SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் குழந்தை வரம் வேண்டி சிம்மகுளத்தில் நள்ளிரவு நீராடிய பெண்கள்

2018-12-10@ 14:08:08

பள்ளிகொண்டா: வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் கடைஞாயிறு விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை வரம் வேண்டி வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சிம்மகுளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் பூவுலகில் சிவசர்மாவாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் அவதரித்தான். அங்குள்ள மார்கபந்தீஸ்வரர் கோயில் அர்ச்சகரான அவனது தந்தை சிவநாதர் இறக்க, சிறுவனான சிவசர்மா அர்ச்சகர் பொறுப்பை ஏற்கிறான். சிறுவனான சிவசர்மாவுக்கு பூஜை செய்வதற்கு இறைவனின் திருமுடி எட்டாததால் மனம் வருந்தி பிரார்த்திக்க, ஈசன் தனது தலையை சாய்த்து அருளியதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. அதற்கேற்ப விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் மூலவர் சிறிது தலைசாய்த்த நிலையில் காட்சி தரும்.

இச்சிறப்புமிக்க தலத்தில் பாலாறு, பிரம்மதீர்த்தம், சிம்மக்குளத்தில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு அன்று நள்ளிரவு நீராடி, கோயிலில் படுத்துறங்கினால் குழந்தை பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கேற்ப இங்கு ஆண்டுதோறும் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனையை செலுத்தும் பெண்களே சாட்சி. அதேபோல் பில்லி, சூன்யம், வலிப்பு நோய், தீவினைகள், பேய், பிசாசு பாதிப்புகள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்த ஆண்டு கார்த்திகை கடை ஞாயிறு விழா முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவே விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாலாறு, பிரம்மதீர்த்தத்தில் நீராடி சிம்மக்குளம் அருகில் காத்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சிம்மக்குளத்தை திறந்தனர். தொடர்ந்து அங்கு காத்திருந்த பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி, கோயில் பிரகாரத்தில் குழந்தை வரம் கேட்டு படுத்து பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ததுடன் அங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டியும் பிரார்த்தனை செய்தனர். அதேபோல் கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் குழந்தைகளுடன் வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் தீர்த்தவாரியும், காலை 9 மணியளவில் பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்வித்தனர். இதை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சுவாமி மாடவீதியுலாவும், மதியம் 12 மணியளவில் சிறப்பு அபிசேகமும், அன்னதானமும் நடந்தது. மாலை 3.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், இரவு 8.30 மணியளவில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

 • turkeycamelfight

  2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்