SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில சித்திரவதைகள்

2018-12-07@ 16:52:52

அர்த்தமுள்ள இந்துமதம் - 69

உன்னை நீ அறிய விடாமல் தடுக்கும் இன்னொரு சக்தி எது? குடும்பம். உனக்கு மனைவி மக்கள் இல்லையென்றாலும்கூட, பெற்றோர் இருப்பார்கள். உடன்பிறந்த அண்ணன்-தம்பிகள், அக்காள்-தங்கைகள் இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருக்கும்.

‘‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும்  வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென் றாலும்
மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?’’

- இப்படி ஒரு பாடலை நான் படத்தில் எழுதியுள்ளேன்.
வாழ்க்கை என்றால் வேதனை இருந்துகொண்டேதான் இருக்கும். அதில் நீ எண்ணிப் பார்க்க வேண்டியது என்ன?

‘‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!’’
‘‘தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அகமகிழ்க!’’

- என்றார் குமரகுருபர சுவாமிகள்.காலுக்குச் செருப்பு இல்லையே என்று ஒருவன் கவலைப்பட்டானாம். அவன் ஒரு கோயிலுக்குப் போனானாம். அங்கே இரண்டு கால்களும் இல்லாமல் ஒருவன் உட்கார்ந்து இருந்தானாம். ‘‘ஆண்டவனே! எனக்குச் செருப்பில்லா விட்டாலும் பரவாயில்லை; இரண்டு கால்களும் இருக்கிறதே’’ என்று பெருமிதத்தோடு திரும்பி வந்தானாம். அந்தக் கால் இல்லாதவன், சற்று ஊர்ந்து போனானாம். அங்கே கண்ணில்லாத ஒருவன் உட்கார்ந்திருந்தானாம்.

‘‘ஆண்டவனே! எனக்குக் கால்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; உலகத்தைக் காணக் கண்களையாவது கொடுத்தாயே, அதுவரைக்கும் நன்றி!’’ என்றானாம்.
‘‘உனக்கு வருகின்ற துன்பத்தைப் பார்த்து அழாதே. உனக்கும் கீழே உன்னை விடத் துன்பப்படுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று எண்ணி, அவர்களைப் பார்த்துச் சந்தோஷப்படு!’’ என்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.

குடும்பத்தில் அவ்வளவு சிக்கல் இருக்கும். அதிலேயும் மனைவி மக்கள் என்று மாட்டிக்கொண்டால், சிக்கல் அதிகமாகும். நாளுக்கு நாள் நீ உனக்காகவே வாழ்ந்தது போய், அவர்களுக்காக வாழ வேண்டியிருக்கும். ஒரு யந்திர மனிதனாக நீ வாழ வேண்டியிருக்கும்.  நாளைக்கு என்ன செய்வது என்று எண்ணினால், உன்னைச் சிந்திக்காமல உறவையே சிந்திக்க வேண்டியிருக்கும்.

உறவிலே யாராவது ஒருவர் ஏதாவது சொல்லி விட்டால், சந்தேகம் வரும்; ‘ஐயோ! தாங்க முடியவில்லையே!’ என்று கதறத் தோன்றும். ‘செத்துப் போகலாமா?’ என்ற எண்ணம் வரும். ‘எங்கேயாவது ஓடி விடலாமா?’ என்ற ஆசை வரும். ‘இப்படி என்னாலே வாழ முடியாது!’ என்று தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றும். ஒன்றா? இரண்டா? குடும்பத்துக்குள்ளே ஏராளமான கலவரங்கள், சங்கடங்கள், குழப்பங்கள், மயக்கங்கள் வந்துகொண்டே இருக்கும்.

அதிலே சிக்கிக்கொண்ட பிறகு, நீ உன்னை அறிவது எப்படி? மனம் இவர்களுக்கிடையிலே சின்னா பின்னப்பட்ட பிறகு, அந்த மனதைப் பக்குவப்படுத்துவது, பாடம் பண்ணுவது எப்படி? அதற்காக, ‘குடும்பத்திலே மாட்டிக் கொள்ளாதே! கல்யாணம் செய்துகொள்ளாதே! சந்நியாசியாகிவிடு!’ என்று நான் போதிக்க வருகிறேனா என்றால் இல்லை. பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டும்.

‘எண்ணெயை உடம்பிலே மேய்த்துக்கொண்டு என்னதான் மண்ணிலே புரண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். ‘இவ்வளவுதான் நமக்கும் வந்தது; இவ்வளவுதான் நமக்கு இறைவன் கொடுத்தது’ என்று அமைதி அடைந்து விடு. மனதிலே டென்ஷன்-கவலை இவற்றை வளர்த்துக்கொள்ளாதே. மனைவி ஒரு பக்கம் நின்று திட்டிக்கொண்டிருப்பாள்; மக்கள் தலைமாட்டிலே நின்று ஏசுவார்கள். மருமக்கள் வேறு ஏசுவார்கள்.

பேரன், பேத்திகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, இவர்களை எல்லாம் மறந்து விடு. பேரன், பேத்திகளே உனக்கு விரோதமாக மாற மாட்டார்கள். ஏனென்றால், ‘எந்தக் காலத்திலேயும் மூன்றாவது பரம்பரை என்பதுதான், உன்னைக் காப்பாற்றுகின்ற பரம்பரை’ என்று நம்முடைய மூதாதையர்கள் கருதினார்கள். அதனால்தான், ‘பாட்டனுடைய பேரை வைப்பவன்’ என்கிற பொருளிலே ‘பேரன்’ என்கின்ற வார்த்தையைக் கொடுத்தார்கள்.

பேரெடுக்கின்ற பெண்ணாதலால், ‘பேத்தி’ என்று பேத்தியைச் சொன்னார்கள். நல்ல மனைவி வாய்த்தால், ஆண்டவனுடைய கருணை; நல்ல பிள்ளை வாய்த்தால், ஆண்டவனுடைய அருள்;  இல்லையென்றால்கூட நீ கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது! கண்ணீர் வடிப்பதாலே கவலைகள் தீர்த்துவிடப் போகின்றனவா? அதைத்தான் சொன்னேன், ‘வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடிவிடாது’ என்று.

ஒருவர் செத்துப் போகிறார்; பத்துப் பேர் அழுகிறார்கள். ‘இவ்வளவு பேர் அழுகிறார்களே, நான் ஏன் சாக வேண்டும்?’ என்று செத்தவன் திரும்பி வந்துவிடுகின்றானா? வந்துவிட்டது கவலை. ‘ஐயோ!’ என்று நீ தலையில் அடித்துக்கொள்வதால், அந்தக் கவலை போய்விடப் போகிறதா? குடும்பம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்று மனதைப் போட்டு அலைக்கழித்து, அழிச்சாட்டியம் பண்ணி, துயரங்களிலேயே மனதை ஊற வைத்து, ‘போதும்! போதும்!’ என்று ஏங்கி, கடைசியில் ஒருநாள் ‘செத்தால் போதும்’  என்று முடிவு கட்டுவதைவிட, வாழ்க்கையில் நரகம் வேறு என்ன இருக்கிறது?

‘டேக் இட் ஈஸி’. எதையும் சுலபமாக ஏற்றுக்கொள். எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்தாலும், அதை மிகச் சுலபமாக எடுத்துக்கொண்டு விட்டால், ‘இது சகஜம்; இது நடக்கத்தான் செய்யும்; இதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்’ என்று எண்ணிவிட்டால், பிறகு கவலையே கிடையாது. ‘ஐயோ! நாம் இதை எதிர்பார்க்கவில்லையே’ என்று எண்ணும்போதுதான் கவலை வருகிறது. கேளாத செய்தி ஒன்றைக் கேட்டால்தான், உடம்பு நடுங்குகின்றது; மனம் நடுங்குகிறது.

 ‘இது கேட்க வேண்டிய செய்திதான்’ என்று உடனேயே எண்ணிட்டால் அந்த நடுக்கம் தீர்ந்துபோய் விடுகிறது. மனம்தானே காரணம். முன்பு நான் சொன்னபடி, கிராமங்களில் அதைத்தானே சொல்வார்கள். ‘எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம்’ என்று. கட்டிய மனைவி அழகாக இல்லாவிட்டாலும்கூட, அவள் அழகாக இருக்கிறாள் என்று மனசு நினைத்துவிட்டால், அதைவிட அழகு உலகத்திலேயே கிடையாது.

என் பிள்ளை யோக்கியன்தான் என்று மனசு நினைத்துவிட்டால், அதற்கு ஈடான நிம்மதி கிடையாது. ‘எனக்கு வருகின்ற வருமானம் போதும்; இதைவிட எவனுக்கு வந்து கிழித்துவிட்டது’ என்று எண்ணிவிட்டால், அதைவிட ஒரு நிம்மதி வேறு கிடையாது.கோயிலுக்கு நீ ஏன் ஓட வேண்டும்? ‘துன்பம் துன்பம்’ என்று நீ ஆண்டவனிடம் ஓடி முறையிட்டுக் கொள்ளலாம். முறையிட்டுக்கொண்டு ஓடிவந்து, ‘ஐயோ! ஐயோ!’ என்று தலையிலடித்துக் கொண்டால், நீ கோயிலுக்குப் போனதற்கே மரியாதை இல்லாமற் போய்விடும்.

கோயிலிலே போய் உட்கார்ந்துகொண்டு பூஜை செய்; ‘ஆண்டவனே! எனக்கு என்ன துன்பம் வரட்டும், எவ்வளவு துயரங்கள் வரட்டும், உனக்காகத் தாங்கிக் கொள்ளுவேன்; இந்த பூமியிலே நான் பிறந்தாகி விட்டது. வாழ்ந்தாக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள நான் தயாராக இல்லை. மரணம் என்ற ஒன்றை அனுப்பி என்னை நீ எடுத்துக்கொள்கிற வரையில், இங்கே வாழ்வது என்று நான் முடிவு கட்டி விட்டேன். அந்த வாழ்க்கைச் சாலையில் எது வந்தாலும், எது குறுக்கிட்டாலும்கூட நான் கவலையில்லாமல் உன் சந்நதியிலேயே நிற்பேன்; வாழுவேன்; எனக்கு யார் வாழுகிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவேன். யாருக்காக நான் வாழ வேண்டுமோ, அவர்களுக்காக வாழுவேன்’, என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி விடு.

இரவிலே, வீடு பற்றி எரிந்தால்கூட, நிம்மதியாகத் தூங்கப் பழகு. சுற்றுமுற்றும் சண்டைகள் நடந்து கொண்டிருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட அளவாவது சாப்பிடப் பழகு. டாக்டர் என்ன கேட்கிறார், ‘வயிறு பசிக்கிறதா? தூக்கம் வருகிறதா?’ என்று இரண்டை மட்டும்தானே கேட்கிறார். மனம் கெட்டுப் போனால், பசி அடங்கிப் போகும்; தூக்கம் கெட்டுப் போகும்.

மனதை அடக்குகின்ற பயிற்சியிலே குடும்பத்திற்குள் இருப்பவனும் இறங்கியாக வேண்டும். அவனுக்கும் அந்தப் பயிற்சி வந்துவிட்டால், பிறகு குடும்பமே அவனை அண்டி நிற்கும். நீங்கள் என்ன சொன்னாலும் என் காதில் ஏறாது; நீங்கள் என்னையே திட்டுங்கள், கவலை இல்லை’ என்று சொல்லிவிட்டு, அவன் நிம்மதி கொண்டுவிட்டால், பிறகு அத்தனை பேரும் அமைதி கொண்டு விடுவார்கள்.

சண்டை போடுகிறவர்களைச் சமாதானப்படுத்த ஆயிரம் வார்த்தைகள் தேவையில்லை, மௌனம் ஒன்றே போதும். ‘சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள். மௌனமாக இருந்தால், அமைதியாக இருந்தால், அந்த அமைதியும் மௌனமுமே அடுத்தவர்களை அடக்கி ஆளும் அங்குசமாகப் பயன்படும். எவ்வளவு பெரிய யானையும் பயப்படக்கூடிய ஒரே அங்குசம், நாம் நம்மையறிந்து மௌனமாகக் கட்டுண்டு கிடப்பதே. சும்மா இருத்தல்- அதன் மூலம் குடும்பம் அடங்கும்; உறவு அடங்கும்; சுற்றம் அடங்கும்; அத்தனை பேரும் அடங்குவார்கள். அடக்குவது மனதை; அதன்மூலம் அடங்குவது உலகம்.

ஆகவே, நான் சொல்லக்கூடியது இறுதியாக ஒன்றுதான். உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; மனதை அடக்குங்கள். இந்த இரண்டும் பத்திரமாக இருக்குமானால், உலகம் உங்கள் கையிலே. ‘உடம்பு உடம்பு’ என்று நான் ஒவ்வொர் தடவையும் ஏன் கூறுகிறேன் என்றால், எந்த உடம்பை அலட்சியப்படுத்தினேனோ, அதன்மீது இப்போது எனக்கு அக்கறை பிறக்கிறது.

சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். உடம்பைப் பேணி வைத்துக் கொண்டால், உலகத்தையே வெல்லலாம் என்பார்கள். அப்பொழுதெல்லாம் அது தோன்றவில்லை. ஆனால், இப்பொழுது நோய்வாய்ப்பட்டு விடுமோ, உடல் படுத்துவிடுமோ, எழ முடியாதோ, எழுத முடியாதோ, என்றெல்லாம் எண்ணும்போது உடம்பைப் பற்றிய கவலை பெரும் கவலையாகி விடுகிறது. ஆகவே உடல், உள்ளம் இரண்டும்தான் நம்மிடம் இருக்கின்ற பெரும் சொத்துக்கள் என்பதை மனதிலே கொள்ளுங்கள்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை - 600 017.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்