SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூர்வீகம் தெரிய வரும்!

2018-11-14@ 15:59:55

எனது மகன் பி.ஈ., முடித்து மூன்று ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறான். நான்காம் ஆண்டு தொடங்கியும் சரியான வேலைவாய்ப்பு அமையாததால் சற்று மனம் வருந்துகிறான். அவனுக்கு அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? குமார், தர்மபுரி.

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி சந்திரன் அமர்ந்திருப்பதால் உங்கள் மகன் கடும் உழைப்பாளியாக விளங்குவார். அதே நேரத்தில் உடன் இணைந்திருக்கும் கேது உள்நாட்டு வேலையைத் தடை செய்து வருவார். ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்கள் மகனுக்கு நல்ல சம்பாத்யம் என்பது நிச்சயம் உண்டு. தற்போது நடந்து வரும் தசையின் நாதன் ராகு நான்காம் வீட்டில் தனது சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் சாதகமான அம்சமே.

அரசுப்பணிதான் வேண்டும் என்று காத்திருக்காமல் அந்நிய தேசப் பணிகளுக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். இவருடைய ஜாதக அமைப்பின்படி அரபுநாடுகளில் உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. தற்போதைய தசாபுக்தி காலமும் அதையே உறுதி செய்கிறது. துபாய் முதலான நாடுகளில் பணிபுரியும் உறவினர் மூலமாக உத்யோகத்திற்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். உடனடியாக வேலை கிடைத்துவிடும். திங்கட்கிழமை தோறும் விநாயகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து அதன் மூடிகளில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வர நல்ல சம்பாத்யத்துடன் கூடிய அந்நிய தேச உத்யோகம் வந்து சேரும். ஆனை முகத்தானுக்கு விளக்கேற்ற சொல்லுங்கள் அந்நிய தேசத்தில் பணியாற்ற வாய்ப்பு வரும் பாருங்கள்.

என் அண்ணன் மகனுக்கு நான்கு ஆண்டுகளாக பெண் தேடியும் அமையவில்லை. தோஷம் உள்ளதாகக் கூறுகிறார்கள். காளஹஸ்தி, திருமணஞ்சேரி சென்று பரிகாரங்கள் செய்து வந்தோம். வேறு ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? விரைவில் திருமணம் நடக்க தக்க ஆலோசனை கூறுங்கள். கார்த்திகேயன், செய்யாறு.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் அண்ணன் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் வக்ரம் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், களத்ர ஸ்தானத்தில் ராகுவின் அமர்வு நிலையும் திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. ராகுவின் அனுக்ரஹத்தினைப் பெற காளஹஸ்தி சென்று நீங்கள் செய்த பரிகாரமே போதுமானது. தற்போது நடந்து வரும் குருபுக்தியின் காலத்திற்குள்ளாக இவரது திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். குரு பகவானின் வக்ர சஞ்சாரம் ஒன்றே அவரது திருமணத்தை தடை செய்வதால் குருவிற்கு பரிகாரம் செய்தால் போதுமானது.

இவரது ஜாதகத்தை ஆராயும்போது குடும்பத்திற்கு குருவாக இருந்த ஒருவரின் சாபத்தால் திருமணம் தடைபடுவது போல் தோன்றுகிறது. உங்கள் குடும்பத்திற்கு குலகுருவாக விளங்கும் குடும்ப புரோகிதரை தம்பதியராக வீட்டிற்கு அழைத்து அவருக்கு பாதபூஜை செய்து வணங்கச் சொல்லுங்கள். அந்த புரோகித தம்பதியருக்கு புடவை, வேஷ்டி மற்றும் திருமாங்கல்யம் வாங்கித்தருவதுடன், அவர்களுடைய போஜனத்திற்காக அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை குறைவில்லாமல் வாங்கித்தந்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். குலகுருவின் ஆசிர்வாதத்தால் குருவின் வக்ர பலம் நீங்குவதுடன் திருமணத் தடையும் விலகும். 12.02.2019ற்குள் இவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடும். குலகுருவை வணங்கி ஆசி பெறுங்கள் தலமகனுக்கு திருமணம் நடந்தேறும் பாருங்கள்.

நான் தாய்,தந்தை இழந்தவன். அண்ணன் தம்பி இருந்தும் பயன் இல்லை. நிலையான வேலை இல்லை. தங்குவதற்கு நிரந்தர இடமில்லை. தற்போது ஓர் அரசியல்வாதியிடம் உதவியாளராக இருந்து வருகிறேன். திருமணத்திற்காக எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவருக்கு திருமணம் முடிந்துவிடுகிறது. எனக்கு அரசியல் ஒத்துவருமா? என் நல்வாழ்விற்கு வழி சொல்லுங்கள். ஆனந்தன், சிதம்பரம்.


விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி குரு பகவான் 11ல் அமர்ந்திருப்பது சாதகமான நிலையே. ஜென்ம லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரனின் இணைவும் உங்களை புகழ்பெறச் செய்யும். குறிப்பாக ஜென்ம லக்னத்தில் இணைந்துள்ள மூன்று கிரஹங்களும் குருவின் சாரத்தில் அமர்ந்துள்ளனர். புதன், சுக்கிரன் இருவரும் அஸ்தமனம் ஆகியிருந்தாலும் சூரியனின் வலிமை உங்களை சிறந்த அரசியல்வாதியாக உருவெடுக்க வைக்கும். எந்த ஒரு செயலையும் பயமின்றி தைரியமாகச் செய்வதே உங்களின் சிறப்பம்சம் ஆகும்.

எந்தச் சூழலிலும் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை எந்தவிதமான தயக்கமுமின்றி உடனடியாகச் செய்யுங்கள். ஐந்தாம் இடத்தில் ராகு,சந்திரனின் இணைவு உங்களுக்கு சாமர்த்தியம் நிறைந்த சிந்தனையைத் தரும். அரசியல் ரீதியான உங்கள் ஆலோசனைகள் சிறப்பான வெற்றியைக் காணும். மதிநுட்ப மந்திரிக்கு உரிய தகுதி உங்களிடம் உள்ளது. அரசியலே உங்களுக்கான பாதை என்பதால் மற்ற சிந்தனைகளை விடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடுங்கள். நீங்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்கலாம். திங்கள்தோறும் விடாமல் தில்லை காளியை வணங்கி வாருங்கள். 2019ம் வருடத்தின் இறுதியில் உங்கள் திருமணம் நடந்துவிடும். மனைவி வரும் நேரம் வாழ்வினில் மாற்றத்தை உருவாக்கும். தில்லைக் காளியை வணங்குங்கள் எல்லையில்லா இன்பம் காணுங்கள்.

எனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர். நிரந்தரமாக ஒரு வேலையில் நிற்கமாட்டார். இப்பொழுது நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். என் மகன் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாதவன். எல்லாமே படுக்கையில்தான். அவன் நன்றாக இருக்கவும், நான் என் கணவருடன் சேர்ந்து வாழவும் வழி காட்டுங்கள். சத்தியா, கன்னியாகுமரி.

மூவரின் ஜாதகங்களையும் கணித்துப் பார்த்ததில் உங்களுடைய ஜாதகம் மட்டுமே சற்று வலிமையாக உள்ளது. புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடக்கிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தசையில் ராகு புக்தி நடக்கிறது. உங்கள் கணவரின் ஜாதகத்தைப் பொறுத்த வரை அவரை ஒரு நிரந்தர வேலையில் உட்கார வைக்க இயலாது. அவரை நம்பியிருப்பதால் ஒரு பலனும் இல்லை.

அதே நேரத்தில் உங்களுடைய ஜாதகம் வலிமையாக இருப்பதால் நீங்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குங்கள். சுயதொழிலில் உங்களால் வெற்றி பெற இயலும். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகம் மிகவும் பலவீனமானது. பூர்வ ஜென்ம பலன் என்பதால் இவை எல்லாவற்றையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அதற்குரிய மனவலிமையை இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளார். ஆதரவற்றோருக்கு சேவை செய்வதற்காகத்தான் இறைவன் உங்களை படைத்துள்ளார் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வாருங்கள். உங்கள் வாழ்விற்கான அர்த்தம் புரிந்து விடும். பயமின்றி வாழ பழகுங்கள். சுயதொழில் தொடங்க முயலுங்கள்.

கையில் இருந்த நகை எல்லாவற்றையும் அடகு வைத்து என் மருமகனின் நண்பனுக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன் கடன் கொடுத்தேன். 2 வருடம் வட்டி கொடுத்தவன், 2014ல் இருந்து வட்டியும் தரவில்லை, அசலும் தரவில்லை. என் மருமகன் இறந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன். எனது பணம் திரும்பக் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? முனுசாமி, சென்னை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ராகு தசையில் சுக்ர புக்தி நடந்த காலத்தில் கடன் கொடுத்துள்ளீர்கள். நேரம் நன்றாக இருந்தவரை கடன்தொகைக்கான வட்டித்தொகை வந்திருக்கிறது. அதன்பிறகு நேரம் மாறிவிட்டதால் வட்டித்தொகை வராமல் அவதிப்பட்டு வருகிறீர்கள். கடன்பிரச்சினையைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் சூரியனும், வக்ரம் பெற்ற புதனும் இணைந்திருக்கிறார்கள். இது உங்களுக்கு சாதகமான நிலை அல்ல. தற்போது நடந்து வரும் தசையின் நாதன் ஆன குருபகவான் ஒன்பதாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் ஞானமார்க்கத்திற்கான பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டும்.

உங்கள் வயதும் அதனையே அறிவுறுத்துகிறது. கொடுத்த பணத்திற்காக வழக்கு, பஞ்சாயத்து என்று அலைவது பலனைத் தராது. பணத்தைப் பற்றி எண்ணாமல் இறைவனின் திருவடிகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். விவசாயியான நீங்கள் உங்களால் இயன்ற அளவிற்கு மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் விட்டு வளர்த்து வாருங்கள். மன ஆறுதலைப் பெறுவீர்கள். உங்கள் குலதெய்வமான முனீஸ்வர ஸ்வாமியை ஞாயிறு தோறும் தவறாமல் வழிபட்டு வாருங்கள். உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் திரும்ப வந்து சேரும். தவறாமல் ஞாயிறு தோறும் முனீஸ்வரனை வழிபடுங்கள். தானாக வந்து சேரும் நீங்கள் கொடுத்த பணம் பாருங்கள்.

மாற்றுத் திறனாளியான என் கணவரின் ஓய்வுப் பணத்தின் உதவியுடன் வீடு கட்டி குடியேறியதில் இருந்து கணவன்   மனைவிக்குள் பிரச்சினை, நிம்மதியின்மை, தற்கொலை எண்ணம், கெட்ட கனவு, அடிக்கடி மருத்துவ செலவு என பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம். இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு செல்வதற்காக முயற்சித்தும் முடியவில்லை. ஒரு நல்ல தீர்வினைச் சொல்லுங்கள். மல்லிகா சூசை, பாண்டிச்சேரி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் வீட்டின் அமைப்பினைப் பற்றி நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. வீட்டின் தலைவாசல் மேற்கு திசை நோக்கியும், பின்வாசல் கிழக்கிலும் அமைந்திருந்தால் நீங்கள் அந்த வீட்டினை விற்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு வாயிலில் வேப்பமரக் கன்றினையும், பின்புறத்தில் துளசிச் செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வீட்டினில் எந்தவிதமான தீயசக்தியும் உள்நுழையாது. கெட்ட சகுனங்கள் விலகி நல்லது நடக்கக் காண்பீர்கள்.

வீட்டின் அமைப்பு கிழக்கு  மேற்காக இல்லாமல் மாறியிருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த வீட்டினை விற்றுவிட்டு மேற்சொன்ன அமைப்பில் உள்ள வீடாகப் பார்த்து வாங்கி குடியேறலாம். என்றாலும் தற்போது நடந்து வரும் ஏழரைச் சனியின் காலமும், ராகு தசையில் ராகுபுக்தியின் காலமும் அதற்குத் துணை செய்யாது. 2020ம் ஆண்டின் இறுதியில்தான் வேறு வீடு மாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெள்ளிக்கிழமை தோறும் வில்லியனூர் மாதாவின் கோவிலுக்குச் சென்று உங்கள் குறைகளைச் சொல்லி வழிபடுவதோடு, ஆலய வளாகத்தில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்து வாருங்கள். மாதாவின் அருளால் உங்கள் மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கும். மாதாவை கைத்தொழுங்கள் மகிழ்ச்சி கூடும் பாருங்கள்.

எங்களது முன்னோர்கள் பூர்வீக ஊரை விட்டு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் குலதெய்வம் எது என்று தெரியவில்லை. குலதெய்வத்தை அறிய என் தந்தை கோடாங்கி மூலம் முயற்சித்தும் பலன் இல்லை. எங்கள் ஜாதகங்களின் வழியாக ஆய்வு செய்து குலதெய்வத்தை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். சுந்தரமூர்த்தி, விருதுநகர்.

குலதெய்வத்தைப் பற்றியும் பூர்வீகத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வத்துடன் உள்ளீர்கள் என்பதை உங்களின் நீண்ட நெடிய கடிதம் எடுத்துக் காட்டுகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாயும், சனியும் இணைந்துள்ளார்கள். சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி சனியுடன் செவ்வாய் இணைந்து அமர்ந்துள்ளார். இதுபோன்ற செவ்வாய், சனியின் இணைந்த அமைப்பு கருப்பண்ண ஸ்வாமியைக் குறிக்கும். தகப்பன் பிள்ளை ஆகிய உங்கள் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து பார்க்கும்போது பதினெட்டாம்படி கருப்பண்ண ஸ்வாமியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பாதியில் விட்டுப்போன தைப்பொங்கல் நாளில் செய்து வரும் சம்பிரதாயத்தினை இந்த வருடத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவெடுத்துச் செயல்படுங்கள். உங்கள் மருமகளின் கரங்களாலேயே அந்தப் பணி தொடங்கப்படட்டும். இதனால் முன்னோர்களின் சாபம் நீங்குவதோடு குலம் விருத்தி அடைவதற்கான வழியும் பிறக்கும். அதேபோன்று மகாசிவராத்திரி நாளில் செய்து வரும் சம்பிரதாயத்தினையும் தொடருங்கள். விருதுநகருக்கு அருகில் உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் 18ம்படி கருப்பண்ண சுவாமியின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ள, உங்கள் பூர்வீகம் தெரிய வரும்.கருப்பண்ண சுவாமியை பிரார்த்தியுங்கள். கனவில் காட்டுவார் குலதெய்வத்தை பாருங்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்