SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர் : 10 நாள் திருவிழா நிறைவு

2018-12-03@ 15:05:46

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று நிறைவடைகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்தனர். நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. நேற்று முன் தினம் (1ம்தேதி) 8ம் திருவிழாவையொட்டி இரவு 10.30க்கு தேர் பவனி நடந்தது. மேள தாளங்கள் முழங்க, பேண்டு வாத்தியங்கள் இசைக்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வலம் வந்தன. முதலில் காவல் சம்மனசானவர், செபஸ்தியார் சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன.

அதன் பின், புனித சவேரியார் சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது. தேர் பவனியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி காணிக்கையாக செலுத்தினர். தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரம் செய்து நேர்த்திக்கடனும் செலுத்தினர். ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் கம்பளம் சந்திப்பு, ரயில்வே ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று (2ம்தேதி) 9ம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. பின்னர் இரவில் தேர் பவனி நடந்தது.

நேற்று (ஞாயிறு) என்பதால், காலை முதல் தேவாலயத்தில் பக்தர்கள் குவிந்தனர். மாலையில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. வெளியூர்களில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு வரை ஏராளமானவர்கள் வந்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், டி.எஸ்.பி. இளங்கோ மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கோட்டாறு ரோட்டில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு, ஆயுதப்படை ரோடு சந்திப்பு, பொன்னப்பநாடார் காலனி, ராமன்புதூர், செட்டிக்குளம் வழியாக நாகர்கோவில் வந்தன.

வடசேரி, அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிக்குளம் சந்திப்பு, இந்து கல்லூரி சாலை, பீச் ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று இரவு வரை அமுலில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (3ம் தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசேரன் சூசை கலந்து கொள்கிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. இதில் திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குரு கிளாடின் அலெக்ஸ் பங்கேற்கிறார்.

காலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. 10ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று (3ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும். முன்னதாக நேற்று முன்தினம் தெற்கு ஊர் இறை மக்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி ஏராளமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நல உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ. அசோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்