SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைவற்ற வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்

2018-11-09@ 09:41:01

அங்கிருக்கும் மனிதர்களின் கரங்கள் விசிறி வாழைபோல மடமடவென்று விரிகின்றன. வானெங்கும் தேவதேவியர்கள் அரூபமாக கைகூப்புகின்றனர். அக்னிச் சட்டியை ஏந்தும்போதே கண்கள் அக்னித் துண்டங்களாக கனன்று தெறிக்கின்றன. மேனியெங்கும் கருமை நிறம் கொள்ளும்போதே காளி பீடமிட்டு அவர்களுக்குள் அமர்கிறாள். ஆயிரம் கரங்களோடும் செக்கச் சிவந்த நாவை துழாவியபடி ஆங்காங்கு உன்மத்தத்தோடு குலசை முழுவதும் காளி வியாபித்திருக்கின்றாள். லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பெருவெள்ளத்தில் பித்து பிடித்தது போல காளியை நோக்கி வணங்குவதை காணலாம். ஆம், இவையெல்லாம் நிகழ்வது குலசை எனும் குலசேகரப்பட்டினத்தில்தான்.

தமிழகத்தின் தசரா எனில் குலசைதான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசூரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’என்றழைக்கப்பட்டது. பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன். இப்பகுதியை கி.பி.1251 ஆம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள் என்றும் கூறப்படுகிறது.

வெற்றி பெற்ற குலசேகரப் பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி துறைமுகத்தை சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான். தன்னுடைய பெயரையே குலசேகரப்பட்டினம் என வைத்தான். அச்சமயத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப்பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்துள்ளது என்பதும் வரலாறு. குலசேகரப்பட்டினம் தேவிக்கு முத்தாரம்மன் என பெயர் வழங்க பல காரணங்கள் கூறப்படுகிறது. ‘பாண்டி நாடு முத்துடைத்து’ என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக்குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன.

முத்துக்களிலிருந்து அன்னை உதித்ததால் ‘முத்தாரம்மன்’ என அழைக்கப்பட்டாள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாளை வழிபட்டதன் காரணமாக அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன் என்றழைத்து, அதுவே மருவி முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது. சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது.

உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் ஜீவன் முக்தர்கள் ஆவார்கள். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பதுபோல உலக உயிர்களை மாயைகளிலிருந்து பிரித்து ஜீவன் முக்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று என்பது மற்றுமொரு கூற்று. நவமணிகள் என்பது முத்து, மரகதம், பச்சை, புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம் ஆகியவையாகும். இதில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது.

இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காக்க ஒளிர்வதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகின்றாள். அவளிடம் நாம் பணிந்தால் நம் வாழ்வும் முத்துப்போல் பிரகாசிக்கும் என்பது அன்னையின் தத்துவம். ஆரம்ப காலங்களில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக்கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டுமென்பது பக்தர்களின் ஆவல். அம்பாளிடம் இதற்காக மனமுருகி வேண்டினர். ஒருநாள், கோயில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். ‘‘எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருக்கிறீர்கள்.

கன்னியாகுமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு சென்றால் உங்கள் ஆவல் நிறைவேறும்” என்று கூறினாள். மைலாடியில் சுப்பையா ஸ்தபதியின் கனவில் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். தம்மோடு, ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் காட்சி அளித்தாள். இதேபோல் எமக்கு ஒரு சிலை செய்து வைக்கவும் என கூறினார். மறுநாள் காலை எழுந்தவுடனே சுப்பையாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. ஒவ்வொருவராக தேடிப்போய், குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்று  விசாரித்தார். அன்னையைப் பற்றி அறிந்து கொண்டார். உடனே பணியை துவங்கி விட்டார்.

அருமையான முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் தயாரானார். குலசையில் இருந்து பூசாரி தலைமையில் பக்தர்கள்  மைலாடி வந்தனர். அங்கே சுப்பையா ஸ்தபதி செய்து வைத்திருந்த சிலையைக் கண்டு மகிழ்ந்தனர். அந்தப் புனிதமான அய்யனையும், அம்மையையும் உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக்கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பதும், இருவருமே வடக்கு நோக்கி காட்சி தருவதும் இத்தலத்தில் மட்டுமே உள்ள பெருமையாகும்.

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் சிவனிடம் பெற்ற வரத்தால் தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். இதனால் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இதே நிலைமை நீடித்தால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹாவிஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக்கொண்டு என்ன செய்வதென ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம்.

அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதிசக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகிக்க முடியாத அன்னை மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு முத்தாரம்மனாக பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகரில்லையென விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலையென ஆனார்கள். அதேபோல இந்திரனும் அஷ்டதிக் பாலகர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் வந்தது.

அன்னை  அவர்கள் கொடுத்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். தவவலிமை மிக்க வரமுனி, ஆணவ மிகுதியால் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று குலசேகரப்பட்டினம் இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார்.

ஆனாலும், தனது விடா முயற்சியாலும், தவவலிமையாலும் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத்துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாகவே வாழ்வை நடத்தினார்.அவரின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி கடும் வேள்வி நடத்தினர். மகிஷாசூரனின் கொடூரச் செயல்களுக்கு முடிவு கட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப்புனித நாள்தான் தசரா பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி தினங்களில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 800க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம் விதமான வேடத்தில் வந்து குலசையை குதூகலப்படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதை காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். உலகில் எங்குமே காண இயலாத விமரிசையான விழா இது. குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10வது நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்தும் மற்ற முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதிகள் உள்ளது. தொடர்பு எண். 04639250355,

- முத்தாலங்குறிச்சி காமராசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • delli_engottai11

  டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்