SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா?

2018-12-04@ 16:59:52

எதை செய்தாலும் நமது ராசிக்கு ஒத்து வருமா என்று பார்த்தே அதனை தொடங்குகின்றனர். ராசியை அதற்கு மூலமான நட்சத்திரங்களை கோள்களின் இயக்கம்தான் முடிவு செய்கின்றன. அதன் விவரங்களை பார்ப்போம். ஜாதகத்தில் 12 ராசிகள் உள்ளன. இவற்றை வீடுகள் என்றும், பாவங்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஆட்சியாளர்களாக, அதிபதிகளாக 9 கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.  

மேஷம், விருச்சிகம் – செவ்வாய்
ரிஷபம், துலாம் – சுக்கிரன்
மிதுனம், கன்னி – புதன்
மீனம், தனுசு –  குரு
மகரம், கும்ப – சனி,
 
ஆனால் கடகத்துக்கு – சந்திரன், சிம்மத்துக்கு – சூரியன் அதிபதியாக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஜாதகத்தில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களும் வைக்கப்பட்டுள்ளன. விதி, மதி, கதி ஆகியவைதான் அவை. இவற்றை ஆராயாமல் ஜாதகருக்கு பலன் சொல்லக் கூடாது. விதி என்பது ஒருவரின் பிறப்பைப் பற்றி கூறுவது,பிறவிப் பயனைக் குறிக்கும். இதற்கு லக்னம் என்று பெயர். மதி என்பது சந்திரன். ஜாதகரின் உயிர் நிலை பற்றிக் கூறுவது. கதி என்பது ஆன்மா, மனம் பற்றி கூறுவது. அதாவது சூரியன் இருக்கும் நிலையைக் குறிப்பது. இந்த மூன்றுக்கும் கோள்கள் நின்ற நிலையை பார்ப்பது அவசியம். ஆனால் பெரும்பாலானவர்கள் ராசிப் பலன் பார்ப்பார்கள். ராசிப் பலன் என்பது சந்திரனையும், ஜாதகரின் நட்சத்திரத்தையும் வைத்து பார்ப்பது.

அதே போல லக்னத்துக்கும் பார்க்கிறார்கள். ஆனால் கதி என்கிற சூரியனை வைத்துப் பலன் பார்ப்பதே இல்லை. இது ஒரு பெரும்பிழை. மக்களின் மீது இந்த  கோள்கள் எப்படி ஆட்சி செலுத்துகின்றன. அல்லது பலன் தருகின்றன என்பதை ஆழ்ந்து ஆராய வேண்டும். ஆனால் ஜாதகத்தில் கோள்கள் உள்ள இடங்களை  வைத்துத்தான் ஜோதிடர்கள் பலன் கூறுகின்றனர். இவற்றில் சில நேரங்களில் ஜோதிடர் சொல்லும் பலன்கள் மாறுவதுண்டு. இதற்கு காரணம் ஜோதிடமா, ஜோதிடரா என்பது வேறு விஷயம். ஆனாலும், விதி என்பது பிறவியிலேயே எழுதப்பட்டுவிடுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அது மாறாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பிறந்த ஜாதக அடிப்படையில் ராசிக்கட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கோள்கள் அந்த நபரின் வாழ்வில் என்ன மாற்றங்களை செய்கின்றன என்பது குறி்த்து பல நூல்கள் சொன்னாலும், நாம் மேலோட்டமாகவே எடுத்துக் கொண்டு நம் வாழ்வில் பொருத்திப் பார்க்கிறோம்.ஆனால் ஜோதிட நூல்களை ஆழ்ந்து படித்தால்தான், மேற்கண்ட மேலோட்டமான கருத்துகள் பயனற்றவையாக இருக்கின்றன என்பது புரியும். அதுபோன்ற சில பொதுவான அமைப்புகளை வைத்து நம் வாழ்வில் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இதற்கு சான்றாக நம் கதைகளையும், புராணங்களையும் எடுத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளுடன் நமது வாழ்வையும் பொருத்திப் பார்த்து திருப்தி அடைகிறோம். இதற்கு சில சான்றுகளை நாம் பார்ப்போம். குமரேச சதகத்தில்... குருபாததாசர் இப்படி கூறுகிறார்.

‘அன்னை தந்தை புத்தி கேளாத பிள்ளையோ
அட்டமச் சனியாகுவான்,
அஞ்சாமல் எதிர்பேசி நிற்கும் மனையாள் வாய்க்கில்
அங்கார கச்சன்மமாம்,
தன்னை மிஞ்சிச் சொன்ன வார்த்தை கேளா அடிமை
சந்திராட்டகம் என்னலாம்.
தன்  பங்கு தாவென்று சபையேறு தம்பியோ
சார்ந்த சன்மச் சூரியன்
நன்னயம்  இலாத வஞ்சனை செய்த தமையன்
மூன்றாம் இடத்தே வியாழம்,
நாள்தொறும் விரோத மிகு கொண்டோன், கொடுத்துளோன்
ராகுகேதுக்கள் எனலாம்....

என்று கூறுகின்றார். அதாவது, ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டாம் இடத்தில் ஒருவருக்கு சனி இருந்தால், அவன் தாய் தந்தை சொல்லைக் கேட்கமாட்டான். அதேபோல எட்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால், அது சந்திராஷ்டமம். அந்த ஜாதகர் சொல்வதை அவரின் வேலையாட்கள் கேட்கமாட்டார்கள். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அவருக்கு எதிர்த்துப் பேசும் மனைவி அமைந்து விடுவாள். லக்னத்தில் சூரியன் இருந்தால் தனது பங்கை பிரித்துக்கொடு என்று ஜாதகரின் உடன் பிறந்தோன் நீதிமன்றம் போவான். ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் குரு இருந்தால் அந்த ஜாதகரின் தமையன் வஞ்சனை செய்வான். ராகு, கேதுக்கள் இருந்தால் விரோதம் பாராட்டிக் கொண்டு இருப்பான்.

கடவுள்களையும் விடாத விதி:

குருபாததாசர் இப்படிச் சொல்லியுள்ள கருத்துகள் பல புராணங்களில் நடந்த நிகழ்வுகள் பொருந்திப் போகின்றன. அது பற்றி இங்கு விளக்க புகுந்தால் இந்தக் கட்டுரை விரிவாகப் போகும். மனிதர்களுக்குத்தான் இந்தப் பிரச்னையா என்றால், இல்லை. ஜோதிடம் கடவுள்களையும், அவதார புருஷர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. கடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா? என்றால் நடக்கும் என்றுதான் புராணங்கள், இதிகாசங்கள் கூறுகின்றன. மாபெரும் ரிஷியான வசிஷ்டர் நாள் நட்சத்திரம் பார்த்து ராமனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார். ஆனால் ராமனால் முடி சூடிக்கொள்ள முடியவில்லை. திருப்பாற்கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு அமுதம் கிடைத்தது.

ஈசனுக்கு மட்டும் விஷம் கிடைத்தது. அசுரர்கள் வழக்கம் போல் ஏமாற்றப்பட்டனர். சூரனால் சிறைப்பிடிக்கப்பட்ட தேவர்களை மீட்டு வந்த முருகன், வேடுவன் மகளான வள்ளியை களவில் காதலித்தான். உலக உயிர்களை படைக்கும் நான்முகன் ஒரு முகத்தை இழந்து சிறைக்கு ஏன் போனான்? பொய்யே சொல்லாத அரிச்சந்திரன் ஏன் எல்லாம் இழந்தான்? நமது வல்லமையாலும், திறமையாலும் எதுவும் வராது. விதிப்படிதான் நடக்கும். இதைத்தான் குமரேச சதகத்தில்....

‘‘அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன்
அருங்காடு அடைந்த தென்ன?
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு
ஆலம் லபித்தது என்ன?
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில்
வேடிச்சியை சேர்ந்தது என்ன?
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி
வெஞ்சிறையில் உற்றது என்ன?
என்றும் ஒரு பொய்சொல்லா மன்னன் விலைபோனது
என்ன? கானர் வல்லமையினால்
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன்
எத்தனப் படியுமாம்.......’’

என்கிறார் குருபாததாசர். இதையே நல்லான் பிள்ளை பாரதத்தில், ‘நிதியும் கணவனும் நேர்படினும், தத்தம் விதியின் பயனே பயன்... என்கிறார். விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். விதியும், மதியும் வேறுவேறானவை. கதியும் அப்படித்தான். விதி,மதி, கதி ஆகியவை வேறு வேறாக நின்றாலும், இவை மூன்றும் இல்லாமல் மனித வாழ்வு நடக்காது. ஒன்று மேட்டை உருவாக்கினால், மற்றொன்று பள்ளத்தை உருவாக்கும். மற்றொன்று அவற்றை சமப்படுத்தும். இப்படி மூன்றும் மாறி மாறி வாழ்வில் பல்வேறு நிலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் மனிதர்கள் ஒரு நாள் போல மற்றொரு நாள் இருப்பதில்லை.

‘‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’’ என்பது வள்ளுவர் வாக்கு. இந்த ஊழ் என்பதற்கு விதி என்றும், முற்பிறவியின் வினை என்றும் கூறுகிறோம். முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இந்த விதி வந்தது என்றும் கூறுகிறோம்.

‘‘ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே
அடையாமல் நீ்ங்கிவிடுமோ
ஆரியம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும்
அமைந்தபடி அன்றி வருமோ..’’

நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் நம் பாவம் நம்முடன் நிழல் போலத் தொடரும் என்பதை சோதிடம் சாஸ்திரம் பல வழிகளில் நமக்கு தெளிவாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதனால் ஜாதகத்தில் நம்முடைய விதி எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதை பார்த்து தெளிவாக நடந்து கொள்ளவே ஜோதிடம் வழிகாட்டுவதாக நமது நம்பிக்கை உள்ளது. விதியின் படி எழுதப்பட்ட அனைத்தும் வேறு வழிகளில் திருத்தப்பட வழியே இல்லை. ஆனால் பலர் பரிகாரம் என்று சொல்லி கோயில் கோயிலாக அலைவதையும் பார்க்க முடிகிறது. சோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அதில் கூறப்பட்டதை நம்பியே ஆக வேண்டும். ஆனால் அதன் விதிகளுக்கு ஆதாரமாக கடவுளை தேடி ஓடுவது சரியில்லை என்பதே மேற்கண்ட சான்றுகளின் விளக்கம். சோதிடத்தின் விதிகளை நன்கு ஆராயும் போது கோள்களின் ஒளிக்கதிர்களின் உதவியால் தான் உயிர்கள் பிறப்பதும் வாழ்வதும் என்பது. அதனால் தான் உயிர்களாகிய மனிதர்கள் மீது அதின் ஆதிக்கம் எப்போதும் இருக்கிறது. அதிலிருந்து நாம் விலகிவிட முடியாது.

ஜோதிட ஆராய்ச்சியாளர் கோவலூர் வி.புகழேந்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்