SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிரந்தர உத்யோகம் நிச்சயம்..!

2018-11-19@ 15:44:00

எனது மகள் என் தங்கையின் பராமரிப்பில் 10ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பு விஷயமாகவும், அவளது நலன் கருதியும் நான் சொல்லும் யோசனைகளையும் உதவிகளையும் உதாசீனப்படுத்துகிறாள். மேலும் என் மீது கோபம் கொண்டு கத்துகிறாள். இந்நிலை மாறவும், அவள் படிப்பில் மேன்மை அடையவும் நான் என்ன செய்யவேண்டும்?- ரமாபிரியதர்சினி, கீரனூர்.

மகளின் கல்விநிலை குறித்த கவலை உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. தற்காலத்தில் டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்படித்தான் உள்ளார்கள். உங்களுடைய கடிதத்தைக் காணும்போது நீங்கள் கடும் குழப்பத்தில் உள்ளீர்கள் என்பதும் தெளிவாக முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதும் புரிகிறது. உதாரணத்திற்கு உங்கள் மகளின் கல்வி நிலை மேன்மை அடையவும், அவளது நடவடிக்கைகள் மாறவும் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியை முன் வைத்திருக்கும் நீங்கள் அதற்கு அவளுடைய ஜாதகத்தை அனுப்பாமல், அவளைப் பெற்ற தாயாராகிய உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைத்திருக்கிறீர்கள்.

‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்று சொல்வார்கள். நீங்கள் உறுதியான மனநிலையுடன் இருந்தால் மகளை நல்வழிப்படுத்த முடியும். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திலேயே சந்திரன் - கேதுவின் இணைவு உங்களது நிலையற்ற மனநிலையை வெளிக்காட்டுகிறது. அதே போல, 12ம் இடமாகிய மறைவு ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு வலிமையான கோள்கள் இணைந்திருப்பதால் உங்களால் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக செய்து முடிக்க இயலவில்லை என்றாலும், மகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் மகள் தாயாராகிய உங்கள் மீது உயிரையே வைத்திருப்பார்.

அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கையின் பராமரிப்பில் படிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சகோதரியைப் பற்றிச் சொல்லும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதி சனி, வெற்றியைத் தரும் 11ல் உச்சம் பெற்றிருப்பதால் சகோதரியால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது. உங்களுடைய சொல் பேச்சினை மகள் கேட்காவிடிலும், தனது சித்தியின் பேச்சினை நிச்சயம் கேட்பார். நீங்கள் அனுப்பியிருக்கும் உங்களுடைய ஜாதகக் கணக்கின்படி உங்கள் மகள் வேகம் நிறைந்தவராகத்தான் இருப்பார். அவருடைய வேகத்தில் எந்தவிதமான தவறும் இல்லை.

இலக்கினை நோக்கி விரைந்து செல்லும் குதிரையின் வேகத்தினை தடுத்து நிறுத்தாதீர்கள். அதே நேரத்தில் கடிவாளம் என்பது மட்டுமே அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு அவருடைய செயல்களுக்கு பக்கபலமாகத் துணை நின்று கொண்டே நல்வழிப்படுத்த முயற்சியுங்கள். மடை திறந்த வெள்ளமாகப் பாயும் உங்கள் மகளின் வேகத்தினை சரியான பாதைக்குள் திசை திருப்பிவிட உங்கள் தங்கையால் முடியும். செவ்வாய்க்கிழமை தோறும் சுப்ரமணியரின் ஆலயத்திற்குச் சென்று உங்கள் மகளின் நல்வாழ்வு குறித்து முருகனிடம் முறையிடுங்கள். வேலவனின் திருவருளால் உங்கள் மகளின் கல்விநிலையும், நல்வாழ்வும் முன்னேற்றம் காணும்.

என் மகன் கடந்த ஏழு வருடங்களாக ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து தற்போது வேலையின்றி இருக்கிறான். சென்னையில் வீடு வாங்கியதில் வங்கிக்கடன் 21 லட்சம் பாக்கி உள்ளது. வேலை பார்க்கும் மருமகள் கடனை அடைக்க பணம் கொடுப்பதில்லை. தனது பெற்றோருடன் வசிக்கும் அவர் என் மகனை அலட்சியப்படுத்துகிறார். ஒரு ஆண் குழந்தையும் உண்டு. என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? மருமகள் எங்களுடன் ஒத்துவருவாரா?
- ராமன், கடலூர்.


ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும்போது வீட்டுக்கடன் வாங்கிய பலரின் நிலையும் இப்படித்தான் உள்ளது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் மூன்றில் அமர்ந்துள்ளதால் விடாமுயற்சி என்பது தேவைப்படுகிறது. மேலும் சுக்கிரன் பத்தாம் வீட்டில் நீசம் பெற்றிருக்கும் குருவின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் தற்போது வேலை என்பது நிச்சயம் அவருக்கு கிடைக்கும். ஆனால் பெயர் அதிகம் வெளியில் தெரியாத ஒரு சாதாரண கம்பெனியில் சாதாரண வேலைதான் கிடைக்கும்.

உத்யோக ஸ்தானத்தில் குருவின் நீச பலம் உங்கள் மகனை சற்றே சோதனைக்குள்ளாக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைக்கும் வேலையில் அவரை சேரச் சொல்லுங்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, வீட்டில் வேலையின்றி அமர்ந்திருக்காமல் ஏதேனும் ஒரு பணிக்குச் செல்வது என்பது அவரது மன நிலைக்கும் உடல் நிலைக்கும் நல்லது. ஏழாம் வீட்டில் சந்திரன், சனி, கேது ஆகியோரின் இணைவு இவருக்கு கடுமையான மன உளைச்சலைத் தந்து கொண்டிருக்கும். முடிந்தவரை உங்கள் மகன் தனிமையில் இருக்கக்கூடாது. மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றில் இருப்பதும்,

ஏழாம் வீட்டில் சனி - கேதுவின் சேர்க்கையும் மனைவி மூலமாக இவருக்கு அத்தனை சிறப்பான பலனைத் தரவில்லை. அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியனின் அமர்வு என்பது பிள்ளையினால் கிடைக்க வேண்டிய அத்தனை சுகங்களையும் பெறுவார் என்பதை நிச்சயப்படுத்துகிறது. இவரது மகன் வளர, வளர தனது வாழ்வினிலும் வளர்ச்சியைக் காண்பார். எதிர்காலத்தில் தன் மகனுக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் எந்தவிதமான குறையும் இன்றி செய்வார் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது.

அவரது ஜாதகத்திலும் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி ஆகியோரின் இணைவு மணவாழ்வினில் சற்று சிரமத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும் இவரது ஜாதகத்திலும் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சந்திரன் - கேதுவின் இணைவு தெளிவற்ற மன நிலையை உண்டாக்கியுள்ளது. உங்கள் மருமகளை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை. மகன், மருமகள் இருவருமே சஞ்சலமான மனநிலையைக் கொண்டவர்கள் என்பதால் குடும்பப் பெரியவர்களின் கண்காணிப்பில் இவர்கள் இருப்பது நல்லது. மருமகள் நம்மை மதிக்கவில்லை என்று விலகியிருக்காமல், அவரையும் நீங்கள் பெற்ற மகளாக பாவித்து, அவரிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்காமல் மகனின் நல்வாழ்வினை மட்டும் கருத்தில் கொண்டு, பெரியவர்களாகிய நீங்கள் அவர்களோடு சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள். பேரன் வளர, வளர குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளரக் காண்பீர்கள். உங்கள் மகனும் சரி, மருமகளும் சரி, இருவருமே அடிப்படையில் மிகவும் நல்லவர்கள், சரியான புரிதலும், ஆலோசனையும் இல்லாததே அவர்களது பிரிவு நிலைக்குக் காரணம் என்ற உண்மையைத்தான் அவர்கள் இருவரின் ஜாதகங்களும் சொல்கின்றன. இதனைப் புரிந்துகொண்டு பெரியவர்களாகிய நீங்கள் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூணாக செயல்படுங்கள். உங்கள் மகனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையும்.

மூன்றரை வருடங்களுக்கு முன் எனது மருமகனுக்கு அடித்தொண்டையில் கட்டி ஏற்பட்டு சாப்பிட சிரமாக இருந்தது. சென்னையில் ஒரு மாதம் தங்கி வைத்தியம் பார்த்து சரி செய்துவிட்டு வந்தார். தற்போது இடையிடையே உடல்நிலை சரியில்லாமல் சாப்பிடுவதற்கு சிரமப்படுகிறார். என்ன வியாதி என்று இதுவரை மகளிடமும், எங்களிடமும் சொல்லவில்லை. அவருடைய ஆயுள்பாவம் எப்படி உள்ளது?- தேவராஜ், மதுரை.

தனது மனைவி மற்றும் மாமனார், மாமியாரின் மனம் வருந்தக்கூடாது என்பதால் உங்கள் மருமகன் உங்களிடம் தன் பிரச்னையை பகிர்ந்துகொள்ள மறுக்கிறார். உண்மையில் நீங்கள் பயப்படும்படியாக எதுவும் இல்லை. இந்தக் கருத்தினை உங்கள் மருமகனிடமும் தயங்காமல் தெரிவியுங்கள். மூன்றரை வருடத்திற்கு முன்பு உண்டான பிரச்னைக்கு வைத்தியம் பார்த்தாகிவிட்டது. தற்போது உண்டாகியுள்ள பிரச்னைக்கும், ஏற்கெனவே உண்டாகியிருக்கும் பிரச்னைக்கும் தொடர்பில்லை. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக கணிதத்தின்படி தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது.

கல்லீரல் மற்றும் பித்தப்பை சார்ந்த பிரச்னையால் அவர் அவதிப்படுவது போல் தோன்றுகிறது. பித்தப்பையில் கல் அல்லது அது சார்ந்த பிரச்னை கூட சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சிரமத்தைத் தரலாம். தற்போது நடந்து வரும் தசா புக்தியும் அதனையே தெளிவுபடுத்துகிறது. வேப்பம்பூ, சுண்டைக்காய், மணத்தக்காளி, இஞ்சி ஆகியவற்றை உணவினில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவருடைய ஆயுள்பாவம் என்பது மிகவும் நன்றாக உள்ளது.

தீர்க்காயுள் என்பது அவருக்கு உண்டு. இந்த உண்மையை நீங்களும், உங்கள் மகளும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதோடு உங்கள் மருமகனுக்கும் புரியவைத்து உள்ளூர் மருத்துவரிடமே அழைத்துச் செல்லுங்கள். அறுவை சிகிச்சை ஏதுமின்றி உரிய மருந்துகளின் மூலமே உங்கள் மருமகனின் பிரச்னையை சரிசெய்ய இயலும். மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான மருந்துகளை சரிவர எடுத்து வந்தாலே போதுமானது. உங்கள் மருமகனின் ஜாதகத்தைப் பொறுத்தவரை 23.01.2019க்கு மேல் தற்போது இருந்து வரும் உடல்நிலை சார்ந்த பிரச்னை முற்றிலுமாக சரியாகிவிடும். கவலை தேவையில்லை.

- சுபஸ்ரீ சங்கரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

 • 11-12-2018

  11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்