நேரம் கனிந்து வருகிறது. உண்மையான உழைப்பு உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

2014ல் திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனை எனது சித்தி வளர்க்கிறார். எனது மனைவி 2015ல் மருந்து குடித்து இறந்து விட்டாள். எனக்கு எந்த வேலையும் சரிவர கிடைக்கவில்லை. தற்போது லாரி டிரைவராக இருக்கிறேன். மறுமணத்திற்கு பெண் எதுவும் சரிவர அமையவில்லை. எனக்கு நல்ல வேலையும் நல்ல மனைவியும் கிடைக்க உரிய பரிகாரம் கூறுங்கள். ஒரு வாசகர்.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்கிறார். மேலும் ஏழாம் வீட்டின் அதிபதி சந்திரன் 12ல் சனியுடன் இணைந்திருக்கிறார். இதனால் களத்ர தோஷம் உண்டாகி மறுமணத்திற்கான வாய்ப்பினை உருவாகி இருக்கிறது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது துவங்கியுள்ள ராகு தசை நன்மையை உண்டாக்கும். உண்மையாக உழைத்தீர்களேயானால் அதற்குரிய பலனை நிச்சயம் காண்பீர்கள். ஜீவன ஸ்தான அதிபதி சுக்கிரன் ஒன்பதில் நீசம் பெற்றிருப்பதால் அலைச்சல் உத்யோகம்தான். என்றாலும் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.

லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்குவதை விட ‘குட்டி யானை’ போன்ற சரக்கு வாகனத்தை  சொந்தமாக வாங்கி ஓட்ட முயற்சியுங்கள். காய்கறிகள், பழங்கள் முதலான விளைபொருட்களை உங்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான வாய்ப்பு நிரந்தரமாக அமைந்துவிடும். தொடர்ந்து லோடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். 14.05.2019ற்குப் பின் மறுமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேரும். திருப்பதி வெங்கடாஜலபதியை மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்ல வேலை, நல்ல மனைவி இரண்டும் அமைந்துவிடும்.

எனது மகள் தற்போது பி.ஈ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படித்து வருகிறாள். அரசு வேலைக்கு முயற்சிக்கிறோம். அவளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? குமார், புதுக்கோட்டை.


பெண்குழந்தை என்றாலும் திருமணத்தைப்பற்றி யோசிக்காமல் நல்ல வேலையில் மகள் அமர வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. உங்கள் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் மகள் அரசுப் பணியில் அமர்ந்துவிடுவார். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் பிறந்த நேரத்தினை துல்லியமாகக் குறிப்பிடாமல் கால் மணி நேர இடைவெளியில் தோராயமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பதினைந்து நிமிடத்தில் இரண்டு லக்னங்கள் சந்திக்கின்றன. சரியான நேரத்தினைச் சொன்னால் மட்டுமே துல்லியமாக பலனை அறிந்து கொள்ள இயலும்.

மேஷம் அல்லது ரிஷபம் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய உத்யோக ஸ்தான அதிபதி சனி ஆட்சி பலத்துடன் அவரது ஜாதகத்தில் அமர்ந்துள்ளார். அவருடைய லட்சியத்தின்படி அரசுப் பணியை எட்டிப் பிடிக்க இயலும். எம்.பி.ஏ., படிப்பதோடு அரசுத்துறை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் தவறாமல் சென்று வரச் சொல்லுங்கள். அவருடைய தகுதிக்கு உரிய வகையில் வருகின்ற அனைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளையும் தொடர்ந்து எழுதிவரச் சொல்லுங்கள். அவருடைய ஜாதகத்தில் சூரியன், புதன், ராகுவின் இணைவு சிவில் சர்வீஸ் பணிகளில் அவரை உட்கார வைக்கும். சனி தோறும் தவறாமல் ஆஞ்சநேயரை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 2020ம் ஆண்டில் உத்யோக வாய்ப்பு கிடைத்துவிடும்.

கடந்த மார்ச் மாதத்தில் என் திருமணம் நடந்தது. நகை விஷயத்தில் பிரச்சினை வந்து 17 நாட்களில் நானும் என் கணவரும் பிரிந்துவிட்டோம். கடந்த ஏழு மாதமாக பிரிந்து வாழ்கிறோம். சீர்வரிசை பொருட்களை திருப்பி அனுப்பி விட்டார்கள். தாலி, புடவையைத் திரும்பிக் கேட்கிறார்கள். என் கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம் கூறுங்கள். புவனேஷ்வரி, கேஜிஎஃப்.


உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தற்போதைய சூழலின்படி இருவரின் நேரமும் அத்தனை உசிதமாக இல்லாததால் பிரச்சினையைப் பெரிதாக்காமல் சிறிது காலம் அமைதியாய் இருங்கள். 22.05.2019க்குப் பின் உங்கள் கணவருடன் சேர்ந்து விடுவீர்கள். இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தவறு உங்கள் தரப்பில் இருப்பதாகவே தோன்றுகிறது. நகை மற்றும் சீர்வரிசையைப்பற்றி மாமியார் பேசுவது இயற்கைதான் என்றாலும் நீங்கள் சற்று அவசரப்பட்டிருக்கிறீர்கள்.

எதுவாக இருந்தாலும் கணவரிடம் மட்டுமே நீங்கள் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். மிதுன ராசி, கன்னி ராசி இரண்டிற்கும் இயற்கையாகவே வசியப் பொருத்தம் என்பது உண்டு. உங்களுடைய எண்ணத்தை உங்கள் கணவர் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் பிரச்னையை அணுகியிருப்பார். அவசரப்பட்டு செயல்பட்டதால் வந்த விளைவினை அனுபவித்து வருகிறீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால வேளையில் விளக்கேற்றி வைத்து துர்கையை வழிபட்டு வாருங்கள். துர்கையின் அருளால் துக்கம் நீங்கி விரைவில் கணவருடன் இணைந்து குடும்பம் நடத்துவீர்கள். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்