SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி

2018-12-11@ 09:44:42

தென் தமிழகம் மட்டுமல்லாமல் வடதமிழகத்திலும் சோழர்கள் எண்ணற்ற சிவாலயங்களை நிறுவினார்கள். அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வகையில் வளையாத்தூரில் அமைந்துள்ள வளவநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கிறது. ‘வளவன்’ என்பது சோழ அரசரைக் குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே இத்தலம் வளவீஸ்வரம் என்றும் தல இறைவர் வளவநாதர் என்றும் போற்றப்படுகின்றார்.‘நல்லூர்’ என்றும் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்படும் ஊர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட இடங்களாகும். அவ்வாறு, முதலாம் இராஜராஜ சோழனால் இங்கு வாழ்ந்த வேதியர்களுக்கு இவ்வூர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வூர் முதலாம் இராஜராஜனின் பட்டப்பெயரால் ‘சிவபாதசேகர நல்லூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்ற வளவநாதர் ஆலயம், பின்னர் இந்த தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. அதன்பின்னர் 13ம் நூற்றாண்டில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராஜநாராயணச் சம்புவராயரால் இக்கோயில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. பின்னர், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் செங்கற்களால் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான அழகிய கிராமம். அதன் ஈசான திக்கில் கீழ்திசை நோக்கி எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். பிரமாண்டமான கருங்கல் சுற்றுமதில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் தென்முக வாயிலுள் நுழைந்திட, நேராக அம்பாள் சந்நதி தென்படுகிறது.

தென்திசை பார்த்து நின்ற வண்ணம் அருள் சிந்துகின்றாள். பிரஹன் நாயகி எனும் பெரிய நாயகி. இந்த அம்பிகைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது. மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள் இந்த அருள் வல்ல நாயகி. பின், மேற்கே திரும்பிட, மகாமண்டபம், இடைமண்டபம், கடந்து அந்தராளம் அடைந்து, அப்பனை இருகரம் கூப்பி, வணங்கி மகிழ்கின்றோம். கருவறையுள் சதுர ஆவுடையாருடன் அற்புதமாக அருள்பாலிக்கின்றார் வளவநாதீஸ்வரர். இவருக்கு காவல்புரியும் துவார பாலகர்களின் சிற்பம் ஓர் அற்புதக் கலை படைப்பு. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் சோழ சாம்ராஜ்ஜிய சிற்பக் கலைஞர்களின் கைத்திறனை எண்ணி பிரமிப்படைய வைக்கின்றது.

மகா மண்டபத்தில் பைரவரோடு பிரதோஷ நாயகரையும் தரிசனம் செய்கின்றோம். ஆலய வலம் வருகையில் உடைந்த பழங்கால கருங்கல் சிற்பங்களையும் கண்ணுறுகின்றோம். நிருதி மூலையில் சப்த மாதர்கள் உள்ளனர். வேம்பு மற்றும் அரச மரத்தின் கீழே நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ஈசான திசையில் பிரதான பைரவர் சந்நதியும், நவகிரக சந்நதியும் அமையப் பெற்றுள்ளன. முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது. அக்னி மூலையில் தலவிருட்சமான வன்னிமரம் கிளைகள் பல பரப்பி, விரிந்துள்ளது. அதன்கீழ் வன்னியடி விநாயகர் அற்புதமாக வீற்றிருக்கின்றார். சோழர் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கொற்றவை எனப்படும் துர்க்கை ஆளுயரத்தில் செதுக்கப்பட்டு, கோயிலுக்கு முன்பாகத் தனியாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாலயத்தில் நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப்
பட்டுள்ளன.

கி.பி.1260 ஆம் ஆண்டு இராஜநாராயண சம்புவராயர் கல்வெட்டில், இவ்வூர் கலவைப் பற்றில் இருந்துள்ளமையையும், இக்கலவைப் பற்றில் இருந்த பல கோயில்களை புணரமைத்ததாகவும் இம்மன்னன் தனது 7வது ஆட்சி ஆண்டில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டின் மூலம் கோயில் விளைநிலங்களுக்கு வரிகளை நீக்கி, அந்த வருவாயைக் கொண்டு பல கோயில்களை புணரமைத்ததாகவும் மேலும் அறிகின்றோம். பின், சகல லோக வென்று மண் கொண்ட சம்புவராயர் கல்வெட்டில் இவ்வாலயத்திற்கு வழங்கிய நிலக்கொடைகள் பற்றி குறிக்கப் பெற்றுள்ளன. கி.பி.1538 ஆம் ஆண்டு அச்சுதப்ப தேவராயரின் தெலுங்கு மொழி கல்வெட்டில் ‘ஆலம்பூண்டி’ என்னும் ஊரை வளவநாயனார் ஆலயத்திற்கு வழங்கிய குறிப்பு காணப்படுகின்றது. கி.பி.1539 ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘வேட்டைதாங்கள்’ என்ற ஊரையும் வளவீஸ்வர நாயனார் ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட செய்தியும் காணப்பெறுகின்றது.

இவ்வாலயம் கடந்த 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் திகழ்கிறது. இவ்வாலயத்தில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி, அன்னாபிஷேகம், ஆருத்ரா, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விசேடங்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். நாடி ஜோதிடத்தில் இவ்வாலயம் சிறந்த பரிகாரத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி  அம்பாள்  சுப்ரமணியருக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்தும், பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் கைகூடும். இத்தலத்தின் விருட்சமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள குழந்தைப்பேறு கிட்டும். இவ்வாறான பரிகாரங்களால் இங்கு வந்து பரமனை வழிபட்டு பலனடைந்தோர் பலராவர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூர் ஆரணி  ஆற்காடு நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோட் நிறுத்தத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

பழங்காமூர் மோ.கணேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்