SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை உங்கள் வசமாகும்!

2018-11-19@ 15:49:42

21 வயதாகும் எனது மகன் கொஞ்சம் வளர்ச்சி குன்றியவன். ஆனால் அறிவு அதிகம். எல்லோரிடமும் பாசமாக பழகுவான். தற்போது அதிகம் கோபப்படுகிறான். சைக்காலஜி டாக்டரின் பரிந்துரையின் பேரில் கடந்த இரண்டு வருடமாக மாத்திரை சாப்பிடுகிறான். அவனது வாழ்வில் மாற்றம் வருமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ரவி, கோவை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது உங்கள் மகனின் எதிர்கால வாழ்விற்கு வலிமை சேர்க்கிறது. தற்போது நடந்து வரும் சந்திர தசையின் முடிவிற்கு உள்ளாக அவருக்கு உரிய தொழிலை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பினைக் கொண்டிருக்கும் அவரைப் புரிந்து நடந்து கொள்வது பெற்றோர் ஆகிய உங்களின் கைகளில்தான் உள்ளது. வருகின்ற 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக மாத்திரைகளின் அளவினைக் குறைத்து இறுதியில் மருந்து மாத்திரைகளின் துணையின்றி அவரால் வாழ முடியும்.

உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் முதலான விளையாட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் உங்கள் மகனை பணியில் சேர்த்து விடுவதற்கு முயற்சி செய்யுங்கள். அது எடுபிடி வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. கௌரவம் பாராது அவரை இதுபோன்ற வேலை செய்ய பழக்குங்கள். இந்த பணி அவரது மன நிலையிலும், உள்ளத்திலும் உறுதியினைக் கூட்டும். செவ்வாய்தோறும் முருகப்பெருமானை வணங்கி வருவதால் உங்கள் மகனின் எதிர்காலம் சிறக்கக் காண்பீர்கள். செவ்வாய் தோறும் முருகனை வழிபட சொல்லுங்கள் செவ்வனே சிறக்கும் உங்கள் மகனின் எதிர்காலம்.

நான் தற்போது வேலையின்றி உள்ளேன். உடல்நிலையும் சரியில்லை. வேலை இல்லை என்றவுடன் மனைவியும் என்னுடன் வாழ விரும்பவில்லை. விவாகரத்து கேட்கிறாள். அவள் விருப்பப்படி விவாகரத்து செய்துவிடலாமா? இதனால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகுமா? வெளிநாட்டு வேலை கிடைக்குமா? உரிய பரிகாரம் சொல்லுங்கள். செல்வன், மும்பை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது உங்கள் வாழ்க்கை பல்வேறு போராட்டங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. மற்ற சிந்தனைகளை விடுத்து உத்யோக ரீதியாக உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். வெளிநாட்டு வேலையை விட உள்நாட்டு பணியே உங்களுக்கு வெற்றியைத் தரும். கண்டெய்னர், லாஜிஸ்டிக்ஸ், துறைமுகம், ஏற்றுமதி&இறக்குமதி கம்பெனிகள் முதலான துறைகளில் உங்களுக்கான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தற்போது வசிக்கும் மும்பையிலேயே வேலைக்கு முயற்சிக்கலாம். பொறாமைக்காரர்களும், போட்டியாளர்களும் என்றென்றும் உங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். எதிர்நீச்சல்தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். 12.02.2019 முதல் நல்ல நேரம் என்பது துவங்குவதால் அதன்பின் வாழ்வினில் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பிப்ரவரி மாத வாக்கில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் வந்து இணைவார். சபரிமலைக்கு மாலை அணிந்து முறையாக விரதத்தினை கடைபிடித்து ஐயப்பனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் கிடைக்கக் காண்பீர்கள். ஒளியாய் நின்றருளும் ஐயப்பனை பிரார்த்தியுங்கள் வழி பிறக்கும் உங்கள் எதிர்கால வாழ்விற்கு.

எனது மகளுக்கு தொடர்ந்து திருமணம் தடைபட்டு வருகிறது. மிகவும் கஷ்டப்படுகிறேன். எப்பொழுது திருமணம் நடைபெறும் என்ற விவரத்தினைத் தெரிவிக்கவும். மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜெயக்குமார், நிலக்கோட்டை.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. 27வது வயது தொடங்கியிருக்கும் நிலையில் திருமணம் தடைபட்டு வருவதாக வருத்தப்பட்டு எழுதியுள்ளீர்கள். அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருந்தாலும், ஏழாம் வீட்டின் அதிபதியான குருபகவான் தனது வீட்டினைப் பார்ப்பதால் தோஷம் என்பது இல்லை. எட்டில் வக்கிர கதியில் அமர்ந்திருக்கும் சனியும் 12ம் வீட்டில் அமர்ந்திருக்கும் செவ்வாயும் இவரது திருமணத்தை தடை செய்து வருகிறார்கள். என்றாலும் இவரது ஜாதகக் கணக்கின்படி 05.01.2019 முதல் திருமண யோகம் தொடங்குவதால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை வந்து சேர்வார். வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்திற்கு வியாழன் தோறும் சென்று நவகிரஹங்களில் வடக்கு முகமாய் அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி கீழ்க்கண்ட துதியினை மூன்று முறை சொல்லி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். தொடர்ச்சியாக 16 வாரங்கள் இவ்வாறு வழிபட்டு வருவது நல்லது. 16வது வார முடிவிற்குள் நல்ல வரன் அமைந்துவிடும். குரு பகவானை வழிபடச் சொல்லுங்கள் திருமணம் விரைவில் கைகூடும் பாருங்கள்.

“குணமிகு வியாழக் குரு பகவானே மனமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருஹஸ்பதி வியாழப் பரதகுரு நேசா திருமணம் நடக்க கடாக்ஷித்தருள்வாய்”


நான் ஒரு மாற்றுத் திறனாளி. என் உடன்பிறந்தோர் மூவரும் என் சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதிக்கொண்டு வெளிநாட்டில் தங்கியுள்ளார்கள். கோர்ட்டில் வழக்கு தொடர என் ஜாதகம் துணைபுரியுமா? உரிய பரிகாரம் கூறவும். கலைச்செல்வி, வேலூர்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னிலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது ராகு தசை நடப்பதாலும், ராகு உங்கள் ஜாதகத்தில் விரயத்தைத் தரும் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் கோர்ட்டிற்குச் செல்வது நன்மையைத் தராது. வீணான செலவும், இழப்பும் மட்டுமே மிச்சமாகும். கோர்ட் கேஸ் என்று அலைவதை விடுத்து, பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக் கொண்டு இந்த உலகத்தைப் பாருங்கள். வாழ்க்கை உங்கள் வசமாகும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுங்கள் எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளுங்கள்

டெக்ஸ்டைல்ஸ் துறையில் சுமார் 35 வருடமாக பணியாற்றி வருகிறேன். சொந்தமாக தொழில் செய்ய கடந்த 15 வருடமாக விடாமுயற்சி செய்து வருகிறேன். இதுவரை போராட்டம்தான். கையிருப்பு தீர்ந்து கடன், வட்டி என சிரமமான வாழ்க்கை. ஜான் ஏறினால் முழம் சறுக்கல். எதிர்காலத்தை நினைத்தால் குழப்பமாக உள்ளது. உரிய வழி சொல்லுங்கள். பாஸ்கரன், குமாரபாளையம்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தற்போதைய தசையின் அதிபதியான ராகு எட்டில் அமர்ந்து கஷ்டத்தைத் தந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக குரு தசை வந்தாலும், குரு பகவானும் 12ல் இருப்பதால் சொந்தமாக தொழில் செய்வது என்பது அத்தனை உசிதமில்லை. புதன், சுக்கிரன் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதாலும், இரண்டில் சூரியன் நீசம் அடைந்து கேதுவுடன் இணைந்திருப்பதாலும் பெரிய முதலாளியாக உருவெடுக்க இயலாது.

உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் ஒரு நல்ல உழைப்பாளியாகத் திகழ்வீர்கள். இருமடங்கு உழைத்தால்தான் ஒரு மடங்கிற்கான ஊதியத்தைப் பெற இயலும். உங்கள் மனைவியின் ஜாதக பலத்தின்படி அவரது 46வது வயதில்தான் சனி தசை முடிந்து புதன் தசை துவங்குகிறது. அவரது பெயரில் நீங்கள் செய்து வரும் தொழிலில் அவருடைய 46வது வயது முதல் நல்ல லாபத்தினைக் காண இயலும். அதுவரை காத்திருக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் சராசரியான வாழ்க்கையைத்தான் நமக்கு இறைவன் அளித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தி காணுங்கள்.

27 வயதாகும் என் மகள் எம்.ஏ.பி.எட்., படித்திருக்கிறாள். இதுவரை அரசுப் பணி கிடைக்கவில்லை. திருமணமும் தடைபட்டு வருகிறது. மாங்கல்ய தோஷம் உள்ளதால் 30 வயதிற்கு மேல்தான் திருமணம் என்று ஜோதிடர்கள் சிலர் கூறுகிறார்கள். சிலர் இப்போது செய்யலாம் என்கிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. ஒரு நல்வழி கூறுங்கள். ராஜாமணி, நாமக்கல்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உத்யோக ஸ்தானத்தைக் குறிக்கும் பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் நிச்சயமாக உங்கள் மகளுக்கு அரசுப்பணி என்பது கிடைத்துவிடும். ஆசிரியர் வேலைக்கு மட்டும் முயற்சிக்காமல் அரசுத்துறை சார்ந்த அனைத்து பணிகளுக்கும் தேர்வுகளை தவறாமல் தொடர்ந்து எழுதி வரச் சொல்லுங்கள். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் எட்டில் அமர்ந்திருந்தாலும், ஆட்சி பலம் பெற்றிருப்பதால் மாங்கல்ய தோஷம் என்பது கிடையாது.

தற்போது நடந்து வரும் தசாபுக்தி பலத்தின் அடிப்படையில் 2020ம் ஆண்டின் முற்பாதியில் அவரது திருமணம் நடந்துவிடும். உங்கள் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் பித்ருதோஷமும், குலதெய்வ வழிபாட்டில் குறைபாடும் உள்ளதை அறிய முடிகிறது. உங்கள் கணவரின் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய கர்மாக்களை சரிவர செய்துவருகிறார்களா என்பதை அறிந்து அந்தக் குறையை சரிசெய்ய முயற்சியுங்கள். வருடந்தோறும் தவறாமல் கணவர் வீட்டு குலதெய்வ கோயிலுக்கு மகளையும் அழைத்துச் சென்று வழிபட மறக்காதீர்கள். இவ்விரு குறைகளையும் சரிசெய்தீர்களேயானால் உங்கள் மகளின் வாழ்வினில் இருந்து வரும் தடைகள் காணாமல் போகும். வாழ்வு வளம் பெறும். கணவர் வீட்டு குல தெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் மணமகன் தேடி வருவான் உங்கள் மகளுக்கு விரைவில்.

எனது மகள் வயிற்றுப் பேரன், மகன் வயிற்றுப் பேத்தி இருவரின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். ஜோதிடர் ஒருவர் பொருந்தாது என்றும் மற்றொருவர்  முடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். குழம்பியுள்ளேன். வழி காட்டுங்கள். சதாசிவன், திருநெல்வேலி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகத்தையும், கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் இருவருக்கும் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம் எந்தவிதமான குறையும் உண்டாகாது. இவர்கள் இருவருக்கும் ரஜ்ஜூப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதை விட ஜாதக அமைப்பினைக் கொண்டு பொருத்தம் பார்ப்பதே நல்லது. இருவரின் ஜாதகங்களிலும் வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் என்பது உறவு முறையோடு தொடர்பு கொண்டுள்ளது.

இருவரின் ஜாதக அமைப்பின்படியும் உறவுமுறையில் தான் வரன் அமையும் என்பதால் முழுமனதுடன் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள். இதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மனப்பொருத்தம் என்ற ஒன்று உண்டாகும் போது மணவாழ்வும் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இருவர் ஜாதகங்களையும் ஒப்பீடு செய்து பார்த்ததில் பொருத்தம் என்பது வெகுசிறப்பாக உள்ளது. உள்ளத்தால் இணைந்தவர்களை சேர்த்து வையுங்கள் உறவுகள் பலப்படும். ஜாதகம் சாதகமாக உள்ளது.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்