SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவை நனவாக்கும் நயனாதேவி

2018-12-07@ 09:42:41

சிவபெருமானை அழைக்காது யாகம் செய்த தட்சப் பிரஜாபதி, யாகத்திற்கு வருகை தந்த தன் மகள் தாட்சாயணியை அவமதிக்கவே, தேவி  அங்கேயே யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவியின் உடற்பாகங்கள் ஒவ்வொன்றும் இந்தியா  முழுவதும் பல இடங்களில் விழ, அவையெல்லாம் சக்தித் தலங்களாகப் போற்றி வணங்கப்படுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில்  3500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நயனாதேவி ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பார்வதி தேவியின் கண்கள் நயனங்கள் விழுந்த காரணத்தால் இங்கு தேவி நயனாதேவி என்ற பெயரில் வணங்கப்படுகிறாள். இந்த மாநிலத்தில் உள்ள  நைனிடால் என்ற கோடை வாசஸ்தலம் நயனாதேவியின் பெயராலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் அருகில் தெளிந்த  நீர் கொண்ட ஏரியும் தேவியின் பெயரால் நைனி என்று அழைக்கப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நயனாதார் என்ற மலையின் மீது இவ்வாறு நயனா தேவி ஆலயம் அமைந்திருப்பதன்  பின்னணியில் இன்னொரு தலபுராணமும் கூறப்படுகிறது. குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த நயனா என்ற சிறுவன் ஒருநாள் பசுக்களை  மேய்த்துக்கொண்டிருந்தபோது பசுக்கள் ஒரு பெரிய அரச மரத்தின் கீழ் (தற்போதும் நயனா தேவியின் ஆலய வளாகத்தில் உள்ள இந்த  மரத்தை பக்தர்கள் தொட்டு வணங்குகின்றனர்) இருந்த ஒரு உருண்டையான கல்லின் மீது  தாங்களாகவே பாலைச் சொரிந்து  கொண்டிருந்ததைக் கண்டார்.

பல நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது. அவன் கனவில் தேவி தோன்றி அந்தக் கல்லில் தான் சாந்நித்தியம் கொண்டிருப்பதாகத்  தெரிவிக்கவே, நயனா என்ற அந்தச் சிறுவன்  அப்போது அங்கு மன்னராக இருந்த ராஜா பீர்சந்த் அவர்களைச் சந்தித்து தான் கண்ட  காட்சியையும், தேவி தன் கனவில் தோன்றியது பற்றியும் கூறினான். மன்னனும் அங்கு வந்து பார்த்து, அங்கே தேவியின் சாந்நித்தியம்  நிலவியிருப்பதை உணர்ந்து உடனே அங்கு ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டி, அந்தச் சிறுவன் நயனாவின் பெயரிலேயே தேவியை  நயனாதேவியாகப் பிரதிஷ்டை செய்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த தேவியை இப்பகுதி மக்கள் நைனா தேவி என்றும் அழைக்கின்றனர்.

8வது நூற்றாண்டில் குஷான மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம் 1880ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில்  முற்றிலுமாக அழிந்தது. பின்னர் நயனா தேவியின் பக்தரான மோதிராம் ஷா என்பர் ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுகின்றனர்.  மகிஷாசுரனை வதைத்து மகிஷாசுரமர்த்தினியின் அம்சமாக இத்தலத்தில் தேவி எழுந்தருளியிருப்பதால் இது மகிஷ்பதி என்றும் மகிஷபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய அணையான பக்ரா அணை, சீக்கியர்களின் புனித தலமான  அனந்தபூர் சாகிப், கோவிந்த சாகர் ஏரி ஆகிய மூன்று முக்கியமான இடங்களுக்கு நடுவே சிவாலிக் மலைத் தொடரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சீக்கிய மதத்தின் 10வது குருவான குரு கோபிந்த சிங் (1666&1708) மொகலாயர்களை எதிர்த்துப் படை எடுத்துச்சென்றபோது இந்த  நயனாதேவி ஆலயத்திற்கு வந்து வழிபட்டதாகவும், தேவியின் அருளால் அவர் வெற்றி பெற்றதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.

எனவே,  இந்துக்களுக்கும் சீக்கிய மக்களுக்கும் ஒரு முக்கியமான யாத்திரைத் தலமாக இது திகழ்கிறது. மலையின் மீது அமைந்துள்ள நயனாதேவி ஆலயத்திற்குச் செல்ல ரோப் கார் எனப்படும் வாகன வசதியும், பல்லக்கு வசதியும் உள்ளன.  பெரும்பாலான யாத்ரிகர்கள் தேவியின் பெயரை உரக்க உச்சரித்துக்கொண்டே அடிவாரத்திலிருந்து நடைப் பயணமாக 2 கி.மீ. தொலைவில்  உள்ள இந்த ஆலயத்தை அடைகின்றனர். நயனாதேவியின் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் சிவப்பு நிற ஜரிகை துண்டு ஒன்றை  தலையில் கட்டிக்கொண்டு கையில் சிவப்பு நிறக் கொடி ஏந்தி, ‘மா நயனா கீ ஜெய்’ என்று முழங்கியவாறே மலையேறுகின்றனர். தங்கள்  கோரிக்கைகள் நிறைவேற பல பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் எனப்படும் தரையில் விழுந்து தொடர்ச்சியாக நமஸ்காரம் செய்தவாறே  தேவியின் ஆலயத்தை அடைகின்றனர்.

சிவப்புத் துணியில் கட்டப்பட்ட தேங்காயை முக்கியக் காணிக்கையாக தேவிக்கு அர்ப்பணிக்கின்றனர். இந்த தேவியை வழிபட,  கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்  என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.வடஇந்தியப் பாணியில், தங்க முலாம் பூசப்பட்ட  கலசங்களோடு சிறிய விமானங்களைக் கொண்ட சிறிய ஆலயம் இது. கருவறையில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் நயனாதேவி,  விநாயகர், பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளிதேவி ஆகியோரின் மூன்று சுயம்பு மூர்த்திகள் உள்ளன. இவற்றை பிண்டி  என்கின்றனர். நடுநாயகமாக நயனாதேவியும், தேவியின் இடப்புறம் கணேஷ்ஜியும், வலப்புறம் காளிதேவியும் காட்சி தருகின்றனர்.

சதி தேவியின் நயனங்களை நினைவூட்டும் வகையில் நயனாதேவியின் சுயம்பு உருவத்தில் தங்கத்தினாலான அகன்ற கண் மலர்கள்  பொருத்தப்பட்டுள்ளன. நவராத்திரி ஒன்பது நாட்களும், சிரவண அஷ்டமி நாட்களும், சைத்ர நவராத்திரி நாட்களும் இந்த ஆலயத்தின்  சிறப்பு விழா நாட்களாகும். நவராத்திரியின் போது நடைபெறும் மேளாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எண்ணற்ற   சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாட்டிற்காகக் கூடுவது ஓர் அரிய காட்சி யாகும். வெள்ளி,  செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர்.

இவர்களுக்கு அன்றாடம் அன்னதானம் அளிக்கப்படுகிறது. தேவிக்கு பூஜைகள் முடிந்தவுடன் பெண்கள் அங்கு வரும் சிறுவர், சிறுமியர்களை  வரிசையாக உட்கார வைத்து, அவர்களை வணங்கி அவர்களுக்கு பூரி, கிழங்கு, சப்பாத்தி, இனிப்புகள் போன்றவற்றை பயபக்தி யோடு  பரிமாறி மகிழ்கின்றனர். 2011ம் ஆண்டு நடைபெற்ற விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் உயிரிழக்க  நேரிட்டதையடுத்து, ஆலயத்திற்கு வெளியிலிருந்து உள்ளே செல்லும் பாதை முழுவதும் கூட்டத்தை நன்கு ஒழுங்குபடுத்தும் வகையில்  வலிமையான தடுப்புக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சண்டிகரிலிருந்து 108 கி.மீ. தொலைவிலும் மாவட்டத் தலைநகர்  பிலாஸ்பூரிலிருந்து  70 கி.மீ. தொலைவிலும் நயனாதேவி ஆலயம் அமைந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CanadaSyrianChildren

  கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

 • DroneLanternChina

  ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

 • AttukalPongalaKerala

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்