SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரபிக் கடலுக்குள் அற்புத சிவாலயம்!

2018-10-22@ 09:42:17

தானாக எப்பொழுது நமக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை உணர்கின்றேனோ அப்பொழுது தான் நான் கடவுளை நம்புவேன் என்றால் அவரை இந்த அரபிக் கடலுக்குள் இருக்கும் அற்புத ஆலய தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது தான் தீர்வாக அமையும். இறைவன் என்பவன் யார்? இயற்கையின் கூறுகளான ஐம்பூதங்களாகிய வான், நீர், வாயு, அக்னி, நிலம் என்பர். இந்த ஐம்பூதங்களையும் அடக்கி ஆள்பவரே இறைவன் ஆவார். ஒரு பெரிய அறையை இந்த பிரபஞ்சத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் நிறைந்திருக்கும் பொருட்களை ஐம்பூதங்களாக எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது அந்த அறையை ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துப் பார்த்தால், அந்த அறையும், அதற்குள் நிறைந்திருக்கும் பொருட்களும் அக்கண்ணாடியில் பிரதிபலிக்கும். அந்த கண்ணாடி போன்றவரே இறைவன். எல்லாமே அவருக்குள் ஒடுங்குகின்றது.

ஆக இறைவனை, இயற்கையோடு சேர்த்தே ஆதிமனிதன் வழிபட்டான். புராண காலத்திலிருந்துதான் இறைவனை கோயில் கட்டி வழிபடும் வழக்கம் தொடங்கியது. கடவுள் மனித ரூபத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால், அவர்களை அதே ரூபத்தில், திசை நான்கு, எட்டு போன்ற கணக்கில் கரங்களை மட்டும் சேர்த்தும், மனித உடம்பின் கட்டுமஸ்தைக் காட்டாமல், குழைவாகவும் வடித்தனர். சிவபெருமான் அருஉருவுடன் தன்னை லிங்க ரூபத்தில் வெளிப்படுத்திக் கொண்டார். எனவே சிவாலயங்களில் லிங்க வழிபாடு வழக்கமானது. கடவுள் வழிபாடு கோயில் வழிபாடாக மாறிய உடன் அதன் புனிதம் கெடாமல் இருக்க மலை, குன்று மற்றும் உயரமான கட்டிடங்களை எழுப்பியும் கோயில்களை சமைத்தனர். கடவுள் தன்னை அடையாளம் காட்டியதாலும், சுயம்பாக எழுந்தருளியதாலும் அந்த இடங்களில் திருக்கோயில்கள் எழுப்பப் பெற்றன. அதுபோல நதி ஓரத்தில், அருவிக்கு அருகில், பாறையில், குகைக்குள், கடற்கரை அண்மையில் என கோயில்கள் எழுப்பப் பெற்றன.

ஆனால், உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும், மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை. உதாரணத்திற்கு 2001ல் குஜராத்தை உலுக்கி எடுத்த நிலநடுக்கம் 50,000 பேர்களை பலி வாங்கிக் கொண்ட கொடூரம் நடந்தேறியது. அப்பொழுதும்கூட இந்த திருவிடத்தில் கடுகளவு கூட பாதிப்பு நேரவில்லை.

கடலுக்குள் திருக்கோயிலா? எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது? எதற்காக கடலுக்குள் கட்டினார்கள்? நிலை இல்லாத ஒன்று என்றால் அது கடல் தானே? அதற்குள் நிரந்தரமான கோயிலா? நம்ப முடியவில்லை தானே? மண்ணாலும், கல்லாலும், மலை மீதும், மலையைக் குடைந்தும், குகைக்குள்ளும், செங்கல், சுண்ணாம்பாலும் நிலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டன. கடலுக்குள் கடலரசனே தனது அலைக்கரத்தால் மாலையிலிருந்து காலை வரைக்கும் கோபுரம், விமானம், மதில்கள் என நித்தம் புத்தம் புதிதாகக் கட்டிக் காத்து வருகின்றான். திருமேனிகள் கடலுக்குள் தீவு திடல் போன்ற இடத்தில் பிரதிஷ்டையாகி உள்ளனர். இந்த திருக்கோயில் எங்கே உள்ளது? கடலுக்குள் சென்று எப்படி தரிசிப்பது? என்ற நியாயமான கேள்விகள் எழும்.

இந்திய திருநாட்டில் அண்ணல் காந்தி அடிகள் பிறந்த புண்ணிய பூமியான குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் மாவட்டத்தில் பாவ்நகர் (ஙிலீணீஸ் ழிணீரீணீக்ஷீ) என்னும் ஊருக்கு அருகே கோலியாக் (ரிஷீறீவீஹ்ணீளீ) என்னும் கடற்கரை கிராமத்திலிருந்து சுமார் 1லு கி.மீ. தொலைவில் அரபிக்கடலின் நடுமத்தியில் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் (களங்கமற்றச் செய்யும் மகாதேவர்) திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சென்று எப்படி சுவாமியை தரிசிப்பது? கடவுள் கடலுக்குள் இருக்கின்றார் என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது கேள்வி அவர் கண்ணுக்குத் தெரிவாரா? நம்மை மீறிய சக்தியை நாம் உணரமுடியுமா? நேரடியாகவே அனுபவிக்கவே போகின்றீர்கள். போகலாமா? அகமதாபாத்திலிருந்து பாவ்நகர் சாலை வழியே 176 கி.மீ. தொலைவிலும், ரயில் பயணத்தின் மூலம் 229 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாவ்நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கோலியாக் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து 1லு கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.

நம்மைப் போலவே குழந்தைகள், பெரியவர்கள், பசுமாடுகள் என ஒரு பெரிய கூட்டமே கடலை நோக்கியபடி தியானம் செய்தபடி நிற்கின்றனர். எதற்காக நிற்கின்றீர்கள்? எப்படி நாம் கடலுக்குள் போவது? என கூட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கும் சிவாச்சாரியரிடம் பணிவுடன் வினவுகின்றோம்.‘‘இந்தக் கடல் அலைகள் உள்வாங்கி நமக்கு வழிவிடுவதற்காக காத்திருக்கின்றோம். தினமும் அதற்குரிய திதி வரும்பொழுது கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கோயிலுக்கு அப்பால் சென்று காத்திருக்கும். காலை 8 மணி அளவில் கடலரசன் நமக்கு வழிவிடுவான். மறுபடி சமுத்திரராஜன் 7 மணி அளவில் கோயிலை மூழ்கடித்து கரை வரை வந்து விடுவான். அதற்குள் நாம் கடலுக்குள் நடந்தே சென்று மகாதேவரை வழிபட்டு விட்டு வந்துவிட வேண்டும். தினமும் இத்திருக்கோயிலில் பூஜையும் நடக்கின்றது.’’ என்றார்.

ஜன நெருக்கடியான நகர்புறத்தில் எத்தனை திருக்கோயில்கள் ஒருவேளை பூஜை கூட இன்றி இருப்பது நமது மனக்கண்முன் வந்து போனது. திருக்கோயில் எங்கிருக்கின்றது என்று நாம் கேட்க கடலுக்குள் தூரத்தில் பறக்கும் இரண்டு கொடிகளைக் காட்டி ‘‘அங்குதான் கோயில் உள்ளது. அவைகளே கோயிலின் கொடி கம்பங்கள்’’ என்றார்.  ஆழ்கடலுக்குள் அனுதினமும் ஆண்டவர் பூஜையை ஏற்றுக் கொண்டு மந்திர ஓசையும், மணி ஓசையும் எழுப்ப அனுமதிக்கின்றார். அதனை விரும்பி கடலும் வழிவிட்டு ஒதுங்கி நிற்கின்றது. காத்திருக்கும் நேரத்தில் இத்திருக்கோயிலின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம். கி.மு. 900த்தில் மகாபாரதத்தில் பாரத போர் நடந்த காலகட்டம். பாண்டவர்கள் போரில் கௌரவர்கள் 100 பேர்களையும் கொன்று விடுகின்றனர். இதனால் பாண்டவர்களை பிரம்மஹஸ்தி தோஷம் பீடித்துக் கொள்கின்றது. இந்த தோஷம் தொலைய புதிதாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வித்து தவமிருந்து வழிபட்டு சிவனருளால் நீங்கப் பெறுவது வழக்கமாக நிலவி வந்தது.

அதன்படிக்கு உறவினர்களைக் கொன்ற தங்களது களங்கம் நீங்க தாங்கள் எங்கிருந்து தவம் செய்து சிவபெருமானை வழிபடுவது? என பாண்டவர்கள், கிருஷ்ண பெருமானிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் ஒரு கருப்பு கொடியினையும், ஒரு கருப்பு பசுவினையும் கொடுத்து, எந்த இடத்தில் பசுவும், கொடியும் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ அந்த இடத்தில் அவர்கள் சிவனை நோக்கி தவமிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். பல காலம் கொடியை ஏந்தியபடி, பாண்டவர்கள் பசுவின் பின்னாலேயே சென்றனர். கோலியாக் கடற்கரை வந்து சேர்ந்த உடன் கொடியும், பசுவும் வெள்ளை நிறத்திற்கு மாறின. மகாதேவர் அழைப்பிற்கு இணங்கி அவர்கள் இந்தத் திருவிடத்திற்கு வருவதற்கு வசதியாக ஆண்டவன் கட்டளையை ஏற்று கடல் உள்வாங்கி வழிவிட, தீவு திடல் போன்ற இந்த மணல் மேட்டிற்கு வந்தடைந்த ஐந்து பேரும் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து போயினர்.

அவர்களின் தவக் காலம் முற்றிய வேளையில், சிவ வழிபாடு செய்து அவர்களது களங்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு தோதாக, அவர்கள் ஐவர் முன்னிலையிலும் சிவபெருமான் ஐந்து சிவலிங்கங்களாகப் பிரசன்னம் ஆனார். இறைவன் சுயம்பாக எழுந்தருளியதால் இன்புற்ற ஐவரும், நந்தி தேவர்களையும் பிரதிஷ்டை செய்வித்து, தமிழ் வருடமாகிய பவ வருடத்தில் ஆகஸ்டு மாதத்தில் கி.மு. 900வாக்கில் அமாவாசை இரவன்று திருக்கோயிலை எழுப்பி வேத ஆகம முறைப்படி வழிபட்டு வரலாயினர். இறைவனுக்கு அபிஷேகிக்க அங்கே ஓர் சுனையைத் தோண்டினார்கள். அந்த நீர் உப்பு கரிக்காமல் இனிப்பாக இருக்கும் பேரதிசியம் நிலவி வருகின்றது. அவர்களது மேலான வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அவர்களது பிரம்மஹஸ்தி தோஷம் என்னும் களங்கத்தைப் போக்கி அருளியதால், அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் என்னும் திருநாமத்தை இத்திருவிடத்தில் ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவம், சோகம், களங்கம் ஆகியவற்றை நீக்கி அருளுகின்றார்.

தலபுராணத்தைக் கேட்டவண்ணம் இருந்த நம்மை, ‘‘வாருங்கள்! சிவபக்தர்களே! நம்மை நிஷ்களங்க மகாதேவர் அழைக்கின்றார்.’’ என சிவாச்சாரியார் பக்திப் பெருக்கில் அழைப்பது கேட்கின்றது. கடல் அலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கத் தொடங்குகின்றது. பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தேங்காய்களை மறையும் அலைகளுக்குள், ‘‘ஹர ஹர மகாதேவா!’’ என கோஷமிட்டவாறு வீசி எறிந்தனர். அனைவரும் குஜராத் அரசு கட்டாயமாக அணிய வேண்டும் என நிர்பந்தித்திருந்த மிதவை ஜாக்கெட்டுகளை அணிந்து சிவாச்சாரி கடலுக்குள் நடக்கத் தொடங்க, அவரைப் பின் தொடர்ந்து கடலுக்குள் நடக்கத் தொடங்குகின்றோம்.
நடையா அது! நீர் மேல் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தணல் மேல் நடப்பதைப் பார்த்திருப்போம். கனகுளிகைகளைச் சாப்பிட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வான்வெளியில் பறப்பதை அறிந்திருப்போம். 300 அடி ஆழக் கடலுக்குள் நாம் நடக்கின்றோம்.

பக்கத்தில் துறைமுகம் இருப்பதால் இங்கு கடலின் ஆழம் 300 அடி. அதுவும் நாம் போவதோ நடுக்கடலுக்கு. ‘‘கற்றூணைக் கட்டி கடலுக்குள் பாய்ச்சினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே’’. விழுந்து, எழுந்து பிரம்ம பிரயத்தனப்பட்டுச் சென்றாலும், இன்னும் சற்று தொலைவில் கடவுள் கண்ணுக்குத் தெரியப் போகின்றார் என்ற நினைப்பில் அனைவரும் பரவசத்தோடு போகின்றோம். இதோ! அரபிக் கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைக் கண்டு கொண்டோம். மணல் திட்டின் மேல் பலகைக் கற்கள் பரவப்பட்டுள்ளன. அனைவரும் பாண்டவர்கள் உருவாக்கிய தித்திக்கும் சுனை நீரில் கை, கால், முகத்தினை கழுவிக் கொண்டு தூரத்தில் இருந்து கொடிகள் மட்டுமே தெரிந்த பிரம்மாண்டமான கொடி கம்பங்களைக் கண்டோம். இந்தக் கொடி கம்பத்தில் சிவராத்திரி அன்று 2900 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான், பாண்டவர்களுக்கு கொடுத்த தெய்வீகக் கொடி கட்டப் பெற்றது.

இக்கொடியை வருடம் ஒரு முறை கோயில் திருவிழாவின் பொழுது பாவ்நகர் மகாராஜா புதிதாக ஏற்றுவார். இக்கொடி இதுவரை ஒரு முறை கூட அறுந்து விழவில்லை. பறந்து போகவில்லை என்றனர். மற்றோர் கொடி மரத்தின் மாடப் புறைக்குள் சிவபெருமானின் திருமேனி பிரதிஷ்டை ஆகியுள்ளார். கொடி மரத்திற்குள் ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். மேலே ஐந்து சிவலிங்கங்கள் ஆங்காங்கே நந்திதேவருடன் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். ஆங்காங்கே திரிசூலங்கள் நடப்பட்டுள்ளன. பழமையான விநாயகர் திருமேனியும் திருக்காட்சி நல்குகின்றது. கோயிலுக்குள் வந்த நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துவது, கரையில் நின்று பக்தர்கள் வீசி எறிந்த தேங்காய்கள் சிவலிங்கங்களுடன் காந்தத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரும்புத் துண்டுகள் போல ஒட்டிக் கொண்டு இருப்பதுதான் அதிசயம் ஆகும்.

அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர், நமது பாவக்கறைகளை, களங்களைப் போக்கி சோகங்களைத் துடைத்து எறிகின்றனர். உப்பு நீர்க்கூட சர்க்கரை போல இனிப்பதும், அன்று கண்ட திருமேனிகள் அழியாமல் இருப்பதும், ஆழி வழி விடுவதும், கடலில் போட்டால் எந்த ஒரு பொருளும் கரை ஒதுங்கும். அதற்கு மாறாக பக்தர்கள் சமர்ப்பித்த தேங்காய்கள் அர்ப்பணம் ஆகியிருப்பதும், மந்திர ஓசை கடலுக்குள் ஒளிப்பதும், அறிவியலுக்கே பெரும் சவாலாக அமைகின்றது. எந்த ஒரு ஆய்வும் விளக்க முடியாத ஆன்மிக நிகழ்வுகள். மார்ச் முதல் ஜூலை வரை இங்கு செல்ல உகந்த நாட்களாக அமைகின்றன. கடலுக்குள் இருக்கும் இறைசக்தியை விட கரை மேல் நிற்பவர்கள் நம்பிக்கை அளவு கடந்து உள்ளது. நம்பினால் நம்புங்கள் அல்ல. நம்மை மீறிய சக்தியின் தரிசனம் கிடைத்த பிறகு நம்பியே தீர வேண்டும். நமக்குப் பிடித்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டு வந்து கரைத்தால் அவர்கள் மோட்சப் பேற்றினைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவி வருகின்றது.

இறைவி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்