SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது..!

2013-12-11@ 16:00:48

1. என் மகளுக்கு கல்யாணம் கூடிவரும், ஆனால், தடைப்பட்டுவிடும் என்று கூறுகின்றனர். அவளுக்குநல்ல மண வாழ்க்கை அமைய என்ன செய்ய  வேண்டும்? தற்போது ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமென ஆசைப்படுகிறாள். என்ன செய்யலாம்? கண்ணன், கோழிக்கோடு.

உங்கள் மகளுக்கு திருமணம் செய்யலாம் என்று வரன் பார்க்கத் தொடங்கும்போதே ஞாயிறு, வெள்ளி நாட்களில் பெண் பார்ப்பதை வைத்துக் கொள் ளுங்கள். அதற்கு முன்பு கர்நாடகத்திலுள்ள சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்று ஆச்சார்யாளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். மேலும் ஆச் சார்யாள் நிகழ்த்துகின்ற பூஜையிலும் கலந்து கொள்ளுங்கள். திருமணமாகாத பெண்ணை வீட்டிற்கு அழைத்து வஸ்திரம், வெள்ளிக் கொலுசு, மஞ்சள்,  குங்குமம் கொடுத்து உணவருந்தச் செய்யுங்கள். திருமணத்தடை நீங்குவதோடு உங்கள் மகள், தான் விரும்பும் படிப்பும் படிப்பாள். கீழேயுள்ள பாடலை வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் ஆறு முறை  மகளை பாடச் சொல்லுங்கள்.

கும்பிடவோ கை இரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாஒன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தி இல்லை
நடந்திடவோ கால் இரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி! உன் எழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை.
அம்பளவு விழியாலே!  
உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர்
அளவுமில்லை!

2. நான் பதினைந்து வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறேன். எத்தனை முயற்சித்தாலும் சேமிக்கவே முடியவில்லை. பரிகாரம் கூறுங்கள். கோ. கண்ணன், ஓசூர்.

வெள்ளிக்கிழமையன்று, சிவப்பு நிற ரோஜாப் பூக்களை உங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, மனைவியைக் கொண்டு கொடுக்கச் செய்யுங்கள்.  மேலும், மஞ்சள், குங்குமத்தோடு அவர்களுக்கு தாம்பூலமும் கொடுங்கள். கடையின் ஒரு பகுதியில் இனிப்பு தின்பண்டங்களை வைத்து வியாபாரம்  செய்யுங்கள். அதிகாலை வியாபாரமும் உச்சி வெயில் நேர வியாபாரமும் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். உங்கள் இல்லத்தில் வேப்பமரம், சாமந்தி  பூச்செடி அல்லது மஞ்சள் நிற பூச்செடிகளை நட்டு வைத்து பராமரியுங்கள். கீழேயுள்ள துதியை கடையை திறக்கும்முன் 15 முறை கூறிவிட்டு வியாபாரத்தை தொடங்குங்கள். தடைகள்  விலகி தனம் பெருகும்.

உருவேண்டிய வரமாய் வந்திடுவாய் வைஷ்ணவி

3. எனது மகள் 4.10.2011 அன்று தனுசு ராசியில் பிறந்தாள். தனுஸ்ரீ என பெயர் வைத்தோம். அது சரியில்லை என்கின்றனர். மேலும், எனக்கு அரசுப்  பணி கிடைக்குமா? எஸ்.ரேகா, சென்னை.

உங்கள் மகள் சூரியன், செவ்வாய் இணைப்பில் பிறந்திருக்கிறாள். தாரிணீ என்று பெயரை மாற்ற முடியுமா என்று பாருங்களேன். உங்களின் பெயர்ப் படி அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புதான் அதிகமாகத் தெரிகிறது. இனிய இதமான சொற்களைப் பயன்படுத்துங்கள். வேலை கொடுக்கும் இடத்திற்கு சுக்கிரனின் பார்வை பெருக அம்பா நவமணிமாலை என்கிற பாடலை தினசரி நிறைய  முறை படியுங்கள். சென்னை-சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் சாலையின் முனையில் கருகாத்தம்மன் என்ற பெயருடன் ஆலயம் கொண்டுள்ள அம்மனுக்கு  பாலாபிஷேகம் செய்யுங்கள். அம்மன் அருள் என்ற மென்காற்றோடு கலந்து வந்து உங்கள் மேல் படியும் அந்தப் பால் மணம் உங்களை நல்ல பணி யில் அமர்த்தும். அதனால் அபிஷேகம் செய்யும்போது அம்மனுக்கு அருகேயே நில்லுங்கள்.

4. காதல் திருமணம் செய்து கொண்டேன். தற்போது பிரிந்து வாழ்கிறேன். பிரிவு தாங்க முடியாமல் தற்கொலை எண்ணம் தலை தூக்குகிறது. கணவருடன் சேர்ந்து வாழ வழி காட்டுங்கள். யோகாம்பாள், புதுக்கோட்டை.

நெல்லானது முற்றி விளைந்து கதிர் கனமாகி காய்ந்து படுக்கும்போது நம்மை அறுக்க வருவார்களே என அந்தப் பயிர் கண்ணீர் விடுகிறது என்கிறார்,  ஒரு புலவர். அதுபோல உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருக்கிறார். இத்தகைய ஜாதக அமைப்பு உள்ள பெண்கள் தற்கொலை வரை  செல்கின்றனர். இந்த கஷ்டம் விரைவில் மாறிவிடும். சூரியனில் பிறந்து ராகு வழி காட்டுவதால் பின் வயதில் பெருவாழ்வு வாழ்வீர்கள். சிங்கம் போல  தைரியம் பிறந்து விடும். உங்கள் பெயர்போல யோகமும் உங்களை வந்தடையும். பௌர்ணமி நிலவில் அதிக நேரம் அமருங்கள். பொன்னாங்கண் ணிக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை பூஜையறையில் அமர்ந்து 336 முறை கூறுங்கள்.
 
மங்களம் சம்பு புத்ராய - ஜயந்தீசாய மங்களம்
மங்களம் ஸுகுமாராய - ஸுப்ரஹ்மண்யாய மங்களம்!

5. நான் பதினைந்து வருடங்களாக Thermal Paper Rolls வியாபாரம் செய்து வருகிறேன். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நிலங்களை விற்று விட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. வழி கூறுங்கள்? ஆர்.சுப்பிரமணியன், கோவை.

உங்களின் சொந்த ஜாதகத்தின்படி சுக்கிரன், குரு இணைப்பு சரியில்லை. குருவுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். கப்பல்களுக்கு லைட் ஹவுஸ்  போன்று குருபகவான் உங்களுக்கு உதவுவார். காஞ்சியில் துளசிமாட சமாதியில் ஒளிவீசும் காஞ்சி மகா பெரியவரின் படத்தை துளசி மாலையால் அலங்கரித்து எதிரில் அமர்ந்து ஆங்கில  3, 12 தேதிகளிலும் வியாழக்கிழமை தோறும் கீழேயுள்ள துதியை 21 முறை காலை, மாலை என்று இருவேளையிலும் கூறுங்கள்.

நடமாடும் தெய்வமே! நானிலம் போற்றும்
தெய்வமே
நான்மறை நாயகனே! சந்நியாஸ தர்மத்தின்
சிகரமே!
எளிமையின் இருப்பிடமே! ஞான நந்தியே!
ஜகத்குருவே!
என் தாய் எனும் பதம் என் இஷ்ட தெய்வப் பதம்
என் குலதெய்வப் பதம் போற்றி! போற்றி!
போற்றி!
ஓம் குருப்யோ நமஹ!

6. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறேன். முன்பை விட இப்போது இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறேன். இருந்தும் கடன் தீர்ந்தபாடில்லை. என்ன செய்வது? ஜி.சுகுமாறன், தஞ்சாவூர்.

நீங்கள் முன்பை விட இப்போது அதிகம் செலவு செய்யக் கூடும்; அதனால்தான் கடன்கள் தீர்ந்த பாடில்லை. மின்சாதன பொருட்கள், சிவப்பு நிறமான மிளகாய் வத்தல், ஆப்பிள், செங்கல் போன்றவை நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களாக இருப்பின் உங்கள் கடன் சுமை குறையும். திங்கள், வெள்ளி நாட்களில் இந்தப் பணியுடன் இரும்பு உலோக சாமான்களையும் வியாபாரமாகச் செய்யுங்கள். ஞாயிறு மாலை 6-7 மணி அளவில் கீழேயுள்ள மந்திரத்தை நரசிம்மர் படத்திற்கு எதிரே அமர்ந்து 34 முறை கூறுங்கள். பிறகு பானகத்தை நிவேதனம் செய்து விநியோகம் செய்யுங்கள்.

ஸிம்மநாதேன மஹதா
திக்தந்திபய நாசனம்!
ஸ்ரீந்ருஸிம்மம் மஹாவீரம்! நமாமி ருண முக்தயே
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம்
தைத்யேச்வர விதாரணம்!
ஸ்ரீந்ருஸிம்மம் மஹாவீரம்! நமாமி ருண முக்தயே!!

7. என் மகள் 7.6.1993 அன்று பிறந்தாள். பூராட நட்சத்திரம். அவளுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்? லட்சுமி, வள்ளியூர்.

கேதுவுடன் சேர்ந்த சனியின் இணைப்பால் தீய சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உரிய வயதில் கண்ணுக்கு அழகான கணவர்  அமைவார். செரிமானம் ஆகாத எண்ணெய் பலகாரங்கள், கிழங்கு வகைகளை உணவில் குறைக்க வேண்டும். காதல் கல்யாணமாக அமைந்துவிடாமலிருக்க விரைவாகவே திருமணத்தை முடித்து  விடுங்கள். உங்கள் பெண்ணை திருப்பதிக்கு அழைத்துப் போய் பெருமாளை தரிசிக்க வைத்து பெண்ணின் கையால் உண்டியலில் கருப்பு கலர் புட வையை போடச் செய்யுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை 33 முறை தினமும் சொல்லச் சொல்லுங்கள்.

இந்த்ரியானாம் அதிஷ்டாத்ரி பூதானும்ச
அகிலேஷுயா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நமஹ!

8. இதுவரைக்கும் நல்ல வேலை எதுவுமே அமையவில்லை. எப்போது கிடைக்கும்? நோயற்ற வாழ்வு வாழவும் பரிகாரம் கூறுங்கள். கே.சுந்தரபாபு, சிந்தாதிரிப்பேட்டை.

உங்களின் பிறப்பு கூட்டு எண் 37 என்பதால் எல்லாவித வியாபாரத்திற்கும் ஏற்றவர் நீங்கள். ஆனாலும் சனிபகவான் உங்களை வழி நடத்துவதால்  அருகாமையிலுள்ள சிவாலயத்தில் சனிக்கிழமையன்று எட்டு முறை அடிப் பிரதட்சிணம் செய்வதுடன் கட்டிட வேலைக்கு உதவும் இரும்புப் பாறை, மண்வெட்டி முதலியவைகளை கருப்பு வஸ்திரத்துடன் தொழிலாளர்களுக்கு தானமாகக் கொடுங்கள். உங்கள் நண்பர்களாலேயே தடைகள் வரக்கூடும். உறவினர்களாலும் குழப்பம் உண்டாகலாம். மேலும் சனி பகவான், உங்கள் பேச்சாலேயே பல பிரச்னைகள் வளரச் செய்வார். ஜாக்கிரதையாக இ ருக்கவும். ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு’ என்கிற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோக வரிகளை தினமும் 25 முறை கூறுங்கள்.

காங்கம் வாரி! மனோஹாரி! முராரி
சரணச்யுதம்
த்ரிபுராரி! சிரச்சாரி! பாபஹாரி!
புனாதுமாம்!
ஓம்சிவோஹம்! ஓம் சிவோஹம்! ஓம் சிவோஹம்!

9. எனது மகன் 19.12.1985 அன்று பிறந்தான். கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறான். சொந்தமாக கால் டாக்ஸி நடத்தலாமா? ஜே.டி.பசுபதி, பள்ளிக்கரணை.

போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததே! அந்த காலம் முடிந்து 2013 ஜூன் முதல் நல்ல நேரம் ஆரம்பிக்கி றது. 3ம் இட அதிபதியான சூரியன் நல்ல இடத்திற்கு வரப்போகிறார். சனி, புதன், சுக்கிரன் போன்றோர் ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் இ ருப்பதால் வெளிநாட்டில் சம்பாதிப்பதை இங்கேயே சம்பாதிப்பீர்கள். ‘‘மாலுடன் வெள்ளி சேர்ந்தால் மதி மிகப்பெருகுமன்றோ’’ என ஜோதிட வல்லுநர் கள் சுக்கிரனை பாடியுள்ளனர். 28 வயதுக்கு மேல் திருமணம் செய்வது நல்லது. ஏனெனில், கால சர்ப்பதோஷம் உள்ள ஜாதகம் இவருடையது. எனவே அந்த வயதில்தான் திருமண யோகம் ஆரம்பிக்கிறது. கீழேயுள்ள இந்த ஸ்லோகத்தை அரசமர நிழலில் அமர்ந்து ஏழு முறை கூறுங்கள்.

விக்னஹர்த்ரே துர்முகாய, விக்னஹர்த்ரே
சிவாத்மனே
ஸுமுகாய ஏக தந்தாய ஸ்ரீகணேசாய   
 மங்களம்!

பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்

வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2018

  20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • MigrantsMexicoAmerica

  திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

 • OklahomaBushFire

  மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

 • bushwifecondolences

  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

 • fireaccidentsafety

  சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்