SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொய்யில்லா வாழ்க்கை

2018-11-07@ 16:06:08

அர்ததமுள்ள இந்துமதம் - 67

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
- என்றார் வள்ளுவனார்.
 
நீ குடிக்கலாம்; கூத்தியார் வைத்துக் கொள்ளலாம்; சூதாடலாம்; எந்தப் பாவங்களை நீ செய்தாலும்கூட, நீ கடைப்பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம், பொய் சொல்லாமல் இருப்பது. எல்லாவற்றிலும் உண்மையே பேசுவது என்று முடிவு கட்டிக் கொண்டால், இந்தப் பாதகங்களில் இருந்து நீ விடுபடுவாய் என்கிறது வேதம். இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படுவது உண்மை பேசுவது! அதிலேயும் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவுக்கு வந்த பிற்பாடும், அரசியல்வாதிகள் என்போர் பொய்யே பேசுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துச் சாதாரண மக்களும், சராசரி மனிதர்களும் பொய்யே பேசுவது என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கிராமங்களிலே இருந்து நகரங்கள் வரையிலேயும், எல்லா இடங்களிலுமே பொய் பேசுவோர் அதிகரித்திருக்கிறார்கள். இந்தப் பொய்யினால் விளைகிற துன்பங்கள்தான், பஞ்சமா பாதகங்களிலேயே மிகப்பெரிய பாதகமாக முடிகின்ற துன்பமாகும். நான் தி.மு.க.வில் இருந்தபோது காங்கிரஸ்காரர்களும், காங்கிரசில் இருந்தபோது தி.மு.க.வினரும் எல்லோரும் பேசுவார்கள், ‘நான் குடிப்பவன்’ என்று. எந்த மேடையிலும் நான் அதை மறுத்ததில்லை. சொல்லப்போனால் ஆரம்பகாலத்தில் அவர்கள் பேசியபோது எனக்குக் குடிப்பழக்கம் அதிகமில்லை. எப்போதோ மாதத்தில் ஒருமுறை, இருமுறைதான் குடிப்பது வழக்கம்.

ஆனாலும்கூட, அவர்கள் பேசிவிட்டார்கள் என்பதற்காக நான் அதை ஒப்புக்கொண்டு, ‘ஆமாம், நான் குடிப்பேன்’ என்று கூறி இருக்கிறேனே தவிர மறுத்ததில்லை; வாதாடியதில்லை. திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டால், அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு விஷயம் கிடைக்காது.‘இவன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான்’ என்று எதையும் ரகசியமாகப் பேச முடியாது. நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.‘ஆம், செய்தேன்’ என்று ஒரு வார்த்தையின் மூலம், பல விமர்சனங்கள், பல விஷயங்கள், பல வார்த்தைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்முடைய நாட்டில் பொய் பேசுவோர் அதிகமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வள்ளுவனார் அதை ஒரு முக்கியமான விஷயமாகக் குறிப்பிட்டிருக்க மாட்டாரல்லவா? மதம் மனிதனுக்குக் கற்றுத் தரும் விஷயங்களில் மிக முக்கியமானது உண்மை பேசுவதாகும்.‘உண்மையே பேசு, உண்மையே பேசு’ என்று அது வெறும் வார்த்தையாகச் சொல்வது கிடையாது. உண்மை பேசியவன் எப்படி வாழ்ந்தான் என்பதற்குக் கதைகளையும் சொல்லி இருக்கிறது. ஹரிச்சந்திரனுடைய வரலாறு, நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறாகும். உண்மையே பேசுவது என்று வைத்திருந்ததாலே, ஹரிச்சந்திரன், வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கலாம்;

ஆனால், அப்படி ஒரு மன்னன் இந்தப் பூமியை ஆண்டான் என்பதை இன்றுவரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம். நம்மை நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லும் சரித்திரமாக அது எப்படி ஆனது? அவன் தன் வாழ்க்கையில் உண்மையே பேசினான் என்ற ஒரே காரணத்திற்காக, அது சரித்திரமாகி விட்டது. காலா காலங்களுக்கு அது நிலைத்து நின்றுவிட்டது. எங்கள் ஊரிலே ஒருவர். எனக்குத் தெரிய, கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில், இதுவரையிலே அவர் ஒரு உண்மைகூடப் பேசியது கிடையாது. எதையெடுத்தாலும் பொய்யே பேசுவார். இது பொய் என்று நமக்கே நன்றாகத் தெரியும்; இவனுக்குப் பொய் என்று தெரிகின்றது என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் பொய்தான் சொல்லுவார்.

அது ஒருவகை வியாதி போலவே தோன்றிற்று, எனக்கு. அப்படி பொய் சொல்வது மட்டுமல்ல; பொய்தான், தம்மை வாழ வைக்கிறது என்றும் அவர் நம்பத் தொடங்கினார். தன்னுடைய மகளுக்கு அவர் திருமணம் பேசினார். லட்ச ரூபாய்க்குச் சீர்வரிசை தருவதாகவும், லட்ச ரூபாய் கையில் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இரண்டு லட்ச ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருப்பதாகவே சொல்லிவிட்டார். அவர் கையிலே காலணா பணம் கிடையாது. சீர்வரிசை கொடுப்பதற்கு அவரிடம் பொருள்களும் கிடையாது. அது அவருக்குத் தெரியும்; அவருடைய மனைவிக்கும் தெரியும். ஆனால், யாரிடமும் அதைச் சொல்லவில்லை.

‘பாப்பாவுக்காக நான் இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன்; ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்று மட்டும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே வந்தார். பலபேரிடம் வீட்டுத் தேவைக்கென்று இரவலாக நகைகளையும், பாத்திரங்களையும் வாங்கி வந்தார். கடன் வாங்கி வந்த பொருள்களை, எல்லாம் சீர்வரிசை என்று அடுக்கி வைத்துவிட்டார். மாப்பிள்ளை அழைப்பு நடந்துவிட்டது; தாலி கட்ட வேண்டும். லட்ச ரூபாய் இவர் கொடுப்பதாகச் சொன்ன சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்டார்கள்.‘இப்பொழுது கையிலே பணம் இல்லை. நோட்டெழுதித் தருகிறேன்’ என்றார்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி, பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கருதித் தாலி கட்ட வைத்துவிட்டார்கள். அவர்கள் நல்லவர்கள்; நல்ல குணமுடையவர்கள்; தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாலி கட்டியபிறகு தொகையைக் கேட்டார்கள். அவரிடம் பணமே இல்லை என்பது தெரிந்து. இல்லை என்பது மட்டுமல்ல; சீர்வரிசையாகப் பல பொருட்களை வைத்திருந்தாரே, அவற்றையும் பலபேர் வந்து, ‘இது என்னுடையது. இது என்னுடையது’ என்று எடுத்துக்கொண்டு போக ஆரம்பித்தார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் திகைத்தார்கள். தவறான இடத்தில் திருமணம் செய்துவிட்டோம் என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். கடைசியில் என்ன நடந்தது?

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் கொஞ்சம் தரம் கெட்டவர்களாக இருந்திருந்தால், பெண்ணினுடைய வாழ்க்கை அதோ கதியாகி இருக்கும். ஆனால், அவர்கள் கொஞ்சம் உயர்ந்த குணம் படைத்தவர்களாக இருந்த காரணத்தால், ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். ‘சீர் கொடுப்பதாக நீங்களே சொன்னீர்கள்; ஏமாற்றி விட்டீர்கள்; பரவாயில்லை. அதற்காகப் பெண்ணினுடைய வாழ்க்கையை நாங்கள் கெடுக்க விரும்பவில்லை. பெண்ணை நாங்கள் அழைத்துக்கொண்டு போகிறோம். அந்தப் பெண், நீங்கள் வாக்களித்தபடியே சீர்வரிசை கொடுத்தபிறகுதான் தாய் வீட்டுக்கு வருவாள். அதுவரை அவள் தாய் வீட்டு வாசலை மிதிக்க மாட்டாள்’ என்று சொல்லி, அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். சாதாரணமாக மற்றக் குடும்பங்களில் என்ன நடக்கும்?

தாய் வீட்டுக்குப் பெண்ணை அனுப்பி, ‘சீர்வரிசையோடு திரும்பி வா’ என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் உயர்ந்த மனிதர்களானதாலே, பெண்ணைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போய், ‘தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள். பெண் இப்போது நிம்மதியாகத்தான் வாழ்கிறாள் என்றாலும், அந்தப் பெண்ணின் தகப்பனார் சொன்ன பொய்யை வைத்து ஊரே சிரிப்பாய் சிரித்தது. அந்த ஊரிலே அவர் குடியிருக்க முடியாமல் வேறு ஊரில் போய்க் குடியிருக்கிறார், இப்போது. கதைகள் நிறையக் கேட்கிறீர்கள். ஒரு பொய், பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும், ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும், ஒரு பொய், ஒரு குடும்பத்தையே பாழாக்கிற்று என்றும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

அப்படி இருந்தும்கூடப் பொய் சொல்லுகிறவன் இல்லாமற் போனானா என்றால், அதுதான் இல்லை. இந்தப் பொய் சொல்லுகின்றவனைத் திருத்துவதற்குத்தான், மதம் பல உபந்நியாசங்களைச் செய்தது. பல உபந்நியாசகர்கள் அதற்காகவே முயன்றார்கள். இன்றைக்கு மதவாதியாக இருக்கிறவன் பொய் சொல்லப் பயப்படுகிறான். ‘பொய் சொன்னால் நாக்கு வெந்து போகும்; பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது; பொய் சொன்னால் புற்று வைக்கும்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமல் இருப்பதற்கு மத அடிப்படையிலேதான் அவன் கற்றுக் கொள்கிறான். அதனால்தான், தனி மனித ஒழுக்கத்தை மதம் காப்பாற்றுகிறது என்று நான் அடிக்கடி சொல்லுவது வழக்கம்.

நானென்ன, பெரியவர்கள், என்னைவிட வயதிலே மூத்தவர்கள் எல்லாம் சொல்லிப் போனதும் அதுதான். மனிதனுடைய தனி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதும், சீர்படுத்துவதும், மதம்தான். ‘பொய் சொல்லாதே, நேர்மையாக நட, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு, ஒழுங்காக இரு’ - இவ்வளவையும் மதம் போதிக்கின்ற காரணத்தினால், அது முழு சந்நியாச மடமாக  மட்டும் இல்லாமல், ஒழுக்கத்தைக் கற்பிக்கின்ற உன்னதப் பள்ளிக்கூடமாகவும், கலைக்கல்லூரியாகவும் அமைந்திருக்கிறது. நான் பொய் சொல்லுகிறேன்; இன்னொருவன் அதிலே ஏமாறுகிறான். இதுதான் கதை? இன்னொன்றை எண்ணிப் பாருங்கள். நானும் ஒரு பொய்யனிடம் மாட்டிக்கொண்டு, நான் ஒரு பொய் சொல்ல, அவன் ஒரு பொய் சொல்ல என்று இரண்டு பேரும் பொய் சொல்லிக்கொண்டிருந்தால், விஷயம் எப்படி இருக்கும்?

திருமூலர், திருமந்திரத்திலே சொன்னதுபோல், ‘குருடும் குருடும் குருட்டாட்டமடி, குருடும் குருடும் குழிவிழு மாறே’ என்று ஆகிவிடும். ‘வேதம் பொய், புராணம் பொய், இதிகாசம் பொய்’ என்று மேடையிலே முழங்குகிறானே, அவன் மேடையிலே பேசுவதெல்லாம் பொய். இன்னொன்றைப் பொய் என்று சொல்லி வருகிறவன், தானாவது பொய் சொல்லாமல் இருக்கிறானா என்றால், அதுதான் இல்லை. வேதத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; புராணத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; ஆனால், பொய்யான கதைகள் உண்மையான நீதியைப் புகட்டுகின்றன. மேடையிலே பேசுகின்ற நாத்திகன், பகுத்தறிவு என்ற பேராலே  சொல்கின்ற பொய், எவ்வளவு குடும்பங்களைப் பாழடித்திருக்கிறது என்பதனை நான் அனுபவத்திலே அறிந்திருக்கிறேன்.

ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘‘உண்மை வாசற்படியைத் தாண்டுவதற்குள், பொய் ஊரைச்சுற்றி வந்துவிடும்’’ என்று. எவ்வளவுதான் பொய், ஊரையும் உலகத்தையும் சுற்றி வந்தாலும், கடைசியில் ஒருநாள் அது பொய் என்பது தெரிந்துவிடும். இறுதியிலே பொய், ‘உண்மை’ என்றே சாதிக்கப்பட்டு வெற்றி பெற்றதாக நீங்கள் வரலாறே கேட்டிருக்க முடியாது. காலம்தான் வித்தியாசம். சில பொய்கள் ஆறுமணி நேரத்திலேயே வெளியாகிவிடும்; சில ஆறு நாள்; சில ஆறு வாரம்; சில ஆறு மாதம்; சில ஆறு வருஷம். ஆனால், ஆயுள் காலத்திற்குள்ளாக, நாம் சொன்ன பொய் நம்மையே வந்து திருப்பித் தாக்கும் என்பதனை வரலாறு காட்டுகிறது;

வேதம் காட்டுகிறது; புராணம் காட்டுகிறது; இதிகாசம் காட்டுகிறது. வடமொழியில், ‘சத்யமேவ ஜெயதே’ என்கிறார்கள். அந்த, ‘சத்யமேவ ஜெயதே’ என்பதை, ‘உண்மையே வெல்லும்’ என்று தமிழிலே மொழி பெயர்த்திருக்கிறார்கள். அப்படித் தமிழில் மொழிபெயர்த்தது தவறு. மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலேயும் நேர்மையாக நடப்பதற்குப் பெயர்தான் சத்தியம் என்பதாகும். அந்தச் சத்தியம், இந்த மூன்றும் சேர்ந்து நீதி தவறாமல் நடப்பதாகும். புராண இதிகாசக் கதைகளிலே கூட, ‘மனோ வாக்குக் காயங்களாலே அவன் நியாயமாக நடந்தான்’ என்றுதான் வரும். வெறும் வார்த்தையாலே மட்டும் நாணயமாக இருந்தால் போதாது; உடம்பும் நாணயமாக இருக்க வேண்டும்; மனதும் நாணயமாக இருக்க வேண்டும்.

இம்மூன்றாலேயும் நாணயமாக இருக்கும் ஒரு மனிதனை உலகம் மதிக்கும் என்பதற்குக் காந்தியடிகள் ஒரு உதாரணம்; நேரு ஒரு உதாரணம்; ராஜாஜி ஒரு உதாரணம்; மற்றும் மகான்களும் உதாரணம்; இந்தியாவுக்குள்ளே இவர்கள் உதாரண புருஷர்கள். ஆப்ரகாம் லிங்கனிலிருந்து உலகத்து மனிதர்கள் பல பேரையும் நீங்கள் பார்த்தால், புகழ்பெற்ற அத்தனை மனிதர்களும் உண்மை சொன்னதாலேயே புகழ் பெற்றார்களே தவிர, மிகப் பிரமாண்டமான பணி செய்ததினால் மட்டும் புகழ் பெற்றவர்களல்லர் என்பது தெரியும். ஆனால், எப்பொழுதும், எந்தக் கட்டத்திலும் உண்மையே பேச வேண்டும்; பொய்யே சொல்லக் கூடாதா என்று கேட்டால், அதற்கும் வள்ளுவன் ஒரு வழி வகுத்துக் காட்டியுள்ளான்.

நல்ல காரியம் நடக்கும் என்றால், அதற்காகப் பொய் சொல்லலாம். ‘பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ என்றான் வள்ளுவன். பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்துவிடும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம். இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றிவிட முடியும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம். பொய்மை, வாய்மை ஆகிறது எப்போது? புரை தீர்த்த நன்மை பயக்கும்போது. ஒரு குடிகாரக் கணவன், நன்றாகக் குடித்துவிட்டுப் போதையில் மனைவியோடு சண்டை போடுகிறான். மனைவி ஏதோ வேகத்தில் திட்டி விடுகிறாள்.

அவள் திட்டி விட்டாளே என்று அரிவாளை எடுத்துக்கொண்டு அவளைத் துரத்துகின்றான். துரத்தப்படும் மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள். ஓடிப்போனவள் கணவனுக்குத் தெரியாமல் ஒரு வீட்டில் அடைக்கலம் கேட்கிறாள். அவளுக்கு ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். வீட்டுக்குள்ளே அவளை மறைத்து வைக்கிறான். பின்னாலேயே கணவன் வருகிறான். ‘‘என் மனைவி இங்கே வந்தாளா?’’ என்று கேட்கிறான். உடனே அடைக்கலம் கொடுத்தவன், ‘நாம் உண்மையல்லவா பேச வேண்டும்’ என்று கருதக்கூடாது. என்ன செய்ய வேண்டும்? ‘‘இல்லையே! உன் மனைவி இங்கே வரவில்லையே! அவள் யாரென்றே எனக்குத் தெரியாதே!’’ என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்.

அப்படி அவன் பொய்யைச் சொன்னால், அவளின் கணவன் வேறொரு திசையிலே ஓடுவான். பிறகு போதை தெளிந்ததும் யோசிப்பான். ‘நல்ல வேளை, மனைவி கிடைக்காதது. கிடைத்திருந்தால் தவறல்லவா செய்திருப்போம்’ என்று அப்போதுதான் அவனுக்குப் புரியும். ஒரு பொய் உயிரைக் காப்பாற்றும்; ஒரு மனிதனைத் திருத்தும். அந்த மாதிரி இடங்களில் பொய் சொல்வது, நியாயம் என்கிறான் வள்ளுவன். ஆனால், பொய்யே சொல்லி வாழலாம் என்று முடிவு கட்டுகிறார்களே, அந்த அயோக்கியர்களைக் காணும்போதுதான் எனக்கு அதிசயமாக இருந்தது. திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்று சொல்லிவிட்டு, ‘அந்தப் பணத்தை எனக்குக் கொடு’ என்று வாங்கிக்கொள்ளும் சீர்திருத்தவாதிகளை நான் பார்த்திருக்கிறேன்.

தான் பதவியில் இருக்கும்போது தவறான காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன் அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன் அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால், ‘ஐயோ! அநியாயம்!’ என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். தராசைத் தலைகீழாக நிறுத்தும் வணிகர்களை, வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன். பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும் வட்டிக்கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன். ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு, ‘நகை வட்டியில் மூழ்கி விட்டது’ என்று சொல்லும் அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.

அரிசியிலே கலப்பதற்கென்று, தனிக் கல் தொழிற்சாலை’யே நடத்தும் அரிசி வியாபாரியைப் பார்த்திருக்கிறேன். துவரம்பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பை வரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன். ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து, பிரியாணி போடும் அசைவ ஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குக் கோழி வாங்கி, அதை எண்பது ரூபாய்க்கு விற்கின்ற அநியாயத்தைக் கண்டிருக்கிறேன். நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும் கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும்
பார்த்திருக்கிறேன்.

அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்று விற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன். இந்தியாவிலே எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோயில்களைக் கண்டேனோ, அவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன். இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவி, மதம். ஒரே துணைக்கருவி, இறைவன். அந்த மதமும், இறைவனும்தான்  மனிதர்களை மீட்க முடியும். மதத்தாலேயும், இறைவனாலேயும் பொய்யிலே இருந்து மீண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

தெய்வ பக்தி வளர வளர, ‘நமக்கேன் வம்பு, ஆண்டவன் நம்மைச் சபித்து விடுவான்; ஆண்டவன் நம்மைக் கொன்று விடுவான்; ஆண்டவன் நம்மைத் தண்டித்து விடுவான்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமலேயே இருக்கப்பழகியவர்கள் பலர் உண்டு. சின்னவயதில் பொய் சொல்லி, திருடி, ஜெயிலுக்குப் போய் வந்தவன்கூட, பெரிய வயதில் மனம் திருந்தி யோக்கியமாக இருப்பதற்கு மதம்தான் காரணமாக இருக்கிறது. ஆகவே, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அவனுக்கு மதநம்பிக்கை வேண்டும். அந்த மதநம்பிக்கையிலேயும், அவனை ஒழுங்காகத் திருத்தி செம்மையாக வாழ வைக்கின்ற மதம், இந்து மதம். ஆம்; அதுதான் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.

- கவிஞர் கண்ணதாசன்

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்