SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமிலக் கலாசாரம் எப்போது அழியும்?

2013-12-11@ 16:00:48

அருள்...பொருள்...இன்பம்...

சமீப நாட்களாக காதில் விழும் செய்திகளிலும் சரி, தொலைக்காட்சி காட்சிகளிலும் சரி, மனதை அதிர்விக்கும் விஷயங்களே மிக அதிகமாக இருக்கின் றன. குறிப்பாக மனதை மிகவே அதிர்வித்த விஷயங்களில் முதல் இடத்தை பிடித்தது விடுதலைப்புலி இயக்கத் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகனுடைய படங்கள்! அடுத்து ஆசிட் வீச்சுக்கு ஆளாகி முகம் நைந்து இறந்து போன விநோதினி! விநோதினியின் பிரிவுத் துயரம்  ஆறும்முன் வித்யா என்று இன்னொரு  பெண்... இந்தப் பெண்கள் ஆசிட் வீச்சில் கருகினால் கோவையில் ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்ணை சில காமாந்தகர்கள் கசக்கிப் பிழிந்திருக்கிறார்கள்.
 
உட்சபட்சமாக கேரளாவைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் பெரும் பொறுப்பில் இருப்பவருமான குரியன் என்பவர் மேலேயே ஒரு பெண்ணைக்  கற்பழித்த குற்றச்சாட்டு... பரந்து பட்ட உலகில் அன்றாடம் ஏற்ற இறக்கமாய் சம்பவங்கள் நடப்பது என்பது மிக சகஜமான ஒன்றுதான். ஆனால், எப்போதாவதுதான் அது தாள முடியாத அளவுகளைத் தொட்டு சமுதாயத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி விடுகிறது. இப்படிப்பட்ட குற்றங்கள் ஒருபுறம் நடந்தபடி இருக்க, மறுபடியும் தூக்கு மேடைகளிலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கசாப், அப்சல்குரு என்று இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு இன்னும் பலருக்கு நிறைவேற்ற தூக்கு மேடை தயாராகி  வருகிறது.

கடவுள் கொடுத்த உயிரை பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்று தூக்குக்கு எதிரான வாதப் பிரதிவாதங்களும் அனல் பற்ற நடந்து வருகின்றன. ஒருபுறம் கடுமையான நடவடிக்கைகள். ஆனால், அதற்கு நடுவிலேயும் குறையாத குற்றச் செயல்கள்!  இந்த வரியை நான் எழுதிக் கொண்டிருக் கும்போதே ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. எதற்காக வருந்தி பேனா பிடித்தேனோ அந்தப்  பேனாவை தொடர்ந்து இயக்க முடியாத அளவுக்கு என் மனதுக்குள் சலனம், அச்சம், ஆயாசம் எல்லாம்! எல்லோருக்குமே இப்படித்தான் இருக்கும். என்னாயிற்று நம் பாரத தேசத்துக்கு..?

தர்மபூமி, புண்ணியபூமி, கடவுளின் பூமி என்று உலகமே கொண்டாடும் இந்த பூமியில்தான் இத்தனை கொடுமையான செயல்பாடுகள்? ‘ஐயோ என் தேசம் இப்படி இருக்கிறதே... இறைவா காப்பாற்று’ என்று கும்பமேளாவில் கலந்து கொள்ளச் சென்றவர்களையும் காலம் விடவில்லை.  அங்கே நசுங்கியும் மிதிபட்டும் ஒரு கூட்டமே உயிரை விட்டு விட்டது! இன்று ஒன்றுக்கு பத்தாக தொலைக்காட்சி அலைவரிசைகளில் விவாதங்கள்  அனல் பறக்கின்றன. ஒவ்வொரு அலைவரிசையிலும் யாராவது நாலுபேர் வரிசையில் அமர்ந்து கருத்து மோதல் புரிந்தபடி இருக்கிறார்கள். ‘எனக்கு  இந்த விஷயம் தெரியவில்லை... எடுத்துச் சொல்ல யாருமில்லை. வழிகாட்டிகள் இல்லாததால் தடுமாறியபடி இருக்கிறோம்...’ என்பதற்கெல்லாம்  இடமே இல்லை!

சட்டப்பிரிவுகளிலே இருந்து சத்தியப்பிரிவுகள் வரை பிட்டுப்பிட்டு வைத்திட பலர் இருக்க, குற்றங்களோ துளியும் குறைவின்றி நடந்தபடியே தான் இருக்கிறது. எங்கே கோளாறு? சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் பலவீனமாகி விட்டார்களா? இல்லை தவறு செய்பவர்களுக்குதான் பலம் அதிகரித்து விட்டதா? இல்லை சமூ கமே புரையோடிப் போய்க்கொண்டிருக்கிறதா? பிரபாகரனின் மகனை மார்பில் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிர்ந்து மிரட்டினாலே உயிர் போய்விடும் ஒரு பிஞ்சு பாலகனுக்கு அஞ்சு தோட்டாக்கள். என் னதான் எதிரியின் பிள்ளையாக இருக்கட்டுமே, அந்த பாலகனால் யாரை என்ன செய்துவிட முடியும்... அவன்மேல் எதற்கு இந்த கொலை வெறி?

ஒரு கொடுமை... இந்த கொலைச் சம்பவத்தை சிலரால் நிதானமாக படம் பிடிக்க முடிந்திருக்கிறது. என்னதான் இது ஒரு வரலாற்று நிகழ்வாக இருந் தாலும் இந்த கொலையை தடுக்காமல் அல்லது தடுக்க முடியாமல் போய்விட்டது, எத்தனை கொடுமை? விநோதினி விஷயத்துக்கு வருவோம். அவள்மேல் ஆசிட்டை ஊற்றியவன் யாரோ அல்ல, அவள் காதலனாம்! ஒரு காதலனின் செயலா இது? காதல்  தோல்வியால் தன்னைத்தானே அழித்துக்கொண்ட தேவதாஸ்களை பார்த்த பூமியில் இப்படி ஒரு பாவியா? அடுத்து வித்யா! இவள்மேல் ஆசிட்டை ஊற்றியவன் இவளுக்காகவே திருமணத்துக்கென்று நிச்சயிக்கப்பட்டவன். ஒரு வருங்கால கணவனா இப்படி நடந்து கொண்டான்?

அடுத்து அந்த சூரியநெல்லி கற்பழிப்பு. கற்பழிப்புக் குற்றத்துக்கு ஆளாகியிருப்பவர் ராஜ்யசபைக்கே துணைத்தலைவர். தலைவரின் லட்சணமா இது? ஒவ்வொரு விஷயத்தையும் உரித்துப்  பார்க்க முனையும் போது திகைப்புதான் மிஞ்சுகிறது. மனிதர்களுக்குள் மிருகங்கள் புகுந்துவிட்டது தெளிவாக தெரிகிறது. அந்த மிருகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருவதும் தெரிகிறது. கடுமையான சட்டங்களால் இவர்களை தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும், எது இவர்களை மிருகங்கள் ஆக்கியது என்று சிந்திக்க வேண்டாமா? சமீபத்தில் மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் அரசாங்க விடுமுறை வந்தது. அதோடு மூன்று நாட்களும் மதுக்கடைகளை மூடிட அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த மூன்று நாட்களிலும் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்வதும், புகார் அளிப்பதும் முக்காலே மூணு சதவீதம் குறைந்து போயிருந் ததை ஒரு சிறப்புச் செய்தியாகவே நாளிதழ்கள் வெளியிட்டன என்றால் மிருகங்கள் உருவாகும் இடமாக, உருவாக்கப்படும் இடமாக மதுக்கடைகள்  இருப்பதை மறுக்க முடியுமா? இந்தச் செய்தியை நாடாள்பவர்கள் கவனித்து அடுத்து என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஒரு நாட்டையே சுடுகாடாக ஆக்கும் இந்த பாழாய்ப்போன மதுக்கடைகளை மூடிவிட்டு மறுவேலை பார்ப்போம் என்று ஏன் அவர்களுக்கு தோன்றவில்லை?

இதன் வருமானத்தை இழந்து அரசாங்கத்தை நடத்த முடியாது என்கிற இயலாமையை சிலர் காரணமாக சொன்னார்கள். ஆனால், இந்த மதுவால்  வரும் வருமானம் இல்லாமலே இதே பாரத நாட்டில் பல மாநிலங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. அந்த மாநிலங்களைப் பார்த்து பாடம் கற் றுக்
கொள்ளக் கூடாதா? முன் ஏர் எவ்வழி பின் ஏர் அவ்வழி என்பார்கள். அரசாங்கமே மிருகங்கள் மானாவாரியாக உருவாக வழி அமைத்துக் கொடுத்துவிட்டு சட்டத்தை எத்தனைதான் செயல்படுத்தினாலும் என்ன புண்ணியம்? கடந்தவார நாளிதழ் ஒன்றில் ஒரு போலீஸ்காரரே மதுபோதையில் நடுச்சாலையில் விழுந்து கிடக்கும் சில படங்கள் வெளியாகியிருந்தன.

‘சபாஷ்... இப்படி அல்லவா இருக்க வேண்டும், காவல்துறை!’ என்கிற கேலியான எண்ணம் எழுந்ததை தவிர்க்கவே முடியவில்லை. மீடியாக்களும் அவர்களை மட்டைக்கு நாலு கீற்றாக உரிக்கத்தான் செய்கின்றன. ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில் ஒரு போக்குவரத்து போலீஸ் காரர் சுடுகாட்டில் திரிய நேரிடும்போது அங்குள்ள பேய் ஒன்று, ‘‘இங்க யார்கிட்ட வசூல் பண்ண வந்தே?’’ என்று கேட்கும். இதைப் பார்த்து வயிறு  குலுங்கச் சிரித்தது ஒருபுறம். எவ்வளவு தூரம் சமூகம் புரையோடிப் போயிருந்தால் இவ்வாறு கேலி செய்யத் தோன்றும்! ஒருபுறம் மிருக வளர்ச்சி. மறுபுறம் அதை வேட்டையாட வேண்டியவர்களிடமே கோளாறு. பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் துணிச்சலாக முடிவெடுத்து  எதிர்கால சமூகத்தை காப்பாற்ற வேண்டிய வேளை இது.

இல்லாவிட்டால் விநோதினிகள் எண்ணிக்கை கூடுவதையோ, கும்பமேளாவே அம்போமேளா வாவதையோ, அங்கங்கே குண்டுகள் வெடிப்பதையோ தடுக்க முடியாது. நம் சமூகத்தில் ஒரு பெரிய நாகரீக முதிர்ச்சி உண்டு. குடும்ப அளவில் வீட்டுப் பெண்கள் அழக்கூடாது என்பதும் நாடளவில் பெண்மை மாசுபடக்கூ டாது என்பதும் நாம் மிகவே போற்றிப் பாதுகாத்து வரும் ஒரு நாகரீக விஷயமாகும். அதனால்தான் உடன்பிறந்த தங்கையோ, அக்காவோ திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்டிருந்தாலும் மாமன் என்னும் உறவோடு அவர்களை  சீராட்டி மகிழ்விப்பது நம் வழக்கம். சென்ற இடத்தில் தாய் வீட்டை எண்ணி அவள் கண்ணீர் விட்டால் அவள் பிறந்த தாய்வீடு மேன்மையடையாமல் போய் விடுமாம்.

இது அப்படியே நாட்டுக்கும் பொருந்தும். எந்த நாட்டில் பெண் சமூகம் நசுக்கப்படுகிறதோ, அந்த நாடு நிமிர்ந்து எழவே எழாது. மகாபாரதத்தில் ஒரு காட்சி!
அவை நடுவே பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிகிறான். சூதில் பணயம் வைத்து தோற்றதால் பஞ்ச பாண்டவர்களால் ஏதும் செய்ய இயலவில் லை. பெரும் நீதிமானான பீஷ்மரே அந்த கொடுமையை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. நல்லவேளையாக கண்ணனை சரணடைந்து பாஞ்சாலி  அன்று தன் மானத்தை காப்பாற்றிக் கொண்டாள். அப்போதுகூட அவள் கதறி அழுத உடனேயே கண்ணன் வந்துவிடவில்லை.

இரு கைகளை உயர் த்தி கதறிய பிறகே கண்ணன் வந்தான். அதற்கு பொருள், ‘தான்’ என்னும் எண்ணமும் தன் முயற்சி என்பதும் உள்ளவரை இறைவன்கூட சோதிக்கிற வனாகவே இருக்கிறான். சரண் புகுந்தாலே எதிலும் தப்பமுடியும் என்பது தான் இதிலிருந்து தெளிவாகிறது. நாம் இன்றுள்ள நிலையில் நம் பெண்களை எரி அமிலத்திலிருந்தும் ஆண்களை போதை அமிலத்திலிருந்தும் காப் பாற்ற கண்ணன் வருவானா?
(தொடரும்)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2018

  28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Thiruvarurchariot

  உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

 • 27-05-2018

  27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • modi_bahvan_bang

  வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

 • proteststerliteissue

  சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்