SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்!

2018-12-07@ 16:54:04

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 15

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் நாம் எண்ணற்ற  கோரிக்கைகளை வைக்கிறோம். ‘கார் வேண்டும். கலர் டி.வி. வேண்டும். கட்டிடம் வேண்டும். பணம் வேண்டும். பதவி வேண்டும்.....’ இவ்வாறாக நமது ஆசைக் கோரிக்கைகள் ஆண்டவன் முன்னர் அதிகரித்துக் கொண்டே போகின்றன. நமக்கெல்லாம் சின்னச் சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை! ஆனால், சின்னஞ்சிறுவயதில் - அதாவது தன் ஒன்பதாம் வயதில் சென்னை கந்ததோட்ட முருகனை வழிபட்டு வள்ளலார் வேண்டிய மொத்த வரங்கள் பதினொன்று!

பால் பருவத்தில் பன்னிருகண் வேலவனிடம் ‘வேண்டும்! வேண்டும்! என்று அவர் வைத்த விண்ணப்பத்தில் நாம் வேண்டுகின்ற அல்பமான ஆசைக் கோரிக்கைகள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. நல்லவர்களின் - தெய்விக அன்பர்களின் தோழமை வேண்டும். தீயவர்களின் சகவாசம் அறவே கூடாது என்பதைத்தான் அவர் முருகப் பெருமானிடம் முதலில் வேண்டினார். அற்புதமான அறிவார்ந்த இலக்கிய நயம் துலங்கும் வள்ளலாரின் அப்பாடலை முழுமையாகக் காண்போமே!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ
வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வளர்ந்து செழிக்க தன் லட்சியத்தில் ஈடேற - பண்பார்ந்த மனிதனாகப் பரிணமிக்க அவசியம் தேவை சான்றோர்களின் கூட்டுறவுதான் நாம் அனைவரும் அதைத்தான் முதலில் பெற வேண்டும்! ஏனென்றால் உத்தமர்களின் உறவு ஒருவனை சீராக்கும் நேராக்கும் பயம், பொறாமை, சந்தேகம், தன்னலம், அகங்காரம். பொய்மை, இவைபோன்றவைதான் ஒவ்வொரு மனிதனையும் மிருக நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.

ஆரம்பப்பருவத்திலேயே சான்றோர்களின் வட்டத்தில் நாம் இருந்தால் பொறுமை, நேர்மை, மனிதநேயம், தூய்மை, வாய்மை, அன்பு, இரக்கம் போன்ற சான்றான்மை குணங்களின் சங்கமமாய் விளங்குவோம். பரந்த வானம் தருகின்ற மழைத்துளிகள் அனைத்துமே பரிசுத்தமானவைதான். மாசு இல்லாத அந்த மழைத்துளிகள் சேரும் இடத்திற்கு ஏற்ப வடிவமும், வண்ணமும், வாசனையும் மாறிப் போகின்றன. அன்மைக்கால கவிஞர் ஒருவர் அற்புதமாகப் பாடுகின்றார்.

நீண்ட வானம் பெய்த துளிகள்
நிலத்தை நோக்கி வந்தன
வந்த ஒன்று மண்ணின் மடியை
முத்தம் இட்டுச் சென்றது
ஒன்று நாற்றக் கழிவு நீரில்
ஓடிச் சென்று கலந்தது
ஒன்று கடலில் வீழ்ந்தே உப்பாய்
உருவம் மாறிப் போனது
ஒன்று பூத்த பூவுக் குள்ளே
சென்று தேனாய் ஆனது
ஒன்று சிப்பி வாய் விழுந்தே
ஒளிரும் முத்தாய் ஆனது

சேர்க்கையால்தான் வாழ்க்கை அமைகிறது என்று திருவள்ளுவர் தீர்மானமாக் கூறுகின்றார். சிற்றினம் சேராமை என்று அதிகாரம் அமைத்தும் பெரியோரைத் துணைக் கோடல் என்று அதிகாரம் வகுத்தும் சூழ்நிலைதான் ஒருவரின் வாழ்க்கையை நிச்சயிக்கின்றது என்று கூறுகின்றார்.

மனத்து ஊதுபோல் காட்டி ஒருவற்கு இனத்து ஊதாகும் அறிவு.... என்றும் அறியவற்றுள் எல்லாம் அரிதே  பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.... என்றும் திருக்குறள் பேசுகின்றது. மணிவாசகர் சொல்ல நடராஜப் பெருமானே கைப்பட எழுதிய சிறப்பைப் பெற்றது திருவாசகம்.

‘திருவாசகத்திற்கு உருகார்
ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்பது அனைவரும் அறிந்த பாராட்டுரை.
‘மணிவாசகர் இறைவனிடம்
வேண்டுகின்றார்’
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
 இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
 ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
 முடியும் வண்ணம் முன்னின்றே.

அம்பலத்தில் தனிக் கூத்து இயற்றும் ஆண்டவனே! என் விருப்பம் ஒன்றுதான்! அதை மட்டும் நீ நிறைவேற்றி விடு. வேறு வரங்கள் எதுவும் எனக்கு வேண்டாம். எப்போதும் உன்னுடைய பக்தர்களின் கூட்டத்திலேயே என்னைப் பங்குபெற வைத்தால் அது ஒன்றே நான் கடைத்தேற போதுமானது என்று உள்ளம் உருக
உரைக்கின்றார் மணிவாசகர்.

‘நாளும் நாளும் வளர்வதோர் நீர்மை’ என்று திருமுறை கூறுகின்றது. ‘கருவில் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து’ என்கிறது திருப்புகழ். வயதளவில் அனைவரும் வளர்ந்தால் போதுமா? ஒவ்வொரு நாளும் பண்புகளால் நாம் வளர்ந்து பெளர்ணமி நிலவாகப் பொலிய வேண்டும். அதற்கு அடிப்படையாக அமைவது நல்லோர்களின் உறவு என்னும் ஸத்சங்கம்.

ஸத்ஸங்கமே முதற்படி என்று ஆதிசங்கரரும் விவேக சூடாமணியில் வலியுறுத்துகின்றார். ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்பார்கள். வயலூருக்குச் சென்ற அருணகிரிநாதர் அங்குள்ள கிளிகள் எல்லாம் முருகப் பெருமானின் நாமத்தை உரைக்கின்றன என்று பாடுகின்றார். என்ன காரணம்? அடியார்களின் நடுவில் அவை வளர்ந்த காரணத்தால் பக்தர்கள் எந்நேரமும் கோஷமிடும் முருகநாமம் கிளிகளுக்கும் இயல்பாகப் படிந்துவிட்டது. அக்கிளிகள் வேறொரு சூழ்நிலையில் வளர்ந்திருந்தால் முருகன் புகழை ஒலிக்குமா?

‘பஞ்சரம் கொந்து கிளி வந்து வந்து ஐந்துகரப்
பண்டிதன் தம்பி எனும் வயலூரா!

என்பதே அருணகிரியின் வாக்கு. வளருகின்ற இளந்தலைமுறையினர் தீயவற்றின் திசைப் பக்கம்கூட திரும்பாமல் நல்லவற்றின் கூட்டுறவில் வளர்ந்தால் நம்நாடு மேன்மை பெறும். ஒவ்வொரு பெற்றோரும் தாங்களும் சிறக்க, தங்கள் குழந்தை மகளின் எதிர்காலமும் ஒளிமயமான காலமாகப் பொலிய கடவுளிடம் வேண்டும் ஒரேவரமாக ஒளிர வேண்டிய வேண்டுகோள். ‘அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்’ என்பதுதான்.

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

 • 21-05-2019

  21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • russiabicycle

  ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

 • canadaplastic

  கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்