SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்?

2018-11-29@ 17:26:35

ஜோதிட சாஸ்திரத்தில் பொதுப் பலன்கள், ஜாதக அமைப்பு பலன்கள் கிரக தசா புக்தி மாற்றத்தின்படி பலன்கள் என்று பல வகைகளில் உள்ளன. இதில் கிரகம் இருக்கும் இடம், கூட்டுக் கிரகச் சேர்க்கை, பார்வை போன்ற விஷயங்கள் மூலம் பல யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. அதற்காகத்தான் கிரகங்களுக்கு பார்வை பலம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சந்திரன், லக்னம் ஆகியவற்றைக் கொண்டு யோகங்களை நிர்ணயம் செய்வார்கள். சந்திரனை மையமாக வைத்து சந்திராதி யோகங்கள் கணக்கிடப்படுகின்றன. சந்திரன் தினக்கோள் தினமும் ஒவ்வொரு நட்சத்திர பாதங்களை கடந்து செல்லுகின்ற கிரகம். அதனால் ராசிக்கட்டத்தில் உள்ள மற்ற கிரகங்களின் பார்வை சந்திரன் மேல் விழும். சந்திரனை மற்ற கிரகங்கள் பார்க்கும்போது உண்டாகும் பொதுப்பலன்களை அறிந்துகொள்ளலாம்.

மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை, சூரியன் பார்க்க பிறந்தவர்கள். பொதுவாக பௌர்ணமி அன்றோ அல்லது அதற்கு முன்தினமோ, மறுதினமோ பிறந்திருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் நீசமாக இருக்கும்போது தான் இந்த அமைப்பு ஏற்படும். சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீச பங்க ராஜயோகம் உண்டாகிறது. இவர்கள் சிறந்த படைப்புத்திறன் மிக்கவர்களாகவும், நிர்வாகத்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெயரும், புகழும் கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கக்கூடிய பாக்கியம் உண்டு. சிலர் இளம் வயதில் தாய், தந்தையை விட்டுப் பிரிந்து பாட்டி, தாத்தா வீட்டில் வளர்வார்கள். பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், கல்லூரி பேராசிரியர், விரிவுரையாளராக வருவதற்கு இந்த அமைப்பு கை கொடுக்கும்.

மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை செவ்வாய் பார்க்கப்பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் அந்த செவ்வாய், தன் சொந்த வீட்டைப் பார்ப்பது மிகவும் சிறப்பாகும். செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உள்ளது. மகர ராசியில் செவ்வாய் உச்ச பலத்துடன் இருக்கும்போது தனது 4 ஆம் பார்வையால் மேஷ சந்திரனை பார்ப்பார். இந்த அமைப்பு மிகப் பெரிய ராஜ யோகமாகும். அரசாங்கத்தில் உயர்பதவி போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, வனத்துறை போன்றவற்றில் பணிபுரியும் யோகம் உண்டு. ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல், விவசாயம், காப்பி, தேயிலை தோட்டங்கள், தோப்புக்கள் என பூமி யோகம் அமையும். 7 ஆம் பார்வையாக பார்க்கும்போது சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்து அதாவது துலாம் ராசியில் இருந்து மேஷ சந்திரனை பார்ப்பார். இருவருக்கும் சமசப்தம பார்வை ஜாதகத்தில் மிக யோகமான சந்திர மங்கள யோகம் ஏற்படும்.

இதில் நிறை, குறைகள் உண்டு. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள். மூக்கின் மேல் கோபம் இருக்கும். தங்கள் காரியங்களை பிடிவாதமாக விடாப்பிடியாக சாதித்துக்கொள்வார்கள். கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து, உயில் சொத்து, தான சொத்து சேரும். கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு. உடல் உறவில் அதீத நாட்டம் இருக்கும். காம களியாட்டங்கள், தகாத பிற சேர்க்கைகள் இருக்கும். புதன் வீடாகிய கன்னி ராசியில் செவ்வாய் இருக்கும்போது தனது 8 ஆம் பார்வையால் மேஷ சந்திரனை பார்ப்பார். உடலில் தீக்காயங்கள், வெட்டுக் காயங்கள் ஏற்படலாம். உணர்ச்சி வசப்படுவார்கள். எப்போதும் வழக்கு, நீதிமன்றம் என்று இருப்பார்கள். ரத்த அழுத்தம் சம்பந்தமான, சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகள் வரலாம்.

மேஷ ராசியில் இருக்கும் சந்திரன் புதன் பார்க்கப் பிறந்தவர்கள் பாக்கியசாலிகள். கலைகளுக்கும், காமத்திற்கும் அதிபதியான சுக்கிரன் வீட்டில் அறிவுக்கும், வித்தைக்கும் காரகனாகிய புதன் அமர்ந்து சந்திரனை பார்ப்பது அற்புத அமைப்பாகும். நவகிரக புராண அமைப்பின்படி சந்திரனில் இருந்து தோன்றியவன் புதன். இருவரும் ஒருவருக்கொருவர் சமசப்தமமாக பார்ப்பது பெரும் அருட்கொடையாளரும் அதிபுத்திசாலிகளாகவும், பல்கலை வித்தகர்களாகவும் இருப்பார்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை மயக்கி வசப்படுத்தி விடுவார்கள்.  மிகப்பெரிய கலா ரசிகர்களாக, சிறந்த விமர்சகர்களாக இருப்பார்கள். சஞ்சலமும், சபலமும் அதிகம் இருக்கும். காதல் வலையில் சிக்குபவர்கள் காமத்தை பல வகைகளில் அனுபவிக்க விரும்புவர்கள் இதனால் தீய பழக்க வழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றிக்கொள்ளும்.

இயல் இசை, நடனம் போன்ற கலைத்துறையில் புகழ் பெறுவார்கள். எந்தத்துறையில் இருந்தாலும் எப்படியாவது புகழ், பணம் சம்பாதித்து விடுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளை கணிப்பது மிகவும் சிரமம். சிறந்த வழக்கறிஞர்களாகவும், ஆடிட்டர்களாகவும் வருவதற்கு யோகம் உண்டு. மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை, குரு பார்க்கப்பிறந்தவர்கள் ராஜ யோக அம்சம் உள்ளவர்கள். குருவுக்கு 5, 7, 9 ஆகிய பார்வைகள் சிறப்புமிக்கதாகும். பொதுவாக குரு பார்வை சகல ேதாஷ நிவர்த்தி, குருபலம். குரு பார்க்க கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட தேவகுரு சந்திரனை பார்க்கும் அமைப்பு பல யோகங்களைக் கொடுக்கும். மேஷ சந்திரனை குரு, சூரியன் வீடாகிய சிம்ம ராசியில் இருந்து 9 ஆம் பார்வையாக பார்ப்பார். அசுர குருவான களத்திரகாரகன் சுக்கிரன் வீடாகிய துலாம் ராசியில் இருந்து 7வது பார்வையாக இருவரும் சமசப்தமமாக பார்த்துக்கொள்வார்கள்.

குரு தனது சொந்த வீடாகிய தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பார். எந்தத் துறையில் இருந்து 5வது பார்வையாக சந்திரனை பார்ப்பது சிறப்பு மிக்கதாகும். அரசியலில் புகழ் பெறக்கூடிய அம்சம் உண்டு. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் உள்ளாட்சி தலைவர்கள், மேயர் போன்ற மக்கள் பணி செய்யும் மாண்புமிக்கவர்களாக வலம் வருவார்கள். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் உயர்பதவி வகிக்கும் யோகம் உண்டு. மேலும் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், வேதாந்த விஷயங்கள் ஆன்மிக ஞானம், தியானம், சொற்பொழிவு, கதாகாலட்சேபம், வாக்கு பலிதம், மந்திர ஜபதபங்கள் எல்லாம் கூடிவரும். குரு சந்திர யோகம், கஜகேசரி யோகம் போன்ற முக்கிய யோகங்கள் வேலை செய்யும். மிகப்பழமையான ஜோதிட நூல்களில் சந்திரனுக்கு சமசப்தம கேந்திரமாகிய ஏழில் குரு இருப்பது தலைசிறந்த யோகமாக சொல்லப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க கௌரவ பதவிகள் கிடைக்கும்.

அயல்நாட்டில் பதவியில் அமரும் யோகம் உண்டு. வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கக்கூடிய பாக்கியத்தை அருள்வார். நிதித்துறை, சட்டத்துறையில் நிபுணத்துவம் இருக்கும். இவர்களுக்கு எல்லாம் இருந்தாலும் ஏதாவது மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை சுக்கிரன் பார்க்கப் பிறந்தவர்கள் சுகவாசிகள் என்று சொல்லலாம். சுக்கிரனுக்கு 7 ஆம் பார்வை மட்டும்தான். ஆகையால் காமத்திற்கும், காதலுக்கும், சுகபோகத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் சுக்கிரன் தனது சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலத்துடன் சந்திரனுக்கு சமசப்தமமாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது மாளவியா யோகம் என்று சொல்வார்கள். இவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்தக்கண்கள் இருக்கும். ஒருவருடைய உடல் அமைப்பு நிறம் போன்றவை எல்லாம் தாய், தந்தை, தாத்தா, பாட்டி பரம்பரையில் வருவதாகும்.

அத்துடன் இந்த இரண்டு கிரகங்கள் சுக்கிரன், சந்திரன் இவர்களின் பார்வையுடன் பிறந்தவர்களின் தேக அமைப்பு, நடை, உடை, பாவனை எல்லோரையும் சொக்க வைத்து கிரங்க வைக்கும். காதல் போதை காமகளியாட்டங்களில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். விதவிதமாக உடை உடுத்துவது அளவுக்கு அதிகமாக ஒப்பனை செய்துகொள்வது. வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். இவர்களிடம் ஓர் வசீகரத்தன்மை குடி கொண்டிருக்கும். எவ்வளவு பெரிய திடசித்தம் உள்ளவர்களையும் ஒரு புன்சிரிப்பின் மூலம் தன் கைப்பாவையாக்கி விடுவார்கள். சொத்து சுகம் சேரும். ஆடை, ஆபரணங்கள், கார், பங்களா வசதியான வாழ்க்கை குபேர சம்பத்து அமையும். அதிக மோகமும், காமமும் இருக்கும். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நல்ல குணம், நல்ல சிந்தனை இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கு இடமுண்டு. கலைத்துறை, இசை, நடனம், திரை நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கு யோகம் உண்டு.

மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை சனி பார்க்கப் பிறந்தவர்கள் நல்ல மக்கள் தொண்டு செய்யும் மனம் உள்ளவர்களாக இருப்பார்கள். சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் சிறப்பு மிக்கதாகும். மகரத்தில் சனி சொந்த வீட்டில் ஆட்சியாக இருக்கும்போது தனது 3 ஆம் பார்வையால் மேஷ ராசியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பார். சுக்கிரன் வீடாகிய துலா ராசியில் உச்சம் பெற்று தனது 7 ஆம் பார்வையாக சனி, சந்திரன் இருவரும் சமசப்தமமாக பார்த்துக் கொள்வார்கள். சந்திரன் வீடாகிய கடகத்தில் சனி இருந்து தனது 10 ஆம் பார்வையால் மேஷ ராசியில் உள்ள சந்திரனைப் பார்ப்பார். இந்த சந்திரன், சனி பார்வை பெற்றவர்கள் கடின உழைப்பாளிகள். சகிப்புத்தன்மை, பெருந்தன்மை இருக்கும். தியாக சீலர்களாக இருப்பார்கள். ஆட்சி, உச்சம் பெற்ற சனி நாட்டின் உயர் பதவிகளில் அமர வைப்பார். பக்தி மார்க்கத்தில், ஞான மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கி இருக்கும்.

இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். மனம் அலை பாய்ந்துகொண்டே இருக்கும். பல அனுபவங்களை இவர்கள் பெறுவதால் ஒரு காலகட்டத்தில் தத்துவ வாதிகளாகவும், வேதாந்திகளாகவும், தீர்க்கதரிசிகளாகவும் ஆகிவிடுவார்கள்.
மேஷ ராசியில் இருக்கும் சந்திரனை நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது இருவரும் சுக்கிரன் வீடாகிய துலா ராசியில் இருந்து சமசப்தமமாக பார்ப்பார்கள். இதில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இணைந்து இருப்பார்கள். இந்த பார்வை அமைப்பு மருத்துவத்துறையில் ஜாதகரை ஈடுபட வைக்கும். அதிகமான சிந்தனைகள், உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எடுப்பார்கள்.

அதீத மகிழ்ச்சி, குதூகலத்துடன் இருப்பார்கள் அல்லது சோர்வு, சோகத்துடன் காணப்படுவார்கள். தனது பேச்சால் வலிய பல பிரச்னைகளை வரவழைத்துக் கொள்வார்கள். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் இருக்கும். பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். உக்கிர தெய்வங்களை உபாசனை செய்வார்கள். மந்திர, தந்திர வேலைகள், சாஸ்திர ஞானம், ஜோதிடம், குறி சொல்லுதல், அருள்வாக்கு போன்றவற்றில் தேர்ச்சி பெறுவார்கள். மருந்துக்கடை, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை நிலையம் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் விற்பனை, நாட்டு மருந்துக்கடை போன்ற தொழில்கள். ரசாயன வேதிப்பொருட்கள் சம்பந்தமான தொழில்கள் அமையும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்