SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவுரையிலும் அழகான வழிமுறை!

2018-12-11@ 15:11:07

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்போது, போகிற போக்கில் சொல்வது போல் சொல்லிவிட மாட்டார். மாறாக,  கேட்பவரின்  ஆர்வத்தைத் தூண்டி, அவருடைய கவனம் தம் மீதே முழுமையாக இருக்கும்படி ஒரு வித்தியாசமான வழிமுறையைப் பின்பற்றுவார். இந்த வழிமுறையைப் பின்பற்றி, அறிவுரை சொல்லும்போது அது கேட்பவர் மனத்தில் அப்படியே பதிந்துவிடும். நபித்தோழர் முஆத் பின் ஜபல் கூறுகிறார்: “ஒரு பயணத்தின் போது நான் ஒரு வாகனத்தில் இறைத்தூதருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். நபிகளார், “முஆத் பின் ஜபலே” என்று அழைத்தார். “அடியேன் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். நபிகளார் எதுவும் கூறவில்லை.

சிறிது தொலைவு பயணம் தொடர்ந்தது. மீண்டும் நபிகளார், “முஆத் பின் ஜபலே” என்று விளித்தார். “அடியேன் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். நபிகளார் எதுவும் கூறவில்லை. சிறிது தொலைவு பயணம் தொடர்ந்தது. நபிகளார் மூன்றாம் முறையாக, “முஆத் பின் ஜபலே” என்று அழைத்தார். நான் முன்பு போலவே “அடியேன் இங்குதான் இருக்கிறேன்” என்று பதில் சொன்னேன். இப்போது நபிகளார்,“இறைவனுக்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “இறைவனும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்” என்றேன்.“மக்கள் இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்வதும்,  அதில் வேறு எவரையும் இணை வைக்காமல் இருப் பதும்தான் மக்கள் நிறைவேற்ற  வேண்டிய கடமை” என்றார் நபிகளார்.

பின்னர் சிறிது தொலைவு பயணம் தொடர்ந்தது. நபிகளார், “முஆத் பின் ஜபலே” என்று அழைத்தார். “கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே, அடியேன் இங்குதான் உள்ளேன்” என்றேன்.“இறைவனுக்குக் கீழ்ப்படியும் மக்களுக்கு இறைவன் நிறைவேற்ற  வேண்டிய கடமை என்னவென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “இறைவனும் அவனுடைய தூதரும் தான் நன்கு அறிந்தவர்கள்” என்றேன். உடனே நபிகளார்,“இறைவனை வழிபட்டு, அவனுக்கு அடி பணிந்து வாழும் அடியார்களுக்கு இறைவன் மீதுள்ள கடமை, அவன் அவர்களை வேதனையில் ஆழ்த்தி விடாமல் இருப்பதாகும்” என்றார். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) யோசித்துப் பார்த்தால் இரண்டு வரி அறிவுரைதான் இது.

“மக்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்,  அவ்வாறு கீழ்ப்படியும் மக்களை வேதனையில் ஆழ்த்திவிடாமல்  இறைவன் காப்பாற்றவேண்டும்” என்பதுதான் செய்தி. ஆனால் அதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார். தம் தோழரை அன்புடன்  பெயர் சொல்லி அழைத்து, அவரைத் தமக்கு நெருக்கமாக்கிக் கொண்டு, அவருடைய கவனத்தை முழுமையாகத் தம் பக்கம் திருப்பி, வினா விடை பாணியில் இந்தக் கருத்தை நபிகளார் தம் தோழரின் நெஞ்சில் பதியவைக்கிறார். அறிவுரை சொல்வதிலும் அழகான வழிமுறை.

இந்த வார சிந்தனை

“அழகிய கேள்விகள் அறிவின் ஒரு பகுதியாகும்.” நபிமொழி.

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்