SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகேசன் அருளினால் மணவாழ்வு நிச்சயம்!

2018-11-29@ 16:40:01

33 வயதாகும் எனது மகளுக்கு காலசர்ப்ப தோஷம் இருப்பதாக சொன்னார்கள். அதற்குரிய பரிகாரம் செய்துவிட்டோம். 30 வயதிற்கு மேல் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை மணவாழ்வு அமையவில்லை. என் மகளுக்கு நல்லதொரு வாழ்வு அமைய பரிகாரம் கூறுங்கள். சுப்ரமணியம், காளஹஸ்தி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ராகுகேதுவின் பரிகார ஸ்தலமாகிய காளஹஸ்தியிலேயே வசித்து வரும் நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை ராகுகேது தோஷம் பரிகாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்பது பலமாக உள்ளது. வேலைக்குச் செல்வது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாயும், கேதுவும் இணைந்திருப்பதும், களத்ர ஸ்தான அதிபதியும், களத்ரகாரகனாகிய சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதும் திருமணத்தை தடை செய்து வருகிறது. மேலும் தற்போது நடந்து வரும் தசாநாதன் சனியும் எட்டில் அமர்ந்திருக்கிறார். தடைகள் அத்தனையையும் தாண்டி அவரது திருமணம் நடப்பது என்பது இறைவனின் கைகளில்தான் உள்ளது. கிரஹங்களுக்கெல்லாம் தலைவனான அந்த இறைவனையே சரணடையுங்கள். ஞானப்ரசூனாம்பிகை சமேத காளத்தியப்பர் ஆலயத்தின் வெளிபிராகாரத்தை கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜபித்துக் கொண்டே தினமும் காலையில் வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள்.

“ஸம்ஸாரார்ணவ நாசன சாச்வத ஸாதுஹ்ருதிப்ரிய வாஸசிவ
 மன்மத நாசன மதுகானப்ரிய மந்தர பர்வத வாஸசிவ,”
மந்திரம் சொல்லச் சொல்லுங்கள் நித்தமும்
மகேசன் அருளால் மணவாழ்வு நிச்சயம்.

1990ல் திருமணம் நடைபெற்ற எனக்கு குழந்தைகள் இல்லை. புற்றுநோயால் எனது மனைவி கடந்த ஏப்ரலில் இறந்துவிட்டார். எனக்கு மீண்டும் திருமணம் நடைபெறுமா? அவ்வாறு நடந்தால் குழந்தைகள் இருக்குமா? வழிகாட்டுங்கள். அரங்கராசு, திருச்சி.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஒரே வருடத்திற்குள் தாரத்தையும், தாயையும் இழந்து தவிக்கும் உங்களது உள்ளம் படும் பாட்டினை உணரமுடிகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே வக்ர கதியில் அமர்ந்திருக்கும் சனியும், எட்டாம் பாவகத்தில் இணைந்திருக்கும் சந்திரன், செவ்வாய், கேதுவும் இல்லற வாழ்வினில் கடுமையான சோதனையைத் தந்திருக்கிறார்கள். தற்போது துவங்கியுள்ள சுக்கிர தசை மேலும் சிரமத்தினைத் தந்திருக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் மூன்று மற்றும் எட்டாம் பாவகங்களுக்கு அதிபதியாகிய சுக்ரன் ஆறில் அமர்ந்திருப்பதும் அவருடைய தசையின் காலம் தற்போது துவங்கியிருப்பதும் சாதகமான நிலை அல்ல. மறுமணத்தைப் பற்றி யோசிப்பது கூட அத்தனை சிலாக்கியமில்லை. இறைவன் நம்மைப் படைத்ததற்கான காரணத்தைத் தேட முயற்சியுங்கள். இல்வாழ்வு சுகத்தினை விடுத்து பொது வாழ்வினில் அடியெடுத்து வையுங்கள். ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு உங்களால் இயன்ற சேவையினைச் செய்யத் துவங்குங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்கள் வாழ்விற்கான பொருளை உங்களுக்கு புரிய வைக்கும்.

விராலிமலை முருகனை வழிபடுங்கள்.
ஞானஸ்கந்தன் ஞானத்தைத் தருவான்.


எனது தம்பி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான். இவனுக்கு திருமணமாகி மூன்று வயதில் பையன் இருக்கிறான். வேலைக்கும் செல்வதில்லை. தினமும் சண்டை போட்டு குடிப்பதற்கு பணம் கேட்டு அனைவரையும் துன்புறுத்துகிறான். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? யார் செய்தால் பலன் கிடைக்கும்? ரேவதி, சென்னை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தம்பியின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தற்போதைய கிரஹ நிலையின்படி வருகின்ற மே மாத வாக்கில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படலாம். அதுபோன்ற சூழலைச் சந்திக்கும் போது அவர் திருந்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உடல்நிலை சரியில்லாமல் அவர் அவதிப்படும்போது மனைவியின் சேவை அவரது மனதினை மாற்றும். ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் இவரை நல்லபடியாக வாழ வைப்பார்.

மகன் வளர, வளர இவரது மனநிலையும் மாறுபடும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி நல்ல சம்பாத்யத்தையும் தரும். செவ்வாய் தோறும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி அவரது மனைவியை வழிபட்டு வரச் சொல்லுங்கள். துர்கையின் சந்நதியில் இருந்து பிரசாதமாக எலுமிச்சம்பழத்தைப் பெற்று அதனை சாறுபிழிந்து உங்கள் தம்பிக்கு கொடுத்துவர அவரது பிரச்னை தீரும்.

“ஸர்வ பாதா ப்ரசமனம் த்ரைலோக்ய ஸ்யாகிலேச்வரி
 ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்,”
மனைவியின் துர்க்கை வழிபாடு  கணவரின்
மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.


ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். எனது மாமனாரின் ஆதிக்க குணத்தால் பல இன்னல்களை சந்தித்து தனிக்குடித்தனம் சென்றோம். நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள எனது பெற்றோர் என்னுடன் வந்து தங்கியிருக்கிறார்கள். என் கணவர் அவர்களிடம் பிரியமாக இருப்பதில்லை. இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள். பெங்களூர் வாசகி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் உத்யோக ரீதியான இடமாற்றத்தைக் கோருவது அத்தனை சிலாக்கியமில்லை. அவரும் தன் தந்தையைப் போலவே ஆதிக்க குணத்தினைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களால்தான் அவரது குணத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ள இயலும்.

உங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள உள்ளூரில் இருக்கும் தாத்தா  பாட்டியால் முடியாதா என்ன? என்பதே உங்கள் கணவரின் எண்ணம். இதனை ஆணாதிக்கம் என்று உங்களைப் போல் பலரும் தவறாக எண்ணுவதால்தான் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகிறது. கிரஹநிலையில் எந்தவித கோளாறும் இல்லை என்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை. ஜாதகத்தில் எந்த குறையும் இல்லை சாதகமான சூழலை நீங்கள் உருவாக்கவில்லை

பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாளிலிருந்து என் மனைவி எனது தேவைகளை கவனிப்பதில்லை. எடுத்தெறிந்து பேசுகிறாள். பென்ஷன் பணம் முழுவதையும் அவளிடம்தான் கொடுக்கிறேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. என் பிரச்சினைகள் தீர வழி சொல்லுங்கள். இராணிப்பேட்டை வாசகர்.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார். மேலும் ஏழாம் வீட்டின் அதிபதி சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதோடு உச்ச பலமும் பெற்றிருக்கிறார். ஜாதக பலத்தினை வைத்து பார்க்கும்போது உங்கள் மனைவியின் குணத்தினை மாற்ற இயலாது என்றே தோன்றுகிறது. ஜென்ம லக்னத்தில் கேதுவின் அமர்வினைக் கொண்டிருக்கும் நீங்கள்தான் ஞான மார்க்கத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

நீங்கள் வேறொருவருக்குப் பெற்றுத் தந்த கடன்தொகை உங்களிடம் திரும்ப வந்து சேராது. இதற்காகக் கோர்ட் படியேறுவதாலும் எந்தவித பலனும் கிடைக்காது. எந்த ஜென்மத்தில் பட்ட கடனோ இந்த ஜென்மத்தில் தீர்ந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று ஏழு பிரதட்சிணம் செய்து வழிபடுங்கள். திருவாசகத்தை தொடர்ந்து ஓதிவர உங்கள் மனக்குறை தீரும். மகேஸ்வரனை தினமும் வணங்குங்கள் மனைவியின் குணம் மாறும் பாருங்கள்.

68 வயதாகும் நான் 11 வயதில் தந்தையை இழந்தேன். எனக்கு 2 ஆண், 1 பெண் பிள்ளைகள். 39 வயதாகும் என் மூத்த மகனுக்கு திருமணம் ஆகவில்லை. என்னால் தான் என் மகனின் திருமணம் தடைபடுவதாக கூறுகின்றனர். ஒருவேளை எனது மரணம் என் மகனின் திருமணத்திற்குப் பரிகாரம் ஆகுமா? அல்போன்ஸ், கோட்டுச்சேரி.

யாருடைய மரணமும் எந்த ஒரு விஷயத்திற்கும் பரிகாரம் ஆகாது. ஒருவருடைய மரணம் மற்றொருவரின் திருமணத்தைத் தீர்மானிக்கும் என்பது மூடத்தனமான கருத்து. ஆயில்யம் நட்சத்திரத்தில் உங்கள் பிள்ளையும் நீங்களும் பிறந்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். பஞ்சாங்க கணிதத்தின்படி உங்கள் மகன் பூசம் நட்சத்திரம், கடக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி தொடங்கி இருக்கிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்திருக்கிறார். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

வருகின்ற ஜூலை மாதத்திற்குள்ளாக உங்கள் மகனின் திருமணம் அவர் மனதிற்குப் பிடித்தமான பெண்ணோடு நடந்து விடும். அவர் உங்கள் ஊரில் இருந்து தென்திசையைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டு நாளில் உங்கள் மகனை ஆதரவற்ற நிலையில் உள்ள வயது முதிர்ந்த மூன்று தம்பதியர்க்கு புத்தாடை வாங்கித் தந்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். அவர்களின் ஆசிர்வாதத்தாலும், இறைவனின் கருணையாலும் உங்கள் மகனின் மணவாழ்வு 2019ல் மலர்ந்துவிடும். கவலை வேண்டாம். ஆதரவற்ற தம்பதியருக்கு ஆடை தானம் செய்ய சொல்லுங்கள் ஆசைப்பட்ட பெண்ணோடு அவனுக்கு திருமணமாகும் பாருங்கள்.

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் என் மகளின் திருமணம் நடந்தது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் தெரிந்த குடும்பம் என்று நம்பி திருமணம் செய்தோம். மருமகன் மூளை பாதிப்படைந்தவர் என்று தெரிந்து மகள் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். விவாகரத்து கோரியுள்ளோம். பூர்வஜென்ம பாவமாக இருக்குமா? அவளது நல்வாழ்விற்கு வழி காட்டுங்கள். சரோஜினி, திருப்பூர்.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியனின் பலவீனமான சஞ்சார நிலையும் எட்டில் அமைந்துள்ள புதன் செவ்வாயின் இணைவும் கடுமையான களத்ர தோஷத்தினைத் தந்துள்ளது. தற்போதைய சூழலின் படி இவர் தனது உத்யோகத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. மறுமணத்திற்கு தற்போது அவசரப்பட வேண்டாம்.

உத்யோக ரீதியான பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இவரது மனதிற்கு நிம்மதியை உண்டாக்கும். பெண்பிள்ளையை எப்படித் தனியாக வெளியூருக்கு அனுப்புவது என்று சிந்திக்காமல் தைரியமாக அனுப்பி வையுங்கள். இரண்டு வருடங்கள் கழித்து இவருக்கேற்ற வரன் வந்து சேரும். 2021ம் ஆண்டு தை மாத வாக்கில் இவரது மறுமண வாழ்வு மலரும். ஞாயிறு தோறும் சரபேஸ்வரரை வணங்கி வரச் சொல்லுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவதாலும் மனதில் புத்துணர்ச்சி பிறக்கக் காண்பார். சரபேஸ்வரரை வணங்கி வரச் சொல்லுங்கள் விரைவில் வரன் வரும் பாருங்கள்.

“கலங்க கண்டாய பவாந்தகாய கபாலசுலாங்க கராம்புஜாய
புஜங்க பூஷாய புராந்தகாய நமோஸ்து துப்யம் சரபேச்வராய,”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்